Even Parashurama will die! | Drona-Parva-Section-070 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 40)
பதிவின் சுருக்கம் : ஜமதக்னியின் மகனான பரசுராமரின் கதையைச் சொன்ன நாரதர்; இருபத்தோரு முறை உலகை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்த பரசுராமர்; அவர் செய்த வேள்விகள்; அவர் அளித்த கொடைகள்; அவரும் இறப்பார் என்று சொன்ன நாரதர்…
நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "வீரர்கள் அனைவராலும் வழிபடப்படும் வீரரும், பெரும் புகழைக் கொண்டவரும், ஜமதக்னியின் மகனும், பெரும் தவசியுமான ராமரும் {பரசுராமரும்} (தன் வாழ்நாள் காலத்தில்) மனநிறைவடையாமலே உயிரை இழக்கப் போகிறார். அவர் {பரசுராமர்}, பூமியில் உள்ள தீமைகள் அனைத்தையும் வேரோடு அழித்துவிட்டு, புராதன யுகத்தை {மீண்டும்} ஏற்படச் செய்தவராவார். நிகரற்ற செழிப்பை அடைந்த அவரிடம் எந்தக் களங்கமும் காணப்படவில்லை. க்ஷத்திரியர்களால் தன் தந்தை கொல்லப்பட்டு, தன் கன்று திருடப்பட்ட பிறகு, அதுவரை எந்த எதிரியிடமும் தோற்காத கார்த்தவீரியனை எந்தத் தற்புகழ்ச்சியும் செய்யாமல் கொன்றார்.
ஏற்கனவே மரணத்தின் கோரப்பற்களுக்கிடையில் இருந்த ஆறு லட்சத்து நாற்பதாயிரம் {6,40,000} க்ஷத்திரியர்களைத் தன் வில்லால் கொன்றார். அந்தப் படுகொலையில், பிராமணர்களை வெறுப்பவர்களான தந்தகூர நாட்டைச் சேர்ந்த பதினாலாயிரம் க்ஷத்திரியர்களைக் கொன்றார். உலக்கையினால் ஆயிரம் பேரையும், வாளால் ஆயிரம் பேரையும், தூக்கிட்டு {மரத்தில் சுருக்கிட்டு} ஆயிரம் பேரையும் கொன்றார் [1].
[1] பம்பாய்ப் பதிப்பில் இன்னும் அதிகம் இருக்கிறது என்றும், வங்கப் பதிப்புகளில் அவை இல்லை என்றும் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக இருக்கிறது, அது பின்வருமாறு: “அவர் மீண்டும் தந்தகூரமென்கிற தேசத்தில் பிராமணர்களை வெறுப்பவர்களான வேறு பதினாலாயிரம் க்ஷத்திரியர்களை நிக்ரஹித்துச் சம்ஹாரம் செய்தார்; உலக்கையினால் ஆயிரம் பேர்களை அடித்தார்; ஆயிரம் பேர்களைக் கத்தியினால் வெட்டினார்; ஆயிரம் பேர்களை மரத்தில் சுருக்கிட்டுத் தூக்கினார்; ஆயிரம் பெயர்களை ஜலத்தில் அமிழ்த்தினார்; ஆயிரம் பேர்களைப் பற்களையுடைத்து அவ்வாறே காதுகளையும் இழந்தவர்களாச் செய்தார். பிறகு, ஏழாயிரம் பேர்களை உக்கிரமான புகையைக் குடிக்கும்படி செய்தார். மீதியுள்ள எதிரிகளைக் கட்டி வைத்துக் கொன்றும், அவர்களுடைய தலையைப் பிளந்தார். குணாவதிக்கு வடபுறத்தில் காண்டவவனத்திற்குத் தெற்கிலும் மலைச்சார்பில் லட்சக்கணக்கான ஹேஹய தேசத்து வீரர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டனர்” என்று இருக்கிறது.
விவேகியான ஜமதக்னி மகன் {பரசுராமர்}, தன் தந்தையின் படுகொலையைக் கண்டு சினம் கொண்டதால், தங்கள் தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளுடன் கூடிய வீரமிக்கப் போர்வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டுக் கிடந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் ராமர் {பரசுராமர்}, பத்தாயிரம் {10000} க்ஷத்திரியர்களைத் தன் கோடரியால் கொன்றார். (தன் எதிரிகள்) பேசிய மூர்க்கமான பேச்சுகளை அவரால் அமைதியாகத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
பிராமணர்களில் முதன்மையானோரில் பலர், எப்போதெல்லாம் பிருகு குலத்தின் ராமர் பெயரைச் சொல்லித் துன்பக் குரலை எழுப்பினரோ, அப்போதெல்லாம் அந்த ஜமதக்னியின் வீர மகன் {பரசுராமர்}, ஆயிரமாயிரமாக இருந்த காஸ்மீரர்கள், தரதர்கள், குந்திகள், க்ஷுத்ரகர்கள், மாலவர்கள், அங்கர்கள், வங்கர்கள், கலிங்கர்கள், விதேஹர்கள், தாம்ரலிப்தகர்கள், ரக்ஷோவாஹர்கள், வீதஹோத்ரர்கள், திரிகர்த்தர்கள், மார்த்திகாவதர்கள், சிபிக்கள் ஆகியோர் அனைவரையும் தன் கூர்மையான கணைகளால் கொன்றார்.
மாகாணத்துக்கு மாகாணம் அடுத்தடுத்து சென்று க்ஷத்திரியர்களை ஆயிரக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் இப்படியே கொன்றார். குருதிப்பெருவெள்ளத்தை உண்டாக்கி, இந்திரகோபங்களைப் போலவோ, பந்துஜீவம் {Vandujiva} என்ற காட்டுப்பழத்தைப் போலவோ சிவப்பான குருதியால் பல தடாகங்களை நிறைத்து [2], (பூமியின்) பதினெட்டுத் தீவுகள் அனைத்தையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்த அந்தப் பிருகுகுல மகன் {பரசுராமர்}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை வழங்கிப் பெரும் புண்ணியத்தைத் தரும் நூறு வேள்விகளைச் செய்தார்.
[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, “கோடிக்கணக்காகவும், லட்சக்கணக்காவும், ஆயிரக்கணக்காகவும் கொல்லப்பட்ட க்ஷத்ரியர்களுடைய பட்டுப்பூச்சிக்கும், செம்பருத்திப் பூவிற்கும் சமமான நிறமுள்ள ரத்த வெள்ளங்களால் தடாகங்களை நிரப்பினர்” என்று இருக்கிறது.
ஜமதக்னியின் மகனான ராமர் {பரசுராமர்}, விதிப்படி அமைக்கப்பட்டதும், முழுவதும் தங்கத்தாலானதும், பதினெட்டு நாளங்கள் உயரம் {முப்பத்திரண்டு முழம்} கொண்டதுமான வேள்விப்பீடத்தையும், பல்வேறு விதங்களிலான ரத்தினங்கள் மற்றும் கற்கள் நிறைந்ததும், நூற்றுக்கணக்கான கொடிமரங்களால் அலங்கரிக்கப்பட்டதும், வீட்டு மற்றும் காட்டு விலங்குகளால் நிறைந்ததுமான இந்தப் பூமியையும் கசியபருக்கு வேள்விக் கொடையாக அளித்தார். மேலும் ராமர் {பரசுராமர்}, அவருக்கு {கசியபருக்கு} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மகத்தான யானைகளையும் அளித்தார். உண்மையில், பூமியைக் கள்வர்கள் அனைவரிடமும் இருந்து விடுவித்து, அவளை {பூமாதேவியை} அருள் நிறைந்த நேர்மையான மனிதர்களால் நிறைத்த ராமர் {பரசுராமர்}, தனது பெரும் குதிரை வேள்வியில் கசியபருக்கு அவளை {பூமியைத்} தானமாக அளித்தார்.
இருபத்தோரு முறை பூமியை க்ஷத்திரியர்களற்றதாக்கி, நூற்றுக்கணக்கான வேள்விகளைச் செய்த அந்தப் பலங்கொண்ட வீரர் {பரசுராமர்}, அவளை {பூமியைப்} பிராமணர்களுக்குத் தானமளித்தார். ஏழு தீவுகளுடன் கூடிய இந்தப் பூமியை மரீசிக்குக் {மரீசியின் மகனான கசியபருக்குக்} கொடுத்தார். அப்போது கசியபர் ராமரிடம் {பரசுராமரிடம்}, “என் உத்தரவின் பேரில் இந்தப் பூமியை விட்டுப் போவாயாக” என்றார். கசியபரின் வார்த்தையின் பேரில், அந்தப் பிராமணரின் {கசியபரின்} உத்தரவுக்குக் கீழ்ப்படிய விரும்பிய அந்தப் போர்வீரர்களில் முதன்மையானவர் {பரசுராமர்}, தன் கணைகளால் பெருங்கடலையே ஒதுங்கச் செய்து, மகேந்திரம் என்று அழைக்கப்பட்ட மலைகளில் சிறந்த மலைக்குச் சென்று அங்கேயே தொடர்ந்து வாழத் தொடங்கினார்.
இத்தகு எண்ணிலா குணங்களைக் கொண்டவரும், பெரும் காந்தியைக் கொண்டவரும், பிருகுக்களின் {பிருகு குலத்தவரின்} புகழை அதிகரித்தவருமான அந்தப் புகழ்பெற்ற ஜமதக்னியின் மகனே கூட இறக்கவே செய்வார். அவர் உன் மகனுக்கும் {சுவர்ணஷ்டீவினுக்கும்} மேம்பட்டவராவார் (மேம்பட்டவரான அவரும் இறப்பார்). எனவே, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக} நீ வருந்தாதே. நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானோருமான இவர்கள் யாவரும் இறந்தார்கள், ஓ! சிருஞ்சயா, இவர்களைப் போன்றோரும் இறப்பார்கள்” {என்றார் நாரதர்}.
ஆங்கிலத்தில் | In English |