Saturday, June 04, 2016

மாமன்னன் பிருது! - துரோண பர்வம் பகுதி – 069

Emperor Prithu! | Drona-Parva-Section-069 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 39)

பதிவின் சுருக்கம் : வேனனின் மகனான மன்னன் பிருதுவின் கதையைச் சொன்ன நாரதர்; உழவற்ற புராதனச் சமுதாயம்; பிருது செய்த பெரும் குதிரை வேள்வி; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, வேனனின் மகனான மன்னன் பிருதுவும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அவன் செய்த ராஜசூய வேள்வியில், பெரும் முனிவர்கள் அவனை (உலகின்) பேரரசனாக நிறுவினார்கள். அவன் {பிருது} அனைவரையும் வீழ்த்தினான், அவனது சாதனைகள் (உலகமெங்கிலும்) அறியப்பட்டன. இதன் காரணமாக அவன் பிருது (கொண்டாடப்படுபவன்) என்று அழைக்கப்பட்டான். மனிதர்கள் அனைவரையும் காயங்கள் மற்றும் தீங்குகளில் இருந்து காத்ததனால், அவன் உண்மையான க்ஷத்திரியனானான் [1]. வேனனின் மகனான பிருதுவைக் கண்ட அவனது குடிகள் அனைவரும், “நாங்கள் இவனிடம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றனர். தன் குடிமக்களிடம் அவன் அடைந்த இந்தப் பாசத்தின் விளைவால் அவன் “ராஜா” என்று அழைக்கப்பட்டான் [2].


[1] உண்மையில், ஒரு க்ஷத்திரியன் என்பவன், மற்றொருவனைக் காயங்களில் இருந்தும், தீமையில் இருந்தும் விடுவிப்பவனாவான் என்று இங்கே கங்குலி விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இவ்வரி, “’நம்மனைவரையும், க்ஷதத்திலிருந்து {ஆயுதங்களினாலுண்டான புண்; மற்ற துன்பங்களில் இருந்து} காப்பான்’ என்றதினால் க்ஷத்திரியனுமானான்” என்று இருக்கிறது.

[2] "ஒரு ராஜா என்பவன், தன்னால் மகிழ்ச்சி அடைந்த மக்களின் பாசத்தைப் பெறுபவனவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பிருதுவின் காலத்தில், உழாமலே பூமியானது போதுமான பயிர்களை விளைவித்தது. மேலும் பசுக்கள் அனைத்தும், அவற்றைத் தொடும்போதெல்லாம் பாலைச் சுரந்தன. தாமரைகள் அனைத்தும் தேனால் நிரம்பியிருந்தன. குசப் புற்கள் {தர்ப்பை} அனைத்தும் தங்கத்தாலானவையாக, தீண்டுதற்கு இனிமையானவையாக, பின்னும் காண்பதற்கும் இனிமையானவையாக இருந்தன. பிருதுவின் குடிகள் அனைவரும் தங்கள் ஆடைகளையும், தாங்கள் கிடக்கும் படுக்கைகளையும் அந்தப் புற்களிலேயே உண்டாக்கினர் [3]. கனிகள் அனைத்தும் மென்மையானவையாகவும், இனிமையானவையாகவும், (சுவையில்) அமுதத்துக்கு நிகரானவையாகவும் இருந்தன. இவையனைத்தும் அவனது குடிகளின் உணவாகின. அவர்களில் யாரும் பட்டினியால் வாடவில்லை.

[3] வேறொரு பதிப்பில் இவ்வரி வேறு மாதிரியாக, “மரங்களெல்லாம் பொன்மயமாகவும், தொடுதற்கினியவையாகவும், சுகத்தை உண்டு பண்ணுகின்றவையாகவும் இருந்தன. ஜனங்கள் அம்மரங்களினுடைய பட்டைகளை ஆடைகளாக உபயோகித்தார்கள். அவைகளின் மீதிலேயே சயனித்தார்கள்” என்று இருக்கிறது.

பிருதுவின் காலத்தில் மனிதர்கள் அனைவரும் {உடல்} நலம் கொண்டவர்களாகவும், இதயம் மகிழ்ந்தவர்களாகவும் இருந்தனர். அவர்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றத்தில் மகுடம் சூடின {நிறைவேறின}. அவர்கள் அஞ்சுவதற்கு ஏதும் இருக்கவில்லை. மரங்களிலோ, குகைகளிலோ அவர்கள் விரும்பியபடியே வசித்தனர். அவனது {பிருதுவின்} ஆட்சிப்பகுதிகள் மாகாணங்களாகவும், நகரங்களாகவும் பிரிக்கப்படாமல் இருந்தன. மக்கள் தாங்கள் ஒவ்வொருவரும் விரும்பியபடி மகிழ்ச்சியாகவும், இன்பமாகவும் வாழ்ந்தனர்.

மன்னன் பிருது கடலுக்குச் சென்ற போது, அலைகள் {கல்லைப் போலத்} திடமாகின. மலைகளும், அவன் அவற்றைக் கடந்து செல்வதற்காகத் திறப்புகளை {வழிகளை} அளித்தன. அவனது தேரின் கொடி மரம் (எதனாலும் தடுக்கப்பட்டு) எப்போதும் உடைந்ததில்லை.

ஒரு சமயம், காட்டிலுள்ள உயர்ந்த மரங்கள், மலைகள், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், பாம்புகள், முனிவரெழுவர் {சப்தரிஷிகள்}, அப்சரசுகள், பிதுர்கள் ஆகியோர் அனைவரும் சேர்ந்து, சுகமாக வீற்றிருந்த பிருதுவிடம் வந்து, அவனிடம், “நீயே எங்கள் பேரரசன், நீயே எங்கள் மன்னன், நீயே எங்களைப் பாதுகாப்பவனும், தந்தையும் ஆவாய். நீயே எங்கள் தலைவன். எனவே, ஓ! பெரும் மன்னா {பிருதுவே}, மன நிறைவுடன் நாங்கள் எப்போதும் மகிழ்ந்திருக்கும்படி எங்கள் இதயங்கள் விரும்பும் வரங்களை அளிப்பாயாக” என்றனர். அவர்களிடம் வேனனின் மகனான பிருது, “அப்படியே ஆகட்டும்” என்றான் [4].

[4] வேறொரு பதிப்பில், இதற்கடுத்து கங்குலியின் பதிப்பில் இல்லாத இன்னும் அதிக செய்திகள் இருக்கின்றன. அவை பின்வருமாறு: “குடிகளால் வேண்டப்பட்ட பலசாலியான பேரரசன் பிருது, தன் குடிகளுக்கு நன்மை செய்யக் கருதி வில்லையும், கணைகளையும் கையில் கொண்டு பூமியை நோக்கி ஓடி வந்தான். பிறகு பூமியானது அவனிடத்தில் உண்டான அச்சத்தால், ஒரு பசுவின் வடிவத்தைக் கொண்டு வேகமாக ஓடியது. 

பிருதுவோ, கையில் வில்லை எடுத்துக் கொண்டு பூமியைப் பின்தொடர்ந்து ஓடினான். பிரம்மலோகம் முதலான உலகங்களை அடைந்தும் விடாமல் விரட்டிய பிருதுவைக் கண்ட பூமி, பிருதுவிடமே சரண்டைந்து, அவனிடம், “மன்னா, இந்த அநீயை நீ செய்யத்தக்கவனல்ல. நானில்லாமல் உன் குடிகளை நீ எப்படிக் காக்கப் போகிறாய்?” என்று சொன்னாள். அதற்குப் பிருது, “ஒருவன் தனக்காகவோ, பிறனுக்காகவோ, ஒன்றையோ, பல உயிர்களையோ வாங்கினால் {கொன்றால்}, அதில் பாதகம் ஒன்றுமில்லை. பெண்ணே, எவன் கொல்லப்பட்டால் பலர் மகிழ்வுடன் செழிப்பார்களோ, அவன் கொல்லப்பட்டால் களங்கமில்லை. அவனைக் கொன்றவனால் பாவம் அனுபவிக்கப்பட மாட்டாது. நான் சொல்லும்படி நீ செய்யவில்லை என்றால், குடிகளைக் காப்பதற்காக நான் உன்னைக் கொல்வேன். நானே குடிகளைக்காத்துக் கொள்வேன். சிறந்தவளே, நீ சக்தியுடையவள் என்றால், என் நல்ல வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு எப்போதும் குடிகள் காப்பாற்றுவாயாக. எனக்கு மகளாக இருக்கும் நிலைமையையும் நீ அடைவாயாக. இப்படி நீ செய்வாயாகில் நான் இந்தப் பயங்கரக் கணையை விலக்கிக் கொள்வேன்” என்றான். 

பூதேவி, “ஓ! பகைவரைக் கொல்பவனே, பெரும் மன்னா, அனைத்தையும் செய்வேன். அன்புடைய நான், எந்தக் கன்றின் வழியாகப் பாலைப் பெருக்குவேனோ, அப்படிப்பட்ட கன்றை நீ பார்ப்பாயாக. ஓ! அனைத்தையும் அறிந்தவனே, எப்படி நான் என்னிடம் சுரக்கும் பாலை அனைத்து இடங்களுக்கும் பரவும்படி செய்வேனோ, அவ்வாறே என் தோற்றத்தையும் சமமாகச் செய்வாயாக” என்றாள். 

அப்போது பிருது நான்கு பக்கங்களிலும் கற்குவியல்களை விலக்கித் தள்ளினான். அதனால் மலைகள் உடைக்கப்பட்டன. ஓ! மன்னா {சிருஞ்சயா}, படைப்பின் தொடக்கத்தில் பூமண்டலம் மேடு பள்ளமாயிருக்கும் காலத்தில், நகரங்களும், கிராமங்களும் பிரிப்பு ஏற்படவில்லை. பயிர்கள், பசுகாத்தல், உழவு, வர்த்தகம் ஆகியவை இல்லை. அந்தப் பிருது ஆளும் காலத்திலேயே இவையனைத்தும் உண்டாகின. எந்த இடத்தில் பூமி சமமாகியதோ, அந்த இடத்தில் எல்லாம் குடிகள் தங்கள் முயற்சியினால் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ள விரும்பின. அதனால், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்ன பிருது அஜகவமெனும் வில்லையும், ஒப்பற்றவையும், கோரமுமான கணைகளையும் எடுத்து ஆலோசித்துபடி பூமியைப் பார்த்து, “பூமியே! இங்கு வா; இவைகளுக்கு {இந்த என் குடிகள்} விருப்பப்பட்ட பாலைச் சீக்கிரமாகக் கறப்பாயாக. என் கட்டளையை மீறி நடந்தால், உன்னை நான் என் கணைகளால் அழிப்பேன்” என்றான். 

பூதேவி, தன் நன்மையை ஆலோசித்து, “கன்றையும், பாத்திரங்களையும், பாலைகள் நீ கட்டளையிடுவாயாக. ஐயா, எவனுக்கு எது விருப்பமோ, அஃது அனைத்தையும் பிறகு நான் கொடுப்பேன். வீரனே, நான் உனக்கு மகளாக வேண்டும்” என்று சொன்னாள். பிருதுவும், “அவ்வாறே ஆகட்டும்” என்றான்” என்றிருக்கிறது.

பிறகு அஜகவம் [5] என்ற தன் வில்லை எடுத்த அவன் {பிருது}, அதுவரை இல்லாத பயங்கரமான சில கணைகளை எடுத்துக் கொண்டு ஒருக்கணம் சிந்தித்தான். பிறகு அவன் பூமியிடம், “ஓ! பூமியே, விரைவாக வந்து, இவர்கள் {இந்தக் குடிகள்} விரும்பும் பாலைத் தருவாயாக. அதன் மூலம் நான் அவர்கள் கேட்கும் உணவைக் கொடுப்பேன். நீ அருளப்பட்டிருப்பாயாக.” என்று சொன்னான். அவனால் இப்படிக் கேட்கப்பட்ட பூமி, “ஓ! வீரனே, நீ என்னை உனது மகளாகக் கருதுவதே தகும்” என்றாள். பிருது, “அப்படியே ஆகட்டும்” என்றான். பிறகு அந்தப் பெரும் தவசி {பிருது}, தன் ஆசைகளைக் கட்டுக்குள் கொண்டு, (பூமியைக் கறப்பதற்கு) அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். (உயிரினங்களின் மொத்தக் கூட்டமும் பூமியைக் கறக்கத் தொடங்கின).


[5] இது பிநாகை என்றும் அழைக்கப்படும் சிவனின் வில் என்று கங்குலி இங்கே விளக்குகிறார். அஜகவம் என்ற வில் ஆடு மற்றும் மாடு ஆகிவற்றின் கொம்புகளால் செய்யப்பட்டதாகும் என்றும், பிருது தோன்றிய போது வானத்தில் இருந்து விழுந்தது என்றும் விஷ்ணு புராணம் சொல்கிறது.

அனைத்திலும் முதலாக, காட்டில் உள்ள நெடும் மரங்கள் அவளைக் கறப்பதற்காக எழுந்தன. அப்போது, பூமி, ஒரு கன்றையும், கறப்பவனையும், (பாலைப் பிடிக்க) பாத்திரத்தையும் எதிர்பார்த்து முழுப் பாசத்துடன் நின்றாள். அப்போது, பூத்திருக்கும் ஆச்சா {சால} மரம் கன்றானது, ஆல {இறலி}மரம் கறப்பவரானது, பிளக்கும் மொட்டுகள் பாலானது, மங்கலமான அத்திமரம் பாத்திரமானது.

(அடுத்ததாக, மலைகள் அவளை {பூமியைக்} கறந்தன). சூரியன் உதிக்கும் கிழக்கு மலை {உதய மலை} கன்றானது; மலைகளின் இளவரசனான மேரு கறப்பவனானது; பல்வேறு ரத்தினங்களும், மூலிகைகளும் பாலாகின; கற்கள் {பாறைகள்} (அந்தப் பாலைத் தாங்கும்) பாத்திரங்களாகின.

அடுத்ததாக, தேவர்களில் ஒருவன் கறப்பவனானான். சக்தியையும், பலத்தையும் அளிக்கவல்ல அனைத்துப் பொருட்களும் ஆசைப்பட்ட பாலகின [6].

[6] வேறொரு பதிப்பில், “தேவர்களுக்கு இந்திரன் கன்றாகவும், தாருமயம் பாத்திரமும், சூரியன் கறப்பவனாகவும், பலத்தையுண்டாக்கும் பொருட்கள் பாலுமாகின” என்று இருக்கிறது.

பிறகு, அசுரர்கள் பூமியைக் கறந்தனர். மதுவைத் தங்கள் பாலாகப் பெற்றனர். சுடப்படாத பானையைத் தங்கள் பாத்திரமாகப் பயன்படுத்தினர். அந்தச் செயல்பாட்டில் துவிமுர்தன் கறப்பவனானான். விரோசனன் கன்றானான் [7].

[7] வேறொரு பதிப்பில், “அசுரர்கள் அப்போது இரும்புப் பாத்திரத்தில் அந்தப் பசுவிடம் இருந்து மாயையைக் கறந்தார்கள். சுக்கிராச்சாரியார் அதைக் கறந்தார், விரோணனன் கன்றானான்” என்று இருக்கிறது.

மனிதர்கள், பூமியை உழவுக்காகவும் {வேளாண்மைக்காகவும்}, பயிர்களுக்காகவும் கறந்தனர். சுயம்புவான மனு அவர்களது கன்றானான், பிருதுவே கறப்பவனானான்.

அடுத்ததாகப் பாம்புகள் நஞ்சையே பாலாகப் பூமியிடம் கறந்தன. சுரைக்காயைப் பாத்திரமாகப் பயன்படுத்தின. திருதராஷ்டிரன் கறப்பவனாகவும், தக்ஷகன் கன்றாகவும் இருந்தான்.

தங்கள் ஆணையாலேயே [8] அனைத்தையும் உண்டாக்கவல்ல முனிவரெழுவர் {சப்தரிஷிகள்}, வேதங்களையே பாலாகப் பூமியிடம் கறந்தனர். பிருஹஸ்பதி கறப்பவனானான், சந்தஸ் பாத்திரமானது, சிறப்புமிக்கச் சோமன் கன்றானான்.

[8] “Aklishtakarman என்பது உழைப்பால் எப்போது களைக்காத நிலையைக் குறிக்கிறது. எனவே ஒருவர் வெறும் விருப்பத்தால் மட்டுமே செயல்களின் விளைவை அடைவதை இது குறிக்கும். களங்கமற்ற செயல்கள் என்றும் இதற்குப் பொருளாகக் கொள்ளலாம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

யக்ஷர்கள் [9], தாங்கள் விரும்பும் போது காட்சியில் இருந்து மறையும் {அந்தர்த்தான} சக்தியை சுடப்படாத பானையில் பூமியிடம் இருந்து கறந்தனர். வைஸ்ரவணன் (குபேரன்) கறப்பவனானான், விருஷத்வஜன் அவர்களது கன்றான்.

[9] வேறொரு பதிப்பில் இது ராட்சசர்கள் என்று சொல்லப்படுகிறது.

கந்தர்வர்களும், அப்சரசுகள் தாமரை இலையைப் பாத்திரமாகக் கொண்டு நறுமணத் திரவியங்கள் அனைத்தையும் கறந்தனர். சித்திரரதன் அவர்களது கன்றான், வலிமைமிக்க விஸ்வருசி கறப்பவனானான்.

பிதுர்கள், வெள்ளிப்பாத்திரத்தில் சுவாகாவைத் தங்கள் பாலாகக் கறந்தனர். விவஸ்வானின் {சூரியனின்} மகன் யமன் அவர்களது கன்றானான், (அழிப்பவனான) அந்தகனே கறப்பவனானான்.

இப்படி அந்த உயிரினங்களின் கூட்டங்கள், தாங்கள் ஒவ்வொருவரும் விரும்பிய பாலை பூமியிடம் கறந்தனர். அவர்களால் நியமிக்கப்பட்ட கன்றுகளும், பாத்திரங்களும் எப்போதும் தெரியும் வகையில், இந்நாள் வரை அப்படியே நீடிக்கின்றன.

வேனனின் மகனான வலிமைமிக்கப் பிருது, உயிரினங்கள் அனைத்தும் தங்கள் இதயங்களால் விரும்பிய பரிசுகளைக் கொடுத்து, அவற்றை மனம் நிறையச் செய்து, பல்வேறு வேள்விகளைச் செய்தான். பூமியில் மண்ணால் செய்யப்பட்ட அனைத்தையும் தங்கமாகச் செய்து, அவைகளை ஒரு பெரும் குதிரை வேள்வியில் பிராமணர்களுக்குத் தானமளித்தான். அந்த மன்னன் {பிருது} அறுபத்தாறாயிரம் யானைகளைத் தங்கத்தால் செய்து, அவை அனைத்தையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான். அந்த மன்னன் {பிருது}, மணிகள், ரத்தினங்கள், தங்கம் ஆகியவற்றால் இந்த முழுப் பூமியையும் அலங்கரித்து, அவளையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {பிருதுவே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English