Thursday, June 09, 2016

அர்ஜுனனின் அழுகையும்! கோபமும்!! - துரோண பர்வம் பகுதி – 072

The weep and wrath of Arjuna! | Drona-Parva-Section-072 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 01)

பதிவின் சுருக்கம் : பாசறைக்குத் திரும்புகையில் தீய சகுனங்களை உணர்ந்த அர்ஜுனன் கிருஷ்ணனிடம் அச்சத்துடன் வினவியது; தன்னை வாழ்த்த அபிமன்யு வரதாததைக் கண்டு நிலைமையைப் புரிந்து கொண்டு புலம்பிய அர்ஜுனன்; அர்ஜுனனுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றிய கிருஷ்ணன்; தன் சகோதரர்களிடம் கோபித்துக் கொண்ட அர்ஜுனன்; யுதிஷ்டிரன் பேச ஆரம்பித்தது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உயிரினங்களின் படுகொலை நிறைந்த அந்தப் பயங்கர நாள் முடிந்து சூரியன் மறைந்த போது, மாலைவேளையின் அழகிய அந்திப் பொழுது தன்னைப் பரப்பிக் கொண்டது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இருதரப்பின் துருப்புகளும் தங்கள் பாசறைகளுக்கு ஓயச் சென்றன. அப்போது குரங்குக் கொடி கொண்ட ஜிஷ்ணு {அர்ஜுனன்} தன் தெய்வீக ஆயுதங்களால் பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களைக் கொன்ற பிறகு, தனது அந்த வெற்றித் தேரில் ஏறித் தன் பாசறையை நோக்கிச் சென்றான்.


அப்படி அவன் {அர்ஜுனன்} சென்று கொண்டிருக்கையிலேயே, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்} அவன் {அர்ஜுனன்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, என் இதயம் ஏன் அஞ்சுகிறது? என் பேச்சு ஏன் தடுமாறுகிறது? தீச்சகுனங்கள் என்னைச் சந்திக்கின்றன, என் அங்கங்களும் பலவீனமாக இருக்கின்றன. பேரழிவு குறித்த எண்ணங்கள், அஃதை அனுபவிக்காமலே என் மனத்தைப் பீடிக்கின்றன. பூமியின் அனைத்துப் பக்கங்களிலும் பல்வேறு சகுனங்கள் எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பல வகைகளிலான அந்தச் சகுனங்களும், அறிகுறிகளும் கொடிய பேரழிவையே முன்னறிவிக்கும் வகையில் எங்கும் காணப்படுகின்றன. என் மதிப்பிற்குரிய மூத்தவரான மன்னன் {யுதிஷ்டிரர்} தன் நண்பர்கள் அனைவருடன் நலமாக இருக்கிறாரா?" என்றான் {அர்ஜுனன்}.

வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "உன் சகோதரரும், அவரது நண்பர்களும் அனைத்து வகையிலும் நலமாக இருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. வருந்தாதே, வேறு திசையில் அற்பமான தீமையேதும் நடைபெற்றிருக்கலாம்" என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "பிறகு அந்த வீரர்கள் இருவரும் (கிருஷ்ணனும், அர்ஜுனனும்), அந்திப் பொழுதைப் போற்றிவிட்டுத் தங்கள் தேரில் ஏறி, வீரர்களுக்கு அழிவைத் தந்த அந்த நாளின் போரைக் குறித்துப் பேசிக் கொண்டே சென்றனர். அடைவதற்கு அரிதான மிகக் கடினமான சாதனைகளை அடைந்த வாசுதேவனும், அர்ஜுனனும் இறுதியாக (பாண்டவ) கூடாரத்தை அடைந்தனர்.

பகைவீரர்களைக் கொல்பவனான பீபத்சு {அர்ஜுனன்}, முகாம் மகிழ்ச்சியற்று, துக்கத்துடன் இருப்பதையும், அனைத்தும் குழம்பிப் போய் இருப்பதையும் கண்டு, இதய வேதனையுடன் கிருஷ்ணனிடம், "ஓ! ஜனார்த்தனா, துந்துபி மற்றும் உரத்த சங்கொலிகளுடன் கலந்த மங்கல எக்காளம் எதுவும் இன்று முழக்கப்படவில்லை. கைத்தாளத்துடன் கூடிய இனிய வீணையின் இசையும் எங்கும் இசைக்கப்படவில்லை. துருப்புகளுக்கு மத்தியில் உள்ள நமது பாணர்களால் துதி நிறைந்த மங்கலமான இனிய பாடல்கள் எங்கும் உரைக்கப்படவோ, பாடப்படவோ இல்லை.

வீரர்கள் அனைவரும் கூட, தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டபடியே கலைந்து செல்கின்றனர். முன்பு போல, என்னைக் கண்டதும், தாங்கள் அடைந்த சாதனைகளை அவர்கள் என்னிடம் சொல்லவில்லை. ஓ! மாதவா {கிருஷ்ணா}, என் சகோதரர்கள் நலமாக இருக்கிறார்களா? நம் மனிதர்கள் துயரத்தில் மூழ்கி இருப்பதைக் கண்டு நான் அமைதியை அடையவில்லை.

ஓ! மரியாதைகளைத் தருபவனே, ஓ! மங்காப் புகழ் கொண்டவனே {கிருஷ்ணா}, பாஞ்சாலர்களின் ஆட்சியாளன் {துருபதன்}, விராடன் ஆகியோரும், நம் வீரர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்களா? ஐயோ, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, போர்க்களத்தில் இருந்து திரும்பி வரும் என்னைப் புன்னகையோடு வரவேற்கத் தன் சகோதரர்களோடு இன்று வெளிவரவில்லையே" என்றான் {அர்ஜுனன்}.

சஞ்சயன் சொன்னான், "இப்படிப் பேசிக் கொண்ட அவ்விருவரும் (கிருஷ்ணனும், அர்ஜுனனும்) தங்கள் முகாமுக்குள் நுழைந்தனர். அவர்கள், பெரும் துயரத்தில் மூழ்கி உற்சாகமற்று அமர்ந்திருக்கும் பாண்டவர்கள் அனைவரையும் கண்டனர். தன் சகோதரர்களையும், மகன்களையும் கண்ட குரங்குக் கொடியோன் அர்ஜுனன் பெரிதும் உற்சாகமிழந்தவனானான்.

சுபத்திரையின் மகனைக் {அபிமன்யுவைக்} காணாத அர்ஜுனன், "உங்கள் அனைவரின் முகங்களும் மங்கிய நிறத்தில் இருப்பதைக் காண்கிறேன். மேலும் நான் அபிமன்யுவைக் காணவில்லை. என்னை வாழ்த்தவும் அவன் வரவில்லை. துரோணர் இன்று சக்கர வியூகத்தை அமைத்தார் என்று நான் கேட்விப்பட்டேன். சிறுவன் அபிமன்யுவைத் தவிர உங்களில் எவராலும் அந்த வியூகத்தை உடைக்க முடியாது. எனினும், அவ்வியூகத்தைப் பிளந்த பிறகு, அதிலிருந்து வெளியேறுவது எப்படி என்பதை நான் அவனுக்குக் கற்பிக்கவில்லையே. அந்தச் சிறுவனை {அபிமன்யுவை} அந்த வியூகத்தில் நீங்கள் நுழையச் செய்தீர்களா?

பகைவீரர்களைக் கொல்பவனும், வலிமைமிக்க வில்லாளியுமான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, அந்த வியூகத்தைப் பிளந்து, போர்க்களத்தில் எண்ணிலா பகை வீரர்களைக் கடந்து, இறுதியாக அந்தப் போரில் விழுந்தானா? மலைச்சாரலில் சிங்கத்தைப் போல (நம் பரம்பரையில்) பிறந்தவனும், இந்திரனின் தம்பிக்கு {விஷ்ணுவுக்கு} இணையானவனும், வலிமைமிக்கக் கரங்களையும், சிவந்த கண்களையும் கொண்டவனான அந்த வீரன் போர்க்களத்தில் எவ்வாறு விழுந்தான்? ஓ! எனக்குச் சொல்வீராக.

சுபத்திரையின் அன்பு மகனும், கேசவனுக்கும், திரௌபதிக்கும் பிடித்தமானவனும், குந்தியால் எப்போதும் அன்புடன் விரும்பப்பட்டவனுமான அந்தக் குழந்தையைக் காலனால் அறிவை இழந்த எந்த வீரன் கொல்லத் துணிந்தான்? ஆற்றல், கல்வி, கண்ணியம் ஆகியவற்றில் விருஷ்ணி வீரனான உயர் ஆன்ம கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையான அவன் போர்க்களத்தில் எவ்வாறு கொல்லப்பட்டான்?

விருஷ்ணி குலமகளுக்கு {சுபத்திரைக்குப்} பிடித்தமான மகனும், ஐயோ, எப்போதும் என்னால் பேணி வளர்க்கப்பட்டவனுமான அவனை {அபிமன்யுவைக்} காணவில்லையெனில் நான் யமலோகம் செல்வேன். சுருள்முனை கேசம் கொண்டவனும், இளம் வயதினனும், இளம் மானைப் போன்ற கண்களைக் கொண்டவனும், மதம்கொண்ட யானையின் நடையைக் கொண்டவனும், சால மரத்தைப் போன்று நெடிந்து வளர்ந்தவனும், புன்னகையுடன் கூடிய இனிய பேச்சைக் கொண்டவனும், அமைதியானவனும், மூத்தோரின் உத்தரவுகளுக்கு எப்போதும் கீழ்ப்படிபவனும், வயதால் இளையவனெனினும் முதிர்ச்சியுடன் செயல்படுபவனும், ஏற்புடைய பேச்சு கொண்டவனும், செருக்கற்றவனும், பெரும் வீரமும், பெரும் சக்தியும் கொண்டவனும், தாமரை இதழ்களைப் போன்ற பெரிய கண்களைக் கொண்டவனும், தனக்கு அர்ப்பணிப்புள்ளோரிடம் அன்பு கொண்டவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், இழிவெதையும் {இழிவானவர்கள் எவரையும்} பின்பற்றாதவனும், நன்றிமிக்கவனும், அறிவுடையவனும், ஆயுதங்களில் சாதித்தவனும், போரில் பின்வாங்காதவனும், போரில் எப்போதும் மகிழ்பவனும், எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவனும், சொந்தங்களின் நன்மையில் ஈடுபடுபவனும், தந்தைமாரின் வெற்றியை விரும்பியவனும், எப்போதும் முதலில் தாக்காதவனும், ஐயோ, போரில் முற்றாக அச்சமற்றவனுமான அந்த மகனை {அபிமன்யுவைக்} காணவில்லையெனில் நான் யமலோகம் செல்வேன்.

தேர்வீரர்களைக் கணக்கிடுகையில் எப்போதும் மகாரதனாகக் கருதப்பட்டவனும், என்னைவிட ஒன்றரை மடங்கு மேன்மையானவனும், இளம் வயதினனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், ஐயோ, பிரத்யும்னன், கேசவன் {கிருஷணன்} மற்றும் எனது அன்புக்கும் பாத்திரமான அந்த மகனை {அபிமன்யுவைக்} காணவில்லையெனில் நான் யமலோகம் செல்வேன்.

அழகிய மூக்கு, அழகிய நெற்றி, அழகிய கண்கள், புருவங்கள், இதழ்கள் ஆகியவற்றைக் கொண்ட அம்முகத்தைக் காணாது என் இதயத்துக்கு அமைதியேது? ஆண் குயிலின் குரலைப் போல மதுரமானதும், மகிழ்ச்சி நிறைந்ததும், வீணையின் அதிர்வுகளைப் போல இனிமையானதுமான அவனது {அபிமன்யுவின்} குரலைக் கேட்காது என் இதயத்துக்கு அமைதியேது? தேவர்களில் கூட அரிதான ஒப்பற்ற அழகைக் கொண்ட அந்த வடிவத்தின் மீது என் கண்களைச் செலுத்தாது என் இதயத்துக்கு அமைதியேது? (தனக்கு மூத்தவர்களை) மரியாதையுடன் வணங்குபவனும், ஐயோ, தன் தந்தைமாரின் உத்தரவுகளுக்கு எப்போதும் கீழ்ப்படிபவனுமான அவனை {அபிமன்யுவைக்} காணாது என் இதயத்துக்கு அமைதியேது?

போரில் துணிச்சல் கொண்டவனும், அனைத்து வசதிகளுக்கும் பழக்கப்பட்டவனும், மிருதுவான படுக்கைக்குத் தகுந்தவனுமான அவன் {அபிமன்யு}, தன்னைப் பார்த்துக் கொள்ளப் பாதுகாவலர்களைக் கொண்டோரில் முதன்மையானவனாக இருந்தும், ஏதோ தன்னைக் கவனிக்க யாரும் இல்லாததைப் போல, ஐயோ, இன்று வெறுந்தரையில் உறங்குகிறான். தன் படுக்கையில் கிடக்கும்போது, அழகிய பெண்களில் முதன்மையானோரால் பணிவிடை செய்யப்பட்ட அவன் {அபிமன்யு}, ஐயோ, கணைகளால் சிதைக்கப்பட்டுப் போர்க்களத்தில் அமங்கலமான நரிகளால் இன்று சூழப்பட்டிருப்பான். முன்பு தன் குறைத்தூக்கத்தில் சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியவர்களால் எழுப்பப்படும் அவன் {அபிமன்யு}, ஐயோ, இரைதேடும் கொடூர விலங்குகளால் இன்று நிச்சயம் எழுப்பப்படுவான். குடையின் நிழலில் இருக்கத்தக்க அந்த அழகிய முகம், ஐயோ, இன்று போர்க்களத்தின் புழுதியால் நிச்சயம் அழகை இழந்திருக்கும்.

ஓ! குழந்தாய், உன்னைப் பார்ப்பதில் எப்போதும் நிறைவுறாத என்னிடம் இருந்து மரணம் உன்னைப் பலவந்தமாக எடுத்துச் செல்கிறதே, நான் பாக்கியமற்றவனே. அறச்செயல்கள் செய்வோரின் இலக்காக எப்போதும் இருப்பதும், மகிழ்ச்சி மிக்க மாளிகையுமான அந்த யமனின் வசிப்பிடம், உன் காந்தியால் இன்று ஒளியூட்டப்பட்டு, உன்னால் மிக அழகாகப்போகிறது என்பதில் ஐயமில்லை. யமன், வருணன், சதக்ரது, குபேரன் ஆகியோர் உன்னைப் பிடித்தமான விருந்தினனாக அடைந்து, வீரனான உன்னைப் புகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை" என்றான் {அர்ஜுனன்}.

கப்பல் மூழ்கிப் போன வணிகன் ஒருவனைப் போலவே, இப்படிப் பல்வேறு புலம்பல்களில் ஈடுப்பட்ட அர்ஜுனன், பெரும் துயரால் பீடிக்கப்பட்டு, யுதிஷ்டிரனிடம், "ஓ! குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, போர்க்களத்தில் முதன்மையான வீரர்களுடன் மோதி, எதிரியின் மத்தியில் பெரும் படுகொலையை நிகழ்த்திய பிறகு அவன் சொர்க்கத்திற்குச் சென்றானா? தீர்மானத்தோடு வீரமாகப் போரிட்டு, போர்வீரர்களில் முதன்மையானோர் எண்ணற்றோருடன் தனியொருவனாக மோதிக் கொண்டிருந்த போது, உதவியை விரும்பி அவனது இதயம் என்னிடம் திரும்பியிருக்கும் {என்னை நினைத்திருப்பான்} என்பதில் ஐயமில்லை. கர்ணன், துரோணர், கிருபர் மற்றும் இன்னும் பிறர் ஆகியோரின் கூரிய ஒளிமிக்க முனை கொண்ட பல்வேறு கணைகளால் பீடிக்கப்பட்ட போது, பலம் குறைந்த என் மகன் "இந்நெருக்கடியில் என் தந்தையே என்னைக் காப்பார்" என்று மீண்டும் மீண்டும் நினைத்திருப்பானே” என்றான் {அர்ஜுனன்}.

இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே, “கொடூர வீரர்களால் அவன் தரையில் வீழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அல்லது, என்னால் பெறப்பட்டவனும், மாதவனின் {கிருஷ்ணனின்} மருமகனும், சுபத்திரைக்குப் பிறந்தவனுமான அவன் {அபிமன்யு} அநேகமாக அப்படிப் புலம்பியிருக்க மாட்டான்.

கண்கள் சிவந்த, வலிய கரங்களைக் கொண்ட அந்த வீரனை நான் காணவில்லை எனினும், உடையாமல் இருப்பதால், என் இதயம் இடியின் சாரத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.

கொடூர இதயம் கொண்ட அந்த வலிமைமிக்க வில்லாளிகள், என் மகனும், வாசுதேவனின் மருமகனும், வயதில் இளையோனுமான அந்தப் பிள்ளையின் மீது கணைகளை எவ்வாறு ஏவ முடியும்? உன்னத இதயம் கொண்ட அந்த இளைஞன் வழக்கமாகத் தினமும் என்னை வாழ்த்துவான், ஐயோ, எதிரியைக் கொன்று திரும்பும் என்னிடம் அவன் {அபிமன்யு} இன்று ஏன் வரவில்லை? வீழ்த்தப்பட்டுக் குருதியில் குளித்து வெறுந்தரையில் இன்று கிடக்கிறான் அவன் என்பதில் ஐயமில்லை. (ஆகாயத்தில் இருந்து) விழுந்த சூரியனைப் போலத் தன் உடலால் பூமியை அழுகூட்டியபடி கிடக்கிறான்.

எவள், பின்வாங்காத தன் மகன் போரில் இறந்தான் எனக் கேட்டு, கவலையால் பீடிக்கப்பட்டு, உயிரை இழப்பாளோ, அந்தச் சுபத்திரைக்காக நான் வருந்துகிறேன். அபிமன்யுவைத் தொலைத்த சுபத்திரை என்னிடம் என்ன சொல்வாள்? திரௌபதி என்னிடம் என்ன சொல்வாள்? துயரத்தில் பீடிக்கப்படும் அவர்களிடம் நான் என்ன சொல்வேன்?

துயரத்தால் துளைக்கப்பட்டு அழுது கொண்டிருக்கும் என் மருமகளைக் {உத்திரையைக்} கண்டும் ஆயிரம் துண்டுகளாக உடையாததால் என் இதயம் இடியின் சாரத்தாலானது என்பதில் ஐயமேயில்லை.

உண்மையில், செருக்கால் பெருகும் திருதராஷ்டிரர்களின் சிங்க முழக்கங்கள் என் காதுகளில் நுழைந்தன. வீரர்களை நிந்தித்த யுயுத்சு, (திருதராஷ்டிரப் படையினரிடம் இந்த வார்த்தைகளில்) "வலிமைமிக்கத் தேர்வீரர்களே, பீபத்சுவை {அர்ஜுனனை} வீழ்த்த முடியாமல், ஒரு குழந்தையைக் கொன்றுவிட்டு ஏன் மகிழ்கிறீர்கள்? போரில் கேசவனுக்கும், அர்ஜுனனுக்கும் ஏற்பில்லாததைச் செய்துவிட்டு, உண்மையில் துன்பம் வரப்போகும் நேரத்தில், மகிழ்ச்சியால் சிங்கங்களைப் போல ஏன் முழங்குகிறீர்கள்? உங்கள் பாவச்செயல்களின் கனிகள் விரைவில் உங்களை வந்தடையும். நீங்கள் கொடிய குற்றத்தைப் புரிந்திருக்கிறீர்கள். எவ்வளவு காலம் அது கனிகளைக் கொடாமல் இருக்கும்?" என்று {யுயுத்சு} பேசுவதைக் கிருஷ்ணனும் கேட்டிருக்கிறான். இவ்வார்த்தைகளால் அவர்களை நிந்தித்தவனும், வைசிய மனைவி மூலம் திருதராஷ்டிரருக்குப் பிறந்த உயர் ஆன்ம மகனுமான அவன் {யுயுத்சு}, சினத்தாலும், துயரத்தாலும் பீடிக்கப்பட்டுத் தன் ஆயுதங்களை வீசியெறிந்துவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறான். ஓ! கிருஷ்ணா, போரின் போது இவையாவையும் நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை? கொடூர இதயங்களைக் கொண்ட அந்தத் தேர்வீரர்கள் அனைவரையும் நான் அப்போதே எரித்திருப்பேனே" என்றான் {அர்ஜுனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "பிறகு வாசுதேவன் {கிருஷ்ணன்}, தன் மகன் {அபிமன்யு} நிமித்தமாகத் துயரில் பீடிக்கப்பட்டிருந்தவனும், மிகுந்த துன்பத்தில் இருந்தவனும், கண்ணீரால் குளித்த கண்களைக் கொண்டவனும், உண்மையில், தன் பிள்ளையின் படுகொலையால் வேதனையில் மூழ்கியிருந்தவனுமான பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} ஆறுதல் சொல்லும் வகையில் அவனிடம் {அர்ஜுனனிடம்}, "துயருக்கு ஆட்படாதே. துணிச்சல் மிக்கவர்களும், புறமுதுகிடாதவர்களும், குறிப்பாகப் போரைத் தொழிலாகக் கொண்ட க்ஷத்திரிய வீரர்கள் அனைவரின் வழியும் இதுவே. ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவனே {அர்ஜுனா}, போரில் ஈடுபட்டுப் புறமுதுகிடாத வீரர்களுக்கு, நமது சாத்திரங்களின் ஆசிரியர்களால் விதிக்கப்பட்ட இலக்கும் இதுவே. புறமுதுகிடாத வீரர்களுக்கு மரணம் உறுதியானதே. அபிமன்யு, அறச்செயல் செய்தோருக்காக ஒதுக்கப்பட்ட உலகங்களை அடைந்திருக்கிறான் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, போரில் இறக்கும் துணிவுடன் எதிரிகளை முகமுகமாகச் சந்திக்கும் அனைவரும் விரும்புவது இதையே.

அபிமன்யுவைப் பொறுத்தவரை, போரில் பல வீரர்களையும், வலிமைமிக்க இளவரசர்களையும் கொன்ற பிறகு, வீரர்களால் விரும்பப்படுவதைப் போலவே மரணத்தை முகமுகமாகச் சந்தித்திருக்கிறான். ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, வருந்தாதே. பழங்காலத்தில் விதியை உண்டாக்கியவர்கள், க்ஷத்திரியர்களின் நிலைத்த தகுதியாக {புண்ணியமாக} போரில் மரணம் என்பதையே அறிவித்திருக்கிறார்கள். ஓ! பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, இந்த உன் சகோதரர்கள், மன்னர் {யுதிஷ்டிரர்}, இந்த உன் நண்பர்கள் ஆகியோர் அனைவரும், துயரில் மூழ்கியிருக்கும் உன்னைக் கண்டு பெரிதும் உற்சாகமிழந்திருக்கின்றனர். ஓ! மரியாதைகளை அளிப்பவனே {அர்ஜுனா}, ஆறுதல் தரும் வார்த்தைகளால் அவர்களைத் தேற்றுவாயாக. அறியத்தக்கது உன்னால் அறியப்பட்டிருக்கிறது. வருந்துவது உனக்குத் தகாது" என்றான் {கிருஷ்ணன்}.

அற்புதச் செயல்களைப் புரியும் கிருஷ்ணனால் இப்படித் தேற்றப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, தன் சகோதரர்கள் அனைவரிடமும், சோகத்தால் தடைபட்ட குரலுடன் அந்த வார்த்தைகளைச் சொன்னான்: "ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களையும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான பெரிய கண்களையும் கொண்ட அந்த வீரன் அபிமன்யு எவ்வாறு போரிட்டான் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.

எதிரியை அவர்களது யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவற்றோடு நான் அழிக்கப்போவதையும், என் மகனைக் கொன்றோரையும் அவர்களைப் பின்தொடர்வோர் மற்றும் சொந்தங்களுடன் சேர்த்துப் போரில் அழிக்கப்போவதையும் நீங்கள் காண்பீர்கள்.

நீங்கள் அனைவரும் ஆயுதங்களில் சாதித்தவர்களே. சுபத்திரையின் மகன் {அபிமன்யு} வஜ்ரதாரியுடனேயே {இந்திரனுடனேயே} போரிட்டிருந்தாலும், நீங்கள் அனைவரும் ஆயுதம் தரித்திருக்கும்போது அவனை எப்படிக் கொல்ல முடியும்?

ஐயோ, பாண்டவர்களாலும், பாஞ்சாலர்களாலும் போரில் என் மகனைக் காக்க முடியாது என்று அறிந்திருந்தால், நானே அவனைக் {அபிமன்யுவைக்} காத்திருப்பேனே. அப்போது நீங்கள் உங்கள் தேர்களில் இருந்தீர்கள், நீங்கள் உங்கள் கணைகளை ஏவி கொண்டிருந்தீர்கள். ஐயோ, உங்கள் படையணிகளில் பெரும் அழிவை ஏற்படுத்தி எதிரியால் அபிமன்யுவை எவ்வாறு கொல்ல முடியும்?

ஐயோ, நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அபிமன்யு கொல்லப்பட்டதால், உங்களுக்கு ஆண்மையோ ஆற்றலோ இல்லை. அல்லது, நீங்கள் அனைவரும் பலமற்றவர்கள், கோழைகள், உறுதியற்றவர்கள் என்பதை அறிந்தும் நான் சென்றுவிட்டதால் என்னையேதான் நான் கடிந்து கொள்ள வேண்டும்.

ஐயோ, (நீங்கள் கவசங்களை அணிந்திருந்தாலும், தலையில் இருந்து பாதம் வரை ஆயுதம் தரித்திருந்தாலும், வார்த்தைகளால் உங்கள் தகுதிக்கேற்ப எனக்கு நீங்கள் உறுதியளித்திருந்தாலும்) என் மகனைக் காக்கத் தவறினீர்களே, உங்கள் கவசங்களும், அனைத்து வகை ஆயுதங்களும் உங்கள் மேனிகளை அலங்கரிக்கும் ஆபரணங்கள்தானா? சபைகளில் பேசுவதற்காக மட்டுமே உங்களுக்கு வார்த்தைகளா?" என்று கேட்டான் {அர்ஜுனன்}.

இந்த வார்த்தைகளைச் சொன்ன பார்த்தன் {அர்ஜுனன்}, வில்லையும், தன் சிறந்த வாளையும் பிடித்தபடி அமர்ந்தான். உண்மையில், அந்த நேரத்தில், கோபத்தில் அந்தகனுக்கு ஒப்பானவனாக மீண்டும் மீண்டும் நீண்ட மூச்சுகளை விட்டுக் கொண்டிருந்த பீபத்சுவை {அர்ஜுனனை} யாராலும் பார்க்கவும் முடியவில்லை. தன் மகன் {அபிமன்யு} நிமித்தமாக அதீத துயரில் பீடிக்கப்பட்டவனும், கண்ணீரால் குளித்த முகத்தைக் கொண்டவனுமான அர்ஜுனனைப் பார்க்கவோ, அவனிடம் பேசவோ அவனது நண்பர்கள், சொந்தங்கள் ஆகியோரில் எவரும் துணியவில்லை.

உண்மையில் வாசுதேவனையோ, யுதிஷ்டிரனையோ தவிர வேறு எவராலும் அவனை {அர்ஜுனனை} அணுக முடியவில்லை. இந்த இருவரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அர்ஜுனனுக்கு ஏற்புடையவர்களாக இருந்தனர். அவர்கள் மிக உயர்வாக மதிக்கப்பட்டதாலும், அன்புடன் நேசிக்கப்பட்டதாலும், அவர்களால் மட்டுமே அத்தகு நேரங்களில் அவனைத் தனியாக அணுக முடிந்தது. பிறகு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், கோபத்தால் நிறைந்திருந்தவனும், தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருந்தவனுமான பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} மன்னன் யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளில் பேசினான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English