Friday, June 10, 2016

அர்ஜுனன் ஏற்ற உறுதிமொழி! - துரோண பர்வம் பகுதி – 073

The oath of Arjuna! | Drona-Parva-Section-073 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 02)

பதிவின் சுருக்கம் : அபிமன்யு கொல்லப்பட்ட விதத்தை அர்ஜுனனிடம் சொன்ன யுதிஷ்டிரன்; அர்ஜுனன் உரைத்த வெஞ்சினம்; அவன் ஏற்றுக் கொண்ட உறுதிமொழி; கிருஷ்ணனும், அர்ஜுனனும் தங்கள் சங்குகளை முழக்கியது…


யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, நீ சம்சப்தகர்களை நோக்கிச் சென்ற பிறகு, ஆசான் துரோணர் என்னைப் பிடிப்பதற்காகக் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். எனினும், அந்தப் போரில், தீவிரமாகப் போராடும் தேர்ப்படைப்பிரிவை எதிரணியாக வகுத்து, வியூகத்தின் தலைமையில் நின்ற துரோணரை அனைத்துப் புள்ளிகளிலும் தடுப்பதில் நாங்கள் வென்றோம்.


பெரும் எண்ணிக்கையிலான வீரர்களால் தடுக்கப்பட்டிருந்த துரோணர், நன்றாகப் பாதுகாக்கப்பட்டிருந்த என்னையும், {நம்மைச் சேர்ந்த} அனைவரையும் தன் கூரிய கணைகளால் பீடித்துப் பெரும் சுறுசுறுப்புடன் தாக்க ஆரம்பித்தார். இப்படி அவரால் {துரோணரால்} பீடிக்கப்பட்ட எங்களால், அவரது படையை எதிர்கொள்ள மட்டுமல்ல, பார்க்கக்கூட முடியவில்லை. பிறகு, ஓ! தலைவா {அர்ஜுனா}, நாங்கள் அனைவரும், ஆற்றலில் உனக்குச் சமமான சுபத்திரையின் மகனிடம் {அபிமன்யுவிடம்} சென்று “ஓ! மகனே {அபிமன்யு}, துரோணரின் இந்த வியூகத்தைப் பிளப்பாயாக” என்று கேட்டோம். வீரியமிக்க அந்த வீரன் {அபிமன்யு}, இப்படி எங்களால் தூண்டப்பட்டு, சுமை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதை ஏற்கும் நல்ல குதிரையைப் போல, அந்தச் சுமையைத் தானே ஏற்றுக் கொண்டான்.

உனது சக்தியையும், உன்னிடம் இருந்து பெறப்பட்ட ஆயுத அறிவின் துணையையும் கொண்ட அந்தப் பிள்ளை {அபிமன்யு}, பெருங்கடலுக்குள் ஊடுருவும் கருடனைப் போல அந்த வியூகத்தினுள் ஊடுருவினான். (திருதராஷ்டிரப் படைக்குள்) ஊடுருவ விரும்பிய எங்களைப் பொறுத்தவரை, அந்தப் போரில், சுபத்திரையின் மகனான அந்த வீரன் அபிமன்யு அதற்குள் {வியூகத்தில்} நுழைந்த அதே பாதையில் அவனையே {அபிமன்யுவையே} பின் தொடர்ந்து சென்றோம். அப்போது, ஓ! ஐயா {அர்ஜுனா}, சிந்துக்களின் இழிந்த மன்னனான ஜெயத்ரதன், ருத்ரனால் {சிவனால்} அருளப்பட்ட வரத்தின் விளைவால் எங்கள் அனைவரையும் தடுத்தான்.

பிறகு, துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கோசலர்களின் மன்னன் {பிருஹத்பலன்}, கிருதவர்மன் ஆகிய இந்த ஆறு தேர்வீரர்களும் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். இப்படி அந்தப் பெரும் தேர்வீரர்கள் அந்தப் பிள்ளையைச் சூழ்ந்து கொண்ட பிறகு, அவர்கள் பலராக இருப்பினும், தன் சக்தி முழுவதையும் பயன்படுத்திப் போரிட்ட அவனது தேரை அவர்கள் இழக்கச் செய்தனர். அபிமன்யு தேரை இழந்ததும், அவனிடமிருந்து மயிரிழையில் உயிர்தப்பிய துச்சாசனன் மகன் [1], சந்தர்ப்பவசத்தால் அவனை {அபிமன்யுவை} அவனது முடிவை அடையச் செய்வதில் {அவனைக் கொல்வதில்} வென்றான்.

[1] வேறு வலைத்தளங்களில் {கங்குலியில் அல்ல} இவனது பெயர் துர்மாசனன் என்றிருப்பதாகத் துரோண பர்வம் பகுதி 46ல் உள்ள 3வது அடிக்குறிப்பில் கண்டோம். வேறொரு பதிப்பில் இந்த இடத்தில் இவன் துச்சாசனன் மகன் என்ற வகையில் தௌச்சாசனி என்று சொல்லப்படுகிறான்.

அபிமன்யுவைப் பொறுத்தவரை, பல்லாயிரம் மனிதர்கள், குதிரைகள், மற்றும் யானைகளையும் கொன்று, எட்டாயிரம் தேர்களை அழித்து, மேலும் தொள்ளாயிரம் யானைகள், இரண்டாயிரம் {2000} இளவரசர்கள், புகழை அறியாத பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் பலர் ஆகியோரையும் கொன்று, அந்தப் போரில் {கோசல} மன்னன் பிருஹத்பலனையும் சொர்க்கத்திற்கு அனுப்பிவிட்டு, இறுதியாகத் தீயூழின் காரணமாகத் தன் மரணத்தைச் சந்தித்தான். நம் வருத்தத்தை அதிகரிக்கும் இந்த நிகழ்வு இப்படியே நடந்தது! அந்த மனிதர்களில் புலி {அபிமன்யு}, இப்படியே சொர்க்கத்திற்கு உயர்ந்தான்” என்றான் {யுதிஷ்டிரன்}.

மன்னன் யுதிஷ்டிரனால் சொல்லப்பட்ட இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், “ஓ… மகனே” என்று சொல்லி பெருமூச்சுவிட்டபடி, பெரும் வலியோடு பூமியில் விழுந்தான். பிறகு பாண்டவர்கள் அனைவரும் துயரால் நிறைந்து, உற்சாகமிழந்த முகங்களுடன், தனஞ்சயனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு, கண்ணிமைக்காமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். சுயநினைவு மீண்ட வாசவனின் மகன் {இந்திரனின் மகன் அர்ஜுனன்}, சினத்தால் நிறைந்து மூர்க்கமடைந்தான். அடிக்கடி பெருமூச்சுவிட்ட அவன் {அர்ஜுனன்}, காய்ச்சலில் நடுங்கிக் கொண்டிருந்தவன் போலவே தெரிந்தான். தன் கைகளைப் பிசைந்து கொண்டு, ஆழ்ந்த மூச்சுகளை விட்டு, கண்ணீரால் குளித்த கண்களுடன் ஒரு பைத்தியக்காரனைப் போலப் பார்த்துக் கொண்டே இருந்த அவன் {அர்ஜுனன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

அர்ஜுனன், "நாளை நான் ஜெயத்ரதனைக் கொல்லப் போகிறேன் என்று நான் உண்மையாகவே உறுதிகூறுகிறேன் {சத்தியம் செய்கிறேன்}. மரணப் பயத்தால் அவன் {ஜெயத்ரதன்} திருதராஷ்டிரர்களைக் கைவிடாதிருந்தாலோ, நமது பாதுகாப்பையும், மனிதர்களில் முதன்மையான கிருஷ்ணன் அல்லது {யுதிஷ்டிரராகிய} உமது பாதுகாப்பையும் அவன் மன்றாடிக் கேட்காதிருந்தாலோ, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நாளை அவனை {ஜெயத்ரதனை} நான் நிச்சயம் கொல்வேன்!

என்னிடம் கொண்ட நட்பை மறந்து, திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதைச் செய்வதில் ஈடுபடும் அந்த இழிந்தவனே {ஜெயத்ரதனே} என் பிள்ளையின் {அபிமன்யுவின்} படுகொலைக்குக் காரணமானான்! {எனவே} நாளை நான் அவனைக் {ஜெயத்ரதனைக்} கொல்வேன். நாளைய போரில் அவனை {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பதற்காகத் துரோணரோ, கிருபரோ, எவரெல்லாம் என்னுடன் மோதுவார்களோ, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அவர்கள் அனைவரையும் என் கணையால் நான் மறைப்பேன். மனிதர்களில் காளையரே, வீரர்களில் முதன்மையானோரே, (நாளைய) போரில் இதை நான் அடையவில்லையெனில், அறவோருக்கு ஒதுக்கப்படும் நல்லுகங்களை நான் அடையாதிருப்பேனாக!

தங்கள் தாய்மாரைக் கொன்றவர்கள், தங்கள் தந்தைமாரைக் கொன்றவர்கள், தங்கள் ஆசான்களின் படுக்கையைக் களங்கப்படுத்துபவர்கள் {குருதாரகமனம் செய்பவர்கள்}, தீயவர்கள், கொடூரர்கள், அறவோரிடம் பகைமை பாராட்டுபவர்கள், பிறர் மீது பழிகூறுபவர்கள், அடைக்கலப் பொருட்களைக் கவர்பவர்கள், நம்பிக்கை துரோகிகள், முன்பு தாங்கள் யாவரிடம் இன்புற்றனரோ அந்த மனைவிமாரை நிந்திப்பவர்கள், பிராமணர்களைக் கொன்றவர்கள் {பிரம்மஹத்தி செய்தவர்கள்}, பசுவைக் கொன்றவர்கள், சர்க்கரை கலந்த பால் மற்றும் அரிசி {பாயாசம்}, வாற்கோதுமை {பார்லி}, கீரைவகைகளால் செய்யப்பட்ட உணவு, பால், எள்ளுப்பொடி, அரிசி ஆகியவற்றால் செய்யப்பட்ட பண்டங்கள், கோதுமை மாவை நெய்யில் வறுத்துச் செய்யப்படும் அப்பங்கள், பிறவகை அப்பங்கள், இறைச்சி ஆகியவற்றைத் தேவர்களுக்கு அர்ப்பணிக்காமல் காரணமின்றி உண்போர் ஆகியோர் எந்த உலகங்களை அடைவார்களோ அந்த உலகங்கள், நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் விரைவாக எனதாகட்டும்.

வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் பிராமணர்கள், மரியாதைக்குரியவர்கள், தங்கள் ஆசான்களை அவமதிப்போர் ஆகியோர் எந்த உலகங்களை அடைவார்களோ (அந்த உலகங்கள், நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் எனதாகட்டும்). பிராமணர்களையோ, நெருப்பையோ தங்கள் காலால் தீண்டுபவர்கள் எந்த முடிவை {கதியை} அடைவார்களோ, சளி {கபம்}, மலம் மற்றும் சிறுநீரை நீர்நிலையில் கழிப்பவர்கள் எந்த முடிவை அடைவார்களோ, அந்தத் துன்பகரமான முடிவு {அந்தத் துன்பகதி}, நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் எனதாகட்டும்.

நிர்வாணமாக (நீர்நிலையில்) குளிப்பவனும், விருந்தினரை உபசரிக்காதவனும் எந்த முடிவை அடைவானோ, கையூட்டு பெறுவோர், பொய்மை பேசுவோர், பிறரை வஞ்சித்து ஏமாற்றுவோர் ஆகியோர் எந்த முடிவை அடைவார்களோ, தங்கள் ஆன்மாவுக்குக் குற்றமிழைத்தோர் {தற்புகழ்ச்சி செய்வோர்}, (பிறரைப்) பொய்யாகத் துதிப்போர், பணியாட்கள், மகன்கள், மனைவியர், தன்னை அண்டியிருப்பவர்கள் {நம்பியிருப்பவர்கள்} ஆகியோருக்குக் கொடாமல், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இனிய பண்டங்களை உண்ணும் {ம்ருஷ்டான்னபோஜனம் செய்யும்} இழிந்த பாவிகள் ஆகியோர் எந்த முடிவை {கதியை} அடைவார்களோ அந்தப் பயங்கர முடிவு, நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் எனதாகட்டும்!

அறம்சார்ந்து கீழ்ப்படியும் சீடனை {அல்லது தன்னை அண்டியவனை} ஆதரிக்காமல் கைவிடும் இரக்கமற்ற ஆன்மா கொண்ட இழிந்த பாவியும், சிராத்தங்களின் காணிக்கைகளைத் தகுந்த அண்டைவீட்டாருக்குக் கொடாமல், அவற்றைத் தகாதவர்களுக்கு அளிப்பவனும் எந்த முடிவை அடைவானோ, மது குடிப்பவன், மரியாதைக்குத் தகுந்தவர்களை அவமதிப்பவன், நன்றிமறந்தவன், தன் சகோதரர்களைப் பழிப்பவன் எந்த முடிவை அடைவானோ அந்த முடிவு, நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் எனதாகட்டும் [2]. நான் குறிப்பிட்ட பாவிகளும், குறிப்பிடாத பாவிகளும் எந்த முடிவை {கதியை} அடைவார்களோ அந்த முடிவு, இந்த இரவு கடந்ததும் நாளை நான் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் விரைவில் எனதாகட்டும்.

[2] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகம் இருக்கிறது. அவை பின்வருமாறு: "இடக்கையில் உண்பவர்கள், மடியில் உணவை வைத்துண்பவர்கள், பலாசத்தால் ஆசனத்தையும், தும்பைச் செடியினால் பல்துலக்குவதையும் விடாதவர்கள், விடியற்காலையில் உறங்குபவர்கள், குளிருக்குப் பயப்படும் பிராமணர்கள், போரில் பயப்படும் க்ஷத்திரியர்கள், ஒரே கிணற்று நீரோடு கூடியதும், வேதத்வனி விடுபட்டதுமான கிராமத்தில் ஆறு மாதம் வசிக்கிறவர்கள், சாத்திரங்களை நிந்திக்கின்றவர்கள், பகலில் பெண்ணிடத்தில் சேர்பவர்கள், பகலில் உறங்குபவர்கள், வீட்டுக்கு நெருப்பு வைப்பவர்கள், விஷத்தைக் கொடுப்பவர்கள், அக்னி காரியம் செய்யாதவர்கள், அதிதிசத்காரம் செய்யாதவர்கள், பசுக்கள் குடிக்கும் நீரில் இடையூற்றைச் செய்கின்றவர்கள், ரஜஸ்வலையைப் {மாதவிடாயில் இருக்கும் பெண்ணைப்} புணர்பவர்கள், பலருக்கும் யாகஞ்செய்பவர்கள், நாய் போல விருத்தியுள்ள பிராமணர்கள், பிராமணர்களுக்கு உறுதிகூறிவிட்டு பிறகு லோபத்தினால் கொடாதவன் ஆகியோருக்கு எந்தக் கதியுண்டோ, அந்தக் கதியை நாளைய தினத்தில் ஜெயத்ரதனைக் கொல்லாவிடில் நான் அடைவேன்” என்று இருக்கிறது.

எனது மற்றொரு உறுதிமொழியையும் கேட்பீராக! நாளை நான் அந்த இழிந்தவனைக் கொல்லாமல் சூரியன் மறைவானெனில், அப்போது இங்கே நான் சுடர்மிகும் நெருப்புக்குள் நுழைவேன். அசுரர்களே, தேவர்களே, மனிதர்களே, பறவைகளே, பாம்புகளே, பிதுர்களே, இரவு உலாவிகளே, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களே, தெய்வீக முனிவர்களே, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களே, இன்னும் நான் குறிப்பிடாதவர்களே, என் எதிரியை என்னிடம் இருந்து காப்பதில் நீவிர் வெல்ல மாட்டீர்! அவன் பாதாளத்திற்கே சென்றாலும், ஆகாயத்திற்கு உயர்ந்தாலும், தேவர்களிடம் சென்றாலும், தைத்தியர்களின் மாநிலங்களுக்குச் சென்றாலும், இந்த இரவு கழிந்ததும், நூற்றுக்கணக்கான கணைகளால் அபிமன்யுவின் எதிரியுடைய {அந்த ஜெயத்ரதன்} தலையை நிச்சயம் நான் துண்டிப்பேன்” என்றான் {அர்ஜுனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்த வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன், தன் இரு கைகளாலும் காண்டீவத்தை வளைக்கத் தொடங்கினான். அர்ஜுனனின் குரலையும் மீறி எழுந்த அந்த நாணொலி சொர்க்கங்களையே {வானத்தையே} எட்டியது. அர்ஜுனன் இந்த உறுதிமொழியை ஏற்றதும், கோபத்தால் நிறைந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் சங்கான பாஞ்சஜன்யத்தை முழக்கினான். பல்குனனோ {அர்ஜுனனோ} தேவதத்தத்தை முழக்கினான். பெரும் சங்கான பாஞ்சஜன்யம், கிருஷ்ணனின் வாய்க்காற்றால் நன்கு நிரப்பப்பட்டுப் பெரும் ஒலியை உண்டாக்கியது. யுக முடிவில் நேர்வதைப் போல அவ்வொலி, முக்கிய மற்றும் துணைத் திசைகளின் ஆட்சியாளர்கள் {திக்பாலர்கள்}, பாதாள உலகங்கள் மற்றும் மொத்த அண்டத்தையும் அதிரச் செய்தது. உண்மையில், உயர் ஆன்ம அர்ஜுனன் அந்த உறுதிமொழியை ஏற்றதும், ஆயிரக்கணக்கான இசைக்கருவிகளின் ஒலிகளும், உரத்த சிங்க முழக்கங்களும் அந்தப் பாண்டவ முகாமிலிருந்து எழுந்தன” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English