Sunday, June 12, 2016

கிருஷ்ணன் சொன்ன தகவல்! - துரோண பர்வம் பகுதி – 075

The information of Krishna! | Drona-Parva-Section-075 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 04)

பதிவின் சுருக்கம் : ஒற்றர்கள் மூலம் அறிந்த தகவலை கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொன்னது; ஜெயத்ரதன் துரியோதனனிடம் பேசியது; துரோணர் அமைக்கப்போகும் வியூகம் குறித்த தகவல்கள் ஆகியவற்றைச் சொன்ன கிருஷ்ணன் மீண்டும் மந்திரிகளுடன் ஆலோசிக்க வேண்டும் என்று அர்ஜுனனை முடுக்கியது…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பார்த்தன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} மரணத்தைக் குறித்துச் சூளுரைத்த பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} “உன் சகோதரர்களின் சம்மதத்துடன் (மட்டுமே, என்னிடம் ஆலோசியாமல்), “சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வேன்” என்று உறுதியேற்றிருக்கிறாய்! இஃது (உன் தரப்பில்) பெரும் அசட்டைத் துணிவு கொண்ட ஒரு செயலாகும். என்னிடம் ஆலோசியாமலே, நீ பெரும் கனத்தை (உன் தோள்களில்) ஏற்றிருக்கிறாய். ஐயோ, அனைவரின் ஏளனத்தில் இருந்து நாம் எப்படித் தப்பிக்கப் போகிறோம்? [1]


[1] வேறொரு பதிப்பில் இந்த வரிகள், ”சகோதரர்களின் சம்மதத்தையறியாமல், ‘சைந்தவனை யான் கொல்வேன்’ என்று உன் வாக்கினால் பிரதிஜ்ஞை செய்யப்பட்டது. இப்படிச் செய்யப்பட்ட அந்தப் பிரதிஜ்ஞை சாகசமே; என்னோடு கூட ஆலோசியாமலே இந்தப் பெரிய பாரத்தை நீ சுமக்க ஆரம்பித்தாய். எவ்வாறு நாம் எல்லாவுலகத்தோர்களாலும் பரிஹஸிக்கத் தகாதவர்களாவோம்” என்று இருக்கிறது.

நான் திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} முகாமுக்கு சில ஒற்றர்களை அனுப்பிவைத்தேன். அந்த ஒற்றர்கள் விரைவாக என்னிடம் வந்து இந்தத் தகவலை எனக்கு அளித்தனர். அஃதாவது, ஓ! தலைவா {அர்ஜுனா}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} குறித்து நீ உறுதியேற்ற பிறகு, சிங்க முழக்கங்களுடன் கலந்த (நமது) இசைக்கருவிகளின் ஒலி, திருதராஷ்டிரர்களால் கேட்கப்பட்டது.

அந்த ஆரவாரத்தின் விளைவாக, அந்தத் திருதராஷ்டிரர்கள், தங்கள் நலன்விரும்பிகளுடன் கூடி அச்சமடைந்து, “இந்தச் சிங்க முழக்கங்கள் காரணமற்றவையல்ல” என்று நினைத்து (அடுத்தது என்ன நடக்கும் என்று) காத்திருந்தனர். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, கௌரவர்களின் யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்படைக்கு மத்தியில் இருந்து உரத்த முழக்கங்களைக் கொண்ட ஆரவாரம் எழுந்தது. அவர்களது தேர்களில் இருந்து பயங்கரச் சடசடப்பொலிகளும் கேட்கப்பட்டது. “அபிமன்யுவின் மரணத்தைக் கேட்கும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஆழமாகத் துன்புற்றுக் கோபத்தில் இரவிலேயே கூடப் போரிடப் புறப்பட்டு வருவான்” என்று நினைத்து (போருக்குத் தயாராக) அவர்கள் காத்திருந்தனர்.

அப்படி அவர்கள் தயாராகிக் கொண்டிருக்கையில், ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, உண்மையில் பிணைப்புள்ள நீ, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்ல ஏற்றிருக்கும் உறுதியை உண்மையில் அறிந்து கொண்டனர். பிறகு, சுயோதனனின் ஆலோசகர்கள் அனைவரும் உற்சாகமிழந்து சிறு விலங்குகளைப் போல அச்சமுற்றனர்.

மன்னன் ஜெயத்ரதனைப் பொறுத்தவரை, சிந்துக்கள் மற்றும் சௌவீரர்களின் ஆட்சியாளனான அவன், துயரத்தில் மூழ்கி, முற்றிலும் உற்சாகத்தை இழந்து எழுந்து நின்று, தன் ஆலோசகர்கள் அனைவருடன் தன் பாசறைக்குள் நுழைந்தான். ஆலோசனை தேவைப்பட்டு நிற்கும் அந்நேரத்தில், தனக்கு நன்மையைத் தரும் அனைத்துத் தீர்வுகளையும் குறித்து (அவர்களுடன்) கலந்தாலோசித்த பிறகு, (கூட்டணியில் உள்ள) மன்னர்களின் சபைக்குச் சென்று சுயோதனனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.

{அவன் ஜெயத்ரதன்}, ”தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவனது மகனைக் கொன்றவன் நானே என்று நினைத்து, நாளை என்னுடன் போரில் மோதுவான்! தன் படைக்கு மத்தியில் அவன் {அர்ஜுனன்} என்னைக் கொல்வதாகச் சபதமேற்றிருக்கிறான். தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோரும் கூடச் சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} அந்த உறுதிமொழியில் அவனைச் சலிப்படையச் செய்யத் துணியமாட்டார்கள். எனவே, நீங்களனைவரும் போரில் என்னைப் பாதுகாக்க வேண்டும். தனஞ்சயன் {அர்ஜுனன்} உங்கள் தலையில் தன் காலை வைத்து இலக்கை {அவனது இலக்கான என்னை} அடிப்பதில் வெல்லாதிருக்கட்டும். இக்காரியம் குறித்து உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அல்லது, ஓ! குருக்களை மகிழ்விப்பவனே {துரியோதனா}, போரில் என்னைக் காப்பதில் நீ வெல்ல முடியாது என நீ நினைத்தால், ஓ! மன்னா {துரியோதனா}, நான் வீட்டுக்குச் செல்ல அனுமதிப்பாயாக” என்றான் {ஜெயத்ரதன்}.

இப்படி (ஜெயத்ரதனால்} சொல்லப்பட்ட சுயோதனன் {துரியோதனன்} உற்சாகமற்றவனாக அமர்ந்து தன் தலையைத் தொங்கப்போட்டான். ஜெயத்ரதன் பெரும் அச்சத்தில் இருக்கிறான் என்பதை உறுதி செய்து கொண்ட சுயோதனன் {துரியோதனன்} அமைதியாகச் சிந்திக்கத் தொடங்கினான். குரு மன்னன் {துரியோதனன்} பெரிதும் துயருறுவதைக் கண்ட சிந்துக்களின் ஆட்சியாளனான மன்னன் ஜெயத்ரதன், தன் நன்மையைக் குறிப்பிட்டு மெதுவாக இந்த வார்த்தைகளைச் சொன்னான், ”பெரும்போரில் அர்ஜுனனின் ஆயுதங்களைத் தன் ஆயுதங்களால் கலங்கடிக்கும் மேன்மையான சக்தி கொண்ட எந்த வில்லாளியையும் நான் இங்கே காணவில்லை. சதக்ரதுவே {இந்திரனே} ஆனாலும், வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தன் கூட்டாளியாகக் கொண்டு காண்டீவ வில்லுடன் நிற்கும் அர்ஜுனன் முன்பு எவனால் நிற்க முடியும்?

முற்காலத்தில், இமயமலையில், உயர்ந்த சக்தியைக் கொண்ட தலைவன் மகேஸ்வரனே {சிவனே} காலாளாக நின்றிருந்த பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} மோதினான் என்று கேள்விப்படுகிறோம். தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} தூண்டப்பட்ட அவன் {அர்ஜுனன்}, தனித்தேரில் சென்று, ஹிரண்யபுரத்தில் வசித்த ஆயிரம் தானவர்களைக் கொன்றான். அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} இப்போது பெரும் மதிநுட்பம் கொண்ட வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} கூட்டுச் சேர்ந்திருக்கிறான். அவன் {அர்ஜுனன்}, தேவர்களுடன் சேர்ந்த இந்த மூவுலகங்களையும் அழிக்கத் தகுந்தவனென நான் நினைக்கிறேன். (போர்க்களத்தை விட்டு என் வீட்டுக்குச் செல்ல) எனக்கு நீ அனுமதியளிக்க வேண்டும், அல்லது உயர் ஆன்ம வீரத் துரோணர் தன் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} சேர்ந்து என்னைப் பாதுகாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அல்லது, உன் விருப்பத்துக்காக நான் காத்திருப்பேன்” என்றான் {ஜெயத்ரதன்}.

ஓ! அர்ஜுனா, (ஜெயத்ரதனால் இப்படிச் சொல்லப்பட்ட) மன்னன் சுயதோனன் இக்காரியம் குறித்து ஆசானிடம் பணிவுடன் வேண்டினான் [2]. அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்களும், குதிரைகளும் அணிவகுக்கப்பட்டிருக்கின்றன. கர்ணன், பூரிஸ்ரவஸ், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வெல்லப்பட முடியாத விருஷசேனன், கிருபர், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஆகியோர் முன்னணியில் (ஜெயத்ரதனுக்கு முன்பாக) நிற்பார்கள்.

[2] துரோணர் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஜெயத்ரதனின் கோரிக்கையைத் துரோணரிடம் துரியோதனன் வழிமொழிந்தான் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அரைப்பங்கு சகடமும் {தேர்போன்ற வாகனம்}, அரைப்பங்கு தாமரையும் {பத்மும்} கொண்ட வியூகம் ஒன்றை துரோணர் அமைக்கப்போகிறார். அந்தத் தாமரையின் இதழ்களின் நடுவில் சூசிமுக {ஊசி வாய்} வியூகமும் இருக்கும். சிந்துக்களின் ஆட்சியாளனான அந்த ஜெயத்ரதன் அதற்குள் போரில் வெல்லப்பட முடியாத படி கடினமாக வீரர்களால் பாதுகாக்கப்படுவான். வில் (பயன்பாடு), ஆயுதங்கள், ஆற்றல், பலம், குலவழி [3] ஆகியவற்றில் இந்த ஆறு தேர்வீரர்களும் தாங்கிக் கொள்ள மிகக் கடினமானவர்கள் என்பதில் ஐயமில்லை. இந்த ஆறு தேர்வீரர்களையும் முதலில் வீழ்த்தாமல் ஜெயத்ரதனை அடையமுடியாது.

[3] வேறொரு பதிப்பில் இது மனோதைரியம் என்று இருக்கிறது. இஃதே இங்குச் சரியானதாகவும் படுகிறது.

ஓ! அர்ஜுனா, அந்த அறுவரில் ஒவ்வொருவரின் ஆற்றலையும் நினைத்துப் பார். ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா} அவர்கள் ஒன்றுசேர்ந்து நிற்கும்போது எளிதில் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருப்பார்கள். எனவே, நாம், நமது நன்மைக்காகவும், நமது நோக்கத்தில் வெற்றியடைவதற்காகவும், நம் நன்மையை விரும்புபவர்களும், கொள்கைகளை {ஆலோசனைகளை} அறிந்தவர்களுமான ஆலோசகர்களுடன் மீண்டும் ஆலோசிக்க வேண்டும்” என்றான் {கிருஷ்ணன்}. 


ஆங்கிலத்தில் | In English