The self-confidence of Arjuna! | Drona-Parva-Section-076 | Mahabharata In Tamil
(பிரதிஜ்ஞா பர்வம் – 05)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் தன் வல்லமையையும், கிருஷ்ணனின் பெருமையையும், தன் ஆயுதங்களின் சக்தியையும் கிருஷ்ணனுக்கு எடுத்துச் சொன்னது…
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "நீ பலமாகக் கருதும் திருதராஷ்டிரப் படையின் இந்த ஆறு தேர்வீரர்களின் (ஒன்றுபட்ட) சக்தியும் என் சக்தியின் பாதி அளவுக்கும் இணையாகாது என்றே நான் நினைக்கிறேன்! ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, ஜெயத்ரதனைக் கொல்ல அவர்களை எதிர்த்து நான் செல்லும்போது, அவர்கள் அனைவரின் ஆயுதங்களும் என்னால் வெட்டப்பட்டுக் கலங்கடிக்கப் படுவதை நீ காண்பாய்!
துரோணரும், இந்த மனிதர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} தலையை நான் பூமியில் வீழ்த்துவதைக் கண்டு அவர்கள் புலம்பப் போகிறார்கள். சித்தர்கள், ருத்ரர்கள், வசுக்கள், அசுவினிகள், இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட மருத்துக்கள், பிற தேவர்களுடன் கூடிய விஸ்வதேவர்கள், பிதுர்கள், கந்தர்வர்கள், கருடன், பெருங்கடல், மலைகள், ஆகாயம், சொர்க்கம், பூமி, (முக்கிய மற்றும் துணைத்) திசைகள், அவற்றின் ஆட்சியாளர்கள் {திக்பாலர்கள்}, வீட்டு மற்றும் காட்டு உயிரினங்கள் அனைத்தும், உண்மையில், அசைவன, அசையாதன ஆகிய அனைவரும் சேர்ந்து சிந்துக்களின் ஆட்சியாளனைப் {ஜெயத்ரதனைப்} பாதுகாத்தாலும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நாளைய போரில் என் கணைகளால் ஜெயத்ரதன் கொல்லப்படுவதை நீ காண்பாய்!
ஓ! கிருஷ்ணா, உண்மையின் பெயரால் நான் உறுதிகூறுகிறேன், ஓ! கேசவா {கிருஷ்ணா}, இழிந்த பாவியான ஜெயத்ரதனின் பாதுகாவலராக இருக்கும் அந்த வலிமைமிக்க வில்லாளியான துரோணருடன் தொடக்கத்திலேயே மோதுவேன் என்று சொல்லி என் ஆயுதங்களைத் தொடுகிறேன் ({ஆயுதங்களைத்} தொட்டு அவற்றின் பெயரால் உறுதிகூறுகிறேன்). இந்த ஆட்டம் (போர்) துரோணரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனச் சுயோதனன் {துரியோதனன்} நினைக்கிறான். எனவே, துரோணரால் வழிநடத்தப்படும் படையின் முகப்பைத் துளைத்துச் சென்று நான் ஜெயத்ரதனை அடைவேன்!
இடியால் {வஜ்ரத்தால்} பிளக்கப்படும் மலை முகட்டைப் போல, மிக வலிமைமிக்க வில்லாளியான அவர் {துரோணர்}, போரில் கடும் சக்தி கொண்ட என் கணைகளின் மூலம் என்னால் பிளக்கப்படுவதை நாளை நீ காண்பாய். கூரிய கணைகள் தங்கள் மேல் பாய்ந்து, அதனால் பிளக்கப்பட்டு வீழ்ந்த மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் மார்புகளில் இருந்து குருதி (தாரைத்தாரையாகப்) பாயும்! மனம் அல்லது காற்றின் வேகத்தைக் கொண்ட காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உயிர்கள் ஆயிரக்கணக்கில் பறிக்கப்படும்!
நாளைய போரில், யமன், குபேரன், வருணன், இந்திரன் மற்றும் ருத்ரன் ஆகியோரிடம் நான் பெற்ற ஆயுதங்களை மனிதர்கள் காண்பார்கள். நாளைய போரில், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாக்க வருவோர் அனைவரின் ஆயுதங்களும் என்னுடைய பிரம்ம ஆயுதத்தால் கலங்கடிக்கப்படுவதை நீ காண்பாய்! நாளைய போரில், ஓ! கேசவா {கிருஷ்ணா}, என் கணைகளின் சக்தியால் வெட்டப்பட்டு விழும் மன்னர்களின் தலைகள் இந்தப் பூமியில் விரவிக் கிடப்பதை நீ காண்பாய்! எதிரியை முறியடித்து, என் நண்பர்களுக்கு மகிழ்வூட்டி, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதரனை} நசுக்கி, ஊனுண்ணிகள் அனைவரையும் (நாளை) நான் மனம்நிறையச் செய்வேன்!
பெரும் குற்றவாளியும், ஓர் உறவினனைப் போல நடந்து கொள்ளாதவனும், பாவம் நிறைந்த நாட்டில் பிறந்தவனுமான சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} என்னால் கொல்லப்பட்டுத் தன் உறவினர்களைத் துக்கமடையச் செய்யப் போகிறான். பாவகர நடத்தை கொண்டவனும், அனைத்து வசதிகளுடனும் வளர்க்கப்பட்டவனுமான அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, என் கணைகளால் துளைக்கப்படுவதை நீ காண்பாய்! நாளை, ஓ! கிருஷ்ணா, எனக்கு நிகரான வில்லாளி எவனும் இந்தப் பூமியில் இல்லை என்று சுயோதனனை {துரியோதனனை} நான் சிந்திக்க வைக்கப் போகிறேன்.
தெய்வீக வில்லாகும் {இந்த} என் காண்டீவம்! போர்வீரன் நானே! ஓ! மனிதர்களில் காளையே, ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, தேரோட்டி நீயே! {அப்படியிருக்க} என்னால் எதைத்தான் வீழ்த்த முடியாது? ஓ! புனிதமானவனே {கிருஷ்ணா} உன் அருளால், போரில் நான் அடைய முடியாததுதான் எது? ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, என் ஆற்றல் தடுக்கப்பட முடியாதது என அறிந்தும், ஏன் என்னை நீ நிந்திக்கிறாய்? சோமத்தில் எப்போதும் லக்ஷ்மி இருப்பதைப் போல, பெருங்கடலில் எப்போதும் நீர் இருப்பதைப் போல, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா} என் சபதம் எப்போதும் சாதனையில் இருக்கும் என்பதையும் அறிவாயாக!
என் ஆயுதங்களை எளிதாக எண்ணாதே! உறுதியான என் வில்லை எளிதாக எண்ணாதே! என் கரங்களின் வலிமையை எளிதாக எண்ணாதே! தனஞ்சயனை {அர்ஜுனன் ஆகிய என்னை} எளிதானவனாக {எண்ணவே} எண்ணாதே! நான் உண்மையில் வெல்வேன், தோற்கமாட்டேன் எனும் அத்தகு வழியிலேயே நான் போரிடச் செல்வேன். நான் உறுதியேற்றேன் என்றதும், போரில் அந்த ஜெயத்ரதன் ஏற்கனவே கொல்லப்பட்டதாகவே அறிவாயாக!
உண்மையில், பிராமணனிடத்தில் உண்மை இருக்கிறது; உண்மையில், அறவோரிடம் பணிவு இருக்கிறது; உண்மையில், வேள்வியிலேயே செழிப்பு இருக்கிறது; உண்மையில், நாராயணனிடமே வெற்றியும் இருக்கிறது” என்றான் {அர்ஜுனன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “வசுதேவர் மகனான ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, தனக்குத் தானே அதைச் சொல்லிக் கொண்ட அர்ஜுனன், ஆழ்ந்த குரலில் மீண்டும் ஒருமுறை தலைவன் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினான், “ஓ! கிருஷ்ணா, கையில் இருக்கும் காரியம் பயங்கரமானது. ஆகையால் இந்த இரவு விடிவதற்குள், என் தேர் நல்ல தயார் நிலையில் இருக்குமடி செய்வாயாக” {என்றான் அர்ஜுனன்}.
ஆங்கிலத்தில் | In English |