Tuesday, June 14, 2016

சுபத்திரைக்கு ஆறுதல் கூறிய கிருஷ்ணன்! - துரோண பர்வம் பகுதி – 077

Krishna consoled Subhadra! | Drona-Parva-Section-077 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 06)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனும், கிருஷ்ணனும் கோபமாக இருப்பதை நினைத்துக் கவலையடைந்த தேவர்கள்; கௌரவர்களுக்குத் தெரிந்த தீய சகுனங்கள்; சுபத்திரைக்கு ஆறுதலளிக்கக் கிருஷ்ணனை அனுப்பிய அர்ஜுனன்; கிருஷ்ணனின் ஆறுதல் வார்த்தைகள்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும், கவலை மற்றும் துயரத்தால் பீடிக்கப்பட்டு, இரு பாம்புகளென அடிக்கடி பெருமூச்சைவிட்டுக் கொண்டே இரவில் தூங்காதிருந்தனர். நரன் மற்றும் நாராயணன் ஆகிய அந்த இருவரும் சினத்தில் இருப்பதை அறிந்த தேவர்களும், வாசவனும் {இந்திரனும்} “என்ன ஆகப்போகிறதோ?” என்றெண்ணி மிகவும் கவலையடைந்தனர்.


வறண்ட காற்று ஆபத்தை முன்னறிவித்தபடியே கடுமையாக வீசத் தொடங்கியது. சூரிய வட்டிலில் தலையற்ற முண்டமும், கதாயுதமும் {பரிகமும்} தோன்றின. மேகமற்றிருந்தாலும், மின்னலின் கீற்றுகளோடு கலந்த உரத்த இடிமுழக்கங்கள் அடிக்கடி கேட்கப்பட்டன. மலைகள், நீர்நிலைகள் மற்றும் காடுகளுடன் கூடிய பூமாதேவி குலுங்கினாள். மகரங்களின் வசிப்பிடமான கடல்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} கொந்தளித்துப் பெருகியது. வழக்கமாக ஓடும் திசைக்கு எதிராக ஆறுகள் பாய்ந்தன. தேர்வீரர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் கீழ் உதடுகளும், மேல் உதடுகளும் துடிக்கத் தொடங்கின. மனித ஊனுண்ணிகளை மகிழ்ச்சிப்படுத்தும்படியும், யமனின் ஆட்சிப்பகுதியில் உள்ளோர் பெருமளவில் அதிகரிக்கப் போவதை முன்னறிவித்தபடியும், விலங்குகள் (போர்க்களத்தில்) மலமும் சிறுநீரும் கழித்தவாறே துன்பத்துடன் உரக்கக் கதறின. மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்த செய்யும் இந்தக் கடும் சகுனங்களைக் கண்டும், வலிமைமிக்க அர்ஜுனனின் கடும் சபதத்தைக் கேட்டும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} உமது வீரர்கள் அனைவரும் மிகவும் கலக்கமடைந்தனர்.

அப்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாகசாசனனின் {இந்திரன்} மகன் {அர்ஜுனன்} கிருஷ்ணனிடம், “தன் மருமகளோடு {உத்தரையோடு} இருக்கும் உன் தங்கை சுபத்திரையைத் தேற்றச் செல்வாயாக. ஓ! மாதவா {கிருஷ்ணா} மருமகளையும் {உத்தரையையும்}, அவளது தோழிகளையும் தேற்றுவாயாக. ஓ! தலைவா {கிருஷ்ணா}, உண்மை நிறைந்த ஆறுதல் வார்த்தைகளால் அவர்களைத் தேற்றுவாயாக” என்றான் {அர்ஜுனன்}. இப்படிச் சொல்லப்பட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} உற்சாகமற்ற இதயத்தோடு அர்ஜுனன் வசிப்பிடத்திற்குச் சென்று, தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் ஏற்பட்ட துயரால் பீடிக்கப்பட்டுக் கவலையில் இருந்த தன் தங்கையைத் {சுபத்திரையைத்} தேற்றத் தொடங்கினான்.

வாசுதேவன் {கிருஷ்ணன் சுபத்திரையிடம்}, ”ஓ! விருஷ்ணி குலத்துப் பெண்ணே {சுபத்திரையே}, உனது மருமகளுடன் {உத்தரையுடன்} சேர்ந்து உன் மகனுக்காகத் {அபிமன்யுவிற்காகத்} துயரப்படாதே. ஓ! மருண்டவளே, அனைத்து உயிரினங்களுக்கும் காலத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு. பெருமைமிக்கப் பரம்பரையில் பிறந்த வீரனுக்கு, அதிலும் குறிப்பாக க்ஷத்திரியனுக்கு உரிய முடிவையே உன் மகன் அடைந்திருக்கிறான். எனவே நீ வருந்தாதே. பெரும் விவேகமும், தன் தந்தைக்கு இணையான ஆற்றலையும் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு}, க்ஷத்திரிய வழக்கத்தின்படியே, வீரர்கள் ஆசைப்படும் ஒரு முடிவை அடைந்திருப்பது நற்பேறாலேயே.

எண்ணற்ற எதிரிகளை வீழ்த்தி, அவர்களை யமனின் முன்னிலைக்கு அனுப்பி வைத்த அவன் {அபிமன்யு}, அனைத்து விருப்பங்களையும் அருள்பவையும், அறவோருக்கு உரியவையுமான நித்தியமான உலகங்களை அடைந்திருக்கிறான். தவம், பிரம்மச்சரியம், சாத்திர அறிவு, ஞானம் ஆகியவற்றால் அறவோர் அடையும் முடிவையே உன் மகனும் அடைந்திருக்கிறான். வீரனின் தாயும், வீரனின் மனைவியும், வீரனின் மகளும், வீரர்களுக்கு உறவினருமான நீ, ஓ! இனியவளே {சுபத்திரையே}, உயர்ந்த முடிவை அடைந்திருக்கும் உன் மகனுக்காக {அபிமன்யுவிற்காக} வருந்தலாகாது.

ஓ! அழகான பெண்ணே, ஒரு குழந்தையைக் கொன்றவனும், பாவகரக் காரியத்தைச் செய்தவனுமான அந்தச் சிந்துக்களின் இழிந்த ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, இந்த இரவு கடந்ததும், தன் நண்பர்கள் மற்றும் உறவினருடன் சேர்ந்து தன் வெறியின் கனியை அடையப்போகிறான். அவன் {ஜெயத்ரதன்}, இந்திரனின் வசிப்பிடத்திற்கே சென்றாலும், பார்த்தனின் {அர்ஜுனனின்} கரங்களில் இருந்து தப்ப மாட்டான். அந்தச் சிந்துவின் {சைந்தவனின்} தலை அவனது உடலில் இருந்து வெட்டப்பட்டுச் சமந்தபஞ்சகத்திற்கு {குருசேத்திரத்திற்கு} வெளியே உருண்டது என்பதை நாளை நீ கேட்பாய்! உன் கவலையை விடுவாயாக; வருந்தாதே.

க்ஷத்திரியன் ஒருவனின் கடமைகளைத் தன் முன் கொண்ட உன் வீர மகன் {அபிமன்யு}, ஆயுதம் தாங்குவதைத் தொழிலாகக் கொண்ட பிறரும், அறவோரும் அடையும் முடிவையே {கதியையே} அடைந்திருக்கிறான். ஓ! அழகான பெண்ணே, அகன்ற மார்பு மற்றும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பின்வாங்காதவனும், தேர்வீரர்களை நசுக்குபவனுமான உன் மகன் {அபிமன்யு} சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறான். (உன் இதயத்திலிருந்து) இந்நோயை விரட்டுவாயாக.

தன் தந்தைமார், தாய்வழி உறவினர், பெரும் ஆற்றலைக் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஆகியோருக்கு கீழ்ப்படிந்த அந்த வீரன் {அபிமன்யு}, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்ற பிறகே மரணத்துக்கு இரையானான். ஓ! ராணி {சுபத்திரையே}, உன் மருமகளை {உத்தரையைத்} தேற்றுவாயாக. ஓ! க்ஷத்திரியப் பெண்ணே, அதிகமாக வருந்தாதே. ஓ! மகளே {தங்கை சுபத்திரையே}, நாளை நீ இனிய செய்தியைக் கேட்கவிருப்பதால் உன் துயரை விரட்டுவாயாக.

பார்த்தன் {அர்ஜுனன்} ஏற்ற உறுதிமொழி {சபதம்} சாதிக்கப்பட வேண்டும். அது வேறுவகையிலாகாது. உன் கணவன் {அர்ஜுனன்} செய்ய முயன்றது எதுவும் சாதிக்கப்படாமல் நீண்டதில்லை. மனிதர்கள் அனைவரும், பாம்புகள், பிசாசங்கள், இரவுலாவிகள் அனைவரும், பறவைகள், தேவர்கள் அனைவரும், அசுரர்கள் ஆகியோரும் போர்க்களத்தில் சிந்துக்களின் ஆட்சியாளனுக்கு {ஜெயத்ரதனுக்கு} உதவினாலும் கூட, அவன் {ஜெயத்ரதன்} நாளை இருக்கமாட்டான்” என்றான் {கிருஷ்ணன்}.


ஆங்கிலத்தில் | In English