Arjuna and Krishna adored Siva! | Drona-Parva-Section-080 | Mahabharata In Tamil
(பிரதிஜ்ஞா பர்வம் – 09)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் கனவில் கிருஷ்ணன் தோன்றியது; சிவனை நினைக்கச் சொன்ன கிருஷ்ணன் அர்ஜுனனைக் கைலாசத்திற்கு அழைத்துச் சென்றது; சிவனைப் போற்றிய கிருஷ்ணனும், அர்ஜுனனும்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றலைக் கொண்ட குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் உறுதிமொழியை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்துச் சிந்தித்து, (வியாசரால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட) மந்திரங்களை நினைவுகூர்ந்தான். விரைவில் அவன் {அர்ஜுனன்} உறக்கத்தின் கரங்களில் அமைதியடைந்தான் [1]. துயரில் எரிந்து கொண்டிருந்தவனும், சிந்தனையில் மூழ்கியிருந்தவனுமான அந்தக் குரங்குக் கொடி வீரனின் {அர்ஜுனனின்) கனவில், கருடனைத் தன் கொடியாகக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} தோன்றினான்.
[1] வேறொரு பதிப்பில் மதிமயக்கமடைந்தான் என்று இருக்கிறது.
அற ஆன்மா கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, கேசவன் {கிருஷ்ணன்} மீது கொண்ட அன்பு மற்றும் மரியாதையின் விளைவால் எப்போதும் எழுந்து நின்று, ஒரு சில எட்டுகள் முன்னேறிச் சென்று கிருஷ்ணனை வரவேற்பதை எந்தச் சூழ்நிலையிலும் தவிர்த்ததில்லை. எனவே, இப்போது அவன் {அர்ஜுனன்}, (தன் கனவிலும்) எழுந்து நின்று கோவிந்தனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஓர் இருக்கையைக் கொடுத்தான். எனினும் அவன் {அர்ஜுனன்}, அந்நேரத்தில் இருக்கையில் தானும் அமர்ந்து கொள்ளத் தன் இதயத்தை நிலைநிறுத்தவில்லை. வலிமையும் சக்தியும் கொண்ட கிருஷ்ணன், பார்த்தனின் {அர்ஜுனனின்} தீர்மானத்தை அறிந்து, இருக்கையில் அமர்ந்து, பின்னவன் {அர்ஜுனன்} நின்று கொண்டிருக்கையிலேயே அந்தக் குந்தியின் மகனிடம் {அர்ஜுனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, துயரில் உன் இதயத்தை நிலைநிறுத்தாதே.
காலம் வெல்லப்பட முடியாததாகும். காலம், அனைத்து உயிரினங்களையும் தவிர்க்க முடியாத வழியில் பலவந்தமாகத் தள்ளுகிறது. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, {அப்படியிருக்கையில்}, இந்த உனது துயரம் எதற்காக? ஓ! கற்றறிந்தவர்களுள் முதன்மையானவனே {அர்ஜுனா}, துயரில் ஈடுபடக்கூடாது! செயல்பாட்டுக்குத் துயரம் ஒரு தடையாகும். சாதிக்கப்பட வேண்டிய செயலைச் சாதிப்பாயாக. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, ஒருவனின் முயற்சிகள் அனைத்தையும் துறக்கச்செய்யும் துயரமானது உண்மையில் அவனது எதிரியாகும். துயரில் ஈடுபடும் ஒருவன், தன் எதிரிகளை மகிழ்வித்து, தன் நண்பர்களைக் கவலைகொள்ளச் செய்து, தன்னையும் பலவீனமாக்கிக் கொள்கிறான். எனவே, துயருறாமல் இருப்பதே உனக்குத் தகும்” என்றான் {கிருஷ்ணன்}.
அப்போது, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், எவராலும் வெல்லப்படாதவனும், பெரும் கல்வியைக் கொண்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, இந்தப் பயங்கர வார்த்தைகளைச் சொன்னான்: “ஜெயத்ரதன் படுகொலையைக் குறித்து நான் செய்த உறுதிமொழி பயங்கரமானது. ஓ கேசவா {கிருஷ்ணா}, நாளையே என் மகனைக் கொன்ற அந்த இழிந்தவனை {ஜெயத்ரதனை} நான் கொல்வேன் என்பதே எனது உறுதிமொழியாகும். என் உறுதிமொழியில் என்னைச் சலிக்கச் செய்வதற்காக, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவராலும் பாதுகாக்கப்படும் ஜெயத்ரதனைத் தார்தராஷ்டிரர்கள் தங்கள் பின்னால் நிறுத்திக் கொள்வார்கள்.
ஓ! மாதவா {கிருஷ்ணா}, பதினோரு அக்ஷௌஹிணி துருப்புகளில், படுகொலைக்குப் பிறகு எஞ்சியவர்களைத் தன் எண்ணிக்கையாகக் கொண்டுள்ள அவர்களது படை வீழ்த்துவதற்குக் கடினமானதே ஆகும். பெரும் தேர்வீரர்கள் அனைவராலும் சூழப்பட்ட சிந்துக்களின் தீய ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நாம் எவ்வாறு காண்போம்? ஓ! கேசவா, என் உறுதிமொழி நிறைவேறப் போவதில்லை. உறுதிமொழியை நிறைவேற்றுவதில் தோற்ற என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு உயிர்வாழ முடியும்? ஓ! வீரா {கிருஷ்ணா}, இது (இந்த என் உறுதி மொழி) சாதிக்கப்பட முடியாதது என்று தெளிவாகத் தெரிகிறது. அதுவே (என்) பெரும் துயரத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. (வருடத்தின் இந்தப் பருவக் காலத்தில்) சூரியன் விரைவாக மறைகிறான் என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.
பறவை {கருடக்} கொடி கொண்ட கிருஷ்ணன், பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} துயரின் காரணத்தைக் கேட்டு, நீரைத் தொட்டு, கிழக்கு நோக்கி அமர்ந்தான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், பெரும் சக்தியையும் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} படுகொலையைத் தீர்மானித்துப் பாண்டுவின் மகனுடைய {அர்ஜுனனுடைய} நன்மைக்காக இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பாசுபதம் என்ற பெயரில் அழிக்கப்பட முடியாத ஓர் உயர்ந்த ஆயுதம் இருக்கிறது. அதைக் கொண்டு தேவன் மகேஸ்வரன் {சிவன்}, தைத்தியர்கள் அனைவரையும் போரில் கொன்றான். அதை இப்போது நீ நினைவு கூர்ந்தால், நாளை ஜெயத்ரதனை உன்னால் கொல்ல முடியும். அதை நீ (இப்போது) அறியவில்லையெனில், உன் இதயத்திற்குள், காளையைத் தன் அடையாளமாகக் {காளைக் கொடி} கொண்ட தேவனை {சிவனைத்} துதிப்பாயாக. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} மனத்தில் அந்தத் தேவனைச் சிந்தித்து, அவனை {சிவனை} நினைவுகூர்வாயாக. நீ அவனது பக்தனாவாய். அவனது {சிவனின்} அருளால் நீ அந்த மகிமையான உடைமையை {பாசுபதத்தை} அடைவாய்” என்றான் {கிருஷ்ணன்}.
கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, நீரைத் தொட்டுக் குவிந்த மனத்தோடு பூமியில் அமர்ந்து, பவ தேவனை {சிவனை} நினைத்தான். அப்படி அவன் குவிந்த மனத்துடன் அமர்ந்ததும், மங்கலக் குறியீடுகளைக் கொண்ட பிரம்மம் என்று அழைக்கப்படும் காலத்தில் {பிரம்மமுகூர்த்தத்தில்}, அர்ஜுனன், தானும் கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} வானத்தில் பயணித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். மனோவேகத்தைக் கொண்ட பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குக்} கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} தானும் சேர்ந்து புனிதமான இமயமலையின் அடிவாரத்தையும், பல பிரகாசமான ரத்தினங்கள் நிறைந்ததும், சித்தர்கள் மற்றும் சாரணர்களால் அடிக்கடி அடையப்பட்டதுமான மணிமான் மலையையும் அடைந்ததாகத் தெரிந்தது. தலைவன் கேசவன் அவனது {அர்ஜுனனது} இடது கையைப் பற்றியிருந்ததாகவும் [2] தெரிந்தது. (அந்த இடத்தை அடைகையில்) பல அற்புதக் காட்சிகளைக் கண்டதாகவும் அவனுக்குத் தோன்றியது.
[2] ஆனால், மேலுள்ள படத்தில் கிருஷ்ணன் அர்ஜுனனின் வலக்கையைப் பிடித்திருக்கிறான். வேறொரு பதிப்பில், "சர்வவியாபியான கேசவரால் வலக்கையில் பிடிக்கப்பட்டு அந்தப் பார்த்தன் அவரோடு வாயுவேகம் போன்ற வேகத்துடைய கதியுடையவனாக ஆகாயத்தை அடைந்தான்" என்று இருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பிலும் கிருஷ்ணன் அர்ஜுனனின் வலக்கையைப் பிடித்திருந்ததாகவே இருக்கிறது.
பிறகு, அற ஆன்மா கொண்ட அர்ஜுனனுக்குத் தான் வடக்கின் வெண்மலையை அடைந்ததாகத் தெரிந்தது. பிறகு அவன் {அர்ஜுனன்}, குபேரனின் மகிழ்ச்சியான நந்தவனங்களில் {சைத்ரரதத்தில்} தாமரைகள் நிறந்த அழகிய தடாகத்தைக் கண்டான். மேலும் அவன் நதிகளில் முதன்மையான கங்கை முழுமையான நீருடன் செல்வதையும் கண்டான். பிறகு அவன் {அர்ஜுனன்} மந்தர மலைகளின் பகுதிகளை அடைந்தான். அந்தப் பகுதிகள் எப்போதும் மலர்களையும் கனிகளையும் தாங்கியிருக்கும் மரங்களால் நிறைந்திருந்தது. அவற்றில் ஸ்படிகக் கற்கள் எங்கும் விரவிக் கிடந்தன. அவற்றில் சிங்கங்களும், புலிகளும் வசித்தன, பல்வேறு வகைகளிலான விலங்குகளும் நிறைந்திருந்தன. அவை, மகிழ்ச்சிமிக்கப் பறவைகளின் இனிய சுரங்களை எதிரொலித்தபடி முனிவர்களின் அழகிய ஆசிரமங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கின்னரர்களின் பாடல்களும் அங்கே எதிரொலித்தன. தங்க மற்றும் வெள்ளி முகடுகளால் அருளப்பட்ட அவை, பல்வேறு மூலிகை செடிகளாலும் ஒளியூட்டப்பட்டிருந்தன. மந்தர மரங்கள் பல அபரிமிதமான மலர்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தன.
பிறகு அர்ஜுனன், மைக்குவியல்களைப் போலத் தெரியும், காலம் என்றழைக்கப்படும் மலைகளை {காலபர்வதத்தை} அடைந்தான். பிறகு அவன் பிரம்மதுங்கம் என்றழைக்கப்படும் கொடுமுடியையும், பிறகு பல நதிகளையும், வசிப்போரற்ற பல மாகாணங்களையும் அடைந்தான். சதசிருங்கத்தை அடைந்த அவன், சர்யாதி என்ற பெயரில் அறியப்படும் காடுகளையும் {சர்யாதி வனத்தையும்} அடைந்தான். பிறகு குதிரைத் தலை {அஸ்வசிரஸ்} என்று அறியப்படும் ஒரு புனிதமான இடத்தையும், பிறகு அதர்வணம் என்ற பகுதியையும் அவன் கண்டான். விருதம்சம் என்றழைக்கப்படும் மலைகளின் இளவரசனையும், அப்சரசுகளால் நிறைந்ததும், கின்னரர்களின் இருப்பால் அருளப்பட்டதுமான பெரும் மந்தரத்தையும் {மகாமந்தரத்தையும்} அவன் கண்டான். அந்த மலையில் கிருஷ்ணனுடன் உலவிய பார்த்தன், சிறந்த நீரூற்றுகளால் அலங்கரிக்கப்பட்டும், தங்கத் தாது நிரம்பியதும், சந்திரக் கதிர்களின் காந்தியைக் கொண்டதும், பல பெருநகரங்களையும், நகரங்களையும் கொண்டதுமான பூமியின் ஒரு பகுதியைக் கண்டான். பல அற்புத வடிவங்களையும் பல செல்வச்சுரங்கங்களையும் கொண்ட பல கடல்களையும் அவன் கண்டான். வானம், ஆகாயம் மற்றும் பூமியில் இப்படிச் சென்று கொண்டிருந்த அவன் விஷ்ணுபதம் என்றழைக்கப்படும் இடத்தை அடைந்தான். கிருஷ்ணனின் துணையுடன் உலவிய அவன் (வில்லில் இருந்து) ஏவப்பட்ட கணையைப் போலப் பெரும் வேகத்துடன் கீழே இறங்கினான். விரைவில் பார்த்தன் {அர்ஜுனன்}, கோள்கள், நட்சத்திரங்கள் அல்லது நெருப்புக்கு இணையான காந்தியைக் கொண்ட சுடர் மிகும் மலையொன்றை {கைலாசத்தைக்} கண்டான்.
அந்த மலையை அடைந்த அவன் {அர்ஜுனன்}, அதன் உச்சியில், காளையைத் தன் அடையாளமாகக் {காளைக்கொடி} கொண்டவனும், தவத்துறவுகளில் {தபோநிஷ்டையில்} எப்போதும் ஈடுபடுபவனும், ஆயிரம் சூரியன்கள் ஒன்றாகச் சேர்ந்ததைப் போல இருப்பவனும், தன்னொளியாலேயே சுடர்விடுபவனுமான அந்த உயர் ஆன்மத் தேவனை {சிவனைக்} கண்டான். கையில் திரிசூலமும், தலையில் சடா முடியும், வெண்பனியின் நிறமும் கொண்ட அவன் {சிவன்}, மரப்பட்டை மற்றும் தோலாலான ஆடையை அணிந்திருந்தான். பெரும் சக்தியைக் கொண்ட அவனது உடல் ஆயிரம் கண்களுடன் சுடர்விட்டு எரிவதாகத் தெரிந்தது. அவன் {சிவன்} (தன்னைச் சுற்றி) பல வடிவங்களிலான உயிரினங்களால் சூழப்பட்டுப் பார்வதியுடன் அமர்ந்திருந்தான். அவனுடன் இருப்போர் பாடுவதிலும், இசைக்கருவிகளை இசைப்பதிலும், சிரிப்பதிலும், ஆடுவதிலும், அசைவதிலும், தங்கள் கைகளை நீட்டுவதிலும், உரத்த முழக்கங்களைச் செய்வதிலும் ஈடபட்டிருந்தனர். நறுமணச் சுகந்தங்களால் அந்த இடம் மணமூட்டப்பட்டிருந்தது. பிரம்மத்தை வழிபடும் {பிரம்மவாதிகளான தெய்வீக} முனிவர்கள், அனைத்து உயிர்களைக் காப்பவனும், (பினாகை என்றழைக்கப்படும் பெரும்) வில்லைக் கொண்டவனுமான அந்தத் தேவனை மங்கா மகிமை கொண்ட அற்புதப் பாடல்களால் துதித்தனர்.
அற ஆன்மா கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, பார்த்தனோடு {அர்ஜுனனோடு} சேர்ந்து அவனைக் {சிவனைக்} கண்டு, தன் தலையால் பூமியைத் தொட்டு, வேதங்களின் அழியாச் சொற்களை உரைத்தான் [3]. அண்டத்தின் மூல முதல்வனும், சுயம்புவும், மங்காப்புகழ் கொண்டவனும், உயர்ந்தத் தலைவனுமான அந்தத் தேவனை {சிவனைக்} கிருஷ்ணன், தன் பேச்சாலும், மனத்தாலும், அறிவாலும், செயல்களாலும் துதித்தான். மனத்தின் உயர்ந்த காரணனும், வெளியும், காற்றும், (ஆகாயத்திலுள்ள) ஒளிக்கோள்கள் அனைத்தின் காரணனும், மழையை உண்டாக்குபவனும், உயர்ந்தவனும், பூமியின் மூலப் பொருளும், தேவர்கள், தானவர்கள், யக்ஷர்கள், மனிதர்கள் ஆகியோரின் துதிக்குத் தகுந்தவனும், யோகியரால் காணப்படும் உயர்ந்த பிரம்மமும், சாத்திரங்கள் அறிந்தோரின் புகலிடமும், உயிரினங்களில் அசைவன, அசையாத ஆகியவை அனைத்தையும் படைத்தவனும், அவர்களை அழிப்பவனும், யுக முடிவில் கோபத்துடன் அனைத்தையும் அழிப்பவனும், உயர்ந்த ஆன்மாவும், சக்ரனாகவும், சூரியனாகவும் இருப்பவனும், குணங்கள் அனைத்தின் மூலமும் ஆன அவனைக் கிருஷ்ணன் துதித்தான்.
[3] வேறொரு பதிப்பில், “தர்மாத்மாவான வாசுதேவரோ பாத்தனோடு கூட அவரைப் பார்த்து, சாஸ்வதமான வேத மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு சிரசினால் வணங்கினார்.
நுட்பமானது, ஆன்மிகமானது என்று அழைக்கப்படுவதை {முக்தியை} [4] அடைய விரும்பும் ஞானியரால் காணப்படுபவனும், அனைத்துக் காரணங்களுக்கு ஆன்மாவான சுயம்புவான அந்தப் பவனின் {சிவனின்} பாதுகாப்பைக் கிருஷ்ணன் வேண்டினான். அந்தத் தேவனே {சிவனே} அனைத்து உயிர்களின் மூலம் என்றும், கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்திற்குக் காரணம் என்றும் அறிந்த அர்ஜுனன் அவனை மீண்டும் மீண்டும் துதித்தான்.
[4] வேறொரு பதிப்பில் இவ்வரி “சூக்ஷ்மமான அத்யாத்மஸ்தானத்தை விரும்பும் ஞானிகள் எவரைச் சரணமடைகிறார்களோ, பிறப்பில்லாதவரும், காரணஸ்வரூபியுமான அந்தச் சங்கரரை அவ்விருவரும் சரணமடைந்தனர்” என்று இருக்கிறது.
நரனும், நாராயணனும் வந்திருப்பதைக் கண்ட பவன் {சிவன்} உற்சாக ஆன்மாவுடன் {மகிழ்ச்சியுடன்} புன்னகைத்துக் கொண்டே அவர்களிடம், “மனிதரில் முதன்மையானோரே, உங்களுக்கு நல்வரவு. உங்கள் பயணக் களைப்பு நீங்கி எழுவீராக. ஓ வீரர்களே, உங்கள் இதய விருப்பம் என்ன? அதை விரைவாகச் சொல்லுங்கள். எக்காரியம் உங்களை இங்கே அழைத்து வந்தது? அதை அடையும் நான் உங்களுக்கு எது நன்மையோ அதைச் செய்கிறேன். நீங்கள் விரும்பும் அனைத்தையும் நான் அருள்வேன்” என்றான் {சிவன்}.
பிறகு கூப்பிய கரங்களுடன், களங்கமற்ற வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய பெரும் விவேகிகள் இருவரும் அந்த உயர் ஆன்மத் தேவனை {சிவனை} ஒரு சிறந்த பாடலால் நிறைவடையச் செய்யத் தொடங்கினர். கிருஷ்ணனும், அர்ஜுனனும், “பவனை {உலகங்கள் அனைத்தின் தலைவனை}, சர்வனை {உயிரினங்களைக் கொல்பவனை}, ருத்ரனை {அழச் செய்பவனை}, வரமளிக்கும் தேவனை நாங்கள் வணங்குகிறோம். உயிருடன் கூடிய உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவனை {பசுபதியை}, எப்போதும் கடுமையாக இருக்கும் தேவனை, கபார்தின் {கபார்தி – சடை கொண்டவன்} என்று அழக்கப்படுபவனை நாங்கள் வணங்குகிறோம். மகாதேவனை {தேவர்களுள் சிறந்தவனை}, பீமனை {பயங்கரமானவனை}, முக்கண்ணனை, அமைதியும் சமாதமுமானவனை நாங்கள் வணங்குகிறோம். (தக்ஷனின்) வேள்வியை அழித்த ஈசானனை நாங்கள் வணங்குகிறோம்.
அந்தகனை {அந்தகாசுரனை} அழித்தவனுக்கு, குமரனின் {முருகனின்} தந்தைக்கு, நீலகண்டனுக்கு, படைப்பாளனுக்கு எங்கள் வணக்கங்கள். பினாகைதாரிக்கு, தெளிந்த நெய்யினாலான காணிக்கையை {ஹவிஸைப்} பெறத் தகுந்தவனுக்கு, உண்மையானவனுக்கு, அனைத்திலும் இருப்பவனுக்கு வணக்கம். வெல்லப்படாதவனை, எப்போதும் நீலக் குழல்களைக் கொண்டவனை, திரிசூலம் தரித்தவனை, தெய்வீகப் பார்வை கொண்டவனை, அனைவரையும் பாதுகாக்கும் ஹோத்ரியை, முக்கண்ணனை, நோயாக இருப்பவனை [5], உயிர்வித்தை நெருப்பில் விட்டவனை, நினைத்துப் பார்க்க முடியாதவனை, அம்பிகையின் தலைவனை, தேவர்கள் அனைவராலும் வழிபடப்படுபவனை, காளையைத் தன் அடையாளமாகக் {காளைக் கொடி} கொண்டவனை, தைரியமானவனை, சடாமுடி தரித்தவனை, பிரம்மச்சாரியை, நீரில் தவம் செய்து நிற்பவனை, பிரம்மத்துக்கு அர்ப்பணிப்புடன் உள்ளவனை, வெல்லப்பட முடியாதவனை, அண்டத்தின் ஆன்மாவை, அண்டத்தைப் படைத்தவனை, அண்டம் முழுமையும் வியாபித்திருப்பவனை, அனைத்து உயிர்களின் உண்மைக் காரணனை, அனைவரின் மரியாதைக்குத் தகுந்தவனான உன்னை நாங்கள் வணங்குகிறோம். பிரம்மச்சக்கரம் என்றழைக்கப்படும் உன்னை, சர்வன், சங்கரன், சிவன் என்று அழைக்கப்படும் உன்னை, பேருயிர்கள் அனைத்தின் தலைவனான உன்னை நாங்கள் வணங்குகிறோம். ஆயிரம் சிரங்களையும், ஆயிரம் கரங்களையும் கொண்ட உன்னை, மரணம் என்று அழைக்கப்படும் {மிருத்யு ஸ்வரூபியான} உன்னை நாங்கள் வணங்குகிறோம். ஆயிரம் கண்கள் மற்றும் ஆயிரம் கால்கள் கொண்ட உன்னை, எண்ணிலா செயல்களைச் செய்யும் உன்னை, தங்க நிறம் கொண்ட உன்னை, தங்கக் கவசம் பூண்ட உன்னை, பக்தர்களிடம் எப்போதும் கருணை கொண்ட உன்னை நாங்கள் வணங்குகிறோம். ஓ! தலைவா, எங்கள் விருப்பம் நிறைவேறட்டும்” என்றனர் {அர்ஜுனனும், கிருஷ்ணனும்}.
[5] கங்குலியில் இங்கே Disease என்றே இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் அவ்வாறே இருக்கிறது, வேறொரு பதிப்பிலோ இதையொட்டிய வரிகள், “மங்கலான காந்தியுடையவரும், வேட வடிவம் பூண்டவரும், பிறரால் ஜயிக்கப்படாதவரும், எப்போதும் கறுத்த சிகையுடையவரும், சூலத்தையுடைவரும், ஞானக்கண்ணையுடையவரும், தீக்ஷையுடையவரும், ரக்ஷகரும், மூன்று கண்களையுடையவரும், அக்னியிடத்தில் இந்திரியத்தை விட்டவரும்” என்றிருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் நோய் என்ற பொருள் கொண்ட சொல் வருவதற்கான காரணம் யாதென்று தெரியவில்லை.
சஞ்சயன் தொடர்ந்தான், “இம்முறையில் மகாதேவனை வழிபட்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் (பாசுபதம் என்றழைக்கப்படும் பெரும்) ஆயுதத்தை அடைவதற்காக அவனை {சிவனை} நிறைவு செய்யத் தொடங்கினர்” என்றான் {சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |