Tuesday, June 21, 2016

திருதராஷ்டிரனின் பின்னிரக்கம்! - துரோண பர்வம் பகுதி – 085

The repentance of Dhritarashtra! | Drona-Parva-Section-085 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 01)

பதிவின் சுருக்கம் : அபிமன்யுவின் மறைவுக்கு இரங்கி, துரியோதனனின் நடத்தைக்காக வருந்திய திருதராஷ்டிரன் அதன்பிறகு நடந்த போர்ச்செய்திகளைச் சொல்லும்படி சஞ்சயனைத் தூண்டியது...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "அபிமன்யுவின் படுகொலைக்கு அடுத்த நாள், துயராலும் கவலையாலும் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள் என்ன செய்தனர்? என் வீரர்களில் அவர்களோடு {பாண்டவர்களோடு போரிட்டவர் யாவர்? சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} சாதனைகளை அறிந்தவர்களும், தீங்கைச் செய்தவர்களுமான அந்தக் கௌரவர்கள் எவ்வாறு அச்சமற்றிருந்தனர் என எனக்குச் சொல்வாயாக.


தன் மகன் கொல்லப்பட்டதன் காரணமாகத் துயரில் எரிந்து, அனைத்தையும் அழிக்க மூர்க்கமாக விரையும் காலனைப் போல வந்த அந்த மனிதர்களில் புலியை (அர்ஜுனனைப்) போரில் அவர்கள் எவ்வாறு பார்க்கத் துணிந்தனர்? குரங்குகளின் இளவரசனை {அனுமனைத்} தன் கொடியில் கொண்ட அந்த வீரன், தன் மகனின் மரணத்திற்காகத் துயருற்றுப் போரில் தன் பெரும் வில்லை அசைத்த போது, என் வீரர்கள் என்ன செய்தனர்?

ஓ! சஞ்சயா, துரியோதனனுக்கு என்ன நேர்ந்தது? இன்று ஒரு பெரும் சோகம் எங்களைப் பீடித்திருக்கிறது. மகிழ்ச்சிக் குரல்களை நான் இப்போது கேட்கவில்லை. சிந்து மன்னனின் {ஜெயத்ரதனின்} வசிப்பிடத்தில் காதுகளுக்கு மிகவும் ஏற்புடைய எந்த உற்சாகக் குரல்கள் முன்பு கேட்கப்பட்டனவோ, ஐயோ, இன்று அவை கேட்கப்படவில்லையே. ஐயோ, என் மகன்களின் முகாமில் அவர்களது புகழைப் பாடும் எண்ணற்ற சூதர்கள் மற்றும் மாகதர்களின் பாடல்களும், ஆடல்களும் கேட்கப்படவில்லையே. முன்பெல்லாம் அத்தகு ஒலிகள் அடிக்கடி என் காதுகளை எட்டின. ஐயோ, அவர்கள் துயரில் மூழ்கியிருப்பதாலேயே (அவர்களின் முகாமில்) அத்தகு ஒலிகளை நான் கேட்கவில்லை.

முன்னர், ஓ! சஞ்சயா, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த சோமதத்தனின் வசிப்பிடத்தில் அமர்ந்திருந்தபோது, மகழ்ச்சிகரமான ஒலிகளையே நான் கேட்பேன். ஐயோ, இன்று என் மகன்களின் வசிப்பிடம் துயர ஒலிகள், புலம்பல்கள் ஆகியவற்றை எதிரொலித்து, உயிரையும், சக்தியையும் கொண்ட அனைத்து ஒலிகளையும் இழந்திருப்பதால், நான் இழந்த (அறத்) தகுதிகள் எவ்வளவு? விவிம்சதி, துர்முகன், சித்திரசேனன், விகர்ணன் மற்றும் என் பிற மகன்களின் வீடுகளிலும் முன்பு நான் வழக்கமாகக் கேட்கும் ஒலிகள் கேட்கப்படவில்லையே.

என் மகன்களின் முக்கியப் புகலிடமும், துரோணரின் மகனுமான எந்தப் பெரும் வில்லாளியிடம் {அஸ்வத்தாமனிடம்}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான சீடர்கள் காத்திருந்தார்களோ {பணி செய்தார்களோ}, சர்ச்சைக்குரிய விவாதங்கள் [1], பேச்சுகள், உரையாடல்கள் [2], கிளர்ச்சி தரும் பல்வேறு இசைக்கருவிகள் மற்றும் பல்வேறு விதங்களிலான மகிழ்ச்சிகரமான பாடல்களில் இரவும் பகலும் எவன் இன்புறுவானோ, குருக்கள், பாண்டவர்கள், சாத்வதர்கள் ஆகியோர் பலரால் எவன் வழிபடப்படுகிறானோ, ஐயோ, ஓ சூதா {சஞ்சயா}, அந்தத் துரோண மகனின் {அஸ்வத்தாமனின்} வசிப்பிடத்தில் முன்பு போல ஒலிகள் கேட்கப்படவில்லையே. பெரும் எண்ணிக்கையிலான பாடகர்களும், ஆடற்கலைஞர்களும் அந்த வலிமைமிக்க வில்லாளியான துரோண மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} நெருக்கமாகக் காத்திருப்பார்களே {பணி செய்வார்களே}. ஐயோ, அவனது வசிப்பிடத்தில் அவர்களது ஒலி கேட்கப்படவில்லையே.

[1] வேறொரு பதிப்பில், இது விதண்டை என்று சொல்லப்படுகிறது. மேலும் இதன் பொருள், தன் தரப்பைச் சாதிக்க யுக்தியைச் சொல்லாமல் பிறர் தரப்பை மட்டும் கண்டிக்கிற வாதம் என்று சொல்லப்படுகிறது.

[2] வேறொரு பதிப்பில் இது சல்லாபம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இதன் பொருள், இருவர் தனித்துப் பேசுவது என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு மாலைப்பொழுதிலும், விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோரின் முகாமில் எழும் அந்தப் பேரொலி, ஐயோ இப்போது அங்கே கேட்கப்படவில்லையே. கைகேயர்களின் முகாம்களில் வழக்கமாக நடனம் மற்றும் களியாட்டங்களில் ஈடுபடும் அவர்களுடைய வீரர்களின் பெரிய கைத்தடல்களும், பாடலின் பேரொலியும் இன்று கேட்கப்படவில்லையே.

சாத்திரச் சடங்குகளின் புகலிடமான சோமதத்தன் மகனிடம் {பூரிஸ்ரவசிடம்} காத்திருப்போரும் {பணி செய்வோரும்}, வேள்விகளைச் செய்யத்தக்கோருமான புரோகிதர்களின் ஒலிகள் இப்போது கேட்கப்படவில்லையே. விற்கயிறின் நாணொலி, வேத உரைப்பொலி, ஈட்டிகள் வாள்கள் ஆகியவற்றின் 'விஸ்' {என்ற} ஒலி, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி ஆகிய ஒலிகள் துரோணரின் வசிப்பிடத்தில் இடையறாமல் கேட்கப்படுமே. ஐயோ, அவ்வொலிகள் இப்போது கேட்கப்படவில்லையே. வழக்கமாக அங்கே எழும் பல்வேறு நாட்டுப் பாடல்களின் பெருக்கம், இசைக்கருவிகளின் பேரொலி ஆகியவை, ஐயோ, இன்று கேட்கப்படவில்லையே.

மங்காப்புகழ் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அமைதியை விரும்பியும், அனைத்து உயிரினங்களிடம் கருணை கொண்டும் உபப்லாவ்யத்தில் இருந்து வந்த போது, ஓ! சூதா {சஞ்சயா}, தீய துரியோதனனிடம் நான் இதைச் சொன்னேன்: "ஓ! மகனே {துரியோதனா}, வாசுதேவனை {கிருஷ்ணனை} வழியாகக் கொண்டு, பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக. ஓ! மகனே, (சமாதானம் செய்து கொள்வதற்கான) நேரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். ஓ! துரியோதனா, என் ஆணையை மீறாதே. சமாதானம் வேண்டியும், என் நன்மைக்காகவும் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கும் வாசுதவேனை {கிருஷ்ணனை} நீ ஒதுக்கினால், போரில் உனக்கு வெற்றி கிட்டாது" என்றேன்.

எனினும், துரியோதனனின் நன்மைக்காகப் பேசியவனும், வில்லாளிகள் அனைவரில் காளையுமான அந்தத் தாசார்ஹனைத் துரியோதனன் புறக்கணித்தான். இதன் மூலம், தனக்கு அழிவைத் தரக்கூடிய ஒன்றை அவனே தழுவி கொண்டான். காலனின் பிடியில் அகப்பட்ட அந்த எனது தீய மகன் {துரியோதனன்}, துச்சாசனன் மற்றும் கர்ணனைப் பின்பற்றி என் ஆலோசனைகளை நிராகரித்தான். பகடையாட்டத்தை நான் அங்கீகரிக்கவில்லை. விதுரன் அஃதை அங்கீகரிக்கவில்லை. ஓ! சஞ்சயா, சிந்துக்களின் ஆட்சியாளனோ {ஜெயத்ரதனோ}, பீஷ்மரோ, சல்லியனோ, பூரிஸ்ரவசோ, புருமித்ரனோ, ஜயனோ, அஸ்வத்தாமனோ, கிருபரோ, துரோணரோ அஃதை அங்கீகரிக்கவில்லை. இம்மனிதர்களின் ஆலோசனைகளின்படி என் மகன் நடந்து கொண்டிருந்தால், அவன் தன் சொந்தங்களுடனும், நண்பர்களுடனும் எப்போதும் மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழ்ந்திருப்பான். மகிழ்ச்சிகரமான இனிய பேச்சைத் தங்கள் சொந்தங்களுக்கும், உயர் பிறப்பாளர்களுக்கும் {நற்குலத்தில் பிறந்தோர்களுக்கும்} ஏற்புடைய வகையில் எப்போதும் பேசுபவர்களும், அனைவராலும் விரும்பப்படுபவர்களும் விவேகிகளுமான பாண்டுவின் மகன்கள் மகிழ்ச்சியை அடையப்போவது உறுதி.

"அறத்தில் தன் கண்ணைச் செலுத்தும் ஒரு மனிதன் எங்கும் எப்போதும் மகிழ்ச்சியையே அடைவான். அப்படிப்பட்ட மனிதன் தன் மரணத்திற்குப் பிறகு நன்மையையும் அருளையும் வெல்வான். தேவையான வலிமையைப் பெற்றிருக்கும் பாண்டவர்கள் பாதிப் பூமியை அனுபவிக்கத் தகுந்தவர்களே. கடல்களைக் கச்சையாகக் கொண்ட பூமி (குருக்களைப் போலவே) அவர்களுக்கும் பரம்பரை உடைமையாகும். அரசுரிமையைக் கொண்ட பாண்டவர்கள் நீதியின் பாதையில் {அறவழியில்} இருந்து எப்போதும் விலகமாட்டார்கள்.

ஓ! குழந்தாய் {துரியோதனா}, பாண்டவர்கள் யாருடைய பேச்சை எப்போதும் கேட்பார்களோ அப்படிப்பட்டவர்களாக, உதாரணத்திற்குச் சல்லியன், சோமதத்தன், உயர் ஆன்ம பீஷ்மர், துரோணர், விகர்ணன், பாஹ்லீகர், கிருபர் மற்றும் வயதால் மதிக்கத்தக்க பாரதர்களில் சிறந்தவர்களான பிறரையும் நான் என் சொந்தங்களாகக் கொண்டிருக்கிறேன். உன் சார்பாகப் பாண்டவர்களிடம் இவர்கள் பேசினால், நன்மைதரும் அந்தப் பரிந்துரைகளின் படி அவர்கள் {பாண்டவர்கள்} நிச்சயம் செயல்படுவார்கள். அல்லது இவர்களில் அவர்களின் தரைப்பைச் சார்ந்து, வேறுமாதிரியாகப் பேசுகிறவர் என எவரை நினைக்கிறாய். கிருஷ்ணன் ஒருபோதும் அறவோரின் பாதையைக் கைவிடமாட்டான். பாண்டவர்கள் அனைவரும் அவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறார்கள். நான் பேசும் அறவார்த்தைகளுக்கு அவ்வீரர்கள் கீழ்ப்படியாமல் இருக்க மாட்டார்கள், ஏனெனில், பாண்டவர்கள் அனைவரும் அற ஆன்மாக்கள்' என்ற இந்த வார்த்தைகளையும், ஓ! சூதா {சஞ்சயா}, இது போன்ற வார்த்தைகளையும் என் மகனிடம் பரிதாபகரமாகப் புலம்பினேன். மூடனான அவன் {துரியோதனன்} நான் சொன்னதைக் கேட்கவில்லை. இவையாவும் காலத்தின் கோலமெனவே நான் நினைக்கிறேன்.

விருகோதரன் {பீமன்}, அர்ஜுனன், விருஷ்ணி வீரனான சாத்யகி, பாஞ்சாலர்களின் உத்தமௌஜஸ், வெல்லப்பட முடியாத யுதாமன்யு, தடுக்கப்படமுடியாத திருஷ்டத்யும்னன், வீழ்த்தப்படாத சிகண்டி, அஸ்மகர்கள், கேகயர்கள், சோமகர்களின் க்ஷத்ரதர்மன், சேதிகளின் ஆட்சியாளன் {திருஷ்டகேது}, சேகிதானன், காசி ஆட்சியாளனின் மகனான விபு, திரௌபதியின் மகன்கள், விராடன், வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதன், மனிதர்களில் புலிகளான இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்) ஆகியோரும், ஆலோசனை வழங்க மதுசூதனனும் {கிருஷ்ணனும்} எங்கிருக்கிறார்களோ, அவர்களுடன் போரிட்டு உயிரோடு வாழ்வதை எதிர்பார்க்கும் எவன் இவ்வுலகில் இருக்கிறான்?

மேலும், என் எதிரிகள் தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்துகையில் துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி, நான்காமவனான துச்சாசனன் ஆகியோரைத் தவிர்த்து ஐந்தாவதாக வேறு எவரையும் நான் காணாததால், அவர்களை {என் எதிரிகளைத்} தடுப்பதற்கு வேறு எவன் இருக்கிறான்? கவசம் பூண்டு, கையில் கடிவாளத்துடன் விஷ்ணுவையே தங்கள் தேரில் கொண்டவர்களும், அர்ஜுனனைத் தங்கள் போர்வீரனாகக் கொண்டவர்களும் ஒரு போதும் தோற்க முடியாது. அந்த என் புலம்பல்களைத் துரியோதனன் இப்போதும் நினைத்துப் பார்க்க மாட்டானா?

மனிதர்களில் புலியான பீஷ்மர் கொல்லப்பட்டதாக நீ சொன்னாய். தொலைநோக்குப் பார்வை கொண்ட விதுரன் சொன்ன வார்த்தைகளின் கனிகளைக் கண்டு என் மகன்கள் இப்போது புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். சினியின் பேரனாலும் {சாத்யகியாலும்}, அர்ஜுனனாலும் தன் படை மூழ்கடிக்கப்பட்டதைக் கண்டும், தன் தேர்களின் தட்டுகள் வெறுமையாக இருப்பதைக் கண்டும் என் மகன்கள் புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். பனிக்காலத்தின் முடிவில், காற்றால் உந்தப்பட்டுப் பெருகும் காட்டுத்தீயானது, உலர்ந்த புற்குவியலை எரிப்பதைப் போலவே தனஞ்சயன் {அர்ஜுனன்} என் துருப்புகளை எரிக்கப்போகிறான்.

ஓ! சஞ்சயா, விவரிப்பதில் நீ நிறைவானவனாக இருக்கிறாய். மாலையில் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} இழைத்த பெரும் தீங்குக்குப் பிறகு நடந்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. அபிமன்யு கொல்லப்பட்ட போது உங்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? ஓ! மகனே {சஞ்சயா}, காண்டீவதாரிக்கு {அர்ஜுனனுக்குக்} பெரும் குற்றமிழைத்த என் வீரர்கள், அவனது சாதனைகளைப் போரில் தாங்க இயன்றவர்களாக இல்லை. துரியோதனனால் தீர்மானிக்கப்பட்ட திட்டங்கள் என்ன? கர்ணனால் {தீர்மானிக்கப்பட்ட திட்டங்கள்} என்ன? துச்சாசனனும், சுபலனின் மகனும் {சகுனியும்} என்ன செய்தனர்?

ஓ! மகனே, ஓ! சஞ்சயா, பேராசையின் பாதையில் பயணிப்பவனும், தீய புரிதல் கொண்டவனும், கோபத்தினால் மனம் பிறழ்ந்தவனும், அரசுரிமையை இச்சிப்பவனும், மூடனும், கோபத்தால் அறிவை இழந்தவனுமான தீய துரியோதனனின் தீச்செயல்களாலேயே இந்தப் போர் என் பிள்ளைகள் அனைவரின் மேலும் விழுந்திருக்கிறது.

ஓ! சஞ்சயா, பிறகு துரியோதனனால் ஏற்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக. அவை தவறான தீர்மானங்களா? இல்லை நல்ல தீர்மானங்களா?" {என்று கேட்டான் திருதராஷ்டிரன்}.


ஆங்கிலத்தில் | In English