Friday, June 24, 2016

அர்ஜுனனை எதிர்த்த துச்சாசனன்! - துரோண பர்வம் பகுதி – 089

Duhsasana rushed against Arjuna! | Drona-Parva-Section-089 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 05)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனை எதிர்த்த துச்சாசனன்; அர்ஜுனன் செய்த போர்; மனிதர்களும், யானைகளும், குதிரைகளும் கொல்லப்பட்ட விதம்; துச்சாசனனின் படைப்பிரிவு தோற்றோடி துரோணரிடம் தஞ்சத்தை அடைந்தது...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "கிரீடம் தரித்தவனால் (கிரீடியான அர்ஜுனனால்) இப்படிக் கொல்லப்பட்ட என் படையின் முன்னணியினர் பிளந்து ஓடிய போது, அர்ஜுனனை எதிர்த்துச் சென்ற வீரர்கள் யாவர்? (அவர்களில் யாரேனும் அர்ஜுனனிடம் உண்மையில் போரிட்டனரா? அல்லது) அனைவரும் தங்கள் தீர்மானத்தைத் துறந்து, சகட வியூகத்துக்குள் நுழைந்து, கற்சுவரைப் போன்றவரும் அச்சமற்றவருமான துரோணரைத் தஞ்சமடைந்தனரா?" என்றான்.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, இந்திரனின் மகனான அர்ஜுனன், தன் சிறந்த கணைகளைக் கொண்டு எங்கள் படையைப் பிளந்து தொடர்ச்சியாகக் கொல்லத் தொடங்கிய போது, வீரர்களில் பலர் ஒன்று சேர்ந்து கொல்லப்பட்டனர், அல்லது உற்சாகமிழந்து தப்பி ஓடினர். அர்ஜுனனைப் பார்க்கத் திறனுள்ள எவனும் அந்தப் போரில் இல்லை.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகளின் அந்நிலையைக் கண்ட உமது மகன் துச்சாசனன், கோபத்தால் நிறைந்து, அர்ஜுனனை எதிர்த்துப் போரிட விரைந்தான். கடும் ஆற்றலைக் கொண்டவனும், தங்கத்தாலான அழகிய கவசம் தரித்தவனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகையால் தன் தலை மறைக்கப்பட்டவனுமான அந்த வீரன் {துச்சாசனன்}, மொத்த உலகையே விழுங்கவல்லது போலத் தெரிந்த பெரிய யானைப் படை ஒன்றை அர்ஜுனனைச் சூழச் செய்தான்.

யானைகளின் மணி ஒலியாலும், சங்குகளின் முழக்கத்தாலும், வில் நாண்கயிறுகளின் நாணொலியாலும், யானைகளின் பிளிறலாலும் பூமி, ஆகாயம், திசைகள் ஆகியன அனைத்தும் முழுமையாக நிறைந்ததாகத் தெரிந்தது. அந்தக் காலக்கட்டம் மூர்க்கமானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. அங்குசங்களால் தூண்டப்பட்ட சிறகுகள் கொண்ட மலைகளைப் போல, கோபத்தால் நிறைந்து, துதிக்கைகளை நீட்டியிருந்த அந்தப் பெரும் விலங்குகள் {யானைகள்} தன்னை நோக்கி வேகமாக விரைவதைக் கண்ட மனிதர்களில் சிங்கமான அந்தத் தனஞ்சயன், சிங்கமுழக்கமொன்றைச் செய்து, தன் கணைகளால் அந்த யானைப்படையைத் துளைக்கவும் கொல்லவும் தொடங்கினான்.

அந்தக் கிரீடம் தரித்தவன் (கிரீடியான அர்ஜுனன்), மலை போன்ற அலைகளைக் கொண்டவையும், பெருங்காற்றால் கொந்தளித்தவையுமான ஆழ்ந்த கடலைத் துளைத்துச் செல்லும் மகரத்தைப் போல, அந்த யானைப்படையைத் துளைத்துச் சென்றான். உண்மையில், அண்டப்பேரழிவின் நாளன்று {பிரளயத்தின் போது}, திசை மற்றும் கால விதிகளை மீறி எழுந்து அனைத்தையும் எரிக்கும் சூரியனுக்கு ஒப்பாகப் பகைவரின் நகரங்களை அடக்குபவனான பார்த்தன் அனைத்துப் பக்கங்களிலும் காணப்பட்டான்.

குதிரைகளின் குளம்பொலிகள், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, போராளிகளின் கூச்சல், வில் நாண்கயிறுகளின் நாணொலி, பல்வேறு இசைக்கருவிகளின் ஒலி, பாஞ்சஜன்யம், தேவதத்தம் மற்றும் காண்டீவத்தின் முழக்கம் ஆகியவற்றின் விளைவால் மனிதர்களும் யானைகளும் உற்சாகமிழந்து, தங்கள் புலன் உணர்வுகளையும் இழந்தனர். கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} கணைகளால் மனிதர்களும், யானைகளும் பிளக்கப்பட்டனர். அந்தப் போரில் எண்ணிக்கையில் ஆயிரமாயிரமாகக் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால், அந்த யானைகள் தங்கள் உடலெங்கும் துளைக்கப்பட்டன. கிரீடம் தரித்தவனால் (கிரீடியான அர்ஜுனனால்) இப்படிச் சிதைக்கப்பட்ட போது, அவை {அந்த யானைகள்} சிறகுகளை இழந்த மலைகளைப் போலப் பூமியில் பேரொலியுடன் இடையறாமல் விழுந்து கொண்டிருந்தன. தாடை, அல்லது கும்பங்கள், அல்லது கன்னப்பொட்டு ஆகியவற்றில் நாராசங்களால் தாக்கப்பட்ட அவை, நாரைகளின் அலறலுக்கு ஒப்பாக அலறின.

அப்போது, கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), யானைகளின் கழுத்தில் நின்ற வீரர்களின் தலைகளைத் தன் நேரான கணைகளால் அறுக்கத் தொடங்கினான். குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அத்தலைகள், பார்த்தனால் தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் தாமரைகளின் கூட்டத்துக்கு ஒப்பாக இடையறாமல் பூமியில் விழுந்து கொண்டிருந்தன. யானைகள் களத்தில் திரிகையில், கவசமிழந்து, காயங்களால் பீடிக்கப்பட்டு, குருதியால் நனைந்து, தீட்டப்பட்ட ஓவியங்களைப் போலத் தெரிந்த பல வீரர்கள் அவற்றின் {அந்த யானைகளின்} உடல்களில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. சில சந்தர்ப்பங்களில், (காண்டீவத்திலிருந்து) நன்கு ஏவப்பட்டவையும், அழகிய இறகுகளுடன் கூடிய சிறகு படைத்த ஒரே கணையால் துளைக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று வீரர்கள் பூமியில் விழுந்தனர்.

நாராசங்களால் ஆழத்துளைக்கப்பட்ட பல யானைகள், ஏதோ சில இயற்கை மீறலினால் காடுகள் நிறைந்த மலைகள் விழுவதைப் போல, தங்கள் முதுகுகளில் இருந்த பாகர்களோடும், தங்கள் வாயில் இரத்தம் கக்கியபடியும் கீழே விழுந்தன. பார்த்தன் {அர்ஜுனன்}, தன்னை எதிர்த்த தேர்வீரர்களின் வில்லின் நாண்கயிறுகள், கொடிமரங்கள், விற்கள், ஏர்க்கால்கள், நுகத்தடிகள் ஆகியவற்றைத் தன் நேரான கணைகளால் சுக்குநூறாக வெட்டினான். அர்ஜுனன் எப்போது தன் கணைகளை எடுத்தான், அவற்றை எப்போது வில்லின் நாணில் பொருத்தினான், எப்போது நாணை இழுத்தான், எப்போது அதை விடுத்தான் என்பதை யாராலும் காண முடியவில்லை. காணப்பட்டதெல்லாம், எப்போதும் வட்டமாக வளைக்கப்பட்ட வில்லுடன் அந்தப் பார்த்தன் தன் தேரில் ஆடுவதைப் போலத் தெரிந்ததுதான். நாராசங்களால் ஆழத்துளைக்கப்பட்ட யானைகள், தாங்கள் தாக்கப்பட்ட உடனேயே, தங்கள் வாய்களில் இருந்து இரத்தத்தைக் கக்கியபடி பூமியில் விழுந்தன.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் அழிவுக்கும் மத்தியில், எண்ணிலடங்கா தலையற்ற முண்டங்கள் எழுந்து நிற்பது தெரிந்தது. விற்களைப் பிடித்திருந்தவையும், தோலுறை அணிந்த விரல்களைக் கொண்டவையும், வாள்களைப் பிடித்திருந்தவையும், அங்கதங்கள் மற்றுப் பிற தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான கரங்கள், உடல்களில் இருந்து வெட்டப்பட்டுச் சிதறிக் கிடப்பது தெரிந்தது. எண்ணிலடங்கா உபஷ்கரங்கள், அதிஸ்தானங்கள், ஏர்க்கால்கள், கிரீடங்கள், உடைந்த தேர்ச்சக்கரங்கள், நொறுங்கிய அக்ஷகள் {அச்சுகள்}, நுகத்தடிகள், கேடயங்கள் ஆகியவையும், விற்களைத் தரித்திருந்த வீரர்கள், மலர்மால்களை, ஆபரணங்கள், ஆடைகள் மற்றும் விழுந்த கொடிமரங்கள் ஆகியவையும் அந்தப் போர்க்களத்தில் விரவிக் கிடந்தன.

கொல்லப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகள், க்ஷத்திரியர்களின் விழுந்த உடல்கள் ஆகியவற்றின் விளைவால் பூமியானது பயங்கரமாகக் காட்சியளித்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) இப்படிக் கொல்லப்பட்ட துச்சாசனனின் படைகள் தப்பி ஓடின. அந்தக் கணைகளால் பெரிதும் பீடிக்கப்பட்ட அவர்களது தலைவன் துச்சாசனனே, அச்சத்தால் பீடிக்கப்பட்டுச் சகட வியூகத்தில் தன் படைப்பிரிவுடன் நுழைந்து, துரோணரைத் தன்னைக் காப்பவராகக் கொண்டான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English