Arjuna had his bowstring cut! | Drona-Parva-Section-090 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 06)
பதிவின் சுருக்கம் : துரோணரிடம் ஆசிகளை வேண்டி அனுமதி கோரிய அர்ஜுனன்; அர்ஜுனனின் நாண்கயிறை அறுத்த துரோணர்; துரோணருடன் போரிட்டு வியூகத்துக்குள் நுழைந்தது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "துச்சாசனன் படையை அழித்த வலிமைமிக்கத் தேர்வீரனான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அடைய விரும்பி துரோணரின் படைப்பிரிவை எதிர்த்து விரைந்தான். வியூகத்தின் முகப்பில் நின்று கொண்டிருந்த துரோணரை அணுகிய பார்த்தன், கிருஷ்ணனின் வேண்டுகோளுக்கிணங்கி, கரங்களைக் கூப்பியபடி துரோணரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: "ஓ! பிராமணரே, என் நன்மையை விரும்பி, சுவஸ்தி என்று சொல்லி என்னை ஆசீர்வதிப்பீராக. உமது அருளால் நான் இந்தப் பிளக்கமுடியாத வியூகத்தைப் பிளக்க விரும்புகிறேன். நீர் எனக்குத் தந்தையைப் போன்றவர், அல்லது நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரையோ, கிருஷ்ணனையோ போன்றவர். இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! ஐயா, ஓ! பாவமற்றவரே, ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே, அஸ்வத்தாமன் எவ்வாறு உம்மால் பாதுகாக்கத் தகுந்தவரோ, அவ்வாறே நானும் உம்மால் பாதுகாக்கப்படத் தகுந்தவனே. ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {துரோணரே}, உமது அருளால் போரில் நான் சிந்து ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்ல விரும்புகிறேன். ஓ! தலைவரே {துரோணரே}, என் உறுதிமொழி நிறைவேறும்படி செய்வீராக" என்றான் {அர்ஜுனன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இப்படி அவனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட ஆசான் {துரோணர்} புன்னகையுடனே, "ஓ! பீபத்சு {அர்ஜுனா}, என்னை வெல்லாமல், உன்னால் ஜெயத்ரதனை வெல்ல இயலாது" என்று மறுமொழி கூறினார். இவ்வளவே சொன்ன துரோணர், புன்னகைத்தபடியே அவனது {அர்ஜுனனுடைய} தேர், குதிரைகள், கொடிமரம் ஆகியவற்றையும் மற்றும் தேரோட்டியையும் {கிருஷ்ணனையும்} கூரிய கணைகளின் மழையால் மறைத்தார். துரோணரின் கணைமழையைத் தன் கணைகளால் கலங்கடித்த அர்ஜுனன், மேலும் வலிமைமிக்கப் பயங்கரக் கணைகளை ஏவியபடியே துரோணரை எதிர்த்து விரைந்தான். க்ஷத்திரியக் கடமைகளை நோற்ற அர்ஜுனன், அந்தப் போரில் ஒன்பது கணைகளால் துரோணரைத் துளைத்தான்.
அர்ஜுனனின் கணைகளைத் தன் கணைகளால் அறுத்த துரோணர், பிறகு, விஷத்திற்கோ, நெருப்புக்கோ ஒப்பான பல கணைகளால் கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரையும் துளைத்தார். பிறகு அர்ஜுனன், தன் கணைகளால் துரோணரின் வில்லை அறுக்க நினைத்துக் கொண்டிருந்த போது, பெரும் வீரம் கொண்ட பின்னவர் {துரோணர்}, சிறப்புமிக்கப் பார்த்தனின் {அர்ஜுனனின்} வில்லின் நாண்கயிற்றை அச்சமற்றவகையில் விரைவாக அறுத்தார். மேலும் பல்குனனின் {அர்ஜுனனின்} குதிரைகளையும், கொடிமரத்தையும், தேரோட்டியையும் துளைத்தார். வீரமிக்கத் துரோணர் சிரித்துக் கொண்டே தன் கணைகளால் பல்குனனையும் {அர்ஜுனனையும்} மறைத்தார்.
அதேவேளையில், ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையான அந்தப் பார்த்தன், தன் பெரிய வில்லில் புதிய நாணேற்றி, தன் ஆசானுக்கும் மேம்பட்டவனாக, ஏதோ ஒரே ஒரு கணையை ஏவுபவனைப் போல அறுநூறு {600} கணைகளை விரைவாக ஏவினான். மேலும் அவன் எழுநூறு {700} கணைகளையும், பிறகு தடுக்கப்படமுடியாத ஆயிரம் {1000} கணைகளையும் அதன் பிறகு பத்தாயிரம் {10000} பிற கணைகளையும் ஏவினான். இவை அனைத்தும் துரோணரின் வியூகத்தில் இருந்த வீரர்கள் பலரைக் கொன்றன. வலிமைமிக்கவனும், சாதித்தவனும், போர்க்கலையின் அனைத்து வழிமுறைகளையும் அறிந்தவனுமான அந்தப் பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட பல மனிதர்களும், குதிரைகள் மற்றும் யானைகள் பலவும் உயிரிழந்து விழுந்தன.
இடியால் தளர்ந்த மலைகளின் கொடுமுடிகளைப் போலவோ, காற்றால் விரட்டப்படும் மேகங்களின் திரள்களைப் போலவோ, நெருப்பால் எரிந்துவிழும் பெரிய வீடுகளைப் போலவோ யானைகள் கீழே விழுந்தன. அர்ஜுனனின் கணைகளால் தாக்கப்பட்டு, இமயச்சாரலில் நீரூற்றின் பலத்தால் தாக்கப்பட்டு விழும் அன்னங்களைப் போலவே, ஆயிரக்கணக்கான குதிரைகள் விழுந்தன. யுக முடிவில் எழும் சூரியன் தன் கதிர்களால் பெரும் அளவு நீரை வற்ற செய்வதைப் போலவே, அந்தப் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்}, தன் ஆயுதங்கள் மற்றும் கணைகளின் மழையால் பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்கள், குதிரைகள், யானைகள் மற்றும் காலாட்படை வீரர்களைக் கொன்றான்.
பிறகு சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலவே, அந்தத் துரோண மேகம், தன் கணைகளின் மழையால், கதிர்கள் என்ற அடர்த்தியான கணை மழையால் குருக்களில் முதன்மையானோரை அந்தப் போரில் எரித்துக் கொண்டிருந்த அந்தப் பாண்டவச் சூரியனை {அர்ஜுனனை} மறைத்தது. அப்போது ஆசான் {துரோணர்}, எதிரியின் உயிர்க்குருதியைக் குடிக்க வல்ல ஒரு நாராசத்தால் பெரும் பலத்துடன் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} மார்பைத் தாக்கினார். பலமிழந்த அர்ஜுனன், நிலநடுக்கத்தின் போது நடுங்கும் ஒரு மலையைப் போலவே அங்கமெல்லாம் நடுக்கமடைந்தான். எனினும், மீண்டும் துணிவை அடைந்த பீபத்சு {அர்ஜுனன்} சிறகு படைத்த கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்தான். பிறகு துரோணர் ஐந்து கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தாக்கினார். மேலும் அவர் எழுபத்து மூன்று கணைகளால் அர்ஜுனனையும், மூன்றால் அவனது கொடிமரத்தையும் தாக்கினார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரமிக்கத் துரோணர் தம் சீடனைவிட மேம்பட்டவராகக் கண்ணிமைப்பதற்குள் தம் கணைமாரியால் அர்ஜுனனைக் கண்ணுக்குப் புலப்படாதபடி செய்தார். துரோணரின் கணைகள் தொடர்ச்சியான சரமாகப் பாய்வதையும், அவரது வில்லானது தொடர்ச்சியாக வட்டமாக வளைக்கப்பட்டு அற்புதமாகக் காட்சியளிப்பதையும் நாங்கள் கண்டோம். அந்தப் போரில் துரோணரால் ஏவப்பட்டவையும், கங்க இறகுகளால் சிறகமைந்தவையுமான அந்த எண்ணற்ற கணைகள் தனஞ்சயன் மீதும், வாசுதேவன் மீதும் இடையறாமல் பாய்ந்தன. துரோணருக்கும், பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போரைக் கண்டவனும், பெரும் புத்திசாலியுமான வாசுதேவன் {கிருஷ்ணன்} (முக்கியப்) பணி நிறைவேறச் சிந்திக்கத் தொடங்கினான் [1].
[1] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமிருக்கிறது, அதில், "பார்த்தன் பாலனாயிருந்தும் வயதினால் முதிர்ந்த வீரரான துரோணரைப் பலத்தினால் மிஞ்சாமலிருந்ததை நாங்கள் மலைகளினுடைய சஞ்சாரத்தைப்போல் ஆச்சரியமாகக் கண்டோம். விருஷ்ணி குலத்தில் தோன்றியவரான ஸ்ரீ கிருஷ்ணர், துரோணரின் பராக்கிரமத்தைக் கண்டு, "மகாசமுத்திரம் எவ்வாறு கரையைத் தாண்டிச் செல்ல மாட்டாதோ அவ்வாறே அர்ஜுனன் இந்தத் துரோணரை மீறிச் செல்லப் போகிறதில்லை" என்று எண்ணினார்" என இருக்கிறது. அதன் பிறகு பின்வரும்படியே தொடர்கிறது.
பிறகு வாசுதேவன் தனஞ்சயனிடம் இந்த வார்த்தைகளில், "ஓ! பார்த்தா, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நாம் காலத்தை வீணடிக்கக்கூடாது. இதைவிட மிக முக்கியப் பணி நமக்காகக் காத்திருப்பதால் நாம் துரோணரைத் தவிர்த்துவிட்டுச் செல்ல வேண்டும்" என்றான். அதற்கு மறுமொழியாகப் பார்த்தன் கிருஷ்ணனிடம், "ஓ! கேசவா {கிருஷ்ணா} நீ விரும்பியவாறே ஆகட்டும்" என்றான். பிறகு அர்ஜுனன். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரோணரைத் தங்கள் வலப்புறம் நிறுத்தி அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
அப்போது துரோணர் அர்ஜுனனிடம், "ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நீ எங்கே செல்கிறாய். உன் எதிரியை வெல்லும் வரை நீ (போரை) நிறுத்துவதில்லை என்பது உண்மையில்லையா?" என்று கேட்டார். அதற்கு அர்ஜுனன், "நீர் என் எதிரியல்ல எனது ஆசானாவீர். நான் உமது சீடன், எனவே, உமது மகனைப் போன்றவன். மேலும், போரில் உம்மை வெல்லும் மனிதன் எவனும் இந்த மொத்த உலகிலும் இல்லை" என்றான் {அர்ஜுனன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இவ்வார்த்தைகளைச் சொன்ன வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பி, (கௌரவத்) துருப்புகளை எதிர்த்து வேகமாகச் சென்றான். அப்படி அவன் உமது படையில் ஊடுருவிய போது, உயர் ஆன்ம பாஞ்சால இளவரசர்களான யுதாமன்யுவும், உத்தமௌஜசும் அவனது {அர்ஜுனனது} சக்கரங்களின் பாதுகாவலர்களாக அவனைப் பின்தொடர்ந்து சென்றனர். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்வத குலத்துக் கிருதவர்மன், காம்போஜர்களின் ஆட்சியாளன் {சுதக்ஷிணன்}, சுருதாயுஸ் [2] ஆகியோர் முன்னேறிச் செல்லும் தனஞ்செயனை {அர்ஜுனனை} எதிர்க்கத் தொடங்கினர். மேலும் இவர்கள் தங்களைப் பின்தொடர்ந்து வருபவர்களாகப் பத்தாயிரம் தேர்வீரர்களைக் கொண்டிருந்தனர்.
[2] கலிங்கர்களின் மன்னனான சுருதாயுஷ் என்பவன் பீஷ்ம பர்வம் பகுதி 54ஆவில் பீமனால் கொல்லப்பட்டான். இது வேறு ஒருவனாக இருக்க வேண்டும். பீ.ப.54ஆவுக்குப் பிறகு, பீ.ப.59ஆ, 59ஈ, 75, 85, 100, துரோண பர்வம் பகுதி 90, 91, 92 ஆகிய பகுதிகளிலும் சுருதாயுஸ், சுருதாயுஷ், சுருதாயுதன் என்ற வரும் பெயர்கள் வருகின்றன. இவர்கள் வெவ்வேறு நபர்களாகவோ அல்லது பீ.ப.67ஆக்கு பீ.ப.54ஆவில் கொல்லப்பட்ட கலிங்க மன்னன் சுருதாஷைத் தவிர வேறு ஒரே ஒரு நபராகவோ இருக்க வேண்டும்.
அபீஷாஹர்கள், சூரசேனர்கள், சிபிக்கள், வசாதிகள் மாவேல்லகர்கள், லலித்தர்கள், கைகேயர்கள், மத்ரகர்கள், நாராயணக் கோபாலர்கள் ஆகியோரும், பெரும் துணிச்சல்மிக்கவர்கள் என்று கருதப்பட்டவர்களும், தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்தவர்களும், முன்பு கர்ணனால் வெல்லப்பட்டவர்களுமான காம்போஜர்களின் பல்வேறு இனங்களும், பரத்வாஜரின் மகனை {துரோணரைத்} தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு, தன் மகனின் மரணத்தால் துயரில் எரிபவனும், அனைத்தையும் அழிக்கும் யமனுக்கு ஒப்பானவனும், கவசம் பூண்டவனும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனும், அடர்ந்த போரில் உயிரை விடத் துணிந்தவனும், பெரும் ஆற்றலைக் கொண்ட வலிமைமிக்க வில்லாளியும், மனிதர்களில் புலியும், யானை மந்தையின் மதங்கொண்ட தலைவனுக்கு ஒப்பானவனும், பகைவர் படை மொத்தத்தையும் விழுங்கத் தயாராக இருப்பவனாகத் தெரிந்தவனுமான அந்தக் கோபக்கார வீரனான அர்ஜுனனைத் தடுப்பதற்காக விரைந்தனர். பிறகு, ஒரு புறம் அந்தப் போராளிகள் அனைவரும், மறுபுறம் அர்ஜுனன் என அவர்களுக்கிடையில் தொடங்கிய போரானது மிகக் கடுமையானதாகவும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. ஜெயத்ரதனைக் கொல்லச்செல்லும் அந்த மனிதர்களில் காளையை {அர்ஜுனனை}, கடும் நோயைத் தடுக்கும் மருந்துகளைப் போல அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தடுத்தனர்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |