The boon of Srutayudha! | Drona-Parva-Section-091 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 07)
பதிவின் சுருக்கம் : எதிரிகளின் படையை நடுங்கச் செய்த அர்ஜுனன்; பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தியது; கிருதவர்மனுடன் மோதி வாய்ப்பிருந்தும் அவனைக் கொல்லாமல் விட்டது; மன்னன் சுருதாயுதனின் வரலாறு; சுருதாயுதன் பெற்றிருந்த வரம்; சுருதாயுதன் கொல்லப்பட்டது; அர்ஜுனனை மயக்கமடையச் செய்த காம்போஜ மன்னன் சுதக்ஷிணன்; சுதக்ஷிணன் கொல்லப்பட்டது...
வருண தேவன் |
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டவனும், பெரும் வலிமையும் ஆற்றலும் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்} துரோணரால் பின்தொடரப்பட்டான். எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, எண்ணற்ற ஒளிக்கதிர்களை இறைக்கும் சூரியனுக்கு ஒப்பாகத் தன் கூரிய கணைகளை இறைத்து, உடலை எரிக்கும் நோய்களைப் போல அந்தப் படையைச் சிதறடித்தான். குதிரைகள் துளைக்கப்பட்டன, தேர்கள் உடைக்கப்பட்டு, தேரோட்டிகள் சிதைக்கப்பட்டு, யானைகள் வீழ்த்தப்பட்டன. குடைகள் வெட்டித் தள்ளப்பட்டன, வாகனங்கள் தங்கள் சக்கரங்களை இழந்தன. கணைகளால் மிகவும் பீடிக்கப்பட்ட போராளிகள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர். ஒருவரோடொருவர் மோதும்படியாக அந்த வீரர்களுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த அந்தக் கடும்போர் இப்படியே நடந்தது. எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் தன் நேரான கணைகளால் பகைவரின் படையைத் தொடர்ச்சியாக நடுங்கச் செய்தான். உண்மையில் உறுதியான அர்ப்பணிப்பு கொண்டவனும், வெண் குதிரைகளைக் கொண்டவனுமான அர்ஜுனன், தன் உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டுத் தேர்வீரர்களில் முதன்மையானவரும், சிவப்பு குதிரைகளைக் கொண்டவருமான துரோணரை எதிர்த்து விரைந்தான்.
அப்போது ஆசான் துரோணர், உயிர்நிலைகளையே அடையவல்ல இருபத்தைந்து நேரான கணைகளால் வலிமைமிக்க வில்லாளியான தன் சீடன் அர்ஜுனனைத் தாக்கினார். அதன்பேரில் ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான பீபத்சு {அர்ஜுனன்}, தன்னை நோக்கி ஏவப்பட்ட எதிர்க்கணைகளைக் கலங்கடிக்கவல்ல கணைகளை ஏவியபடி துரோணரை எதிர்த்து விரைந்தான். அளவிலா ஆன்மா கொண்ட அர்ஜுனன் பிரம்ம ஆயுதத்தை இருப்புக்கு அழைத்துத் துரோணரால் தன் மீது விரைவாக ஏவப்பட்ட கணைகளை {பல்லங்களைத்} தன் நேரான கணைகளால் {பல்லங்களால்} கலங்கடித்தான் [1]. அர்ஜுனன் இளமை கொண்டவனாக, மிக மூர்க்கமாகப் போராடுபவனாக இருந்தாலும், ஒரு கணையாலும் துரோணரைத் துளைக்க முடியாததால் நாங்கள் கண்ட துரோணரின் திறம் மிக அற்புதமானதாக இருந்தது. மேகங்களின் திரள்கள் மழைத்தாரைகளைப் பொழிவதைப் போலத் துரோண மேகமானது, பார்த்த மலையின் மீது மழையைப் பொழிந்தது. பெரும் சக்தியைக் கொண்ட அர்ஜுனன், பிரம்மாயுதத்தை அழைத்து, அந்தக் கணை மழையை வரவேற்று, அந்தக் கணைகளைத் தன் கணைகளால் அறுத்தான்.
[1] வேறொரு பதிப்பில், இவ்வரி, "வேகமாகத் தொடுக்கின்ற அந்த அர்ஜுனனுடைய பல்லங்களை, மனத்தினால் எண்ண முடியாத பராக்கிரமத்தையுடைய துரோணாசாரியர் பிரம்மாஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு கணுக்கள் பதிந்த பல்லங்களாலே திருப்பியடித்தார்" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "பரந்த மனம் கொண்ட அர்ஜுனன், பிரம்ம ஆயுதத்தை வெளியிட்டு, நெருக்கமான கணுக்கள் கொண்ட பல்லங்களைக் கொண்டு, தன் மீது துரோணரால் மிக விரைவாக ஏவப்பட்ட பல்லங்களை விரட்டினான்" என்று இருக்கிறது. இதில் மன்மதநாததத்தரின் பதிப்பும், கங்குலியின் பதிப்பும் ஒத்துப் போகின்றன.
பிறகு துரோணர், வெண் குதிரைகளைக் கொண்ட பார்த்தனை இருபத்தைந்து கணைகளால் பீடித்தார். மேலும் அவர் {துரோணர்}, எழுபது கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனை} அவனது கரங்களிலும் மார்பிலும் தாக்கினார். பெரும் நுண்ணறிவு கொண்ட பார்த்தன், தொடர்ச்சியாகக் கூரிய கணைகளை ஏவிக்கொண்டிருந்த ஆசானை {துரோணரை} அந்தப் போரில் சிரித்துக் கொண்டே தடுத்தான். துரோணரால் இப்படித் தாக்கப்பட்ட போது, தேர்வீரர்களில் முதன்மையான அந்த இருவரும், பெருகும் யுக நெருப்புக்கு ஒப்பான அந்த வெல்லப்படமுடியாத வீரரை {துரோணரைத்} தவிர்த்தனர். துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கூரிய கணைகளைத் தவிர்த்தவனும், மலர்மாலைகளை அணிந்தவனும், குந்தியின் மகனுமான அந்தக் கிரீடம் தரித்தவன் {கிரீடியான அர்ஜுனன்}, போஜர்களின் படையைப் படுகொலை செய்யத் தொடங்கினான். உண்மையில், அசையாத மைநாக மலையைப் போல நின்ற வெல்லப்பட முடியாத அந்தத் துரோணரைத் தவிர்த்த அர்ஜுனன், கிருதவர்மனுக்கும், காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணனுக்கும் இடையில் தன் நிலையை எடுத்துக் கொண்டான்.
அப்போது மனிதர்களில் புலியான அந்தப் போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, வெல்லப்பட முடியாதவனும், குரு வழித்தோன்றல்களில் முதன்மையானவனுமான அவன் {அர்ஜுனன்} மீது கங்க இறகுகளால் சிறகு அமைந்த பத்து கணைகளால் நிதானமாகத் துளைத்தான். பிறகு அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நூறு கணைகளால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான். மேலும் மூன்று பிற கணைகளால் அவனை {கிருதவர்மனைத்} துளைத்த அவன் {அர்ஜுனன்}, அந்தச் சாத்வத குலத்து வீரனை {கிருதவர்மனைப்} பிரம்மிக்கச் செய்தான். போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, சிரித்துக் கொண்டே பார்த்தன் மற்றும் வாசுதேவன் ஆகியோர் ஒவ்வொருவரையும் இருபத்தைந்து கணைகளாலும் துளைத்தான். அப்போது கிருதவர்மனின் வில்லை வெட்டிய அர்ஜுனன், சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட நெருப்புக்கோ, கடும் நஞ்சு கொண்ட கோபக்காரப் பாம்புகளுக்கோ ஒப்பான இருப்பத்தொரு கணைகளால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், மற்றொரு வில்லை எடுத்து ஐந்து கூரிய கணைகளால் அர்ஜுனனை மார்பில் துளைத்தான். பிறகு மேலும் ஐந்து கூரிய கணைகளால் மீண்டும் பார்த்தனைத் துளைத்தான். பார்த்தனும் {அர்ஜுனனும்} பதிலுக்கு ஒன்பது கணைகளால் அவனது {கிருதவர்மனின்} நடுமார்பில் துளைத்தான்.
குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கிருதவர்மனின் தேருக்கு முன்பு தடுக்கப்பட்டிருப்பதைக் கண்ட விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, காலமேதும் வீணாகக் கூடாது என்று நினைத்தான். பிறகு கிருஷ்ணன், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, "கிருதவர்மனுக்கு எந்தக் கருணையும் காட்டாதே! (அவனுடன் கொண்ட) உறவுமுறையைக் கருதாமல் அவனை நொறுக்கிக் கொல்வாயாக!" என்றான். பிறகு அர்ஜுனன் தன் கணைகளால் கிருதவர்மனை மலைக்கச் செய்து, தன் வேகமான குதிரைகளால் காம்போஜ படைப்பிரிவினரிடம் சென்றான். வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன் காம்போஜப் படைக்குள் ஊடுருவியதைக் கண்ட கிருதவர்மன் கோபத்தால் நிறைந்தான். பிறகு அவன் {கிருதவர்மன்}, தன் வில்லை எடுத்து அதில் கணைகளைப் பொருத்திப் பாஞ்சால இளவரசர்கள் இருவருடன் மோதினான். உண்மையில் கிருதவர்மன், அர்ஜுனனின் சக்கரங்களைப் பாதுகாத்துப் பின்தொடர்ந்த இரு பாஞ்சால இளவரசர்களையும் தன் கணைகளால் தடுத்து நிறுத்தினான்.
பிறகு, போஜர்களின் ஆட்சியாளனான கிருதவர்மன் யுதாமன்யுவை மூன்று கணைகளாலும், உத்தமௌஜசை நான்கு கணைகளாலும் அவர்கள் இருவரையும் கூரியக் கணைகளால் துளைத்தான். பதிலுக்கு அந்த இளவரசர்கள் இருவரில் ஒவ்வொருவரும் அவனைப் {கிருதவர்மனைப்} பத்து கணைகளால் துளைத்தனர். அதற்கு மேலும், யுதாமன்யு மூன்று கணைகளையும், உத்தமௌஜஸ் மூன்று கணைகளையும் ஏவி கிருதவர்மனின் கொடிமரத்தையும் வில்லையும் அறுத்தனர். அப்போது மற்றொரு வில்லை எடுத்த அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, சினத்தால் மதங்கொண்டு, அவ்விரு வீரர்களின் விற்களையும் இழக்கச் செய்து, அவர்களைக் கணைகளால் மறைத்தான். பிறகு வேறு இரு விற்களை எடுத்து நாணேற்றிய அந்த இரு வீரர்களும் கிருதவர்மனைத் துளைக்கத் தொடங்கினர்.
அதே வேளையில் பீபத்சு {அர்ஜுனன்} பகைவரின் படைக்குள் ஊடுருவினான். ஆனால் கிருதவர்மனால் தடுக்கப்பட்ட அந்த இளவரசர்கள் இருவரும் கடுமையாகப் போராடினாலும் திருதராஷ்டிரப் படைக்குள் நுழைய முடியவில்லை. வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், அந்தப் போரில் தன்னை எதிர்த்த படைப்பிரிவுகளை விரைவாகப் பீடித்தான். எனினும் அந்த எதிரிகளைக் கொல்பவன் {அர்ஜுனன்}, தன் அருகில் அகப்பட்டிருந்த கிருதவர்மனைக் கொல்லவில்லை.
அப்படிச் செல்லும் பார்த்தனைக் {அர்ஜுனனைக்} கண்ட மன்னன் சுருதாயுதன், கோபத்தால் நிறைந்து, தன் பெரிய வில்லை அசைத்துக் கொண்டு அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான். அவன் {சுருதாயுதன்} பார்த்தனை மூன்று கணைகளாலும், ஜனார்த்தனனை எழுபதாலும் துளைத்தான். மேலும் அவன் {சுருதாயுதன்} கத்தி போன்ற தலை கொண்ட மிகக் கூரிய கணை ஒன்றால் பார்த்தனின் கொடிமரத்தைத் தாக்கினான். பிறகு, கோபத்தால் நிறைந்த அர்ஜுனன், (பாகன் ஒருவன்) அங்குசத்தால் வலிமைமிக்க யானையைத் தாக்குவதைப் போல, தன் எதிராளியை நேரான தொண்ணூறு {90} கணைகளால் ஆழத் துளைத்தான். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுருதாயுதனால், பாண்டு மகனின் ஆற்றல்மிக்க அந்தச் செயல்பாட்டைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் பதிலுக்கு அர்ஜுனனை எழுபத்தேழு கணைகளால் {நாராசங்களால்} துளைத்தான்.
அப்போது அர்ஜுனன், சுருதாயுதனனின் வில்லையும், அதன் பிறகு அவனது அம்பறாத்தூணியையும் அறுத்து, மேலும் கோபத்துடன் நேரான எழுபது கணைகளால் அவனது மார்பைத் தாக்கினான். பிறகு, கோபத்தால் தன் புலன்களை இழந்த மன்னன் சுருதாயுதன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஒன்பது கணைகளால் வாசவன் மகனின் {இந்திரன் மகன் அர்ஜுனனின்}} கரங்களிலும், மார்பிலும் அடித்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான அர்ஜுனன் சிரித்துக் கொண்டே பல்லாயிரம் கணைகளால் சுருதாயுதனைப் பீடித்தான். மேலும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அர்ஜுனன்}, பின்னவனின் {சுருதாயுதனின்} குதிரைகளையும், தேரோட்டியையும் விரைவாகக் கொன்றான். பெரும் பலம் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, எழுபது கணைகளால் தன் எதிரியைத் துளைத்தான். பிறகு வீரமன்னன் சுருதாயுதன் குதிரைகளற்ற அந்தத் தேரைக் கைவிட்டு, அம்மோதலில் தன் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தான்.
வருணனின் மகனான வீர மன்னன் சுருதாயுதன், குளிர்ந்த நீரைக் கொண்டதும், பர்ணாசை [2] என்றழைக்கப்படுவதுமான பெரும் நதியையே தன் தாயாகக் கொண்டவனும் ஆவான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது {சுருதாயுதன்} அன்னை தன் மகனுக்காக வருணனிடம், "இந்த எனது மகன் {சுருதாயுதன்} பூமியில் கொல்லப்படாதவனாக இருக்கட்டும்" என்று வேண்டினாள். (அவளிடம்) மனம் நிறைந்த வருணன், "எதன் காரணமாக இந்த உனது மகன் எதிரிகளால் பூமியில் கொல்லப்பட முடியாதவனாக ஆவானோ, அந்த வரமாக உயர்ந்த நன்மையைச் செய்யும் ஒரு தெய்வீக ஆயுதத்தை நான் அவனுக்கு {சுருதாயுதனுக்கு} அளிக்கிறேன். எந்த மனிதனும் மரணமில்லா நிலையைப் பெற முடியாது. ஓ! ஆறுகளில் முதன்மையானவளே {பர்ணாசையே}, பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. எனினும் இந்தப் பிள்ளை, இந்த ஆயுதத்தின் சக்தியால் போரில் தன் எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனாக எப்போதும் இருப்பான். எனவே, உனது இதய நோய் அகலட்டும்" என்றான் {வருணன்}. இவ்வார்த்தைகளைச் சொன்ன வருணன் மந்திரங்களுடன் சேர்த்து ஒரு கதாயுதத்தைக் கொடுத்தான். அந்தக் கதாயுதத்தை அடைந்த சுருதாயுதன் பூமியில் வெல்லப்பட முடியாதவனாக இருந்தான். எனினும், சிறப்புமிக்கவனான நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, அவனிடம் {சுருதாயுதனிடம்}, "இந்தக் கதாயுதம் போரில் ஈடுபடாதவன் மீது ஏவப்படக்கூடாது. அத்தகு மனிதன் மேல் ஏவப்பட்டால், அது திரும்பி, உன் மீதே பாயும். ஓ! சிறப்புமிக்கப் பிள்ளாய், (அப்படி ஏவப்பட்டால்), அஃது எதிர்த்திசையில் சென்று, ஏவிய மனிதனையே கொல்லும்" என்றான் {வருணன்}.
[2] பர்ணாசை நதியானது, ராஜஸ்தானில் ஓடும் சம்பல் நதியின் கிளை நதியாகக் கருதப்படுகிறது.
அவனுடைய வேளை வந்ததால், சுருதாயுதன் அந்தக் கட்டளையை மீறியதாகத் தெரிந்தது. வீரர்களைக் கொல்லும் அந்தக் கதாயுதத்தால் அவன் {சுருதாயுதன்} ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தாக்கினான். வீரக் கிருஷ்ணன் அந்தக் கதாயுதத்தை நன்கு வளர்ந்த தன் பருத்த தோள்கள் ஒன்றில் ஏற்றான். விந்திய மலையை அசைக்கத் தவறிய காற்றைப் போல, அது சௌரியை {கிருஷ்ணனை} அசைக்கத் தவறியது. அந்தக் கதாயுதம் ஸ்ருதாயுதனையே நோக்கித் திரும்பி, மந்திரவாதியின் தவறான மந்திரம் அவனேயே காயப்படுத்துவதைப் போல, தன் தேரில் நின்றிருந்த அந்தத் துணிச்சல்மிக்கக் கோபக்கார மன்னனைத் தாக்கிக் கொன்றதால் அந்த வீரன் பூமியில் விழுந்தான். கதாயுதம் திரும்பி சுருதாயுதனைக் கொன்றதையும், எதிரிகளைத் தண்டிப்பவனான சுருதாயுதன் தன் ஆயுதத்தாலேயே கொல்லப்பட்டதையும் கண்ட துருப்புகளுக்கு மத்தியில் "ஐயோ" என்றும், "ஓ" என்றும் கூச்சல்கள் எழுந்தன [3].
[3] ஒரே பொருளைக் கொண்ட இணைவாக்கியங்களாக மூலத்தில் இவ்வாக்கியம் இருப்பதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார். பீஷ்ம பர்வம் பகுதி 54ஆவில் பீமனால் கொல்லப்பட்ட சுருதாயுஷும், இங்கே அர்ஜுனானால் கொல்லப்படும் சுருதாயுதனும் வெவ்வேறானவர்களாக இருக்க வேண்டும். இதையும் தவிர துரோண பர்வம் பகுதி 92லும் ஒரு சுருதாயுஸ் வருகிறான். சுருதாயுஷ், சுருதாயுதன், சுருதாயுஸ் என மூன்று பெயர்கள் மாறி மாறிக் காணக்கிடைக்கின்றன.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுருதாயுதன், போரில் ஈடுபடாத ஜனார்த்தன் மீது அந்தக் கதாயுதத்தை ஏவியதால், ஏவிய அவனையே அது கொன்றுவிட்டது. மேலும் அந்தச் சுருதாயுதன் வருணன் சொன்ன விதத்திலேயே களத்தில் அழிந்தான். உயிரை இழந்த அவன் வில்லாளிகள் அனைவரின் கண்கள் முன்பாகவே பூமியில் விழுந்தான். அப்படி விழுந்த போது, பர்ணாசையின் அன்புக்குரிய அந்த மகன் {சுருதாயுதன்}, கிளை பரப்பியிருந்த ஒரு நெடும் ஆலமரம் காற்றால் விழுந்து கிடந்ததைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான். எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தச் சுருதாயுதன் கொல்லப்பட்டதைக் கண்டு துருப்புகள் அனைத்தும், முக்கிய வீரர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடினர்.
அப்போது காம்போஜர்களின் ஆட்சியாளனுடைய மகனான துணிச்சல்மிக்கச் சுதக்ஷிணன், தன் வேகமான குதிரைகளை எதிரிகளைக் கொல்பவனான பல்குனனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராக விரைவாகச் செலுத்தினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்} அவன் {சுதஷிணன்} மீது ஏழு கணைகளை ஏவினான். அந்த வீரனின் உடலைக் கடந்து சென்ற அந்தக் கணைகள் பூமியில் நுழைந்தன. போரில் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட சுதக்ஷிணன், பதிலுக்கு அர்ஜுனனைக் கங்க இறகுகளால் சிறகமைந்த பத்துக் கணைகளால் துளைத்தான். வாசுதேவனை மூன்று கணைகளால் துளைத்த அவன், மேலும் ஐந்தால் பார்த்தனைத் துளைத்தான்.
அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சுதக்ஷிணனின் வில்லை அறுத்துப் பின்னவனின் {சுதக்ஷிணனின்} கொடிமரத்தையும் வெட்டி வீழ்த்தினான். பாண்டுவின் மகன், பெரும் கூர்மை கொண்ட பல்லங்கள் இரண்டால் தன் எதிராளியைத் துளைத்தான். எனினும், சுதக்ஷிணன், மீண்டும் மூன்று கணைகளால் பார்த்தனைத் துளைத்து சிங்க முழக்கம் செய்தான். பிறகு, கோபத்தால் நிறைந்த துணிச்சல் மிக்கச் சுதக்ஷிணன், முழுக்க இரும்பாலானதும், மணிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு பயங்கர ஈட்டியைக் காண்டீவதாரியின் {அர்ஜுனன்} மீது ஏவினான். பெரும் எரிநட்சத்திரத்தைப் போலச் சுடர்விட்ட அந்த ஈட்டி, தீப்பொறிகளைக் கக்கிக் கொண்டு வலிமைமிக்க அந்தத் தேர்வீரனை {அர்ஜுனனைத்} துளைத்துச் சென்று பூமியில் விழுந்தது. அந்த ஈட்டியால் ஆழமாகத் தாக்கப்பட்டு மயக்கமடைந்த அர்ஜுனன், மிக விரைவாகவே {மயக்கத்திலிருந்து} மீண்டான்.
பிறகு வலிமையும், சக்தியும், காண இயலா சாதனைகளும் கொண்ட வீரனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, கங்க இறகுகளால் சிறகமைந்த பதினான்கு கணைகளால் தன் எதிரியை அவனது குதிரைகள், கொடிமரம், வில், தேரோட்டி ஆகியவற்றோடு துளைத்தான். மேலும் பார்த்தன், எண்ணற்ற பிற கணைகளால் சுதக்ஷிணனின் தேரைச் சுக்குநூறாக வெட்டினான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் காரியமும், ஆற்றலும் கலங்கடிக்கப்பட்டவனான காம்போஜர்களின் இளவரசனான சுதக்ஷிணனின் மார்பை ஒரு கணையால் துளைத்தான். காம்போஜர்களின் துணிச்சல்மிக்க அந்த இளவரசன் {சுதக்ஷிணன்}, தன் கவசம் பிளக்கப்பட்டு, அங்கங்கள் பலவீனமடைந்து, தன் கிரீடமும், அங்கதங்களும் நழுவ, இயந்திரத்தில் இருந்து வீசப்பட்ட இந்திரக் கம்பம் {இந்திரத்வஜம்} போலத் தலை குப்புற பூமியில் விழுந்தான்.
வசந்தகாலத்தில், மலைமுகட்டில், அழகிய கிளைகளுடன் நன்கு வளர்ந்திருக்கும் அழகிய கர்ணிகார (கோங்கு) மரம், காற்றினால் ஒடிக்கப்பட்டுக் கீழே விழுந்து கிடப்பதைப் போல, விலைமதிப்புமிக்கப் படுக்கையையும், விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்படத் தகுந்த அந்தக் காம்போஜர்களின் இளவரசன் {சுதக்ஷிணன்} உயிரை இழந்து வெறுந்தரையில் கிடந்தான். அழகுமிக்கவனும், தாமிர நிறக் கண்களைக் கொண்டவனும், நெருப்பின் காந்தியைக் கொண்ட தங்க மாலையைத் தலையில் சூடியவனும், காம்போஜர்களின் ஆட்சியாளனுடைய மகனுமான அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சுதக்ஷிணன், பார்த்தனின் கணைகளால் வீழ்த்தப்பட்டு, சமமுகடு கொண்ட அழகிய மலையைப் போல உயிரையிழந்து பூமியில் கிடந்தான். சுருதாயுதனும், காம்போஜ இளவரசனான சுதக்ஷிணனும் கொல்லப்பட்டதைக் கண்ட உமது மகனின் துருப்புகள் அனைத்தும் தப்பி ஓடின" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |