Tuesday, July 12, 2016

ஜெயத்ரதனைக் கண்ட கிருஷ்ணார்ஜுனர்கள்! - துரோண பர்வம் பகுதி – 100

Krishna and Arjuna saw Jayadratha! | Drona-Parva-Section-100 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 16)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனைக் கண்டு தப்பி ஓடிய கௌரவர்கள் வெட்கமடைந்து திரும்பி வந்தது; தேர்க்கூட்டத்தில் இருந்து வெளியே வந்த கிருஷ்ணார்ஜுனர்கள்; நம்பிக்கையிழந்த கௌரவர்கள்; ஜெயத்ரதனைக் நோக்கி கிருஷ்ணனும் அர்ஜுனனும் விரைந்தது; விரைந்து வந்த துரியோதனன் கிருஷ்ணனைத் தாண்டி சென்று திரும்பிப் பார்த்தது; கௌரவர்களின் மகிழ்ச்சி...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஏற்கனவே பல படைப்பிரிவுகளைப் பிளந்துத் தங்கள் படைக்குள்ளும் ஊடுருவிவிட்டதைக் கண்ட உமது படையின் {கௌரவப்படையின்} மன்னர்கள் அச்சத்தால் தப்பி ஓடினர். எனினும் அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள், சிறிது நேரத்திலேயே, சினத்தாலும், வெட்கத்தாலும் நிறைந்து, தங்கள் வலிமையால் உந்தப்பட்டு, நிதானமாக குவிந்த மனத்தை அடைந்து தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கிச் சென்றனர். ஆனால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தாலும், பழியுணர்ச்சியாலும் நிரம்பிப் போரில் பாண்டுவின் மகனை எதிர்த்துச் சென்ற அவர்கள் பெருங்கடலில் இருந்து ஆறுகள் திரும்பாததைப் போலத் திரும்பவில்லை. இதைக் கண்டு போரிலிருந்து ஓடிய இழிந்த க்ஷத்திரியர்கள் பலர், வேதங்களிடமிருந்து விலகிச் செல்லும் நாத்திகர்களைப் போலப் பாவத்துக்கும், நரகத்துக்கும் ஆட்பட்டனர் [1].


[1] "இவ்வரியை நெருக்கமான வகையில் நேரடியாக மொழிபெயர்க்காமல், அதன் பொருளையே கொடுத்திருப்பதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "நாஸ்திகர்கள் வேதங்களிடத்திலிருந்து திரும்புவது போலச் சில அஸத்துக்கள் (யுத்தத்தினின்று) திரும்பினார்கள். அந்த வீரர்கள் நரகத்தை அடைவதற்கான பாவத்தைப் பெற்றார்கள்" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

தேர்களின் கூட்டத்தை மீறிய மனிதர்களில் காளையரான அவ்விருவரும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்}, ராகுவின் வாயிலிருந்து விடுபட்ட சூரியனையும் சந்திரனையும் போல அதை {தேர்க்கூட்டத்தை} விட்டு இறுதியாக வெளியே வந்தனர். உண்மையில், தங்கள் களைப்பு விலகி, அந்தப் பரந்த படையைப் பிளந்த அந்த இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களும்}, பலமான வலையைக் கடந்த இரு மீன்களைப் போலத் தெரிந்தனர். அடர்த்தியான ஆயுத மழையால் தடுக்கப்பட்டதும், ஊடுருவ முடியாததுமான துரோணரின் படைப்பிரிவின் ஊடாகப் பலத்துடன் கடந்து சென்ற அந்த உயர் ஆன்ம வீரர்கள் இருவரும், (ஆகாயத்தில் தோன்றும்) யுகச் சூரியன்களைப் போலத் தெரிந்தனர். ஆயுதங்களின் அடர்த்தியான மழையின் ஊடாகப் பிளந்து சென்று, உடனடி ஆபத்திலிருந்து விடுபட்ட அந்த உயர் ஆன்ம வீரர்கள், அடர்த்தியான தங்கள் ஆயுதங்களின் மேகங்களால் ஆகாயத்தை மறைத்து, காட்டுத் தீயில் இருந்து தப்பியவர்கள் போலவோ, மகரத்தின் வாயில் இருந்து தப்பிய இரு மீன்களைப் போலவோ தெரிந்தனர். மேலும் அவர்கள் பெருங்கடலைக் கலங்கடிக்கும் இரு மகரங்களைப் போல அந்த (குரு) படையைக் கலங்கடித்தனர்.

பார்த்தனும் {அர்ஜுனனும்}, கிருஷ்ணனும் துரோணரின் படைப்பிரிவுக்கு மத்தியில் இருக்கையில், உமது வீரர்களும், உமது மகன்களும் அவ்விருவராலும் அதை விட்டு வெளிவர இயலாது என்றே நினைத்தனர். எனினும், ஓ! ஏகாதிபதி, பெரும் காந்தி கொண்ட அவ்விரு வீரர்களும், துரோணரின் படைப்பிரிவை விட்டு வெளிவந்ததைக் கண்ட பிறகு, ஜெயத்ரதனின் உயிரில் {ஜெயத்ரதன் உயிர்வாழ்வான் என்று} அதற்கு மேலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அந்த இரு கிருஷ்ணர்களும் துரோணரிடமிருந்தும், ஹிருதிகன் மகனிடம் {கிருதவர்மனிடம்} இருந்தும் தப்ப முடியாது என்று அவர்கள் நம்பியதால், ஓ! மன்னா, அதுவரை அவர்களுக்கு ஜெயத்ரதனின் உயிர் மீது பலமான நம்பிக்கையிருந்தது. ஓ! ஏகாதிபதி, எதிரிகளை எரிப்பவர்களான அவ்விருவரும், கிட்டத்தட்ட கடக்கப்பட முடியாத துரோணரின் படைப்பிரிவையும், போஜர்களின் படைப்பிரிவையும் கடந்து அந்த நம்பிக்கையைத் தகர்த்தனர். எனவே, அந்தப் படைகளைக் கடந்து சென்று சுடர்விடும் இரு நெருப்புகளைப் போல இருந்த அவர்களைக் கண்ட உம்மவர்கள் நம்பிக்கை இழந்து, அதற்கு மேலும் ஜெயத்ரதன் உயிரின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை.

பிறகு, அச்சமற்ற வீரர்களும், எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவர்களுமான கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் ஆகிய இருவரும், ஜெயத்ரதனைக் கொல்வது குறித்துத் தங்களுக்குள் பேசத் தொடங்கினர்.

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "தார்தராஷ்டிரத் தேர்வீரர்களில் முதன்மையான ஆறு பேருக்கு மத்தியில் ஜெயத்ரதன் நிறுத்தப்பட்டிருக்கிறான். எனினும், அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} என்னால் காணப்பட்டதும், அவன் என்னிடம் இருந்து தப்பமாட்டான். தேவர்கள் அனைவருடன் கூடிய சக்ரனே {இந்திரனே} போரில் அவனுக்கு {ஜெயத்ரதனுக்குப்} பாதுகாவலனாக இருந்தாலும் நம்மால் அவன் கொல்லப்படுவான்" என்றான் {அர்ஜுனன்}. இப்படியே அந்த இரு கிருஷ்ணர்களும் பேசிக்கொண்டனர். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளனைத் {ஜெயத்ரதனைத்} தேடிக் கொண்டிருக்கையில் இப்படியே அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். (அவர்கள் சொன்னதைக் கேட்ட) உமது மகன்கள் உரக்க ஓலமிட்டனர் [2].

[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, "இவ்வாறு மிக்கப் புஜபலமுடையவர்களான கிருஷ்ணார்ஜுனர்கள் சிந்துராஜனுடைய வதத்தை எதிர்பார்த்து ஒருவரோடொருவர் சம்பாஷித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் உம்முடைய புத்திரர்கள் பலவாறாக ஆராவாரஞ்செய்தார்கள்" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

வேக நடை கொண்ட தாகமிக்க இரு யானைகள், பாலைவனத்தைக் கடந்து, நீர் குடித்துப் புத்துணர்ச்சியடைந்ததைப் போலவே எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும் இருந்தனர். மரணத்திற்கு எட்டாதவர்களும், முதுமை தளர்ச்சிக்கு மேம்பட்டவர்களுமான {இளைஞர்களுமான} அவர்கள், புலிகள், சிங்கங்கள் மற்றும் யானைகள் நிறைந்த ஒரு மலைநாட்டைக் கடந்த இரு வணிகர்களைப் போலத் தெரிந்தனர் [3]. உண்மையில் (துரோணர் மற்றும் கிருதவர்மனிடம் இருந்து) விடுபட்ட அவர்களைக் கண்ட உமது வீரர்கள், பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கிருஷ்ணன் ஆகியோரின் முக நிறத்தைப் பயங்கரமாகக் கருதினர்; உம்மவர்கள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உரக்க ஓலமிட்டனர்.

[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, "யௌவனமுள்ளவர்களான அவ்விருவரும், புலிகளும், சிங்கங்களும், யானைகளுமாகிய இவைகளால் நான்கு பக்கங்களிலும் சூழப்பட்ட மலைகளைத் தாண்டி மரணப் பயத்தை விட்டவர்களான இரண்டு வர்த்தகர்களைப் போலக் காணப்பட்டார்கள்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. அப்போது கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் மரணமும், முதுமையும் நெருங்காத இளமையுடன் இருந்தனர் என்பது இங்கே பொருள்.

கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கோ, சுடர்மிக்க நெருப்புக்கோ ஒப்பான துரோணரிடம் இருந்தும், பூமியின் தலைவர்களான பிறரிடமிருந்தும் விடுபட்ட பார்த்தனும், கிருஷ்ணனும், சுடர்மிக்க இரு சூரியன்களைப் போலத் தெரிந்தனர். உண்மையில், எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், பெருங்கடலுக்கு ஒப்பான துரோணரின் படைப்பிரிவில் இருந்து விடுபட்டு, மிக ஆழமான கடலைக் கடந்து இன்பத்தில் நிறைந்திருக்கும் மனிதர்களைப் போலத் தெரிந்தனர். துரோணர் மற்றும் ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} பாதுகாக்கப்பட்ட படைப்பிரிவுகளின் அடர்த்தியான ஆயுத மழையில் இருந்து விடுபட்ட கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், இந்திரனையோ, அக்னியையோ போலச் சுடர்மிகும் பிரகாசத்துடன் தெரிந்தனர். பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கூரிய கணைகளால் துளைக்கப்பட்ட இரு கிருஷ்ணர்களும், தங்கள் உடல்களில் இரத்தம் வழிய, மலர்ந்திருக்கும் கர்ணிகரங்களால் {கோங்கு மரங்கள்} நிறைந்த இரு மலைகளைப் போலத் தெரிந்தனர்.

துரோணரை முதலையாகவும், ஈட்டிகளைச் சீற்றமிக்கப் பாம்புகளாகவும், கணைகளை மகரங்களாகவும், க்ஷத்திரியர்களை ஆழமான நீராகவும் கொண்ட அகலமான தடாகத்தைக் கடந்து, விற்களின் நாணொலிகளையும், உள்ளங்கை ஒலிகளையும் இடிகளாகக் கொண்டதும், கதாயுதங்களையும், வாள்களையும் மின்னல்கீற்றுகளாகக் கொண்டதும், துரோணரின் ஆயுதங்களால் ஆனதுமான அந்த மேகத்தில் இருந்து வெளியே வந்த பார்த்தனும் {அர்ஜுனனும்}, கிருஷ்ணனும், இருளில் இருந்து விடுபட்ட சூரியனையும், சந்திரனையும் போலத் தெரிந்தனர். வலிமைமிக்கவர்களும், புகழ்மிக்க வில்லாளிகளுமான அவ்விரு கிருஷ்ணர்களும் துரோணரின் ஆயுதங்களால் தடுக்கப்பட்ட பகுதிகளைக் கடந்ததும், மழைக்காலங்களில் நீர் நிறைந்திருப்பவையும், முதலைகள் நிறைந்தவையும், பெருங்கடலைத் தங்களில் ஆறாவதாகக் கொண்டவையுமான (சதத்ரூ, விபாசை, இரவி {இராவதீ}, சந்திரபாகை, விதஸ்தை ஆகிய) ஐந்து ஆறுகளைத் தங்கள் கரங்களின் உதவியால் கடந்து வந்த மனிதர்களைப் போல அனைத்து உயிர்களும் அவர்களைக் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} கருதின [4].

[4] வேறொரு பதிப்பில், "மழைக்காலத்தில் நிறைந்தவையும், பெரிய முதலைகளால் சூழப்பட்டவையும், சிந்து நதியை ஆறாவதாக உடையவைகளுமான சமுத்திரகாமிகளான ஐந்து நதிகளைக் கைகளால் நீந்தித் தாண்டினவர்கள் போலவும், பெரு மலைகளாலடர்ந்த கோரமான மகாநதியைத் தாண்டி கரைகண்டவர்களான வழிப்போக்கர்கள் போலவும் யுத்தத்தில் துரோணருடைய அஸ்திரபந்தத்தைத் தாண்டினார்கள்" என்றும் எல்லாப் பிராணிகளும் எண்ணின" என்று இருக்கிறது.

தங்களுக்கு அதிகத் தொலைவில் இல்லாத ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பி {அவன் மீது} கண்களைச் செலுத்திய அவ்விரு வீரர்களும், ருரு மானின் மீது பாயும் விருப்பத்தில் காத்திருந்த புலிகளைப் போலத் தெரிந்தனர். ஓ! ஏகாதிபதி, ஜெயத்ரதரன் ஏற்கனவே கொல்லப்பட்டவன் என்று உமது வீரர்கள் கருதுமளவிற்கு அவர்களது {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனுடைய} முகத்தின் நிறம் இருந்தது. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, சிவந்த கண்களைக் கொண்டவர்களும், ஒன்றாக இருந்தவர்களுமான கிருஷ்ணனும், பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} ஜெயத்ரதனைக் கண்டதும் மகிழ்ச்சியால் நிறைந்து மீண்டும் மீண்டும் முழங்கினர். உண்மையில், ஓ! ஏகாதிபதி, கையில் கடிவாளத்துடன் நின்ற சௌரி {கிருஷ்ணன்} மற்றும் வில்லுடன் இருந்த பார்த்தன் ஆகியோரின் காந்தி சூரியனையோ, நெருப்பையோ போன்றிருந்தது. துரோணரின் படைப்பிரிவில் இருந்து விடுபட்டு, சிந்துக்களின் ஆட்சியாளனைக் கண்டதால், சதைத்துண்டுகளைக் கண்ட இரு பருந்துகளைப் போல அவர்கள் இன்புற்றனர். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} வெகுதொலைவில் இல்லை என்பதைக் கண்ட அவர்கள், இறைச்சித் துண்டை நோக்கிப் பாயும் பருந்துகள் இரண்டைப் போல அவனை {ஜெயத்ரதனை} நோக்கிக் கோபத்துடன் விரைந்தனர்.

ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ரிஷிகேசனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் (துரோணரின் படைப்பிரிவை) மீறியதைக் கண்டவனும், துரோணரால் கவசம் பூட்டப்பட்டவனும், குதிரைகளைச் சீராக்குவதையும், அவற்றை வழிநடத்துவதையும் நன்கறிந்தவனும், உமது வீர மகனுமான மன்னன் துரியோதனன், சிந்துக்களின் பாதுகாப்புக்காகத் தனித்தேரில் விரைந்தான். ஓ! மன்னா, வலிமைமிக்க வில்லாளிகளான கிருஷ்ணனையும், பார்த்தனையும் {அர்ஜுனனையும்} தாண்டிச் சென்ற உமது மகன் {துரியோதனன்}, தாமரைக் கண்களைக் கொண்ட கேசவனை {கிருஷ்ணனை} நோக்கித் திரும்பினான். தனஞ்சயனை {அர்ஜுனனை} உமது மகன் {துரியோதனன்} தாண்டிச் சென்றதும், உமது துருப்புகளுக்கு மத்தியில் பல்வேறு இசைக்கருவிகளும் மகிழ்ச்சிகரமாக முழக்கப்பட்டன. இரு கிருஷ்ணர்களின் எதிரே நின்ற துரியோதனனைக் கண்டு சங்கொலிகளுடன் கலந்து சிங்க முழக்கங்கள் செய்யப்பட்டன. ஓ! மன்னா, சுடர்மிக்க நெருப்புகளுக்கு ஒப்பாக ஜெயத்ரதனின் பாதுகாவலர்களாக நின்றவர்களும், போரில் உமது மகனை {துரியோதனனைக்} கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர். ஓ! ஏகாதிபதி, துரியோதனன் தன்னைப் பின்தொடர்பவர்களுடன் சேர்ந்து தங்களைக் கடந்து {மீறிச்} சென்றதைக் கண்ட கிருஷ்ணன், அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்னான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English