Wednesday, July 13, 2016

துரியோதனனின் செருக்கு! - துரோண பர்வம் பகுதி – 101

The pride of Duryodhana! | Drona-Parva-Section-101 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 17)

பதிவின் சுருக்கம் : துரியோதனனின் பலத்தையும், அவன் பாண்டவர்களுக்குச் செய்த தீமைகளையும் அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் நினைவுப்படுத்தியது; துரியோதனனைக் கொல்ல அர்ஜுனனை ஏவிய கிருஷ்ணன்; அர்ஜுனனிடம் துரியோதனன் பேசியது...


வாசுதேவன் {கிருஷ்ணன் - அர்ஜுனனிடம்}, "ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நம்மைக் கடந்து செல்லும் இந்தச் சுயோதனனைப் {துரியோதனனைப்} பார். நான் இதை உயர்ந்த அற்புதமாகக் கருதுகிறேன். இவனுக்கு {துரியோதனனுக்கு} இணையான தேர்வீரன் எவனும் இல்லை. இவனது கணைகள் தொலைதூரம் செல்கின்றன. இவன் பெரும் வில்லாளியாக இருக்கிறான். இவன் ஆயுதங்களை அறிந்தவனென்பதால், போரில் இவனை வெல்வது மிகக் கடினமாகும். திருதராஷ்டிரரின் வலிமைமிக்க மகன் {துரியோதனன்} தாக்குவதில் கடுமை கொண்டவனாவான், மேலும் அனைத்து போர்முறைகளையும் அறிந்தவனும் ஆவான். பெரும் ஆடம்பரத்தில் வளர்ந்த இவன் தேர்வீரர்களில் முதன்மையானவர்களாலும் உயர்வாகக் கருதப்படுகிறான் [1].


[1] வேறொரு பதிப்பில் இப்பத்தி, "தனஞ்சய, சேனைகளைத் தாண்டிவருகிற இந்தத் துரியோதனனைப் பார். இவனை ஆபத்தை அடைந்தவனென்று நினைக்கிறேன். இவனுக்குச் சமானனான ரதிகன் கிடையான். இவன் தூரத்திலிருந்தே பாயும் ஸ்வபாவமுள்ளவன்; பெரிய வில்லையுடையவன்; அஸ்திரங்களில் தேர்ச்சிபெற்றவன்; யுத்தத்தில் கெட்ட மதங்கொண்டவன்; உறுதியான கைப்பிடியுள்ளவன்; விசித்திரமாக யுத்தம் செய்யும் தன்மையுள்ளவன்; த்ருதராஷ்டிர புத்திரனான இவன் மிக்கப் பலசாலி; மிக்கச் சுகத்துடன் வளர்ந்தவன்; சமர்த்தன்" என்று இருக்கிறது.

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நன்கு சாதித்தவனான இவன் {துரியோதனன்} எப்போதும் பாண்டவர்களை வெறுக்கிறான். ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இந்தக் காரணங்களுக்காகவே நீ இவனுடன் {துரியோதனனுடன்} இப்போது போரிட வேண்டும் என நான் நினைக்கிறேன். பகடையில் பணயம் போல, {போரில்} வெற்றியோ, தோல்வியோ அஃது இவனைச் சார்ந்தே இருக்கிறது. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ நீண்ட நாட்களாகக் கொண்டிருக்கும் கோபமெனும் நஞ்சை இவன் {துரியோதனன்} மீது கக்குவாயாக. பாண்டவர்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகள் அனைத்திற்கும் வேர் இந்த வலிமைமிக்கத் தேர்வீரனே {துரியோதனனே} ஆவான். இவன் இப்போது உன் கணைகள் அடையும் தொலைவிற்குள் இருக்கிறான். உன் வெற்றியைக் கவனிப்பாயாக.

அரசாட்சியை விரும்புபவனான மன்னன் துரியோதனன் உன்னுடன் போருக்கு ஏன் வந்தான்? இவன் உன் கணைகள் அடையும் தொலைவில் இப்போது வந்திருப்பது நற்பேறாலேயே. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, எதனால் இவனது உயிரை எடுக்கமுடியுமோ அதைச் செய்வாயாக. செழிப்பில் செருக்குக் கொண்டு உணர்வுகளை இழந்திருக்கும் இவன் {துரியோதனன்}, எந்தத் துயரையும் எப்போதும் உணர்ந்ததில்லை. ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனா}, இவன் {துரியோதன்} போரில் உன் ஆற்றலை அறியமாட்டான். உண்மையில் தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோருடன் கூடிய மூன்று உலகங்களும் போரில் உன்னை வெல்லத் துணியாது. எனவே, தனியனான துரியோதனனைக் குறித்து என்ன சொல்வது?

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன் தேரின் அருகே இவன் வந்திருப்பது நற்பேறாலேயே. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனனே} விருத்திரனைக் கொன்ற புரந்திரனை {இந்திரனைப்} போல இவனைக் {துரியோதனனைக்} கொல்வாயாக. ஓ! பாவமற்றவனே, இந்தத் துரியோதனனே உனக்குத் தீமை செய்ய முயன்றவன். மன்னர் யுதிஷ்டிரரை இவன் வஞ்சகத்தால் ஏமாற்றினான். ஓ! மரியாதைகளை அளிப்பவனே {அர்ஜுனா}, நீங்கள் அனைவரும் பாவமற்றவர்களாக இருப்பதால், பாவ ஆன்மா கொண்ட இந்த இளவரசன் {துரியோதனன்} எப்போதும் அவருக்கு {யுதிஷ்டிரருக்குப்} பல்வேறு தீச்செயல்களைச் செய்தான். ஓ! பார்த்தா, போரில் உன்னதத் தீர்மானத்தைக் கொண்ட நீ, பேராசையின் வடிவமானவனும், எப்போதும் கோபம் நிறைந்தவனும், எப்போதும் கொடூரமாக இருப்பவனுமான இந்தத் தீயவனை எந்த மனவுறுத்தலும் இல்லாமல் கொல்வாயாக. ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வஞ்சகத்தால் உங்கள் அரசை இழந்ததையும், காடுகளுக்கு நாடு கடத்தப்பட்டதையும், கிருஷ்ணைக்கு {கருப்பியான திரௌபதிக்கு} நேர்ந்த தீங்குகளையும் நினைவுகூர்ந்து உனது ஆற்றலை வெளிப்படுத்துவாயாக.

உன் நோக்கத்தைத் தடுக்க முயலும் இவன் {துரியோதனன்} உன் எதிரே நிற்பது நல்பேறாலேயே. இவன் போரில் உன்னுடன் போரிட வேண்டும் என்பதை இன்று இவன் அறிந்ததும் நற்பேறாலேயே. நீ விரும்பாமலே உன் நோக்கங்கள் அனைத்தும் கனிந்து மகுடம் சூடப்போவதும் நற்பேறாலேயே. எனவே, பார்த்தா {அர்ஜுனா}, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரில், அசுரன் ஜம்பனை {ஜம்பாசுரனைக்} கொன்ற இந்திரனைப் போல நீ, தன் குலத்தில் இழிந்தவனான இந்தத் திருதராஷ்டிர மகனை {துரியோதனனைக்} கொல்வாயாக. இவனை {துரியோதனனை} நீ கொன்றுவிட்டால், தலைவனில்லாத இப்படையைப் பிளந்துவிடலாம். தீய ஆன்மாக் கொண்ட இழிந்தவர்களின் இந்த வேரை அறுத்துவிடுவாயாக. இந்தப் பகைமையில் அவப்ரீதம் [2] இப்போது செய்யப்படட்டும்" என்றான் {கிருஷ்ணன்}.

[2] "Avabhritha என்பது வேள்வியைச் செய்யும் ஒரு மனிதன் அவ்வேள்வியின் நிறைவில் இறுதியாக நீராடுவதைக் {இறுதிக் குளியலைக்} குறிக்கும். கிருஷ்ணனின் கூற்றுப்படி, துரியோதனனைக் கொல்வது போரெனும் வேள்வியின் அவப்ரீதமாகும்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இப்படிச் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, "அப்படியே ஆகட்டும். இஃது என்னால் செய்யப்பட வேண்டும். பிற அனைத்தையும் அலட்சியம் செய்துவிட்டு, துரியோதனன் எங்கிருக்கிறானோ அங்கே செல்வாயாக. போரில் என் ஆற்றலை வெளிப்படுத்தி, தன் பக்கத்தில் ஒரு முள்ளும் இல்லாமல் இவ்வளவு நீண்ட காலத்திற்கு அரசாட்சியை அனுபவித்த அந்த இழிந்தவனின் {துரியோதனனின்} தலையை நான் அறுப்பேன். ஓ! கேசவா, தலைமயிரைப் பிடித்து இழுத்து வந்த வடிவில், அந்தத் தீங்குக்குத் தகாத திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்குப் பழி தீர்ப்பதில் நான் வெல்ல மாட்டேனா?" என்று மறுமொழி கூறினான் {அர்ஜுனன்}.

இப்படித் தங்களுக்குக்குள் பேசிக்கொண்ட இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களும்}, மன்னன் துரியோதனனைப் பிடிக்க விரும்பி, மகிழ்ச்சியால் நிறைந்து, தங்கள் சிறந்த வெண்குதிரைகளைத் தூண்டினர். உமது மகனை {துரியோதனனைப்} பொறுத்த வரை, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்துச் சூழ்நிலையிலும் அச்சத்திற்கு ஆட்படுவான் என்று கணிக்கப்பட்ட அவன் {துரியோதனன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பார்த்தன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரின் முன்னிலைக்கு வந்தும் எந்த அச்சமும் கொள்ளவில்லை. அர்ஜுனனையும், ரிஷிகேசனையும் {கிருஷ்ணனையும்} தடுப்பதற்காக அவன் {துரியோதனன்} எதிர்த்துச் சென்றதால், உமது தரப்பில் அங்கே இருந்த க்ஷத்திரியர்கள் அப்போது அவனை மெச்சினர். உண்மையில், போரில் மன்னனைக் கண்டதும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மொத்த குரு படையும் பேரொலியுடன் செய்த ஆரவாரம் அங்கே கேட்கப்பட்டது. பயங்கரமான ஆரவாரம் அங்கே எழுந்த போது, தன் எதிரியைக் கடுமையாக ஒடுக்கிய உமது மகன் {துரியோதனன்}, அவனது {அர்ஜுனனின்} முன்னேற்றத்தைத் தடுத்தான்.

வில்தரித்திருந்த உமது மகனால் தடுக்கப்பட்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, சினத்தால் நிறைந்தான். எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தத் துரியோதனனும் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பெரும் கோபம் கொண்டான். ஒருவர் மேலொருவர் கோபம் கொண்ட துரியோதனன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் கண்டவர்களும், கடும் வடிவங்களைக் கொண்டவர்களுமான க்ஷத்திரியர்கள் அனைவரும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்களையே பார்க்கத் தொடங்கினர். ஓ! ஐயா, பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும் சினத்தால் நிறைந்திருப்பதைக் கண்டவனும், போரை விரும்பியவனுமான உமது மகன் {துரியோதனன்}, புன்னகைத்தபடியே அவர்களைச் சவாலுக்கழைத்தான்.

அப்போது தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} மகிழ்ச்சியால் நிறைந்தான், மேலும் பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} உற்சாகமடைந்தான். பேரொலியுடன் முழங்கிய அவ்விருவரும் தங்கள் முதன்மையான சங்குகளை முழக்கினர். அவர்கள் இப்படி உற்சாகங்கொள்வதைக் கண்ட கௌரவர்கள் அனைவரும் உமது மகனின் உயிரில் {உமது மகன் துரியோதனன் உயிர்வாழ்வான் என்பதில்} நம்பிக்கையிழந்தனர். உண்மையில் கௌரவர்கள் அனைவரும், மேலும் எதிரிகளில் பலரும், துயரத்தை அடைந்து, (புனித) நெருப்பின் வாயில் ஏற்கனவே ஊற்றப்பட்ட ஆகுதியாகவே உமது மகனைக் கருதினர். கிருஷ்ணனும், அந்தப் பாண்டவனும் {அர்ஜுனனும்} இவ்வளவு உற்சாகங்கொள்வதைக் கண்ட உமது போர்வீரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டு, "மன்னன் மாண்டான்", "மன்னன் மாண்டான்" என்று உரக்கக் கதறினர். வீரர்களின் உரத்த கதறலைக் கேட்ட துரியோதனன், "உங்கள் அச்சங்கள் விலகட்டும். இவ்விரு கிருஷ்ணர்களையும் நான் மரணலோகத்திற்கு அனுப்புவேன்" என்றான்.

தன் வீரர்கள் அனைவரிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், வெற்றியை எதிர்பார்த்தவனுமான மன்னன் துரியோதனன், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ பாண்டுவால் பெறப்பட்டவனானால், நீயும் கேசவனும் {கிருஷ்ணனும்} கொண்ட தெய்வீக மற்றும் உலகம் சார்ந்த ஆயுதங்கள் அனைத்தையும் காலந்தாழ்த்தாமல் என் மீது செலுத்துவாயாக. நான் உன் ஆண்மையைக் காண விரும்புகிறேன். நாங்கள் காணாத உன் சாதனைகள் பலவற்றைக் குறித்து மக்கள் பேசுகிறார்கள். பெரும் வீரம் கொண்ட பலரால் பாராட்டப்பட்டவையும், நீ அடைந்தவையுமான அந்தச் சாதனைகளை என்னிடம் காட்டுவாயாக" என்றான் {துரியோதனன்}.


ஆங்கிலத்தில் | In English