Monday, July 18, 2016

பத்துக் கொடிமரங்கள்! - துரோண பர்வம் பகுதி – 104

The ten standards! | Drona-Parva-Section-104 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 20)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ணன், கிருபர், விருஷசேனன், சல்லியன், ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், சலன், துரியோதனன் ஆகிய பத்து வீரர்களின் கொடிமரங்கள் குறித்த வர்ணனை; அவர்களுக்கிடையில் மூண்ட போர்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, பெரும் அழகுடன் பிரகாசித்தவையும், (அந்தப் போரில்) பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் நமது வீரர்களுக்குச் சொந்தமானவையுமான பல்வேறு வகைகளிலான கொடிமரங்களைக் குறித்து எனக்கு விவரிப்பாயாக" என்றான்.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த உயர் ஆன்ம வீரர்களின் பல்வேறு வகைகளிலான கொடிமரங்களைக் குறித்துக் கேளும். அவற்றின் வடிவங்களையும், பெயர்களையும் நான் விவரிப்பதைக் கேளும். உண்மையில், ஓ! மன்னா, அந்த முதன்மையான தேர்வீரர்களின் தேர்களில் நெருப்புத் தழல்களைப் போலச் சுடர்விட்டு ஒளிர்ந்த பல்வேறு வகைகளிலான கொடிமரங்கள் காணப்பட்டன. தங்கத்தால் ஆனவையாகவோ, தங்கத்தால் அலங்கரிக்கப் பட்டவையாகவோ, தங்க இழைகளால் இழைக்கப்பட்டவையாகவோ இருந்தவையும், தங்க மலையை (மேருவைப்) போலத் தெரிந்தவையுமான பல்வேறு வகைகளிலான கொடிமங்கள் அங்கே உயர்ந்த அழகுடன் காணப்பட்டன.

வீரர்களுடைய அந்தக் கொடிமரங்கள் அனைத்திலும் சிறந்த கொடிகளும் இணைக்கப்பட்டிருந்தன. உண்மையில், சுற்றிலும் பல்வேறு வண்ணங்களிலான கொடிகளைக் கொண்ட கொடிமரங்களான அவை, மிகவும் அழகாகத் தெரிந்தன. மேலும், காற்றால் அசைந்த அந்தக் கொடிகள், விளையாட்டரங்கில் ஆடும் அழகிய பெண்களைப் போலத் தெரிந்தன. வானவில்லின் காந்தியைக் கொண்டவையும், அந்தத் தேர்வீரர்களுக்குச் சொந்தமானவையுமான கொடிகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தென்றலில் அசைந்தபடியே அவர்களின் தேர்களை அலங்கரித்தன.

சிங்கத்தைப் போலக் கடுமுகமுடைய குரங்கின் அடையாளத்தைக் தாங்கிய அர்ஜுனனின் கொடிமரமானது, அந்தப் போரில் அச்சத்தை ஊட்டுவதாக இருந்தது. ஓ! மன்னா, முதன்மையான குரங்கைத் தாங்கியதும், பல்வேறு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} அந்தக் கொடிமரம் குரு படையை அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

அதே போல, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிங்கவாலை உச்சியில் கொண்டதும், உதயச் சூரியனின் பிரகாசத்துடன் கூடியதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வானவில்லின் காந்தியைக் கொண்டதுமான துரோண மகனின் {அஸ்வத்தாமனின்} கொடிமரமானது, தென்றலில் மிதந்தபடியும், குரு வீரர்களில் முதன்மையானோரின் மகிழ்ச்சியைத் தூண்டியபடியும் உயரத்தில் இருப்பதை நாங்கள் கண்டோம்.

அதிரதன் மகனின் {கர்ணனின்} கொடிமரமானது, தங்கத்தாலான யானை வடத்தை அடையாளமாக {கொடியாகத்} தாங்கியிருந்தது. ஓ! மன்னா, அந்தப் போரில் அஃது {அந்தக் கொடியானது} ஆகாயம் முழுமையையும் நிறைப்பதாகத் தெரிந்தது. தங்கத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கொடியானது, போரில் கர்ணனின் கொடிமரத்தில் இணைக்கப்பட்டு, காற்றால் அசைக்கப்பட்டு, அவனது தேரில் நடனமாடுவதைப் போலத் தெரிந்தது.

பாண்டவர்களின் ஆசானும், தவத்துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்த பிராமணரும், கௌதமரின் மகனுமான கிருபர், சிறந்த காளைமாடு ஒன்றைத் தம் அடையாளமாகக் {கொடியாகக்} கொண்டிருந்தார். ஓ! மன்னா, மூன்று நகரங்களை அழித்தவன் [1] தன் காளையுடன் பிரகாசிப்பதைப் போலக் காளைமாட்டுடன் கூடிய அந்த உயர் ஆன்மா {கிருபர்} பிரகாசமாகத் தெரிந்தார்.

[1] "திரிபுரம் என்பது, அசுரத்தச்சன் மயனால் கட்டப்பட்ட மூன்று நகரங்களைக் குறிப்பதாகும். எனினும், அந்த நகரங்களை உடைமையாகக் கொண்ட அசுரனின் பெயரும் திரிபுரனே ஆகும். ஹரிவம்சத்தின் இறுதியில், அந்த மூன்று நகரங்களையும், அதில் வசித்தோர் அனைவருடன் சேர்த்து மகாதேவனே {சிவனே} அழித்தான்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

விருஷசேனன், {தன் தேரில் உள்ள கொடிமரத்தில்} தங்கத்தாலானதும், ரத்தினங்கள் மற்றும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு மயிலைக் கொண்டிருந்தான். அது {அந்த மயில்} எப்போதும் படையின் முகப்பை அலங்கரித்துக் கரைந்து கொண்டிருப்பதைப் போல அவனது {விருஷசேனனது} கொடிமரத்தில் இருந்தது. அந்த மயிலோடு கூடிய உயர் ஆன்ம விருஷசேனனின் தேரானது, ஓ! மன்னா, ஒப்பற்ற மயிலோடு கூடியதும், தங்கத்தாலான அழகிய கலப்பை முனையோடு {கொழுவோடு} கூடியதும், நெருப்புத் தழலைப் போலத் தெரிந்ததுமான (தேவர்களின் படைத்தலைவன்) ஸ்கந்தனின் {முருகனின்} தேரைப் போல ஒளிர்ந்தது. ஓ! ஐயா, அந்த உழுமுனையானது {கலப்பை முனையானது} அவனது தேரில் பிரகாசமாகத் தெரிந்தது.

மத்ரர்களின் ஆட்சியாளனான சல்லியன், தன் கொடிமர உச்சியில் அழகுடன் கூடியவளும், அனைத்து வித்துகளையும் உண்டாக்கவல்லவளுமான சோளத்தின் தலைமைத் தேவியின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம் [2].

[2] வேறொரு பதிப்பில், "சுப்ரமண்யரின் ரதம் பிரகாசிக்கின்ற மயிலால் விளங்குவது போல, மகாத்மாவான அந்த விருஷசேனனுடைய ரதமானது அந்த மயிலினால் விளங்கியது. மத்ரதேசத்தரசனான சல்லியனுடைய த்வஜத்தின் நுனியில் ஸ்வர்ணமயமான, நிகரில்லாத, மங்கலகரமான அக்னிஜ்வாலையைப் போன்ற உழுபடைச்சால் ஒன்றைக் கண்டோம். அந்தப் படைச்சாலானது அவனுடைய ரதத்தை அடைந்து விளங்கியது. அஃது எல்லா வித்துக்களும் முளைத்ததும், அழகியதுமான படைச்சல் போல விளங்கியது" என்று இருக்கிறது.

மன்மதநாததத்தரின் பதிப்பில், "அந்த மயிலோடு கூடிய அந்தச் சிறந்த வீரனின் {விருஷசேனனின்} தேரானது அழகாகத் தெரிந்தது. மயிலால் அலங்கரிக்கப்பட்டதால், ஓ மன்னா, அது ஸ்கந்தனின் தேரைப் போலத் தோன்றியது. மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, தன் கொடிமரத்தின் உச்சியில், ஒப்பற்றதும், அழகானதும், தங்கத்தாலானதும், நெருப்புத் தழலைப் போலத் தெரிந்ததுமான ஒரு கொழு {உழுமுனை, கலப்பை முனை} பொறிக்கப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம். அவனது தேரில் இருந்த அந்தக் கொழுவானது, அழகனைத்தையும் கொண்டவளும், அனைத்து வித்துக்களையும் உண்டாக்கவல்லவளுமான சோள தேவியின் அவதாரத்தைப் போல அழகாகத் தெரிந்தது" என்று இருக்கிறது. கங்குலியின் பதிப்புக்கும், மேற்கண்ட இரண்டு பதிப்பிற்கும் இடையில் சல்லியனின் தேர்க்கொடி வர்ணனையில் பெரும் வேறுபாடு இருக்கிறது.

சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} கொடிமரத்தின் உச்சியை ஒரு வெள்ளிப் பன்றி அலங்கரித்திருந்தது. தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அது, வெண்மையான ஸ்படிகத்தின் காந்தியைக் கொண்டிருந்தது. தன் கொடியில் அந்த வெள்ளி அடையாளத்தைக் கொண்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் ஈடுபட்டிருந்த சூரியனைப் போலப் பிரகாசித்தான் [3].

[3] "இங்கே lohita என்றில்லாமல் alohita என்பதே சரியான வாசிப்பாகும். இங்கே Arka என்பது ஸ்படிகமே அன்றிச் சூரியனல்ல. அது வெள்ளிப் பன்றி என்பதால் சூரியனாக இருக்க முடியாது என்பது இங்கே தெளிவு" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "சிந்துராஜனுடைய த்வஜத்தின் நுனியில் வெள்ளிமயமான பன்றியானது பொன்னணிகளால் அலங்கரிக்கப்பட்டு அங்காரகனுடைய {செவ்வாய் கிரகத்தின்} காந்தியைப் போன்ற காந்தியையுடையதாக நான்கு பக்கமும் பிரகாசித்தது. வெள்ளிமயமான அந்த த்வஜத்தினால் ஜயத்ரதன், முற்காலத்தில் தேவாசுர யுத்தத்தில் பூஷா என்பவன் விளங்கியதைப் போல விளங்கினான்" என்றிருக்கிறது.

மன்மதநாததத்தரின் பதிப்பில், "சிந்து மன்னனின் கொடிமரமானது வெள்ளிப் பன்றி பொறிக்கப்பட்டு ஒளிர்ந்தது; தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அஃது, உதயசூரியனின் காந்தியைக் கொண்டிருந்தது. தன் கொடிமரத்தில் உள்ள அந்தக் கொடியின் காரணமாக ஜெயத்ரதன், பழங்காலத்தில் நடந்த தேவாசுரப் போரின் பூஷனைப் போல அழகாகத் தோன்றினான்" என்று இருக்கிறது. இப்படி மூன்று பதிப்புகளும் ஒவ்வொரு வகையில் வேறுபடுகின்றன.

வேள்விகளுக்கு அர்ப்பணிப்புடன் இருந்த சோமதத்தன் மகனுடைய {பூரிஸ்ரவஸின்} கொடிமரமானது, வேள்வி மரத்தை {யூபத்தை} அடையாளமாகத் தாங்கியிருந்தது. அது சூரியனைப் போறோ, சந்திரனைப் போன்ற ஒளிர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஓ! மன்னா, தங்கத்தாலான சோமதத்த மகனின் வேள்விமரமானது, ராஜசூயம் என்றழைக்கப்படும் முதன்மையான வேள்வியின் போது எழுப்பப்படும் உயரமான மரத்தைப் {யூபத்தைப்} போன்றே பிரகாசமாகத் தெரிந்தது.

ஓ! ஏகாதிபதி, சலனின் கொடிமரமானது [4], தங்கத்தாலான மயில்களால் அனைத்துப் பக்கங்களிலும் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு பெரும் வெள்ளி யானையைத் தாங்கியிருந்தது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தக் கொடிமரமானது, தேவமன்னனின் {இந்திரனின்} படையை அலங்கரிக்கும் பெரிய வெள்ளை யானையை {ஐராவதத்தைப்} போல உமது துருப்புகளை அலங்கரித்தது.

[4] கங்குலியின் பதிப்பில் சல்லியனின் கொடிமரம் என இரண்டாவது முறையாகக் இங்கே குறிப்பிடப்படுகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இது சல்லியன் என்றே குறிப்பிடப்படுகிறது. வேறொரு பதிப்பில், "வெள்ளிமயமான சலனுடைய பெரிய யானைக் கொடியானது பக்கங்களில் ஸ்வர்ணத்தினால் சித்தரிக்கப்பட்ட அங்கங்களுள்ள மயில்களால் விளங்கியது" என்று இருக்கிறது. எனவே இது சலனாகவே இருக்கக்கூடும் என்ற ஐயத்தில் மேலே சலன் என்றே குறிப்பிட்டிருக்கிறேன்.

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த மன்னன் துரியோதனனின் கொடிமரத்தில், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று இருந்தது. அவ்வீரனின் {துரியோதனனின்} சிறந்த தேரில் ஓ! மன்னா, ஒரு நூறு மணிகளின் கிண்கிணி ஒலியுடன் கூடிய அந்தக் கொடிமரம் இருந்தது. ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி, குருக்களில் காளையான உமது மகன் {துரியோதனன்}, உயரமான அந்தக் கொடிமரத்துடன் போரில் பிரகாசமாகத் தெரிந்தான். உமது படைப்பிரிவுகளில் இந்த ஒன்பது கொடிமரங்களே [5] உயர நின்றன. அங்கே தெரிந்த பத்தாவது கொடிமரமானது, பெரும் குரங்கால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் கொடிமரமே ஆகும். அந்தக் கொடிமரத்தைக் கொண்ட அர்ஜுனன், (தன் சிகரத்தில்) சுடர்மிக்க நெருப்பைக் கொண்ட இமயத்தைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.

[5] அஸ்வத்தாமன், கர்ணன், கிருபர், விருஷசேனன், சல்லியன், ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், சலன், துரியோதனன் ஆகியோரின் கொடிமரங்களே இவை.

பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவர்களான வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், அர்ஜுனனைத் தடுப்பதற்காகத் தங்கள் அழகிய, பிரகாசமான, பெரிய விற்களை எடுத்துக் கொண்டனர். அதேபோல, ஓ! மன்னா, தெய்வீக சாதனைகளைச் செய்தவனான பார்த்தனும் {அர்ஜுனன்}, உமது தீய கொள்கையின் விளைவால் எதிரிகளை அழிக்கும் வில்லான தன் காண்டீவத்தை எடுத்துக் கொண்டான். உமது குற்றத்தின் காரணமாக, ஓ! மன்னா, அரசவீரர்கள் பலர் அந்தப் போரில் கொல்லப்பட்டனர். (உமது மகனின்) அழைப்பால் பல்வேறு பகுதிகளில் இருந்து மனிதர்களின் ஆட்சியாளர்கள் வந்திருந்தனர். அவர்களோடு சேர்த்து பல குதிரைகளும், பல யானைகளும் அழிந்தன.

(ஒரு புறத்தில்) துரியோதனனின் தலைமையிலான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களும், மறுபுறத்தில் அந்தப் பாண்டவர்களில் காளையும் {அர்ஜுனனும்} உரக்க முழங்கியபடி மோதலைத் தொடங்கினர். ஒன்றாகச் சேர்ந்திருந்த அந்த வீரர்கள் அனைவருடன், அச்சமற்ற வகையில் தனியாக மோதியவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான அந்தக் குந்தி மகனால் அங்கே அடையப்பட்ட சாதனை மிக அற்புதமானதாக இருந்தது. சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வதற்காக, மனிதர்களில் புலிகளான அவர்கள் அனைவரையும் வீழ்த்த விரும்பியவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அவ்வீரன் {அர்ஜுனன்}, தன் வில்லான காண்டீவத்தை வளைத்த போது பிரகாசமாகத் தெரிந்தான்.

ஆயிரக்கணக்கில் கணைகளை ஏவியவனும், எதிரிகளை எரிப்பவனும், மனிதர்களில் புலியுமான அந்த அர்ஜுனன், (தன் கணைமாரியின் மூலம்) அந்த வீரர்கள் அனைவரையும் மறையச் செய்தான். மனிதர்களில் புலிகளான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களும் தங்கள் பங்குக்கு, அனைத்துப் பக்கங்களில் இருந்து ஏவப்பட்ட தங்கள் கணைகளின் மேகங்களால் பார்த்தனை {அர்ஜுனனை} மறையச் செய்தனர். குருகுலத்துக் காளையான அர்ஜுனன், மனிதர்களில் சிங்கங்களான அவர்களின் கணைகளால் மறைக்கப்பட்டதைக் கண்டு, உமது துருப்புகளால் ஆரவாரப் பேரொலி எழுப்பப்பட்டது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English