Tuesday, July 19, 2016

பின்வாங்கிய யுதிஷ்டிரன்! - துரோண பர்வம் பகுதி – 105

Yudhishthira retreated! | Drona-Parva-Section-105 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 21)

பதிவின் சுருக்கம் : துரோணரை எதிர்த்த பாஞ்சாலர்கள்; வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்போர்கள்; யுதிஷ்டிரனுக்கும் துரோணருக்கும் இடையில் ஏற்பட்ட போர்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்ற துரோணர்; களத்தைவிட்டுப் பின்வாங்கிய யுதிஷ்டிரன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைத்}, தன் பார்வை படும் தொலைவில் அர்ஜுனன் அடைந்த பிறகு, குருக்களுடன் மோதிய பாஞ்சாலர்கள், பரத்வாஜர் மகனை {துரோணரைத்} தாக்கினார்களா?" என்று கேட்டான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த நாளின் பிற்பகல் வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போரில் {அந்தப் போர் எனும் சூதாட்டத்தில்}, (ஒவ்வொருவரும் போரிட்டு வெல்வதற்கோ, தோற்பதற்கோ ஏற்ற வகையில்) துரோணரே பந்தயப் பொருளானார். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்கள் உற்சாகத்துடன் உரக்க முழங்கியபடியே அடர்த்தியான கணை மழைகளை ஏவினர். உண்மையில், பாஞ்சாலர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் நடந்த அந்த மோதலானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பானதாகவும், கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், மிக அற்புதமானதாகவும் இருந்தது. பாண்டவர்களுடன் கூடிய பாஞ்சாலர்கள் அனைவரும் துரோணரின் வியூகத்தைப் பிளக்க விரும்பி, அவரது தேரை அடைந்து, வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றைப் பயன்படுத்தினர். தேர்வீரர்கள், தங்கள் தேர்களில் நின்றபடியே, தங்களுக்கு அடியில் இருந்த பூமியை நடுங்கச் செய்து, கணை மழையைப் பொழிந்து, துரோணரின் தேரை நோக்கிப் பெரும் வேகத்துடன் விரைந்தனர்.


கைகேயர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான பிருஹத்க்ஷத்ரன், இடிக்கு ஒப்பான பலத்தைக் கொண்ட கூரிய கணைகளை இடையறாமல் இறைத்தபடியே துரோணரை நோக்கிச் சென்றான். பெரும் புகழைக் கொண்ட க்ஷேமதூர்த்தி [1], ஆயிரக்கணக்கான கூரிய கணைகளை ஏவியபடியே பிருஹத்க்ஷத்ரனை எதிர்த்து வேகமாக விரைந்தான். இதைக் கண்டவனும், பெரும் வலிமை கொண்டவனும், சேதிக்களில் காளையுமான திருஷ்டகேது, அசுரன் சம்பரனை எதிர்த்துச் செல்லும் மகேந்திரனைப் போல க்ஷேமதூர்த்தியை எதிர்த்து விரைந்தான். வாயை அகல விரித்த யமனைப் போல, பெரும் மூர்க்கத்துடன் விரையும் அவனை {திருஷ்டகேதுவைக்} கண்ட வலிமைமிக்க வில்லாளியான வீரதன்வான் [2] பெரும் வேகத்துடன் அவனை {திருஷ்டகேதுவை} எதிர்த்துச் சென்றான்.

[1] இங்கே குறிப்பிடப்படும் க்ஷேமதூர்த்தி, கௌரவப்படையைச் சேர்ந்த ஒரு வீரனாவான். இவன் துரோண பர்வம் பகுதி 106ல் பிருஹத்க்ஷத்ரனால் கொல்லப்படுகிறான். இவனைத் தவிர்த்து இன்னும் இரண்டு க்ஷேமதூர்த்திகள் இருக்கின்றனர். ஒருவன் குளூட்ட நாட்டை ஆண்ட மன்னன் ஆவான். குளூ என்று அழைக்கப்படும் அந்தப் பள்ளத்தாக்கு {குளூட்ட நாடு} இன்றைய இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கிறது. கௌரவர் தரப்பில் நின்று போரிட்ட இம்மன்னன் குரோதவாசன் என்றழைக்கப்பட்ட அசுரனின் உயிர்ப்பகுதியாகக் கருதப்பட்டான். இவன் கர்ண பர்வம் பகுதி 12ல் பீமசேனனால் கொல்லப்படுகிறான். மற்றொருவன் துரோண பர்வம் பகுதி 23ல் காணப்படுபவன் ஆவான். பிருஹந்தன் என்பவன் இவனுடைய சகோதரனாகச் சொல்லப்படுகிறான். சல்லிய பர்வம் பகுதி 21லும் சாத்யகியுடன் இவன் போரிடுகிறான். எனவே மஹாபாரதப் போரில் மூன்று க்ஷேமதூர்த்திகள் இருந்திருக்க வேண்டும்.

[2] வீரதன்வான் திரிகர்த்த நாட்டைச் சேர்ந்த ஒரு வீரனாவன். இவன் கௌரவத் தரப்பில் இருந்து போரிட்டவனாவான். துரோண பர்வம் பகுதி 106ல் இவன் திருஷ்டகேதுவால் கொல்லப்படுகிறான்.

வெற்றியில் உள்ள விருப்பத்தால், தன் படைப்பிரிவின் தலைமையில் நின்ற மன்னன் யுதிஷ்டிரன், வீரத் துரோணரால் தடுக்கப்பட்டான். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்ட உமது மகன் விகர்ணன், போரில் சாதித்தவனும், பெரும் ஆற்றலைக் கொண்ட வீரனுமான நகுலனை எதிர்த்து விரைந்தான். எதிரிகளை எரிப்பவனான துர்முகன், முன்னேறி வரும் சகாதேவனை வேகமாகச் செல்லும் பல்லாயிரம் கணைகளால் மறைத்தான். வீர வியாக்ரதத்தன் [3], மனிதர்களில் புலியான சாத்யகியைத் தன் கூர்முனைக் கணைகளால் மீண்டும் மீண்டும் நடுங்கச் செய்தான். கோபத்துடன் கூடிய சோமதத்தன் மகன் {சலன்} [4], மனிதர்களில் புலிகளும், பெரும் தேர்வீரர்களுமான திரௌபதியின் மகன்களை (ஐவரை) வலிமைமிக்கக் கணைகளை ஏவி தடுத்தான். வலிமைமிக்கத் தேர்வீரனும், பயங்கர முகத் தோற்றம் கொண்டவனுமான ரிஷ்யசிருங்கன் மகன் {ஆர்ஸ்யசிருங்கியின் மகனான} (ராட்சசன் அலம்புசன்), கோபத்தால் நிறைந்து முன்னேறிவரும் பீமசேனனைத் தடுத்தான். மனிதனுக்கும், ராட்சசனுக்கும் இடையில் நடைபெற்ற அந்த மோதலானது, பழங்காலத்தில் ராமனுக்கும், ராவணனுக்கு இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது.

[3] கங்குலியின் இந்தப் பகுதியில் {துரோண பர்வம் 105ல்} Vyughradatta என்றும், அடுத்த பகுதியில் {துரோண பர்வம் 106ல்} Vyaghradatta என்றும் மன்மதநாததத்தரின் பதிப்பில் Vyaghradanta என்றும் அழைக்கப்படும் இவன், வேறொரு பதிப்பில், "வியாக்ரதத்தன்" என்று அழைக்கப்படுகிறான். இவன் மகத நாட்டு இளவரசனாவான். கௌரவத் தரப்பில் இருந்து போரிட்ட இவன், துரோண பர்வம் பகுதி 106ல் சாத்யகியால் கொல்லப்படுகிறான். வியாக்ரதத்தன் என்ற பெயரில் பாண்டவத் தரப்பில் நின்று போரிட்ட மற்றொரு மன்னனும் உண்டு. பாஞ்சால இளவரசனான அவன் துரோண பர்வம் பகுதி 16ல் துரோணரால் கொல்லப்பட்டான்.

[4] பூரிஸ்ரவஸ் அல்ல; இவன் சலன். சோமதத்தனுக்குப் பூரிஸ்ரவசும், சலனும் மகன்களாவர்.

அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாரதர்களின் தலைவனான யுதிஷ்டிரன், தொண்ணூறு நேரான கணைகளால் துரோணரின் முக்கிய அங்கங்கள் அனைத்திலும் தாக்கினான். குந்தியின் புகழ்பெற்ற மகனால் {யுதிஷ்டிரனால்} சினமூட்டப்பட்ட துரோணர், ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, பதிலுக்கு, இருபத்தைந்து கணைகளால் அவனது நடுமார்பைத் தாக்கினார். துரோணர், அனைத்து வில்லாளிகளும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனது {யுதிஷ்டிரனின்} குதிரைகள், தேரோட்டி, கொடிமரம் ஆகியவற்றை இருபது கணைகளால் மீண்டும் தாக்கினார்.

பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தியவனும், அற ஆன்மா கொண்டவனுமான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, துரோணரால் ஏவப்பட்ட கணைமாரியைத் தன் கணைமாரியால் கலங்கடித்தான். அப்போது பெரும் வில்லாளியான துரோணர், சினத்தால் நிறைந்து, உயர் ஆன்மா கொண்டவனும் நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனின் வில்லை வெட்டினார். பிறகு அந்தப் பெரும் வில்லாளி (பரத்வாஜரின் மகன் {துரோணர்}), வில்லற்ற யுதிஷ்டிரனை பல்லாயிரம் கணைகளால் விரைவாக மறைத்தார். பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைகளால் மன்னன் {யுதிஷ்டிரன்} மறைக்கப்பட்டதைக் கண்ட அனைவரும், யுதிஷ்டிரன் இறந்தான் என்று நினைத்தனர், சிலரோ துரோணருக்கு முன்னிலையில் மன்னன் {யுதிஷ்டிரன்} தப்பிவிட்டான் என்று நினைத்தனர். ஓ! மன்னா, பலர், "ஐயோ, அந்த உயர் ஆன்ம பிராமணரால் {துரோணரால்} மன்னன் {யுதிஷ்டிரன்} கொல்லப்பட்டான்" என்று கதறினர்.

அப்போது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பெரும் துயரத்தில் வீழ்ந்து, அந்தப் போரில் பரத்வாஜர் மகனால் {துரோணரால்} வெட்டப்பட அந்த வில்லை எறிந்துவிட்டு, சிறந்ததும், பிரகாசமானதும், கடினமானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான். மேலும் அந்த வீரன் {யுதிஷ்டிரன்}, ஆயிரக்கணக்கில் துரோணரால் ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் அம்மோதலில் அறுத்தான். இவையாவும் அற்புதமாகத் தெரிந்தன. அந்தக் கணைகளை வெட்டிய யுதிஷ்டிரன், ஓ! மன்னா, கோபத்தால் கண்கள் சிவந்து, அந்தப் போரில் மலையையே பிளக்கவல்ல ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான். தங்கப்பிடி கொண்டதும், அச்சந்தரும் தோற்றத்தைக் கொண்டதும், தன்னுடன் எட்டு மணிகள் இணைக்கப்பட்டதும், மிகப் பயங்கரமானதுமான அஃதை {அந்த ஈட்டியை} யுதிஷ்டிரன் எடுத்துக் கொண்டு உரக்க முழங்கினான். ஓ! பாரதரே, அந்த முழக்கத்தால், அந்தப் பாண்டுவின் மகன் அனைத்து உயிரினங்களையும் அச்சமடையச் செய்தான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் உயர்த்தப்பட்ட அந்த ஈட்டியைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும், ஒரே மனத்துடன், "துரோணருக்கு நன்மை விளையட்டும்" என்றன.

மன்னனின் கரங்களில் இருந்து வீசப்பட்ட அந்தக் கணையானது, சட்டையுரித்து விடுபடும் பாம்புக்கு ஒப்பாக, ஆகாயத்தையும், திசைகள் மற்றும் துணைத்திசைகள் அனைத்துக்கும் ஒளியூட்டியபடியே கடும் வாய்க் கொண்ட ஒரு பெண்பாம்பைப் போலத் துரோணரை நோக்கிச் சென்றது. தன்னை நோக்கி மூர்க்கமாக வரும் அதைக் கண்டவரும், ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணர், ஓ! மன்னா, பிரம்மம் என்றழைக்கப்பட்ட ஆயுதத்தை {பிரம்மாயுதத்தை} இருப்புக்கு அழைத்தார். பயங்கரத் தோற்றம் கொண்ட அந்த ஈட்டியைத் தூசியாகப் பொடி செய்த அவ்வாயுதம் {பிரம்மாஸ்திரம்}, பாண்டுவின் ஒப்பற்ற மகனுடைய {யுதிஷ்டிரனின்} தேரை நோக்கிச் சென்றது. அப்போது, ஓ! ஐயா, பெரும் விவேகம் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனும் {மற்றொரு} பிரம்மாயுதத்தை அழைத்துத் தன்னை நோக்கி வரும் அவ்வாயுதத்தை {துரோணரின் பிரம்மாயுதத்தைக்} கலங்கடித்தான்.

பிறகு அந்தப் போரில் துரோணரை ஐந்து நேரான கணைகளால் துளைத்த அவன் {யுதிஷ்டிரன்}, கத்தி முனை கொண்ட கணை ஒன்றால், துரோணரின் பெரும் வில்லையும் அறுத்தான். க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர், அந்த உடைந்த வில்லை எறிந்துவிட்டு, ஓ! ஐயா, தர்மனின் மகனை {யுதிஷ்டிரனை} நோக்கி கதாயுதம் ஒன்றைப் பெரும் சக்தியுடன் வீசினார். தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்து வந்த அந்தக் கதாயுதத்தைக் கண்ட யுதிஷ்டிரன், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து தானும் ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். பெரும் சக்தியுடன் வீசப்பட்ட அவ்விரு கதாயுதங்களும் நடுவானில் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு, தங்கள் மோதலால் தீப்பொறிகளை உண்டாக்கியபடி கீழே பூமியில் விழுந்தன.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அப்போது சீற்றத்தால் நிறைந்த துரோணர், கூர்முனை கொண்ட நான்கு சிறந்த கணைகளால் யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்றார். இந்திரன் மீது கொண்ட மதிப்பால் நடப்பட்ட மரத்திற்கு {இந்திரத்வஜத்திற்கு} இணையான மன்னனின் {யுதிஷ்டிரனின்} வில்லையும் மற்றொரு பல்லத்தால் அறுத்தார். ஓ! பாரதக் குலத்தின் காளையே, குதிரைகளற்ற அந்தத் தேரில் இருந்து கீழே வேகமாகக் குதித்த மன்னன் யுதிஷ்டிரன், கைகளை உயர்த்தியபடி ஆயுதமேதும் இல்லாமல் நின்றான். தேரற்றவனாகவும், குறிப்பாக ஆயுதங்களற்றவனாகவும் இருந்த அவனை {யுதிஷ்டிரனைக்} கண்ட துரோணர், ஓ! தலைவா, தமது எதிரிகளையும், மொத்த படையையும் மலைக்கச் செய்தார். தன் வாக்குறுதியில் உறுதியானவரும், பெரும் கரநளினம் கொண்டவருமான துரோணர், மானை நோக்கிச் செல்லும் சீற்றமிக்கச் சிங்கத்தைப் போலக் கூரிய கணைமாரியை ஏவியபடி மன்னனை நோக்கி விரைந்தார்.

எதிரிகளைக் கொல்பவரான துரோணர், அவனை {யுதிஷ்டிரனை} நோக்கி விரைவதைக் கண்டு, "ஓ" என்றும், "ஐயோ" என்றும் பாண்டவப் படையில் கூச்சல்கள் எழுந்தன. பலர், "பரத்வாஜர் மகனால் {துரோணரால்} மன்னன் {யுதிஷ்டிரன்} கொல்லப்பட்டான்" என்று கதறினர். ஓ! பாரதரே, இவ்வகையான உரத்த ஓலங்களே பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் கேட்கப்பட்டன. அதே வேளையில், குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், சகாதேவனின் தேரில் ஏறிக்கொண்டு, வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டுக் களத்தைவிட்டுப் பின்வாங்கினான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English