Tuesday, July 19, 2016

சாத்யகிக்கு அஞ்சிய வீரர்கள்! - துரோண பர்வம் பகுதி – 106

Warriors frightened by Satyaki! | Drona-Parva-Section-106 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 22)

பதிவின் சுருக்கம் : க்ஷேமதூர்த்தியைக் கொன்ற கைகேயப் பிருஹத்க்ஷத்ரன்; திரிகர்த்த வீரதன்வானைக் கொன்ற திருஷ்டகேது; துரியோதனனின் தம்பியான துர்முகனைத் தேரிழக்கச் செய்த சகாதேவன், திரிகர்த்த மன்னன் சுசர்மனின் மகனான நிரமித்ரனைக் கொன்றது; விகர்ணனை வென்ற நகுலன்; மகத வியாக்ரதத்தனைக் கொன்ற சாத்யகி, மகத வீரர்கள் அனைவரையும் கொன்றது; சாத்யகியுடன் போரிட அஞ்சிய வீரர்கள்; சாத்யகியை நோக்கி விரைந்த துரோணர்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, க்ஷேமதூர்த்தி [1], {தன்னை நோக்கி} முன்னேறி வருபவனும், பெரும் வீரம் கொண்டவனும், கைகேகயர்களின் இளவரசனுமான பிருஹத்க்ஷத்ரனைப் பல கணைகளால் மார்பில் துளைத்தான். அப்போது மன்னன் பிருஹத்க்ஷத்ரன், ஓ! ஏகாதிபதி, துரோணரின் படைப்பிரிவின் ஊடாகப் பிளந்து செல்ல விரும்பி, தொண்ணூறு நேரான கணைகளால் தன் எதிராளியை {க்ஷேமதூர்த்தியை} வேகமாகத் தாக்கினான். எனினும், சினத்தால் நிறைந்த க்ஷேமதூர்த்தி நன்கு கடினமாக்கப்பட்ட கூரிய பல்லம் ஒன்றால் கைகேயர்களின் இளவரசனுடைய {பிருஹத்க்ஷத்ரனின்} வில்லை அறுத்தான். அப்படி அவனது வில்லை வெட்டிய க்ஷேமதூர்த்தி, அம்மோதலில், நேரான கூரிய கணை ஒன்றால் வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அவனை {பிருஹத்க்ஷத்ரனை} வேகமாகத் துளைத்தான்.


[1] துரோண பர்வம் பகுதி 105ல் குறிப்பு [1]ல் க்ஷேமதூர்த்திப் பற்றிய அடிக்குறிப்பு இருக்கிறது.

அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, (தன் எதிரியைப் பார்த்துப்) புன்னகைத்த பிருஹத்க்ஷத்ரன், விரைவில், வலிமைமிக்கத் தேர்வீரனான க்ஷேமதூர்த்தியைக் குதிரைகளற்றவனாகவும், தேரோட்டியற்றவனாகவும், தேரற்றவனாகவும் ஆக்கினான். மேலும் அவன் {பிருஹத்க்ஷத்ரன்}, நன்கு கடினமாக்கப்பட்டதும், கூர்மையானதுமான மற்றொரு பல்லத்தைக் கொண்டு, காது குண்டலங்களால் சுடர்விட்ட தன் அரசெதிராளியின் {க்ஷேமதூர்த்தியின்} தலையை உடலில் இருந்து வெட்டினான். கேசத்தாலும், கிரீடத்தாலும் அருளப்பட்ட அந்தத் தலை திடீரென வெட்டப்பட்டுப் பூமியில் விழுந்த போது, வானத்தில் இருந்து விழுந்த நட்சத்திரத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது. வலிமைமிக்கத் தேர்வீரனான பிருஹத்க்ஷத்ரன் தன் எதிரியைக் கொன்று மகிழ்ச்சியால் நிறைந்து, பார்த்தர்களின் நிமித்தமாக உமது துருப்புகளின் மேல் பெரும் சக்தியுடன் பாய்ந்தான்.

பெரும் ஆற்றலைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான வீரதன்வான் [2] துரோணரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த திருஷ்டகேதுவைத் தடுத்தான். கணைகளையே தங்கள் நச்சுப் பற்களாகக் கொண்டு, ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட அந்த வீரர்கள் இருவரும், பெரும் சுறுசுறுப்புடன் பல்லாயிரம் கணைகளால், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். உண்மையில், மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், ஆழ்ந்த காடுகளுக்குள் இரு தலைமை யானைகள் சீற்றத்துடன் மோதிக்கொள்வதைப் போலத் தங்களுக்குள் போரிட்டனர். பெரும் சக்தியைக் கொண்ட அவர்கள் இருவரும், மலைக்குகையொன்றில் மோதிக் கொள்ளும் கோபம்கொண்ட இரு புலிகளைப் போல மற்றவனைக் கொல்ல விரும்பத்துடனே போரிட்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அம்மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. காணத்தகுந்த அது {அம்மோதல்} மிக அற்புதமானதாக இருந்தது. பெரும் எண்ணிக்கையிலான சித்தர்களும், சாரணர்களுமே கூட அற்புதத்திற்காகக் காத்திருக்கும் கண்களுடன் அதைக் கண்டனர்.

[2] துரோண பர்வம் பகுதி 105ல் குறிப்பு [2]ல் இவனைப் பற்றிய அடிக்குறிப்பு இருக்கிறது.

அப்போது வீரதன்வான், ஓ! பாரதரே, சினத்துடன் சிரித்தவாறே, பல்லங்களைக் கொண்டு திருஷ்டகேதுவின் வில்லை இரண்டாக அறுத்தான். சேதிகளின் ஆட்சியாளனான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {திருஷ்டகேது}, உடைந்த வில்லை எறிந்துவிட்டு, இரும்பாலானதும், தங்கப் பிடியைக் கொண்டதுமான கடும் ஈட்டி ஒன்றை எடுத்துக் கொண்டான். ஓ! பாரதரே, கடும் சக்தி கொண்ட அந்த ஈட்டியைத் தன் கரங்களால் வீரதன்வானின் தேரை நோக்கிச் சாய்த்த திருஷ்டகேது அதைக் கவனமாகவும், பெரும் பலத்துடனும் ஏவினான். வீரர்களைக் கொல்லும் அந்த ஈட்டியால் பெரும்பலத்துடன் தாக்கப்பட்டு, இதயம் துளைக்கப்பட்ட வீரதன்வான், வேகமாகத் தன் தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான். திரிகர்த்தர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான அவ்வீரன் {வீரதன்வான்} வீழ்ந்ததும், ஓ! தலைவா, பாண்டவர்களால் உமது படை பிளக்கப்பட்டது.

(உமது மகன்) துர்முகன், அறுபது கணைகளைச் சகாதேவன் மீது ஏவி, அந்தப் போரில் பாண்டுவின் மகனை {சகாதேவனைச்} சவாலுக்கழைப்பதற்காக உரக்க முழங்கினான். அப்போது, சினத்தால் நிறைந்த மாத்ரியின் மகன் {சகாதேவன்}, சிரித்துக் கொண்டே சகோதரனைத் தாக்கும் சகோதரனாகக் கூரிய கணைகள் பலவற்றால் துர்முகனைத் துளைத்தான். வலிமைமிக்கத் துர்முகன், மூர்க்கத்துடன் போரிடுவதைக் கண்ட சகாதேவன், ஓ! பாரதரே, ஒன்பது கணைகளால் மீண்டும் அவனைத் {துர்முகனைத்} தாக்கினான். பெரும்பலம் கொண்ட சகாதேவன், ஒரு பல்லத்தால் துர்முகனின் கொடிமரத்தை வெட்டி, மேலும் நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் தாக்கி வீழ்த்தினான். மேலும் நன்கு கடினமாக்கப்பட்ட, கூரிய மற்றொரு பல்லத்தைக் கொண்டு, காதுகுண்டலங்களால் ஒளிர்ந்து கொண்டிருந்த துர்முகனின் தேரோட்டியுடைய தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான். மேலும் ஒரு க்ஷுரப்ரத்தால் துர்முகனின் பெரிய வில்லை அறுத்த சகாதேவன், அந்தப் போரில் ஐந்து கணைகளால் துர்முகனையும் துளைத்தான்.

குதிரைகளற்ற அந்தத் தேரில் இருந்து அச்சமற்றவகையில் கீழே குதித்த துர்முகன், ஓ! பாரதரே, நிரமித்ரனின் தேரில் ஏறிக் கொண்டான். பிறகு சினத்தால் நிறைந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்தச் சகாதேவன், அந்தப் பெரும்போரில் தன் படைக்கு மத்தியில் இருந்த நிரமித்ரனை ஒரு பல்லத்தால் கொன்றான். அதன்பேரில், திரிகர்த்தர்களின் ஆட்சியாளனுடைய {சுசர்மனின்} மகனான நிரமித்ரன், உமது படையைப் பெரும் துயரத்தில் பீடிக்கச் செய்து தன் தேரில் இருந்து கீழே விழுந்தான். அவனைக் {நிரமித்ரனைக்} கொன்றதும், வலிமைமிக்க (ராட்சசன்) கரனைக் கொன்ற தசரதன் மகன் ராமனைப் போல வலிமைமிக்கச் சகாதேவன் பிரகாசமாகத் தெரிந்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த இளவரசன் நிரமித்ரன் கொல்லப்பட்டதைக் கண்டு, ஓ! ஏகாதிபதி, திர்கர்த்த வீரர்களுக்கு மத்தியில் "ஓ!" என்றும், "ஐயோ!" என்றும் உரத்த கதறல்கள் எழுந்தன.

நகுலன், ஓ! மன்னா, பெரிய கண்களைக் கொண்ட உமது மகன் விகர்ணனை ஒருக்கணத்தில் வென்றான். இது மிக அற்புதமானதாகத் தெரிந்தது.

வியாக்ரதத்தன் [3], தன் படைப்பிரிவுக்கு மத்தியில் இருந்த சாத்யகியின் குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரம் ஆகியவற்றைத் தன் நேரான கணைகளால் கண்ணுக்குப் புலப்படாதபடி மறைத்தான். சிநியின் துணிச்சல்மிக்கப் பேரன், பெரும் கரநளினத்துடன் அக்கணைகளைக் கலங்கடித்துத் தன் கணைகளின் மூலம் வியாக்ரதத்தனை, அவனது குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரத்தோடு சேர்த்து வீழ்த்தினான். ஓ!தலைவா {திருதராஷ்டிரா}, அந்த மகதர்களின் இளவரசனுடைய {வியாக்ரதத்தனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, தீவிரத்துடன் போராடிக் கொண்டிருந்த மகதர்கள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் யுயுதானனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தனர்.

[3] துரோண பர்வம் பகுதி 105ல் குறிப்பு [3]ல் இவனைப் பற்றிய அடிக்குறிப்பு இருக்கிறது.

அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், தங்கள் கணைகளையும், வேல்களையும் ஆயிரக்கணக்கில் இறைத்தபடியும், அந்தப் போரில் பிண்டிபாலங்கள், பராசங்கள், முத்கரங்கள், உலக்கைகள் ஆகியவற்றைக் கொண்டும், சாத்வத குலத்தின் வெல்லப்பட முடியாத அந்த வீரனுடன் {சாத்யகியுடன்} போரிட்டனர். பெரும் வலிமையைக் கொண்டவனும், மனிதர்களில் காளையும், வெல்லப்படமுடியாதவனுமான சாத்யகி, சிரித்துக் கொண்டே மிக எளிமையாக அவர்கள் அனைவரையும் வென்றான். மகதர்கள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டனர். எஞ்சிய மிகச் சிலரும் களத்தைவிட்டுத் தப்பி ஓடினர்.

ஓ! தலைவா, ஏற்கனவே யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டிருந்த உமது படையானது, இதைக் கண்டு பிளந்து ஓடியது. மது குலத்தில் முதன்மையானவனும், சிறந்த வீரனுமான அவன் {சாத்யகி}, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் உமது துருப்பினரைக் கொன்று, தன் வில்லை அசைத்தபடியே பிரகாசித்துக் கொண்டிருந்தான். ஓ! மன்னா, இப்படியே அந்தப் படை, சாத்வத குலத்தைச் சேர்ந்த அந்த உயர் ஆன்மாவால் {சாத்யகியால்} முறியடிக்கப்பட்டது. உண்மையில், நீண்ட கரங்களைக் கொண்ட அந்த வீரன் {சாத்யகியின்} மீது கொண்ட அச்சத்தால், போரிடுவதற்காக எவனும் அவனை அணுகவில்லை. அப்போது சினத்தால் நிறைந்த துரோணர், தன் கண்களை உருட்டியபடி, கலங்கடிக்கப்பட முடியாத சாதனைகளைக் கொண்ட சாத்யகியை நோக்கி மூர்க்கமாக விரைந்தார்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English