Yudhishthira said the greatness of Satyaki! | Drona-Parva-Section-109 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 25)
பதிவின் சுருக்கம் : சாத்யகிக்கும் துரோணருக்கும் இடையில் நடந்த போர்; சாத்யகியை மீட்க திருஷ்டத்யும்னனையும், தன் படை வீரர்களையும் ஏவிய யுதிஷ்டிரன்; துரோணரின் பராக்கிரமம்; பாஞ்சஜன்யத்தின் ஒலியைக் கேட்டும், காண்டீவத்தின் ஒலியைக் கேட்காததால் அர்ஜுனனின் நிலையறியாது கலக்கமுற்ற யுதிஷ்டிரன்; சாத்யகியின் பெருமைகளைப் பட்டியலிட்ட யுதிஷ்டிரன், அர்ஜுனனின் உதவிக்குச் செல்லுமாறு அவனைப் பணித்தது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, போரில் பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்து யுயுதானன் {சாத்யகி} எவ்வாறு விரைந்தான் என்பதை எனக்குச் சொல்வாயாக. அதைக் கேட்பதற்கு நான் பெரும் ஆவல் கொண்டிருக்கிறேன்" என்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பேரறிவாளரே {திருதராஷ்டிரரே}, துரோணருக்கும், யுயுதானன் {சாத்யகி} தலைமையிலான பாண்டவர்களுக்கும் இடையில் நடைபெற்றதும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதுமான போரைக் குறித்துக் கேட்பீராக.
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, யுயுதானனால் (குரு) படையினர் கொல்லப்படுவதைக் கண்ட துரோணர், சாத்யகி என்ற பெயராலும் அழைக்கப்படும் அந்த வீரனை நோக்கி விரைந்தார். சாத்யகி, இப்படித் தன்னை நோக்கி வரும் வலிமைமிக்க வீரரான பரத்வாஜர் மகனை {துரோணரை} இருபத்தைந்து க்ஷுத்ரகங்களால் {சிறு கணைகளால்} துளைத்தான். போரில் பெரும் ஆற்றலைக் கொண்ட துரோணரும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கூரானவையுமான ஐந்து கணைகளால் தீர்மானமான குறியோடு யுயுதானனை விரைவாகத் துளைத்தார். பெரும் வலிமை கொண்ட அந்தப் பெரும் வில்லாளி {துரோணர்}, சினத்தால் நிறைந்து, நேரான கணைகள் பலவற்றால் அந்தச் சாத்வத குல வீரனை {சாத்யகியை} மீண்டும் பீடித்தார்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படி அந்தப் போரில் பரத்வாஜர் மகனால் {துரோணரால்} தாக்கப்பட்ட சாத்யகி, {அடுத்ததாக} தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதவனாக இருந்தான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கணக்கற்ற கூர்முனை கணைகளை ஏவிய பரத்வாஜர் மகனைக் {துரோணரைக்} கண்டு யுயுதானனின் முகம் மகிழ்ச்சியற்றதாக ஆனது. ஓ! மன்னா, சாத்யகி அந்நிலையிலிருப்பதைக் கண்ட உமது மகன்களும், {உமது} துருப்பினரும், மிகவும் மகிழ்ச்சியடைந்து மீண்டும் மீண்டும் சிங்க முழக்கம் செய்தனர்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கர ஆரவாரத்தைக் கேட்டும், இப்படிப் பீடிக்கப்படும் மதுகுலத்து வீரனை {சாத்யகியைக்} கண்டும், மன்னன் யுதிஷ்டிரன், தன் படைவீரர்களிடம், "விருஷ்ணிகளுள் முதன்மையானவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், துணிச்சல் மிக்கவனுமான சாத்யகியைச் சூரியனை விழுங்கும் ராகுவைப் போல வீரத் துரோணர் விழுங்கப் போகிறார். சாத்யகி போரிட்டுக் கொண்டிருக்கும் இடத்திற்கு விரைந்து செல்வீராக" என்றான்.
பிறகு, மன்னன் யுதிஷ்டிரன், பாஞ்சால குலத்துத் திருஷ்டத்யும்னனிடம், "துரோணரை நோக்கி வேகமாக விரைவாயாக. ஓ! பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, ஏன் நிற்கிறாய்? துரோணரிடமிருந்து நமக்கு எழுந்திருக்கும் பெரும் ஆபத்தை நீ காணவில்லையா? துரோணர் பெரும் வில்லாளியாவார். கயிற்றில் கட்டப்பட்ட பறவையுடன் விளையாடும் ஒரு சிறுவனைப் போல அவர் யுயுதானனுடன் {சாத்யகியுடன்} போரில் விளையாடிக் கொண்டிருக்கிறார். பீமசேனன் தலைமையிலான நீங்கள் அனைவரும், பிறரின் துணையுடன் சாத்யகியின் தேர் எங்கிருக்கிறதோ அங்கே செல்வீராக. உனக்குப் பின்னால் நான் என் துருப்புகளுடன் பின்தொடர்ந்து வருவேன். யமனின் கோரப்பற்களுக்கிடையில் ஏற்கனவே இருக்கும் சாத்யகியை இன்று மீட்பாயாக" என்றான்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன மன்னன் யுதிஷ்டிரன், யுயுதானனுக்காகத் துரோணரை நோக்கி தன் அனைத்துத் துருப்புகளுடன் விரைந்தான். {திருதராஷ்டிரரே} நீர் அருளப்பட்டிருப்பீராக, துரோணருடன் மட்டுமே போரிட்ட பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகியோர் அனைவராலும் அங்கே உண்டாக்கப்பட்ட ஆரவாரமானது பெரிதாக இருந்தது. ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரை}, ஒன்றாகச் சேர்ந்து அணுகிய அவர்கள், கங்கங்கள் மற்றும் மயில்களில் இறகுகளைக் கொண்டவையும், கூர்முனையைக் கொண்டவையுமான கணைகளின் மழையால் {அவரை} மறைத்தனர்.
எனினும் துரோணர், ஓர் இல்லறத்தான், தங்கள் சுயவிருப்பத்துடன் வரும் விருந்தினரை ஆசனத்துடனும், நீருடனும் வரவேற்பதைப் போலவே புன்னகையுடன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே], (விருந்து கொடுக்கும் நல்லோரின்) வீடுகளில் விருந்தோம்பலுடன் வரவேற்கப்படும் விருந்தினரைப் போலவே, வில் தரித்திருக்கும் பரத்வாஜர்மகனின் {துரோணரின்} கணைகளால் அவ்வீரர்கள் நிறைவுற்றனர்.
ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ஆயிரம் கதிர்களுடன் கூடிய நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பான அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரை}, அவர்களில் எவராலும் பார்க்கக்கூட முடியவில்லை. உண்மையில், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான அந்தத் துரோணர், எரியும் கதிர்களால் (கீழே உள்ள அனைத்தையும்) எரிக்கும் சூரியனைப் போல அந்த வில்லாளிகள் அனைவரையும் தமது கணைகளின் மாரியால் எரித்தார். இப்படித் துரோணரால் தாக்கப்பட்ட பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், ஓ! மன்னா, புதைக் குழியில் மூழ்கும் யானைகளைப் போல எந்தப் பாதுகாவலரையும் காணவில்லை.
ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ஆயிரம் கதிர்களுடன் கூடிய நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பான அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரை}, அவர்களில் எவராலும் பார்க்கக்கூட முடியவில்லை. உண்மையில், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான அந்தத் துரோணர், எரியும் கதிர்களால் (கீழே உள்ள அனைத்தையும்) எரிக்கும் சூரியனைப் போல அந்த வில்லாளிகள் அனைவரையும் தமது கணைகளின் மாரியால் எரித்தார். இப்படித் துரோணரால் தாக்கப்பட்ட பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், ஓ! மன்னா, புதைக் குழியில் மூழ்கும் யானைகளைப் போல எந்தப் பாதுகாவலரையும் காணவில்லை.
துரோணரின் வலிமைமிக்கக் கணைகள் (ஆகாயத்தின் ஊடாகச்) செல்லும்போது, சுற்றிலும் உள்ள அனைத்தையும் வெடிக்கச் செய்யும் சூரியனின் கதிர்களைப் போலத் தெரிந்தன. அந்த மோதலில், பாஞ்சாலர்களில் மகாரதர்களாக அறியப்பட்டவர்களும், திருஷ்டத்யும்னனால் (அவ்வாறே) அங்கீகரிக்கப் பட்டவர்களுமான இருபத்தைந்து போர்வீரர்கள் துரோணரால் கொல்லப்பட்டனர். துணிச்சல்மிக்கத் துரோணர், அந்த முதன்மையான வீரர்களை அடுத்தடுத்துக் கொல்வதைப் பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்களின் துருப்புகளில் இருந்த மனிதர்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். கேகயர்களில் போர்வீரர்கள் நூறு பேரைக் கொன்று, அனைத்துப் பக்கங்களிலும் அவர்களை முறியடித்த துரோணர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வாயை அகலமாக விரித்திருக்கும் யமனைப் போல நின்றார். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரோணர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணகான பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், மத்ஸ்யர்கள், கேகயர்கள் ஆகியோரை வென்றார். துரோணரின் கணைகளின் மூலம் துளைக்கப்பட்ட அவர்களால் உண்டான ஆரவாரமானது, காட்டுத்தீயால் சூழப்பட்ட காட்டுவாசிகள் உண்டாக்கும் ஆரவாரத்துக்கு ஒப்பானதாக இருந்தது. தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோர், "பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் தங்கள் அனைத்துத் துருப்புகளுடனும் தப்பி ஓடுவதைப் பாருங்கள்" என்று சொன்னார்கள். உண்மையில், போரில் துரோணர் சோமகர்களைக் கொல்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவரை எதிர்த்துச் செல்ல எவனும் துணியவில்லை, அவரைத் {துரோணரைத்} துளைப்பதில் எவனும் வெல்லவில்லை.
பெரும் வீரர்களுக்கு அழிவைத் தரும் அந்தப் பயங்கர மோதல் தொடர்ந்த போது, பிருதையின் மகன் (யுதிஷ்டிரன்), பாஞ்சஜன்யத்தின் ஒலியைத் திடீரெனக் கேட்டான். வாசுதேவனால் {கிருஷ்ணனால்} முழக்கப்பட்ட அந்தச் சிறந்த சங்கு {பாஞ்சஜன்யம்} உரத்த வெடிப்பொலிகளை வெளியிட்டது. உண்மையில், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாப்போர் {அனைவரும்} போரிட்டுக் கொண்டிருந்த போது, அர்ஜுனனின் தேருக்கு முன்பாகத் தார்தராஷ்டிரர்கள் முழங்கிக் கொண்டிருந்த போது, காண்டீவத்தின் நாணொலி கேட்கப்படவில்லை. பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்} மீண்டும் மீண்டும் மயங்கி, "சங்குகளின் இளவரசன் (பாஞ்சஜன்யம்) இத்தகு வெடிப்பொலிகளை வெளியிடுவதாலும், மகிழ்ச்சியால் நிறைந்த கௌரவர்களும் இடையறாமல் இத்தகு கூச்சல்களில் ஈடுபடுவதாலும், பார்த்தன் {அர்ஜுனன்} முற்றிலும் நலமாக இல்லை என்பதில் ஐயமில்லை" என்று நினைத்தான்.
கவலையான இதயத்துடன் இப்படி நினைத்த குந்தியின் மகன் அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, கண்ணீரால் தடைப்பட்ட குரலுடன், சாத்வத குலத்தோனிடம் (சாத்யகியிடம்) இவ்வார்த்தைகளைச் சொன்னான். மன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் மீண்டும் மலைப்படைந்தாலும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் பார்வையை {அறிவை} இழக்கவில்லை. சிநியின் பேரனிடம் {சாத்யகியிடம்} பேசிய அந்தக் குலக்காளை (யுதிஷ்டிரன்), "ஓ! சிநியின் பேரனே {சைநேய, சாத்யகி}, துயரில் இருக்கும் நண்பர்களுக்கு எது நித்திய கடமையென்று {அறமென்று} பழங்காலத்தில் நல்லோர் (நண்பர்களுக்குக்) குறிப்பிட்டனரோ, அதற்கான காலம் இப்போது வந்திருக்கிறது. ஓ! சினிக்களில் காளையே {சிநிபுங்கவ}, ஓ! சாத்யகி, என்னுள் நினைத்துப் பார்க்கையில், என் போர்வீரர்கள் அனைவருக்கு மத்தியிலும், எங்களுக்கு நன்மையை விரும்புவதில் உன்னைவிடப் பெரியவன் எவனையும் நான் காணவில்லை.
எவன் எப்போதும் பாசத்துடன் இருக்கிறானோ, எவன் எப்போதும் கீழ்ப்படிகிறானோ, அவனே துயர காலங்களில் முக்கியமான காரியங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். பாண்டவர்களின் புகலிடமாக எப்போதும் இருக்கும் கேசவன் {கிருஷ்ணன்} எப்படியோ, ஓ! விருஷ்ணி குலத்தோனே {சாத்யகி}, ஆற்றலில் கேசவனைப் போல இருக்கும் நீயும் {எங்களுக்கு} அப்படியே. எனவே, {இப்போது} உன் மீது சுமை ஒன்றைக் கிடத்தப் போகிறேன். என் நோக்கத்தை வீணாக்குவது உனக்குத் தகாது. அர்ஜுனன், உனக்குச் சகோதரனும், நண்பனும், ஆசானுமாவான், ஓ! மனிதர்களில் காளையே {சாத்யகி}, இந்தப் போரில், துயரமான இந்தக் காலத்தில், அவனுக்கு {அர்ஜுனனுக்கு} {உன்} உதவியைக் கொடுப்பாயாக.
நீ உண்மைக்கு {சத்தியத்துக்கு} அர்ப்பணிப்புள்ளவன். நீ ஒரு வீரன். நண்பர்களின் அச்சங்களைப் போக்குபவனாகவும் நீ இருக்கிறாய். ஓ! வீரா, உன் செயல்களின் விளைவால், நீ பேச்சில் உண்மை நிறைந்தவனாக இவ்வுலகில் கொண்டாடப்படுகிறாய். ஓ! சிநியின் பேரனே {சாத்யகி}, போரில் நண்பர்களுக்காகப் போரிட்டுத் தன் உடலைத் துறப்பவன் எவனோ, அவன் முழு உலகையும் பிராமணர்களுக்குத் தானமளித்தவனுக்கு இணையானவன் ஆவான். முறையான சடங்குகளுடன் முழுப் பூமியையும் பிராமணர்களுக்குத் தானமாக அளித்துச் சொர்க்கத்திற்குச் சென்ற பல்வேறு மன்னர்களைக் குறித்து நாம் கேட்டிருக்கிறோம். ஓ! நல்லான்மா கொண்டோனே, ஓ! தலைவா {சாத்யகி}, நீ அர்ஜுனனுக்கு உதவி உன் உயிரை ஆபத்துக்குள்ளாக்குவதால், முழுப் பூமியையும் (பிராமணர்களுக்குத்) தானமளித்தவனோ, அதைவிட உயர்ந்ததைச் செய்தவனோ அடையும் கனியை {பலனை} அடைவாயாக எனக் கரங்கள் கூப்பி உன்னை இரந்து கேட்கிறேன்.
(நண்பர்களுக்காக) எப்போதும் போரில் தன் உயிரை விட விரும்புபவனான கிருஷ்ணன் ஒருவனே, நண்பர்களின் அச்சங்களை விலக்குபவனாக இருக்கிறான். {அவ்வகையில்}, ஓ! சாத்யகி, நீயே இரண்டாமவன். புகழில் கொண்ட விருப்பத்தால் போரில் வீரமாக முயலும் வீரனுக்கு, மற்றொரு வீரனாலேயே உதவ முடியும். சாதாரண மனிதனால் அப்படிச் செய்ய முடியாது. இக்காரியத்தில், உன்னைத்தவிர வேறு யார் அர்ஜுனனைக் காக்க முடியும்? ஒரு சந்தர்ப்பத்தில், உனது எண்ணிலடங்கா சாதனைகளை மெச்சிய அர்ஜுனன், மீண்டும் மீண்டும் அவற்றை உரைத்து எனக்குப் பெரும் இன்பத்தை அளித்தான். பெரும் கரநளினம் கொண்டவன் நீ என்றும், போர்க்கலையின் வகைகள் அனைத்தையும் அறிந்தவன் நீ என்றும், பெரும் சுறுசுறுப்பையும், பெரும் ஆற்றலையும் கொண்டவன் நீ என்றும் உன்னைக் குறித்து அவன் {அர்ஜுனன்} சொல்லியிருக்கிறான்.
அவன் {அர்ஜுனன்}, "சாத்யகி பெரும் ஞானம் கொண்டவனாவான், அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனாவான், ஒரு வீரனாவான், போரில் எப்போதும் அவன் மலைக்கமாட்டான். அகன்ற கழுத்தையும், அகன்ற மார்பையும், வலிமைமிக்கக் கரங்களையும், அகன்ற தாடைகளையும் {மோவாய்களையும்}, பெரும் பலத்தையும், பெரும் ஆற்றலையும் கொண்டவனான சாத்யகி ஓர் உயர் ஆன்ம மகாரதனாவான். அவன் {சாத்யகி} எனது சீடனும், நண்பனுமாவான்; நான் அவனது அன்புக்குரியவனாகவும், அவன் எனது அன்புக்குரியவனாகவும் இருக்கிறோம். என் கூட்டாளியாகும் அந்த யுயுதானன் {சாத்யகி}, கௌரவர்களை நொறுக்கப் போகிறான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, போர்க்களத்தில் நமக்குத் துணையாகக் கவசம்பூண்டவர்களான கேசவன் {கிருஷ்ணன்}, ராமர் {பரசுராமர்}, அநிருத்தன், வலிமைமிக்கத் தேர்வீரனான பிரத்யும்னன், கதன், சாரணன், சாம்பன் ஆகியோரும், விருஷ்ணிகள் அனைவரும் இருந்தாலும், நான், தனக்கு இணையில்லாதவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், மனிதர்களில் புலியுமான அந்தச் சாத்யகியையே நமக்குத் துணையாக நியமிப்பேன்" என்றான் {அர்ஜுனன்}.
துவைத வனத்தில், நீ இல்லாத நிலையில், உன்னுடைய தகுதிகளை நல்லோரின் சபையில் உண்மையாக விவரித்தபோது, இதையே தனஞ்சயன் {அர்ஜுனன்} என்னிடம் சொன்னான். ஓ! விருஷ்ணி குலத்தோனே {சாத்யகி}, தனஞ்சயன், நான் மற்றும் பீமன் ஆகியோரின் எதிர்பார்ப்பைப் பொய்ப்பிப்பது உனக்குத் தகாது. பல்வேறு தீர்த்தங்களுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, நான் துவாரகைக்குச் சென்றேன்; அங்கே அர்ஜுனனிடம் நீ கொண்டிருக்கும் மரியாதையைக் கண்டேன். ஓ! சிநியின் பேரனே, உபப்லாவ்யத்தில் நாங்கள் இருந்த போது, உன்னைப் போல எங்களிடம் அத்தகு பாசம் காட்டியவர் வேறு எவரையும் நான் காணவில்லை. நீ நற்குலத்தில் பிறந்தவனாகவும், எங்களிடம் மரியாதை கொண்டவனாகவும் இருக்கிறாய். எனவே, எவன் உனக்கு நண்பனாகவும், ஆசானாகவும் இருக்கிறானோ அவனுக்கு அன்பு காட்டுதற்கு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பெரும் வில்லாளியே, உனது நட்பாலும், ஆற்றலாலும், உயர்குடி பிறப்பாலும், உண்மையாலும் தகுந்த வழியில் செயல்படுவதே உனக்குத் தகும்.
ஓ! மது குலத்தோனே {சாத்யகியே}, துரோணரால் கவசம் அணிவிக்கப்பட்ட துரியோதனன், திடீரென அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறான். அதற்கு முன்னரே, கௌரவர்களில் பெரும் தேர்வீரர்கள் பிறரும் அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்றிருக்கின்றனர். அர்ஜுனனின் தேருக்கு எதிராக உரத்த ஆரவாரம் கேட்கப்படுகிறது. ஓ! சிநியின் பேரனே, ஓ! மரியாதைகளை அளிப்பவனே, விரைவாக அங்கே செல்வதே உனக்குத் தகும்.
துரோணர் உன்னை எதிர்த்து வந்தால், நன்கு ஆயுதம் தரித்திருக்கும் பீமசேனனும் நாங்களும், எங்கள் அனைத்துப் படைகளும் சேர்ந்து அவரைத் தடுப்போம். ஓ! சிநியின் பேரனே, போரில் பாரதத் துருப்புகள் ஓடுவதையும், அப்படி அவர்கள் ஓடுகையில், உரத்த ஓலங்களிடுவதையும் காண்பாயாக. அலைகள் நிறைந்த பெருங்கடலையே கலங்கடிக்கும் வலிமைமிக்கச் சூறாவளியைப் போல, ஓ! ஐயா, அந்தத் தார்தராஷ்டிரப் படை சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கலங்கடிக்கப்படுகிறது. எண்ணற்ற தேர்கள், மனிதர்கள் மற்றும் குதிரைகள் ஆகியவை வேகமாக நகர்வதால், (களமெங்கும்) தூசிப்படலம் படிப்படியாக எழுவதைப் பார். பகைவர்களின் கூட்டத்தைக் கொல்பவனான பல்குனன் {அர்ஜுனன்}, பரிகங்கள், வேல்கள் ஆகியவற்றைத் தரித்தவர்களும், தங்கள் படையணிகளில் பல குதிரைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான சிந்து-சௌவீரர்களால் சூழப்படுவதைப் பார். இந்தப் படையை வெல்லாமல், ஜெயத்ரதனை வெல்வது முடியாது. இந்த வீரர்கள், சிந்துக்களின் அட்சியாளனுக்காகத் {ஜெயத்ரதனுக்காகத்} தங்கள் உயிரை விடவும் தயாராக இருக்கின்றனர். கணைகள், ஈட்டிகள், நெடிய கொடிமரங்கள் ஆகியவற்றால் தடித்து, குதிரைகளும், யானைகளும் நிறைந்திருப்பதுமான வெல்லப்பட முடியாத தார்தராஷ்டிரப்படை அங்கே நிற்பதைப் பார்.
அவர்களது பேரிகைகளின் ஒலிகளையும், அவர்களது சங்குகளின் உரத்த முழக்கத்தையும், அவர்களால் முழங்கப்படும் பேராற்றல்மிக்கச் சிங்க முழக்கத்தையும், அவர்களது தேர்ச்சக்கர்களின் சடசடப்பொலிகளையும் கேட்பாயாக. அவர்களது யானைகளின் பிளிறல்களையும், அவர்களது காலாட்படை வீரர்களின் கனமான நடையொலிகளையும், பூமியையைக் குலுக்குவதாகத் தெரியுமளவுக்கு விரைந்து வரும் அவர்களது குதிரைப்படையின் நடையொலிகளையும் கேட்பாயாக. அவனுக்கு {அர்ஜுனனுக்கு} முன்னால் ஜெயத்ரதனின் படைப்பிரிவும், பின்னால் துரோணரின் படைப்பிரிவும் நிற்கின்றன. தேவர்களின் தலைவனையே பீடிக்க வல்ல அவனது {அர்ஜுனனது} எதிரிகளின் எண்ணிக்கை பெரிதாக இருக்கிறது. அடியற்ற ஆழம் கொண்ட அந்தப் படையில் மூழ்கும் அர்ஜுனன், தன் உயிரையே இழக்கக்கூடும். போரில் அவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டால், என்னைப் போன்ற ஒருவனால் எப்படி வாழ முடியும்? நீ உயிரோடிருக்கையில் இத்தகு பேரிடர் எனக்கு வரலாமா?
கருநீல நிறமும், வயதால் இளமையும், சுருள் முடியும் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மிக அழகானவனாவான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஆயுதங்களின் பயன்பாட்டில் சுறுசுறுப்பானவனும், போர்க்கலையின் ஒவ்வொரு வகையை அறிந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அர்ஜுனன், சூரிய உதயத்தின் போது அந்தப் பாரதப் படைக்குள் ஊடுருவினான். இதோ பகல் முடியப் போகிறது. ஓ! விருஷ்ணி குலத்தோனே, அவன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பதை நான் அறியவில்லை. பரந்த குருப் படை பெருங்கடலைப் போல இருக்கிறது. ஓ! ஐயா, பீபத்சு {அர்ஜுனன்} அதற்குள் தன்னந்தனியாகவே நுழைந்தான். அந்தப் படையானது, போரில் தேவர்களாலும் தடுக்கப்பட முடியாததாக இருக்கிறது. இன்றைய போரில், என் தீர்மானத்தைத் தெளிவாகக் கொள்வதில் நான் தவறுகிறேன் {போரில் எனக்குப் புத்தி செல்லவில்லை}. பெரும் வலிமை கொண்ட துரோணரும் எனது படைகளைப் பீடிக்கிறார். ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, அந்த மறுபிறப்பாளர் {பிராமணரான துரோணர்} எவ்வாறு போரில் உலவுகிறார் என்பதை நீயே பார்க்கிறாய்.
ஒன்றாகத் திரண்டு நிற்கும் பல பணிகளில், எதை முதலில் கவனிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் நீ நல்ல திறம்பெற்றவனாகவும் இருக்கிறாய். ஓ! மரியாதைகளை அளிப்பவனே {சாத்யகி}, அனைத்திலும் எது முக்கியமான பணியோ, அதைச் சுறுசுறுப்புடன் சாதிப்பதே உனக்குத் தகும். இந்தப் பணிகள் அனைத்திலும், நம் கவனத்தைக் கோரும் இதுவே (அர்ஜுனனுக்கு உதவும் பணியே) முதன்மையானது என நான் நினைகிறேன். போரில் அர்ஜுனனை மீட்பதையே முதலில் மேற்கொள்ள வேண்டும். தாசார்ஹ குலோத்தனை {கிருஷ்ணனைக்} குறித்து நான் வருந்தவில்லை. இந்த அண்டத்தின் தலைவனும், பாதுகாவலனும் அவனே {கிருஷ்ணனே}. ஓ! ஐயா, ஒன்றாகச் சேர்ந்திருக்கும் மூன்று உலகங்களையும், அந்த மனிதர்களில் புலியால் {கிருஷ்ணனால்} வெல்ல முடியும் என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். எனவே, பலவீனமான இந்தத் திருதராஷ்டிரப் படையைக் குறித்து நான் என்ன சொல்ல வேண்டும்?
எனினும், ஓ! விருஷ்ணி குலத்தோனே {வார்ஷ்ணேய, சாத்யகி}, அர்ஜுனன் இந்தப் போரில் கணக்கிலடங்காதவர்களால் பீடிக்கப்படுகிறான். அவன் உயிரை விடக்கூடும். அதற்காகவே நான் இவ்வளவு உற்சாகமற்றவனாக இருக்கிறேன். ஓ!, உன்னைப் போன்ற மனிதர்கள், அவனைப் போன்றவனைப் பின் தொடர வேண்டும் என்பதால், இத்தகு காலத்தில் என்னைப் போன்ற ஒருவனால் தூண்டப்பட்டு, அவன் {அர்ஜுனன்} சென்ற பாதையிலேயே செல்வாயாக. விருஷ்ணி குலத்தின் முதன்மையானோரில் இருவர் அதிரதர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள், ஓ! சாத்வதா {சாத்யகி}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பிரத்யும்னனும், இவ்வளவு புகழைப் பெற்ற நீயுமே ஆவீர்கள். ஆயுதங்களில் நாராயணனுக்கும், பலத்தில் சங்கர்ஷணருக்கும் {பலராமருக்கும்} நீ இணையானவனாவாய். துணிச்சலில், ஓ! மனிதர்களில் புலியே, நீ பீஷ்மரையும், துரோணரையும், போரில் சாதித்த அனைவரையும் விஞ்சி, தனஞ்சயனுக்கு இணையானவனாக இருக்கிறாய். ஓ! மனிதர்களில் புலியே, ஓ! மாதவா {சாத்யகி}, ஞானிகள், "சாத்யகியால் அடையப்பட முடியாதது எதுவுமில்லை" என்று உன்னைக் குறித்துப் பேசுகின்றனர்.
எனவே, ஓ! பெரும்பலம் கொண்டவனே {சாத்யகி}, அர்ஜுனன், நான் மற்றும் இங்கே இருக்கும் அனைவரது விருப்பங்களுக்குக் கீழ்ப்படிந்து, நான் உன்னிடம் சொன்னதைச் செய்வாயாக. ஓ !வலிய கரங்களைக் கொண்டவனே, அந்த விருப்பத்தை வீணாக்குவது உனக்குத் தகாது. உன் உயிரையே துச்சமாக மதித்து, போரில் ஒரு வீரனைப் போல நீ உலவுவாயாக. ஓ! சிநியின் பேரனே, தாசார்ஹ குலத்தின் கொழுந்துகள் போரில் உயிர்களைக் குறித்து எப்போதும் கவலைப் பட்டதில்லை. கோழைகள் மற்றும் இழிந்தவர்களின் நடைமுறைகளான போரைத் தவிர்ப்பது, அல்லது மண்மதில்களுக்குப் பின்னாலிருந்து போரிடுவது, அல்லது போரில் இருந்து ஓடுவது {புறங்காட்டுவது} ஆகியவற்றைத் தாசார்ஹர்கள் ஒருபோதும் செய்ததில்லை.
ஓ! சிநிக்களில் காளையே, நல்லான்மா {அற ஆன்மா} கொண்ட அர்ஜுனன் உனக்கு மூத்தவனாவான். வாசுதேவனோ {கிருஷ்ணனோ}, உனக்கும், புத்திசாலியான அர்ஜுனனுக்கும் மூத்தவனாவான். இவ்விரு காரணங்களில் என் கண்களைச் செலுத்தியே நான் உன்னிடம் இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன். நான் சொல்லும் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே, நான், உனக்கு மூத்தோருக்கெல்லாம் மூத்தவனாவேன். நான் உன்னிடம் எதைச் சொல்கிறேனோ, அர்ஜுனனாலும் அஃது அங்கீகரிக்கப்பட்டதே ஆகும். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். தனஞ்சயன் {அர்ஜுனன்} எந்த இடத்தில் இருக்கிறானோ அங்கே செல்வாயாக. ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே, இந்த என் வார்த்தைகளைக் கேட்டு, திருதராஷ்டிரரின் தீய மகனுடைய {துரியோதனனின்} இந்தப் படைக்குள் ஊடுருவுவாயாக. முறையாக இதனுள் ஊடுருவி, ஓ! சாத்வதா {சாத்யகி}, பெரும் தேர்வீரர்களுடன் மோதி, உனக்குத் தகுந்த அருஞ்செயல்களை வெளிப்படுத்துவாயாக" என்று {யுதிஷ்டிரன்} சொன்னான்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |
சாத்யகியின் பெருமையைச் சொன்ன யுதிஷ்டிரன்! - #துரோணபர்வம் பகுதி – 109 | #முழுமஹாபாரதம் https://t.co/AoVB5Q5RdQ via @arasaninfo— Arul Selva Perarasan (@arasaninfo) July 22, 2016