Saturday, July 23, 2016

சாத்யகி, யுதிஷ்டிரன் உரையாடல்! - துரோண பர்வம் பகுதி – 110

The conversation of Satyaki and Yudhishthira! | Drona-Parva-Section-110 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 26)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் பாதுகாப்புக்காகவே அர்ஜுனனால் தான் நியமிக்கப்பட்டிருப்பதாக யுதிஷ்டிரனிடம் சொன்ன சாத்யகி; யுதிஷ்டிரனின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் அர்ஜுனனை நோக்கிச் செல்லப்போவதில்லை என்ற சாத்யகி; யுதிஷ்டிரன் சொன்ன சமாதானம்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "முழுப் பாசத்தைக் கொண்டதும், ஏற்புடையதும், இனியவொலிகளால் நிரம்பியதும், மனத்திற்கு உகந்ததும், மகிழ்ச்சிகராமனதும், நியாயமானதுமான இவ்வார்தைகளை நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் சொன்னதும், ஓ! பாரதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மறுமொழியாக, சிநிக்களில் காளையான அந்தச் சாத்யகி, "ஓ! மங்கா மகிமை கொண்டவரே {யுதிஷ்டிரரே}, நீதி நிறைந்ததும் {நியாயமானதும்}, மகிழ்ச்சிகரமானதும், பல்குனரின் {அர்ஜுனரின்} புகழுக்கு ஏற்றதுமான நீர் சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் கேட்டேன். உண்மையில் இத்தகு நேரத்தில், ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, (உமக்கு) அர்ப்பணிப்புள்ள என்னைப் போன்ற ஒருவனைக் காண்கையில், பார்த்தருக்கு நீர் கட்டளையிடுவதைப் போலவே அவனுக்கும் கட்டளையிடுவதே உமக்குத் தகும். என்னைப் பொறுத்தவரை, தனஞ்சயருக்காக {அர்ஜுனருக்காக} என் உயிரையும் விட நான் தயாராக இருக்கிறேன். மேலும், நீர் கட்டளையிட்டால், இந்தப் போரில் எந்தக் காரியைத்தைத் தான் நான் செய்யமாட்டேன்? இந்தப் பலவீனமான (திருதராஷ்டிரப்) படையைக் குறித்து நான் என்ன சொல்வேன்? ஓ! மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உம்மால் தூண்டப்பட்டால், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மூன்று உலகங்களோடும் போரிட நான் தயாராக இருக்கிறேன்.


இன்று நான் சுயோதனனின் மொத்தப் படையுடனும் போரிட்டுப் போரில் அதை வெல்வேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். பாதுகாப்புடன் இருக்கும் தனஞ்சயரை {அர்ஜுனரை}, பாதுகாப்பாக அடையும் நான், ஓ! மன்னா, ஜெயத்ரதன் கொல்லப்பட்ட பிறகே உமது முன்னிலைக்குத் திரும்புவேன். எனினும், ஓ! மன்னா, வாசுதேவர் {கிருஷ்ணர்} மற்றும் புத்திசாலியான அர்ஜுனர் ஆகியோர் சொன்ன வார்த்தைகளைக் குறித்து நான் உமக்குச் சொல்ல வேண்டும். நமது போர்வீரர்கள் அனைவரின் மத்தியிலும், வாசுதேவர் {கிருஷ்ணர்} கேட்டுக் கொண்டிருக்கும்போது, அர்ஜுனர் என்னை உறுதியுடன் (உறுதிமிக்க இவ்வார்த்தைகளால்) மீண்டும் மீண்டும் வேண்டிக் கொண்டோர்.

{அர்ஜுனர்}, "ஓ! மாதவா {சாத்யகி}, இன்று நான் ஜெயத்ரதனைக் கொல்லும் வரை, போரில் மேன்மையான தீர்மானத்துடன் மன்னரை {யுதிஷ்டிரரைக்} கவனமாகப் பாதுகாப்பாயாக. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {சாத்யகி}, உன்னிடமோ, பெரும் தேர்வீரனான பிரத்யும்னனிடமோ ஏகாதிபதியை {யுதிஷ்டிரரின் பாதுகாப்பை} ஒப்படைத்தால், கவலையற்ற இதயத்துடன் ஜெயத்ரதனை நோக்கிச் செல்வேன். குருக்களில் முதன்மையானவராகக் கருதப்படும் போர்வீரரானத் துரோணர் எவ்வாறு போரிடுவார் என்பதை நீ அறிவாய். ஓ! தலைவா {சாத்யகி}, அனைவருக்கு முன்னிலையிலும் அவர் ஏற்ற உறுதிமொழியையும் நீ அறிவாய். அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, மன்னரை {யுதிஷ்டிரரைக்} கைப்பற்ற எப்போதும் ஆவலாக இருக்கிறார். போரில் அவர் {துரோணர்}, மன்னர் யுதிஷ்டிரரைப் பீடிக்கத் தகுந்தவராவார்.

மனிதர்களில் சிறந்தவரும், நீதிமானுமான மன்னர் யுதிஷ்டிரரின் பாதுகாப்பில் உன்னை நியமித்துவிட்டு, நான் இன்று ஜெயத்ரதனை அழிக்கச் செல்வேன். ஓ! மாதவா {சாத்யகி}, ஜெயத்ரதனைக் கொன்றுவிட்டு நான் விரைவில் திரும்புவேன். நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரைப் பலவந்தமாகக் கைப்பற்றுவதில் துரோணர் வெல்லாதவாறு நீ பார்த்துக் கொள்வாயாக. ஓ! மாதவா, பரத்வாஜர் மகனால் {துரோணரால்} யுதிஷ்டிரர் கைப்பற்றப்பட்டால், ஜெயத்ரதனைக் கொல்வதில் என்னால் வெல்ல முடியாது, என் துயரமும் அதிகமாகும். மனிதர்களில் சிறந்தவரும், பாண்டுவின் உண்மை நிறைந்த மகனுமான அவர் {யுதிஷ்டிரர்} கைப்பற்றப்பட்டால், நான் மீண்டும் காட்டுக்கே செல்வேன் என்பது தெளிவானதாகும் {நிச்சயமாகும்}. எனவே, சினத்தால் தூண்டப்பட்ட துரோணர், போரில் யுதிஷ்டிரரைப் பிடிப்பதில் வென்றுவிட்டால், ஜெயத்ரதனை நான் வென்றாலும், அஃது எந்தப் பலனையும் உண்டாக்காது என்பது வெளிப்படையானது. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மாதவா {சாத்யகி}, எனவே, எனக்கு ஏற்புடையதைச் செய்வதற்காகவும், எனது வெற்றி மற்றும் புகழுக்காவும், போரில் மன்னரை {யுதிஷ்டிரரைக்} காப்பாயாக" என்றார் {அர்ஜுனர்}.

எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பரத்வாஜர் மகன் {துரோணர்} மூலம் தொடரும் அச்சத்தின் விளைவாக, சவ்யசச்சின் {அர்ஜுனர்} உம்மை {பாதுகாப்பதை} என்னிடம் நம்பிக்கையின் பேரில் ஒப்படைத்தார். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, ருக்மினியின் மகனை (பிரத்யும்னனைத்) தவிரப் போரில் துரோணருக்குப் பொருத்தமான வேறு எவனும் இல்லை என்பதை நானே தினமும் பார்க்கிறேன். புத்திசாலியான பரத்வாஜரின் மகனுக்குப் போரில் நானும் பொருத்தமானவனாகவே கருதப்படுகிறேன். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, என் மதிப்பை நானே பொய்த்துக் கொள்வதோ, எனது ஆசான் (அர்ஜுனரின்) கட்டளைகளை அலட்சியம் செய்வதோ, உம்மை விட்டு அகல்வதோ கூடாது என்பது தெளிவாகிறது. ஊடுருவமுடியாத கவசம்பூண்டிருக்கும் ஆசான் (துரோணர்), தன் கரநளினத்தின் விளைவால் போரில் உம்மை அடைந்து, சிறு பறவையுடன் {விளையாடும்} சிறுவனைப் போல உம்முடன் விளையாடுவார்.

மகரக் கொடி தாங்கிய கிருஷ்ணரின் மகன் {பிரத்யும்னன்} இங்கே இருந்தால், அர்ஜுனரைப் போலவே அவன் உம்மைப் பாதுகாப்பான் என்பதால், அவனிடம் {உம்மை பாதுகாக்கும் பணியை} ஒப்படைத்திருக்க முடியும். {ஆனால் இப்போதோ}, நீரே உம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கும். நான் சென்றுவிட்டால், உம்மைப் பாதுகாப்பது யார்? நான் அர்ஜுனரிடம் செல்லும்போது, துரோணரை எதிர்த்துச் செல்லக்கூடியவர் யார்? ஓ! மன்னா,  அர்ஜுனனைக் குறித்த அச்சமேதும் இன்று உமதாக வேண்டாம். எந்தச் சுமை எவ்வளவு கனமானதாக இருந்தாலும் அவர் ஒருபோதும் {அர்ஜுனர்} உற்சாகமிழப்பதில்லை.

அவருக்கு {அர்ஜுனருக்கு} எதிரான போர்வீரர்களான சௌவீரகர்கள், சிந்தவப் பௌரவர்கள், வடக்கத்தியர், தெற்கத்தியர், கர்ணனின் தலைமையிலானோர் ஆகியோரின் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும் அர்ஜுனருக்குப் பதினாறில் ஒரு பங்குக்கும் அவர்கள் ஈடாகமாட்டார்கள். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், அனைத்து ராட்சச இனங்கள், கின்னரர்கள், பெரும்பாம்புகள், உண்மையில் அசைவன, அசையாதன ஆகிய அனைத்தையும் கொண்ட மொத்த உலகமும் அவருக்கு எதிராக ஒன்றாகத் திரண்டு எழுந்தாலும், போரில் அர்ஜுனருக்கு அவர்கள் ஈடாகமாட்டார்கள். ஓ! மன்னா, இஃதை அறிந்து கொண்டு தனஞ்சயர் நிமித்தமான உமது அச்சத்தை விலக்குவீராக. கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவர்களும், பெரும் வில்லாளிகளுமான வீரக் கிருஷ்ணர்கள் {வீர கருப்பர்கள்} இருவரும் எங்கிருக்கிறார்களோ, அங்கே அவர்களது நோக்கத்திற்குச் சிறு தடங்கலும் ஏற்பட முடியாது.

உமது தம்பியின் {அர்ஜுனரின்} தெய்வீக வலிமை, ஆயுதங்களில் சாதனை, வளம், போரில் கோபம், நன்றியுணர்வு மற்றும் கருணையை நினைத்துப் பாரும். ஓ! மன்னா, அர்ஜுனரிடம் செல்வதற்காக நான் இந்த இடத்தைவிட்டு அகன்றால், போரில் துரோணர் வெளிக்காட்டப் போகும் ஆயுதங்களின் அற்புத அறிவையும் நினைத்துப் பாரும். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஆசான் {துரோணர்} உம்மைக் கைப்பற்றுவதில் பேராவல் கொண்டிருக்கிறார். மேலும், ஓ! மன்னா, ஓ! பாரதரே, தன் உறுதிமொழிக்கு நன்மை செய்வதையும் ஆவலுடன் விரும்புகிறார். ஓ! மன்னா, உமது பாதுகாப்பில் கவனமாக இருப்பீராக. நான் சென்ற பிறகு உம்மைப் பாதுகாப்பவர் யார்? யாரிடம் நம்பிக்கை வைத்து, பிருதையின் மகனான பல்குனரை {குந்தியின் மகன் அர்ஜுனரை} நோக்கி நான் செல்வது? {அந்த நம்பிக்கைக்குரிய} அவர் யார்? ஓ! பெரும் மன்னா, ஓ! குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, இந்தப் பெரும்போரில் உம்மை எவரிடமாவது ஒப்படைக்காமல், நிச்சயம் நான் அர்ஜுனரிடம் செல்ல மாட்டேன் என்பதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! புத்திசாலி மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, ஓ! மன்னா, உமது நுண்ணறிவின் துணை கொண்டு, அனைத்துக் கண்ணோட்டங்களில் இருந்தும் சிந்தித்து, உயர்ந்த நன்மையைத் தரவல்லது எது என்பதை உறுதி செய்த பிறகு எனக்குக் கட்டளையிடுவீராக" என்றான் {சாத்யகி}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் {சாத்யகியிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மாதவா, நீ சொன்னது போலவே தான் இருக்கிறது. எனினும், ஓ! ஐயா, இவையனைத்தாலும் கூட, என் இதயம் அர்ஜுனன் நிமித்தமாக அமைதியை அடையவில்லை. என்னைப் பாதுகாத்துக் கொள்வதில் பெரும் முன்னெச்சரிக்கைகளை நான் எடுத்துக் கொள்வேன். என்னால் ஆணையிடப்படும் நீ தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கே சென்றானோ அங்கே செல்வாயாக. போரில், என் பாதுகாப்புடன், அர்ஜுனனை நோக்கி நீ செல்ல வேண்டிய அவசியத்தை {ஒப்பிட்டு} என் புத்தியால் ஆராய்ந்தால் பின்னதே எனக்கு விரும்பத்தக்கதாக இருக்கிறது. எனவே, தனஞ்சயன் எங்குச் சென்றானோ அங்கே செல்ல நீ தயாராவாயாக.

வலிமைமிக்கப் பீமன் என்னைப் பாதுகாப்பான். தன் உடன் பிறந்த தம்பிகளுடன் கூடிய பிருஷதன் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, வலிமைமிக்க மன்னர்கள் அனைவரும், திரௌபதியின் மகன்களும் என்னைப் பாதுகாப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஓ! ஐயா, கேகயச் சகோதரர்கள் ஐவர், ராட்சசன் கடோத்கசன், விராடன், துருபதன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, பெரும் பலத்தைக் கொண்ட திருஷ்டகேது, குந்திபோஜன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகிய இவர்கள் அனைவரும் என்னை மிகக் கவனமாகப் பாதுகாப்பார்கள் என்பதிலும் ஐயமில்லை. தன் துருப்புகளுக்குத் தலைமையில் இருக்கும் துரோணராலும், கிருதவர்மனாலும் கூட, போரில் நம்மைத் தாக்குவதிலோ, என்னைப் பீடிப்பதிலோ வெல்ல முடியாது.

எதிரிகளை எரிப்பவனான திருஷ்டத்யும்னன், தன் ஆற்றலை வெளிப்படுத்தி, கடலைத் தடுக்கும் கரையைப் போலக் கோபக்காரத் துரோணரைத் தடுப்பான். பகைவர்களைக் கொல்பவனான பிருஷதன் மகன் எங்கிருக்கிறானோ, அங்கே துரோணரால் நமது துருப்புகளைப் பலவந்தமாக மீறிச் செல்ல முடியாது. இந்தத் திருஷ்டத்யும்னன், கவசம் பூண்டவரும், வில், கணைகள், வாள் ஆகியவற்றைத் தரித்தவரும், விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவருமான துரோணரின் அழிவுக்காகவே நெருப்பில் இருந்து உதித்தவனாவான். ஓ! சிநியின் பேரனே {சாத்யகி}, என்னைக் குறித்து வருத்தப்படாமல், கவலையற்ற இதயத்துடன் செல்வாயாக. போரில் திருஷ்டத்யுமனன், கோபக்காரத் துரோணரைத் தடுப்பான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English