Dhrishtadyumna fell on to cut the head of Drona! | Drona-Parva-Section-121 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 37)
பதிவின் சுருக்கம் : துச்சாசனன் செய்த தீமைகளைச் சொல்லி அவனை நிந்தித்த துரோணர்; சாத்யகியை எதிர்த்துச் சென்ற துச்சாசனன்; பாஞ்சால இளவரசன் வீரகேதுவைக் கொன்ற துரோணர்; பாஞ்சால இளவரசர்களான மேலும் நால்வரை கொன்ற துரோணர்; துரோணரை மயக்கமடையச் செய்த திருஷ்டத்யும்னன்; துரோணரின் தலையை வெட்டி வீழ்த்த எண்ணியது; மயக்கத்தில் இருந்து மீண்ட துரோணர் வைதஸ்திகக் கணைகளால் திருஷ்டத்யும்னனைப் பீடித்தது; திருஷ்டத்யும்னனின் தேரோட்டியைக் கொன்று, அவனைக் களத்தைவிட்டே விரட்டிய துரோணர்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "துச்சாசனனின் தேர் தன்னருகே நிற்பதைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, துச்சாசனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார், "ஓ! துச்சாசனா, இந்தத் தேர்கள் அனைத்தும் ஏன் {தப்பி} ஓடுகின்றன? மன்னன் {துரியோதனன்} நலமாக இருக்கிறானா? சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} உயிருடன் இருக்கிறானா? நீயோ ஓர் இளவரசன். நீ மன்னனின் தம்பியுமாவாய். மேலும் நீ ஒரு வலிமைமிக்கத் தேர்வீரனும் ஆவாய். {அப்படியிருக்க} போரில் இருந்து ஏன் நீ ஓடுகிறாய்? (உன் அண்ணனின் அரியணையைப் பாதுகாத்து) பட்டத்து இளவரசனாவாயாக. {உன் அண்ணனை ராஜனாக்கி, நீ யுவராஜனாவாயாக}.
திரௌபதியிடம் நீ முன்னர், "பகடையில் எங்களால் வெல்லப்பட்ட நீ எங்களின் அடிமையாவாய். உன் கணவர்களுக்குக் கட்டுப்பட்டிராமல் கற்பை நீ ஒதுக்கித் தள்ளுவாயாக. என் அண்ணனான மன்னனின் {துரியோதனனின்} ஆடைகளைச் சுமப்பவளாக இருப்பாயாக. உன் கணவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். அவர்கள் எள்ளுப்பதர்களைப் போலப் பயனற்றவர்களேயாவர்" என்று சொன்னாய். துச்சாசனா, இவ்வார்த்தைகளைச் சொன்ன நீ, இப்போது போரில் இருந்து ஏன் ஓடுகிறாய்? பாஞ்சாலர்களுடனும், பாண்டவர்களுடனும் கடும் பகைமையை நீயே தூண்டிவிட்டு, தனி ஒருவனான சாத்யகியின் முன்னால் போரிட ஏன் அஞ்சுகிறாய்? சூதாட்ட நிகழ்வில் பகடையை எடுத்த போது, உன்னால் கையாளப்பட்ட பகடையானது விரைவில் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கடுங்கணைகளாக மாறும் என்பதை நீ உணரவில்லையா? தூற்றும் அடைமொழிகள் பலவற்றை முன்னர்ப் பாண்டவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியவன் நீயே. திரௌபதியின் துயரங்கள் உன்னையே வேராகக் {வேர்} கொண்டிருக்கின்றன {திரௌபதியின் துயரங்களுக்குக் காரணமானவன் நீயே}.
உனது செருக்கும், திமிரும், தற்பெருமையும் இப்போது எங்கே? கடும் நஞ்சுமிக்கப் பயங்கரப் பாம்புகளான அந்தப் பாண்டவர்களைச் சினமூட்டிவிட்டு ஏன் நீ ஓடுகிறாய்? சுயோதனனின் {துரியோதனனின்} துணிச்சல்மிக்கத் தம்பியான நீ ஓடுவதில் தீவிரமாய் இருக்கிறாய் என்பதில் ஐயமேயில்லை. ஓ! வீரா {துச்சாசனா}, முறியடிக்கப்பட்டுப் பீதியடைந்திருக்கும் இந்தக் கௌரவப் படையை உன் சொந்தக் கரங்களின் சக்தியை நம்பி நீயே இன்று பாதுகாக்க வேண்டும் [1]. எனினும், இதைச் செய்யாமல் அச்சத்தால் போரைக் கைவிட்டு உன் எதிரிகளின் இன்பத்தையே நீ அதிகரிக்கிறாய். ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உன் படைக்குத் தலைவனான நீயே இப்படி ஓடும்போது, வேறு யார்தான் போரில் நிலைப்பார்கள்? புகலிடமாக இருக்க வேண்டிய நீயே அஞ்சினால், யார்தான் அஞ்சாமலிருப்பார்கள்?
[1] வேறொரு பதிப்பில், "கடுங்குணம் கொண்டவனும், ஓடுவதில் நோக்கம் கொண்டவனுமான உன்னுடைய சகோதரனான அந்தத் துரியோதனனும், ராஜ்யமும் இந்தப் பாரதச் சேனையும் காக்கப்படத்தக்கன. வீரனே, பிளக்கப்படுவதும், பயத்தால் பீடிக்கப்பட்டதுமான சேனையானது உன் கைவன்மையைக் கொண்டு உன்னால் பாதுகாக்கப்படத்தக்கதல்லவா?" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "பாரதர்களின் இந்தப் படை மற்றும் மன்னன் சுயோதனன் ஆகிய இருவரும் பரிதாபத்துக்குரியவர்களே. ஓடிக்கொண்டிருக்கும் உன்னைப் பின்னவன் {துரியோதனன்} தன் துணிச்சல்மிக்கத் தம்பியாகக் கொண்டிருக்கிறான். உண்மையில், ஓ வீரா, சிதறடிக்கப்பட்டு, அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்தப் படை உன்னாலும், உன் ஆயுதபலத்தாலும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றிருக்கிறது.
சாத்வத குலத்தின் தனியொரு போர்வீரனுடன் {சாத்யகியிடம்} போரிட்ட பிறகு, போரில் இருந்து ஓடுவதற்கே உன் இதயம் விரும்புகிறது. எனினும், ஓ! கௌரவா {துச்சாசனா}, போரில் காண்டீவதாரியை {அர்ஜுனனை}, அல்லது பீமசேனனை, அல்லது இரட்டையர்களை (நகுலன் மற்றும் சகாதேவனை) நீ காண நேர்ந்தால் என்ன செய்வாய்? எதற்கு அஞ்சி நீ ஓடுவதில் பாதுகாப்பைத் தேடுகிறாயோ, அந்தச் சாத்யகியின் கணைகள், சூரியனுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான காந்தி கொண்ட பல்குனனுடையவைக்கு {அர்ஜுனனின் கணைகளுக்கு} போரில் ஒருபோதும் ஈடானவையல்ல. ஓடுவதில் உன் இதயம் உறுதியாக இருக்கிறது என்றால், சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்கு இந்தப் பூமியின் அரசுரிமை கொடுக்கப்படட்டும்.
தங்கள் சட்டைகளில் இருந்து விடுபட்ட பாம்புகளுக்கு ஒப்பான பல்குனனின் {அர்ஜுனனின்} கணைகள் உன் உடலுக்குள் நுழையும் முன் பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக. உயர் ஆன்ம பார்த்தர்கள், போரில் உன் நூறு சகோதரர்களைக் கொன்று பலவந்தமாகப் பூமியைப் பறிப்பதற்கு முன் பாண்டவர்களுடன் சாமாதானத்தை அடைவாயாக. மன்னன் யுதிஷ்டிரனும், போரில் மகிழ்பவனான கிருஷ்ணனும் கோபமடைவதற்கு முன் பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக. வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன் இந்தப் பரந்த படைக்குள் ஊடுருவி, உன் சகோதரர்களைப் பிடிப்பதற்கு முன் பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக.
முன்னர்ப் பீஷ்மர் உன் அண்ணனான சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, "பாண்டவர்கள் போரில் வெல்லப்பட முடியாதவர்களாவர். ஓ! இனியவனே, அவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக" என்றார் [2]. எனினும், தீயவனான உன் அண்ணன் சுயோதனன் அதைச் செய்யவில்லை [3]. எனவே, உன் இதயத்தைப் போரில் உறுதியாக நிலைக்கச் செய்து பாண்டவர்களுடன் கடுமையாகப் போரிடுவாயாக. சாத்யகி இருக்கும் இடத்திற்கு உன் தேரில் விரைந்து செல்வாயாக. ஓ! பாரதா {துச்சாசனா}, நீ இல்லாமல் இந்தப் படை ஓடிவிடும். போரில் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகியுடன் உனக்காக {உன் நலனுக்காகப்} போரிடுவாயாக" என்றார் {துரோணர்}.
[2] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக, "சமாதானத்தில் நோக்கமுள்ள என்னாலும் {துரோணராலும்}, "ஏ! துரியோதனா! மிகுந்திருப்பதைக் காப்பாற்று; பார்த்தர்களுடன் நீ சமாதானஞ்செய்து கொள். வீர! எல்லா அரசர்களையும் காப்பாற்று" என்று சொல்லப்பட்டிருக்கிறான்" என்று இருக்கிறது.[3] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக, "நீயாவது போரில் தைரியமடைந்து முயற்சியுள்ளவனாகிப் பாண்டவர்களுடன் யுத்தஞ்செய். உன்னுடைய ரத்தத்தையும் பீமசேனன் குடிக்கப் போகிறான் என்று கேட்டிருக்கிறேன். அவனுடைய அந்த வசனமும் பொய்யன்று. அஃது அவ்வாறே ஆகும். அதிமூடனே, யுத்தத்தில் ஓடுந்தன்மையுள்ள நீ யாது காரணத்தால் வைரத்தைத் தொடங்கினாய்? நீ பீமனுடைய பேராண்மையை அறியவில்லையா?" என்று இருக்கிறது.
(துரோணரால்) இப்படிச் சொல்லப்பட்ட உமது மகன் {துச்சாசனன்} மறுமொழியாக ஒரு வார்த்தையையும் சொல்லவில்லை. துச்சாசனன், (பரத்வாஜர் மகனின் {துரோணரின்}) வார்த்தைகளைக் கேட்காதது போலப் போலியாகக் காட்டிக் கொண்டு, சாத்யகி இருக்கும் இடத்திற்குச் சென்றான். புறமுதுகிடாத மிலேச்சர்களின் பெரும்படையுடன் போரில் சாத்யகியிடம் வந்த துச்சாசனன், அவ்வீரனுடன் கடுமையாகப் போரிட்டான்.
தேர்வீரர்களில் முதன்மையான துரோணரும் கோபத்தால் தூண்டப்பட்டு, பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் எதிர்த்து மிதமான வேகத்துடன் விரைந்தார். அந்தப் போரில் பாண்டவப்படையின் மத்தியில் ஊடுருவிய துரோணர், அவர்களது போர்வீரர்களை, நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் நசுக்கினார். அந்தப் போரில் துரோணர், தன் பெயரை அறிவித்துக் கொண்டு பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் மத்ஸ்யர்களுக்கு மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்தினார்.
பாஞ்சாலர்களின் ஆட்சியாளனுடைய {துருபதனின்} மகனான சிறப்புமிக்க வீரகேது, பாண்டவப் படையணிகளை வெல்வதில் ஈடுபட்டிருந்த பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்து விரைந்தான். துரோணரை ஐந்து கணைகளால் துளைத்த அவ்விளவரசன் {வீரகேது}, ஒரு கணையால் துரோணரின் கொடிமரத்தையும், ஏழால் அவரது தேரோட்டியையும் துளைத்தான். துரோணர் மிகக் கடுமையாக முயன்றாலும், பாஞ்சாலர்களின் இளவரசனை {வீரகேதுவை} அணுக முடியாதபடிக்கு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்போரில் நான் கண்ட காட்சி மிக அற்புதமானதாக இருந்தது. பிறகு, ஓ! ஐயா, பாஞ்சாலர்கள், போரில் துரோணர் தடுக்கப்பட்டதைக் கண்டு, மன்னன் யுதிஷ்டிரனின் வெற்றியை விரும்பி, அவரை {துரோணரை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். ஓ! மன்னா, நெருப்பு போன்ற கணைகள், பலமான வேல்கள் மற்றும் பல்வேறு விதங்களிலான ஆயுதங்களின் மழையால் அந்தப் போர்வீரர்கள் துரோணரை மறைத்தனர். ஆகாயத்தில் மேகத்திரள்களை விரட்டும் காற்றைப் போன்ற தன் எண்ணற்ற கணைகளால் அந்த அடர்த்தியான ஆயுத மழையைக் கலங்கடித்த துரோணர் மிகப் பிரகாசமாகத் தெரிந்தார்.
பிறகு பகைவீரர்களைக் கொல்பவரான அவர் (பரத்வாஜரின் மகன்), சூரியன் அல்லது நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட கடுங்கணை ஒன்றை வீரகேதுவின் தேரை நோக்கிக் குறிவைத்தார். அந்தக் கணையானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாஞ்சால இளவரசனை {வீரகேதுவைத்} துளைத்துச் சென்று, குருதியில் குளித்து, நெருப்பின் தழலைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு வேகமாகப் பூமிக்குள் நுழைந்தது. பாஞ்சாலர்களின் இளவரசன் {வீரகேது}, காற்றால் வேரோடு முறிந்து மலைச்சிகரத்தில் இருந்து கீழே விழும் சண்பக மரத்தைப் போலத் தனது தேரில் இருந்து கீழே வேகமாக விழுந்தான். பெரும் வில்லாளியும், பெரும் வலிமை கொண்டவனுமான அந்த இளவரசனின் {வீரகேதுவின்} வீழ்ச்சியை அடுத்து, துரோணரை அனைத்துப் பக்கங்களிலும் பாஞ்சாலர்கள் விரைவாகச் சூழ்ந்து கொண்டனர்.
சித்திரகேது, சூதன்வான், சித்திரவர்மன், சித்திரரதன் ஆகியோர் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (கொல்லப்பட்ட) தங்கள் சகோதரனின் {வீரகேதுவின்} நிமித்தமாகத் துயரால் பீடிக்கப்பட்டு, கோடையின் முடிவில் (பொழியும்) மேகங்களைப் போல (அவரை நோக்கி) கணைகளை ஏவியபடி, அந்தப் பரத்வாஜர் மகனுடன் {துரோணருடன்} போரிடும் விருப்பத்தால் ஒன்றாகச் சேர்ந்து அவரை {துரோணரை} எதிர்த்து விரைந்தனர். அரச பரம்பரையைச் சேர்ந்த வலிமைமிக்க அந்தத் தேர்வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் தாக்கப்பட்ட அந்தப் பிராமணர்களில் காளை {துரோணர்}, தன் சக்தி மற்றும் கோபம் அனைத்தையும், அவர்களின் அழிவுக்காக ஒன்றாகத் திரட்டினார். பிறகு துரோணர் அவர்கள் மீது கணைகளின் மாரியை ஏவினார். முற்றாக வளைந்திருந்த துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அவரது கணைகளால் தாக்கப்பட்ட அந்த இளவரசர்கள், ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, குழம்பிப் போய் என்ன செய்வது என்பதை அறியாதிருந்தார்கள்.
ஓ! பாரதரே, கோபக்காரத் துரோணர், அந்த இளவரசர்கள் மலைத்துப் போயிருப்பதைக் கண்டு, புன்னகைத்துக் கொண்டே அந்தப் போரில் அவர்களது குதிரைகள், தேரோட்டிகள், தேர்கள் ஆகியவற்றை அவர்களை இழக்கச் செய்தார். பிறகு பரத்வாஜரின் சிறப்புமிக்க மகன் {துரோணர்}, தமது கூரிய கணைகளாலும், பல்லங்களாலும், மரத்தில் இருந்து கொய்யப்படும் மலர்களைப் போல அவர்களது தலைகளைக் கொய்தார். உயிரை இழந்த அந்த இளவரசர்கள், ஓ! பெருங்காந்தி கொண்ட மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் கொல்லப்பட்டு விழுந்த தைத்தியர்களையும், தானவர்களையும் போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே பூமியில் விழுந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜரின் அந்த வீரமகன் {துரோணர்} போரில் அவர்களைக் கொன்ற பிறகு வெல்லப்பட முடியாததும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்டதுமான தமது வில்லை அசைத்தார்.
பாஞ்சாலர்களில் தேவர்களுக்கே ஒப்பானவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவர்கள் {சகோதரர்கள்} கொல்லப்பட்டதைக் கண்ட திருஷ்டத்யும்னன் சினத்தால் தூண்டப்பட்டு அந்தப் போரில் கண்ணீரைச் சிந்தினான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {திருஷ்டத்யும்னன்} அம்மோதலில் துரோணரின் தேரை எதிர்த்து விரைந்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாஞ்சால இளவரசனின் கணைகளால் மறைக்கப்பட்ட துரோணரைக் கண்டு அங்கே திடீரெனத் துன்பக் கதறல்கள் எழுந்தன. உயரான்ம பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} முற்றாக மறைக்கப்பட்டாலும், துரோணர் எந்த வலியையும் உணரவில்லை. மறுபுறம் சிரித்துக் கொண்டே போரிடுவதையே அவர் தொடர்ந்தார். பிறகு சினத்தால் சீறிய அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, நேரான கணைகள் பலவற்றால் துரோணரின் மார்பைத் தாக்கினான்.
அந்த வலிமைமிக்க வீரனால் {திருஷ்டத்யும்னனால்} ஆழத் துளைக்கப்பட்ட பரத்வாஜரின் சிறப்புமிக்க மகன் {துரோணர்}, கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்து மயக்கத்தில் வீழ்ந்தார். அவரை {துரோணரை} அந்நிலையில் கண்டவனும், பெரும் ஆற்றலையும், சக்தியையும் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன் தன் வில்லை வைத்துவிட்டு, விரைவாக ஒரு வாளை எடுத்துக் கொண்டான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் வேகமாகத் தன் தேரில் இருந்து கீழே குதித்து, கோபத்தில் கண்கள் சிவந்து, துரோணரின் தலையை அவரது உடலில் இருந்து வெட்டி வீழ்த்தும் விருப்பத்தால் உந்தப்பட்டு, அந்தப் பரத்வாஜரின் {துரோணரின்} தேரில் ஏறினான். அதேவேளையில் தன் புலனுணர்வு மீண்டு, தமது வில்லை எடுத்துக் கொண்ட வீரத் துரோணர், கொல்லும் விருப்பத்தால் தமக்கு வெகு அருகில் வந்துவிட்ட திருஷ்டத்யும்னனைக் கண்டு, ஒரு சாண் அளவு நீளமே கொண்டவையும், நெருக்கத்தில் உள்ளோரிடம் போரிடத் தகுந்தவையுமான கணைகளால் {வைதஸ்திகம் என்ற கணைகளால்} அந்த வலிமைமிக்கத் தேர்வீரனைத் துளைக்கத் தொடங்கினார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு சாண் அளவு நீளமே கொண்டவையும், நெருக்கமான போருக்குத் தகுந்தவையுமான அந்தக் கணைகளைத் துரோணர் அறிந்திருந்தார். அவற்றைக் கொண்டு திருஷ்டத்யும்னனை பலவீனமடையச் செய்வதிலும் வென்றார்.
வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னன், பெரும் எண்ணிக்கையிலான அந்தக் கணைகளால் தாக்கப்பட்டுத் துரோணரின் தேரில் இருந்து கீழே விரைவாகக் குதித்தான். பிறகு தன் வேகம் கலங்கடிக்கப்பட்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்}, தன் தேரில் ஏறிக்கொண்டு மீண்டும் தன் பெரிய வில்லை எடுத்துக் கொண்டான். பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் மீண்டும் அந்தப் போரில் துரோணரைத் துளைக்கத் தொடங்கினான். துரோணரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தமது கணைகளால் பிருஷதன் மகனைத் {துருபதன் மகன் திருஷ்டத்யும்னனைத்} துளைக்கத் தொடங்கினார்.
போர் வழிமுறைகளை அறிந்த அந்த இருவரும், தங்கள் தேர்களில் பல்வேறு அசைவுகளை வெளிக்காட்டியபடியும், தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் சிதைத்தபடியும் களத்தில் திரிந்தனர். போர்வீரர்களின் மனங்களை மலைக்கச் செய்த துரோணரும், பிருஷதன் மகனும் மழைக்காலத்தில் (மழைத்தாரைகளைப் பொழியும்) வலிமைமிக்க இரு மேகங்களைப் போலத் தங்கள் கணை மாரியைப் பொழிந்தனர். மேலும் அந்தச் சிறப்புமிக்க வீரர்கள் தங்கள் கணைகளால் ஆகாயத்தையும், திசைப்புள்ளிகளையும், பூமியையும் நிறைத்தனர். அனைத்து உயிரினங்களும், க்ஷத்திரியர்களும், அங்கே இருந்த பிற போராளிகள் அனைவரும், ஓ! மன்னா, அவர்களுக்கிடையில் நடைபெற்ற போரை உயர்வாகப் பாராட்டினர்.
ஓ! மன்னா, பாஞ்சாலர்கள், "துரோணர் போரில் திருஷ்டத்யும்னனுடன் மோதி நமக்கு அடிபணியப் போகிறார் என்பதில் ஐயமில்லை" என்று உரக்கப் பேசினர். அப்போது துரோணர், கனிந்த கனியொன்றை மரத்தில் இருந்து கொய்யும் ஒரு மனிதனைப் போல அந்தப் போரில் திருஷ்டத்யும்னனின் தேரோட்டியின் தலையை வேகமாகக் கொய்தார். பிறகு, ஓ! மன்னா, உயர் ஆன்ம திருஷ்டத்யும்னனின் குதிரைகள் {களத்தைவிட்டு} ஓடிச் சென்றன. அந்தக் குதிரைகள் திருஷ்டத்யும்னனைக் களத்தைவிட்டு சுமந்து சென்றதும், பெரும் ஆற்றலைக் கொண்ட துரோணர், அந்தப் போரில் பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் முறியடிக்கத் தொடங்கினார். பாண்டுக்களையும், பாஞ்சாலர்களையும் வென்றவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவரும், எதிரிகளைத் தண்டிப்பவருமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} மீண்டும் வியூகத்தின் மத்தியில் தன் நிலையையே ஏற்று நின்றார். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும் போரில் அவரை {துரோணரை} வெல்லத் துணியவில்லை" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |