Sunday, August 21, 2016

துரியோதனனும், பாஞ்சால இளவரசர்களும்! - துரோண பர்வம் பகுதி – 129

Duryodhana and the Panchala princes! | Drona-Parva-Section-129 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 45)

பதிவின் சுருக்கம் : துரோணரை நோக்கிச் சென்ற துரியோதனன், அவரிடம் வைத்த கோரிக்கை; ஜெயத்ரதனைப் பாதுகாக்கத் துரியோதனனை ஏவிய துரோணர்; துரியோதனனுக்கும், பாஞ்சால இளவரசர்களுக்கும் இடையில் நடைபெற்ற போர்; பாஞ்சால இளவரசர்களின் தேரைத் தன் கதாயுதத்தால் நொறுக்கிய துரியோதனன், சல்லியனின் தேரில் ஏறிச் சென்றது; பாஞ்சால இளவரசர்கள் அர்ஜுனனை நோக்கிச் சென்றது.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "(இப்படி) அந்தப் படை முறியடிக்கப்பட்டு, அர்ஜுனன், பீமசேனன் ஆகிய அனைவரும் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நோக்கிச் சென்ற பிறகு, உமது மகன் (துரியோதனன்) துரோணரை நோக்கிச் சென்றான். தனி ஒருவனாகத் தன் தேரில் ஆசானிடம் {துரோணரிடம்} சென்ற துரியோதனன், வழியெங்கும் பல்வேறு கடமைகளைக் குறித்துச் சிந்தித்தபடியே சென்றான். காற்று அல்லது மனோ வேகம் கொண்ட உமது மகனின் {துரியோதனனின்} தேரானது, துரோணரை நோக்கிப் பெரும் வேகத்தோடு சென்றது.


கோபத்தால் சிவந்த கண்களுடன் கூடிய உமது மகன் {துரியோதனன்}, ஆசானிடம் {துரோணரிடம்}, "ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவரே {துரோணரே}, அர்ஜுனன், பீமசேனன் மற்றும் வெல்லப்படாத சாத்யகி ஆகியோரும், வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரும், நமது துருப்புகள் அனைத்தையும் வீழ்த்தி, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அணுகுவதில் வென்றுவிட்டனர். உண்மையில், வெல்லப்படாதவர்களாகவே இருக்கும் வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் துருப்புகள் அனைத்தையும் வென்ற பிறகு அங்கேயும் போரிடுகின்றனர். ஓ! கௌரவங்களை அளிப்பவரே {துரோணரே}, சாத்யகி மற்றும் பீமன் ஆகிய இருவராலும் உம்மை எப்படிக் கடக்க முடிந்தது? ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே {துரோணரே}, சாத்வதன் {சாத்யகி}, அர்ஜுனன் மற்றும் பீமசேனனிடம் நீர் அடைந்த தோல்வியானது இவ்வுலகில் கடல் வறண்டு போவதைப் போல மிக ஆச்சரியமானதாகும். மக்கள், "ஆயுத அறிவியலில் கரைகண்டவரான துரோணர் உண்மையில் எவ்வாறு வெல்லப்பட முடியும்?" என்று உரக்கக் கேட்கின்றனர். இவ்வாறே வீரர்கள் அனைவரும் உம்மை மதிப்பு குறைவாகப் பேசுகின்றனர்.

ஓ! மனிதர்களில் புலியே {துரோணரே}, தொடர்ச்சியாக மூன்று வீரர்கள் உம்மைக் கடந்து சென்றனர் என்றால், நல்லூழற்ற எனக்குப் போரில் அழிவு நிச்சயமே. எனினும், இவையாவும் நடந்தும், இக்காரியத்தில் எங்களுக்குக் காத்திருப்பது என்ன என்பதில் நீர் சொல்லவேண்டியதை எங்களுக்குச் சொல்வீராக. எது நடந்ததோ அது கடந்து போனதாகும் {கடந்த காலமாகும்}. ஓ! கௌரவங்களை அளிப்பவரே, எஞ்சியிருப்பது {இனி செய்ய வேண்டியது} என்ன என்பதை இப்போது சிந்திப்பீராக. அடுத்ததாக, சிந்துக்களின் ஆட்சியாளனுக்காக {ஜெயத்ரதனுக்காகத்} தற்சமயம் என்ன செய்ய வேண்டும் என்பதை விரைவாகச் சொல்வீராக, நீர் எதைச் சொல்வீரோ, அது வேகமாகவும், முறையாகவும் செய்யப்படும்" என்றான் {துரியோதனன்}.

துரோணர் {துரியோதனனிடம்}, "ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, இப்போது எது செய்யப்பட வேண்டும் என்பதை மிகவும் சிந்தித்து, நான் உன்னிடம் சொல்வதைக் கேட்பாயாக. இப்போது வரை பாண்டவர்களின் பெரும் தேர்வீரர்களில் மூவர் மட்டுமே நம்மைக் கடந்து சென்றிருக்கின்றனர். அந்த மூவருக்கு முன்னால் நமக்கு எவ்வளவு அச்சமிருந்ததோ, அவர்களுக்குப் பின்னாலும் நாம் அவ்வளவு அஞ்சவேண்டியிருக்கிறது [1]. எனினும், எங்கே கிருஷ்ணனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} இருக்கின்றனரோ, அங்கே நமது அச்சம் பெரிதாக இருக்க வேண்டும். பாரதப் படையானது முன்னாலும், பின்னாலும் என இருபுறமும் தாக்கப்படுகிறது. இந்நேரத்தில் சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} பாதுகாப்பே நமது முதல் கடமை என நான் நினைக்கிறேன். தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} அஞ்சுபவனான ஜெயத்ரதன் நம்மால் பாதுகாக்கப்படுவதே அனைத்தையும் விடத் தகுந்ததாகும்.

[1] அவர்களுக்குப் பின்னால் இருந்த அச்சம் என்பது பாண்டவப் படையினராவர். அவர்களுக்கு முன்னால் இருந்த அச்சம் என்பது குரு படைக்குள் ஊடுருவுவதில் வென்ற தேர்வீரர்களாவர் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வீர யுயுதானன் {சாத்யகி} மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} எதிர்த்துச் சென்றிருக்கின்றனர். இவையாவும் சகுனியின் புத்தியில் தோன்றிய பகடையாட்டத்தாலேயே வந்திருக்கின்றன. (சூதாட்ட) சபையில் வெற்றியோ, தோல்வியோ ஏற்படவில்லை. இப்போது நாம் ஈடுபடும் இவ்விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் ஏற்படும். சகுனி, குற்றமில்லாத எந்தப் பொருட்களைக் கொண்டு குருக்களின் சபையில் முன்பு விளையாடினானோ, எதை அவன் {சகுனி} பகடையே என்று கருதினானோ, அவையே உண்மையில் வெல்லப்பட முடியாதவையான கணைகளாக இருக்கின்றன. உண்மையில், ஓ! ஐயா {துரியோதனா}, கௌரவர்கள் கூடியிருந்த அந்த இடத்தில் இருந்தது பகடையல்ல, ஆனால் அஃது உங்கள் உடல்களைச் சிதைக்கவல்ல பயங்கரமான கணைகளாகும்.

எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, தற்போது இந்தப் போர் விளையாட்டில், போராளிகளே சூதாடிகள் என்றும், இந்தக் கணைகளே பகடையென்றும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, சிந்துக்களின் ஆட்சியாளனே பணயம் என்றும் ஐயமில்லாமல் அறிவாயாக. உண்மையில் எதிரியுடனான நமது இன்றைய விளையாட்டில், ஜெயத்ரதனே பெரும்பணயமாவான். எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில், நாம் அனைவரும் நம் உயிரையே துச்சமாக மதித்து, போரில் சிந்துக்களின் ஆட்சியாளனுடைய பாதுகாப்புக்கான முறையான ஏற்பாடுகளைச் செய்வோமாக. தற்போது நாம் ஈடுபடும் விளையாட்டில், எங்குச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} பெரும் வில்லாளிகளால் பாதுகாக்கப்படுகிறானோ, அங்கேயே நாம் வெற்றியையோ, தோல்வியையோ அடைவோம். எனவே, வேகமாக அங்கே சென்று (ஜெயத்ரதனின்) பாதுகாவலர்களைக் காப்பாயாக. என்னைப் பொறுத்தவரை, பிறரை (ஜெயத்ரதனின் முன்னிலைக்கு) அனுப்பவும், ஒன்றுகூடியிருக்கும் பாஞ்சாலர்கள், பாண்டுக்கள், சிருஞ்சயர்கள் ஆகியோரைத் தடுக்கவும் நான் இங்கேயே நிற்பேன்" என்றார் {துரோணர்}.

ஆசானால் {துரோணரால்} இப்படி ஆணையிடப்பட்ட துரியோதனன், கடும் பணிக்கான (சாதனைக்காக) உறுதியான தீர்மானத்தை எடுத்து, தன்னைப் பின்தொடர்பவர்களுடன் ({துரோணரால்} சுட்டிக்காட்டப்பட்ட இடத்திற்கு) வேகமாகச் சென்றான். அர்ஜுனனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பவர்களும், பாஞ்சால இளவரசர்களுமான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும், அந்நேரத்தில் சவ்யசச்சினை {அர்ஜுனனை} நோக்கி குரு அணிவகுப்பின் ஓரங்களில் முன்னேறிச் சென்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முன்பு போரிடும் விருப்பத்தால் அர்ஜுனன் உமது படைக்குள் ஊடுருவிய போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இளவரசர்களான அந்த இருவரின் முன்னேற்றத்தைக் கிருதவர்மன் தடுத்தான் என்பதை நீர் நினைவில் கொண்டிருக்கலாம். இப்போதோ குரு மன்னன் {துரியோதனன்} தன் படையின் ஓரங்களில் செல்லும் அவர்களைக் கண்டான். பாரதக் குலத்தின் வலிமைமிக்கத் துரியோதனன், இப்படி மூர்க்கமாக விரைந்து வரும் அவ்விரு சகோதரர்களுடனும் கடும்போரில் ஈடுபடச் சற்றும் தாமதிக்கவில்லை.

க்ஷத்திரியர்களில் முதன்மையானோரும், புகழ்பெற்றவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவ்விருவரும், வளைக்கப்பட்ட தங்கள் விற்களுடன் அந்தப் போரில் துரியோதனனை எதிர்த்து விரைந்தனர். யுதாமன்யு இருபது {20} கணைகளால் துரியோதனனையும், நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் துளைத்தான். எனினும், துரியோதனன் ஒரே கணையால் யுதாமன்யுவின் கொடிமரத்தை அறுத்தான். பிறகு உமது மகன் {துரியோதனன்} மற்றொரு கணையால் முன்னவனின் {யுதாமன்யுவின்} வில்லையும் அறுத்தான். அதன் பிறகும் அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, ஒரு பல்லத்தைக் கொண்டு யுதாமன்யுவின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான். பிறகும் அவன் நான்கு கணைகளால் பின்னவனின் {யுதாமன்யுவின்} நான்கு குதிரைகளைத் துளைத்தான். அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட யுதாமன்யு, அந்தப் போரில் உமது மகனின் {துரியோதனனின்} நடு மார்பில் முப்பது {30} கணைகளை வேகமாக ஏவினான்.

கோபத்தால் தூண்டப்பட்ட உத்தமௌஜஸும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகளைக் கொண்டு துரியோதனனின் தேரோட்டியைத் துளைத்து, அவனை {தேரோட்டியை} யமனுலகு அனுப்பி வைத்தான். பிறகு துரியோதனனும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களின் இளவரசனான உத்தமௌஜஸின் நான்கு குதிரைகளையும், இரண்டு பார்ஷினி தேரோட்டிகளையும் கொன்றான். அப்போது அந்தப் போரில் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும் ஆன உத்தமௌஜஸ் தன் சகோதரனான யுதாமன்யுவின் தேரில் வேகமாக ஏறினான். தன் சகோதரனின் தேரில் ஏறிய அவன் {உத்தமௌஜஸ்}, கணைகள் பலவற்றால் துரியோதனனின் குதிரைகளைத் தாக்கினான். இதனால் கொல்லப்பட்ட அக்குதிரைகள் கீழே பூமியில் விழுந்தன. அவனது {துரியோதனனின்} குதிரைகள் விழுந்ததும், வீர யுதாமன்யு ஒரு வலிமைமிக்க ஆயுதத்தால் துரியோதனனின் வில்லை விரைவாக அறுத்து, மேலும் (மற்றொரு கணையால்) தோலாலான அவனது கையுறைகளையும் அறுத்தான்.

மனிதர்களில் காளையான உமது மகன் {துரியோதனன்}, குதிரைகளற்ற, சாரதியற்ற தேரில் இருந்து கீழே குதித்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு பாஞ்சால இளவரசர்கள் இருவரையும் எதிர்த்துச் சென்றான். இப்படிக் கோபத்தில் முன்னேறி வரும் பகை நகரங்களை அழிப்பவனை {துரியோதனனைக்} கண்டு, யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும் தங்கள் தேர்த்தட்டில் இருந்து கீழே குதித்தனர். அப்போது கதாயுதம் தரித்த துரியோதனன், தங்கத்தால் அலங்கரிக்கபட்டதும், குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரத்துடன் கூடியதுமான அந்தத் தேரை அக்கதாயுதத்தால் பூமிக்குள் அழுத்தினான். எதிரிகளை எரிப்பவனான உமது மகன் {துரியோதனன்}, அந்தத் தேரை நொறுக்கிய பிறகு, குதிரைகளும், சாரதியுமற்ற அவன், மத்ரர்களின் மன்னனுடைய {சல்லியனின்} தேரில் விரைவாக ஏறினான். அதே வேளையில், வலிமைமிக்க இரு தேர்வீரர்களான, அந்தப் பாஞ்சால இளவசர்களில் முதன்மையான இருவரும் வேறு இரு தேர்களில் ஏறிக் கொண்டு அர்ஜுனனை நோக்கிச் சென்றனர்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English