Tuesday, August 23, 2016

மீண்டும் பீமனிடம் தோற்ற கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 130

Karna defeated again by Bhima! | Drona-Parva-Section-130 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 46)

பதிவின் சுருக்கம் : கர்ணனுக்கு அஞ்சி உறங்காமல் தவித்த யுதிஷ்டிரன்; அர்ஜுனனிடம் சென்ற பீமனை மீண்டும் தடுத்து, அவனுக்கு அறைகூவல் விடுத்த கர்ணன்; கர்ணனின் அலட்சியம்; மூர்க்கத்துடன் போரிட்ட பீமன்; கர்ணனின் வில்லை மீண்டும் அறுத்தது; கர்ணனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்று அவனையும் மார்பில் துளைத்தது; மற்றொரு தேரை அடைந்த கர்ணன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதான அந்தப் போரில் போராளிகள் அனைவரும் கவலையில் நிறைந்து, பெரிதும் பீடிக்கப்பட்டிருந்த போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த ராதையின் மகன் {கர்ணன்}, காட்டில் மதங்கொண்ட யானையை எதிர்த்துச் செல்லும் மற்றொரு யானையைப் போலப் பீமனை எதிர்த்துச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "பெரும்பலம் கொண்டவர்களான பீமன் மற்றும் கர்ணன் ஆகிய வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவருக்கிடையில் அர்ஜுனனின் தேருக்கு அருகில் நடந்த அந்தப் போர் எவ்வாறு நடந்தது? இதற்கு முன்பு ஒரு முறை கர்ணன் போரில் பீமசேனனால் வெல்லப்பட்டான். எனவே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனால் மீண்டும் பீமனை எதிர்த்து எவ்வாறு செல்ல முடிந்தது? பூமியின் தேர்வீரர்களில் மிகப் பெரியவனாக அறியப்படும் வலிமைமிக்கப் போர் வீரனான சூதனின் மகனை {கர்ணனை} எதிர்த்து பீமனாலும் எவ்வாறு செல்ல முடியும்? தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பீஷ்மரையும், துரோணரையும் வெற்றிகொண்ட நிலையில், வில்லாளியான கர்ணனிடம் கொண்ட அச்சத்தினளவிற்கு வேறு எவரிடமும் அச்சம்கொள்ளவில்லை. உண்மையில், அவன் {யுதிஷ்டிரன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனை நினைத்துக் கொண்டே, அச்சத்தால் தன் இரவுகளை உறக்கமில்லாமல் கழிக்கிறான். பிறகு, போரில் அந்தச் சூதனின் மகனிடம் {கர்ணனிடம்} பீமனால் எவ்வாறு மோத முடியும்? உண்மையில், ஓ! சஞ்சயா, போரில் பின்வாங்காதவனும், சக்தியுடன் கூடிய பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ள வீரனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்தக் கர்ணனோடு பீமனால் எவ்வாறு போரிட முடியும்?

உண்மையில், அர்ஜுனனின் தேரருகே நடந்த அம்மோதலில் சூதனின் மகன் {கர்ணன்} மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய அவ்விரு வீரர்களும், எவ்வாறு ஒருவரோடொருவர் போரிட்டனர்? மேலும், (பாண்டவர்களுடனான) தன் சகோதரநிலை குறித்து முன்பே தெரிவிக்கப்பட்ட அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} கருணையுள்ளவனுமாவான். குந்தியிடம் தான் சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்ந்தால் [1], அவனால் {கர்ணனால்} எவ்வாறு பீமனுடன் போரிட முடியும்? பீமனைப் பொறுத்தவரையும் கூட, முன்பு சூதனின் மகனால் {கர்ணனால்} தன் மீது திணிக்கப்பட்ட தீங்குகள் அனைத்தையும் நினைவுகூர்ந்த அந்த வீரன் {பீமன்}, போரில் கர்ணனுடன் எவ்வாறு போரிட்டான்? ஓ! சூதா {சஞ்சயா}, என் மகன் துரியோதனன், கர்ணன் பாண்டவர்கள் அனைவரையும் போரில் வென்று விடுவான் என நம்புகிறான். இழிந்தவனான என் மகன் போரில் எவனிடம் வெற்றி இருக்கிறது என நம்புகிறானோ அவன் {கர்ணன்}, பயங்கரச் செயல்களைச் செய்யும் பீமசேனனுடன் எவ்வாறு போரிட்டான்? என் மகன்கள் எவனை நம்பி அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் (பாண்டுவின் மகன்களுடன் {பாண்டவர்களுடன்}) பகைமை கொண்டனரோ, அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} பீமன் எவ்வாறு போரிட்டான்? உண்மையில் அவனால் {கர்ணனால்} செய்யப்பட்ட பல்வேறு தீங்குகள் மற்றும் காயங்களை நினைவுகூர்ந்த பீமன் அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} எவ்வாறு போரிட்டான்? உண்மையில், முன்னர் ஒரே தேரில் தனியாகச் சென்று மொத்த உலகை அடக்கியவனும், பெரும் வீரம் கொண்டவனுமான அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} பீமனால் எவ்வாறு போரிட முடிந்தது? (இயற்கையான) இரு காதுகுண்டலங்களுடன் பிறந்தவனான அந்தச் சூதனின் மகனுடன் பீமன் எவ்வாறு போரிட்டான்? ஓ! சஞ்சயா, விவரிப்பதில் நீ திறனுள்ளவனாக இருக்கிறாய். எனவே, அவ்விருவருக்கும் இடையில் நடைபெற்ற போரையும், அவர்களில் வெற்றி அடைந்தவர் யார் என்பதையும் எனக்கு விரிவாகச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீமசேனன், ராதையின் மகனை {கர்ணனை} விட்டுவிட்டு, கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களும் எங்குள்ளனரோ அங்கே செல்ல விரும்பினான். எனினும், ராதையின் மகன் {கர்ணன்}, அவனை {பீமனை} நோக்கி விரைந்து சென்ற போதே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல அடர்த்தியான கணைமாரியால் அவனை {பீமனை} மறைத்தான்.

முழுதும் மலர்ந்த முளரியை {தாமரையைப்} போல அழகிய முகமுடையவனும், முறுவலால் மிளிர்ந்தவனுமான {சிரிப்பால் பிரகாசித்தவனுமான} வலிமைமிக்க அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, பீமசேனன் சென்றபோது பின்னவனை {பீமனை} அறைகூவி அழைத்தான். கர்ணன், "ஓ! பீமா, போரிடுவது எவ்வாறு என்பதை நீ அறிவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லை. பிறகு, அர்ஜுனனைச் சந்திக்கும் விருப்பத்தால் ஏன் எனக்கு நீ முதுகைக் காட்டுகிறாய்? ஓ! பாண்டவர்களை மகிழ்விப்பவனே, குந்தியின் மகன் ஒருவனுக்கு இது சற்றும் பொருந்தாது. எனவே, நீ எங்கிருக்கிறாயோ அங்கேயே நின்று உன் கணைகளால் என்னை மறைப்பாயாக" என்றான் {கர்ணன்}.

கர்ணனின் அந்த அறைகூவலைக் கேட்ட பீமசேனன் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தன் தேரை சற்றே நகர்த்தி, அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} {மீண்டும்} போரிடத் தொடங்கினான். சிறப்புமிக்கப் பீமசேனன் நேரான கணைமேகங்களைப் பொழிந்தான். கர்ணனைக் கொல்வதால் அந்தப் பகைமைகளுக்கு முடிவைக் கொண்டு வர விரும்பிய பீமன், கவசம் பூண்டவனும், அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனும், தனக்கு எதிரில் நின்று தனிப்போரில் ஈடுபடுபவனுமான அந்த வீரனை {கர்ணனை} பலவீனமடையச் செய்யத் தொடங்கினான். எண்ணற்ற கௌரவர்களைக் கொன்ற பிறகு, ஓ! ஐயா, எதிரிகளை எரிப்பவனும், பாண்டுவின் கோபக்கார மகனும், வலிமைமிக்கவனுமான பீமன், கர்ணனின் மீது பல்வேறு கடும் கணைமாரிகளைப் பொழிந்தான். பெரும்பலம் கொண்ட அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, மதயானையின் நடையைக் கொண்ட அந்ந வீரனால் {பீமனால்} தொடுக்கப்பட்ட கணைமாரிகள் அனைத்தையும் தன் ஆயுதங்களின் சக்தியால் விழுங்கினான்.

அறிவின் உதவியைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தக் கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (படை அறிவியலின்) ஆசானைப் போல அந்தப் போரில் திரியத் தொடங்கினான். ராதையின் கோபக்கார மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே இருந்தது, பெரும் சீற்றத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த பீமசேனனுக்குத் தன்னைக் கேலி செய்வதைப் போலத் தெரிந்தது. தங்களுக்கிடையிலான அந்தப் போரை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பார்த்துக் கொண்டிருந்த துணிச்சல்மிக்க வீரர்கள் பலருக்கு மத்தியில் குந்தியின் மகனால் {பீமனால்} கர்ணனின் சிரிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பெரும் யானையை அங்குசத்தால் தாக்கும் பாகனைப் போலச் சினத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்கப் பீமன், அடையும் தொலைவுக்குள் தன்னால் கொண்டுவரப்பட்ட கர்ணனின் நடுமார்பை வத்சதந்தங்கள் {கன்றின் பற்களைப் போன்ற தலை கொண்ட கணைகள்} பலவற்றால் துளைத்தான்.

மீண்டும் பீமசேனன், தங்கமயமானவையும், அழகிய சிறகுகளுடையவையும், கூர்முனை கொண்டவையும், நன்கு ஏவப்பட்டவையுமான எழுபத்துமூன்று [?] கணைகளால் சூத மகனின் வண்ணமயமான கவசத்தைத் துளைத்தான். {பிறகு அந்த வீரக் கர்ணன், தங்க விரிப்புகளுடன் கூடியவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான பீமனின் குதிரைகள்} ஒவ்வொன்றையும் ஐந்து கணைகளால் {துளைத்தான்} [2]. விரைவில் கண்ணிமைப்பதற்குள் கர்ணனால் உண்டாக்கப்பட்ட கணைகளின் வலை பீமனின் தேரில் காணப்பட்டது. உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளானவை, கொடிமரம், தேரோட்டி மற்றும் அந்தப் பாண்டவனுடன் {பீமனுடன்} கூடிய அந்தத் தேரை முழுமையாக மறைத்தது. பிறகு கர்ணன், பீமனின் ஊடுருவமுடியாத கவசத்தை அறுபத்துநான்கு கணைகளால் துளைத்தான். சினத்தால் தூண்டப்பட்ட அவன் {கர்ணன்}, உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல நேரான கணைகள் பலவற்றால் பார்த்தனையே {பீமனையே} துளைத்தான்.

[2] இங்கே கங்குலியில் each with five shafts என்று வாக்கியம் முழுமை பெறாமலேயே இருக்கிறது. [?] கணைகளின் எண்ணிக்கையும் தவறாக இருப்பதாகவே தெரிகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "பீமசேனன், சிறகுகளுடன் கூடியவையும், முறையாக ஏவப்பட்டவையுமான இருபத்தோரு கூரிய கணைகளால் சூதன் மகனுடைய வண்ணமயமான கவசத்தைத் துளைத்தான். பிறகு அந்த வீரக் கர்ணன், தங்க விரிப்புகளுடன் கூடியவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான பீமனின் குதிரைகள் ஒவ்வொன்றையும் ஐந்து {ஐந்து ஐந்து} கணைகளால் துளைத்தான்" என்றிருக்கிறது. வேறொரு பதிப்பிலும் மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட விருகோதரன் {பீமன்}, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளை அலட்சியம் செய்தபடியே அச்சமில்லாமல் அந்தச் சூதனின் மகனை {கர்ணனை} தாக்கினான். கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான கணைகளால் துளைக்கப்பட்ட பீமன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் எந்த வலியையும் உணரவில்லை. பிறகு அந்த வீரப் பீமன், அம்மோதலில் கடும் சக்தி கொண்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான முப்பத்திரண்டு பல்லங்களால் கர்ணனைத் துளைத்தான். எனினும், கர்ணன், ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பியவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனனைத் தன் கணைகளால் பதிலுக்குப் பெரும் அலட்சியத்துடனேயே மறைத்தான். உண்மையில் அம்மோதலில், ராதையின் மகன் {கர்ணன்}, பீமனுடன் மென்மையாகவே போரிட்டான், அதே வேளையில் பீமனோ, அவனது {கர்ணனின்} முந்தைய தீங்குகளை நினைவுகூர்ந்து அவனுடன் மூர்க்கமாகப் போரிட்டான்.

கோபக்கார பீமனால் கர்ணனின் அலட்சியத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உண்மையில் அந்த எதிரிகளைக் கொல்பவன் {பீமன்}, ராதையின் மகன் மீது கணை மாரிகளை விரைவாக ஏவினான். அம்மோதலில் பீமசேனனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள், கொஞ்சும் பறவைகளைப் போலக் கர்ணனின் அங்கங்கள் யாவிலும் பாய்ந்தன. பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கூர்முனை மற்றும் தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அக்கணைகள், சுடர்மிக்க நெருப்பை மறைக்கும் பூச்சிகளின் கூட்டத்தைப் போல ராதையின் மகனை {கர்ணனை} மறைத்தன. எனினும் கர்ணன், ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பதிலுக்குக் கடுங்கணைகளின் மாரியைப் பொழிந்தான். அப்போது விருகோதரன் {பீமன்}, அந்தப் போர்க்கள ரத்தினத்தால் {கர்ணனால்} ஏவப்பட்டவையும், வஜ்ரத்திற்கு ஒப்பானவையுமான அந்தக் கணைகள் தன்னை அடைவதற்கு முன்பே பல்லங்கள் பலவற்றால் அவற்றை வெட்டினான். எதிரிகளைத் தண்டிப்பவனும், விகர்த்தனன் {சூரியன்} மகனுமான கர்ணன், ஓ! பாரதரே, மீண்டும் பீமசேனனைத் தன் கணைமாரியால் மறைத்தான்.

அப்போது ஓ! பாரதரே, அம்மோதலில் கணைகளால் துளைக்கப்பட்ட பீமனை, தன் உடலில் நிமிர்ந்து நிற்கும் முட்களுடன் கூடிய முள்ளம்பன்றிக்கு ஒப்பாக நாங்கள் கண்டோம். தன் கதிர்களைப் பிடித்திருக்கும் சூரியனைப் போலவே அந்தப் போரில் வீரப் பீமன், கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அக்கணைகளைப் பிடித்திருந்தான். குருதியில் குளித்த அனைத்து அங்கங்களுடன் கூடிய பீமசேனன், வசந்தகாலத்தில் மலர்களின் சுமையால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அசோக மரத்தைப் போலப் பிரகாசத்துடன் தெரிந்தான். அந்தப் போரில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணனின் அந்த நடத்தையை வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

கோபத்தில் சுழன்ற கண்களுடன் கூடிய அவன் {பீமன்} இருபத்தைந்து நாராசங்களால் கர்ணனைத் துளைத்தான். அதன்பேரில் கர்ணன், (தன் பக்கங்களில் தொங்கும்) கடும் நஞ்சுமிக்கப் பாம்புகள் பலவற்றுடன் கூடிய ஒரு வெண்மலையைப் போலத் தெரிந்தான். தெய்வீக ஆற்றலைக் கொண்ட பீமசேனன், அப்போரில் தன் உயிரையும் விடத் தயாராக இருந்த சூதனின் மகனை {கர்ணனை} ஆறு கணைகளாலும், பிறகு எட்டு கணைகளாலும் துளைத்தான். பிறகு வீரப் பீமசேனன் சிரித்துக் கொண்டே மற்றொரு கணையால் கர்ணனின் வில்லை மீண்டும் விரைவாக அறுத்தான். மேலும் அவன் {பீமன்} தன் கணைகளால் கர்ணனின் நான்கு குதிரைகளையும், பிறகு அவனது தேரோட்டியையும் கொன்று, அதன் பிறகு, சூரியப்பிரகாசம் கொண்ட எண்ணற்ற நாராசங்களால் கர்ணனின் மார்பையும் துளைத்தான். சிறகுகள் படைத்த அக்கணைகள் கர்ணனின் உடலினூடாக ஊடுருவி, மேகங்களின் ஊடாகத் துளைத்துச் செல்லும் சூரியனின் கதிர்களைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. தன் ஆண்மையில் செருக்குக் கொண்டிருந்தாலும், கணைகளால் பீடிக்கப்பட்டு, தன் வில்லும் அறுபட்ட கர்ணன் பெரும் வலியை உணர்ந்து மற்றொரு தேருக்குச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English