Saturday, September 03, 2016

மன்னன் அலம்புசனைக் கொன்ற சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 139

Satyaki killed King Alamvusha! | Drona-Parva-Section-139 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 55)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் கவலை; சாத்யகிக்கும் அலம்புசனுக்கும் இடையில் நடந்த மோதல்; அலம்புசனைக் கொன்ற சாத்யகி; துச்சாசனன் தலைமையிலான திருதராஷ்டிர மகன்கள் சாத்யகியை எதிர்த்து விரைந்தது; அவர்கள் அனைவரையும் தடுத்த சாத்யகி, துச்சாசனனைக் குதிரைகளற்றவனாக ஆக்கியது...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, சுடர்மிக்க என்புகழ் நாளுக்கு நாள் மங்குகிறது. என் போர்வீரர்களில் மிகப் பலர் வீழ்ந்துவிட்டனர். இவையாவும் காலத்தால் கொண்டுவரப்பட்ட எதிர்வினைகளால் ஏற்படுகின்றன என நான் நினைக்கிறேன்.(1) துரோணராலும், கர்ணனாலும் பாதுகாக்கப்படுவதும், அதன் காரணமாகத் தேவர்களாலும் ஊடுருவப்பட முடியாததுமான என் படைக்குள் சினத்தால் தூண்டப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} நுழைந்துவிட்டான்.(2) கிருஷ்ணன் மற்றும் பீமன் என்ற சுடர்மிக்க இரு சக்திகளுடனும், சிநிக்களின் காளையுடனும் {சாத்யகியுடனும்} இணைந்ததால், அவனது {அர்ஜுனனின்} ஆற்றல் பெருகியிருக்கிறது.(3) தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நுழைவைக் கேட்டதில் இருந்து, உலர்ந்த புற்குவியலை எரிக்கும் நெருப்பைப் போலத் துயரம் என் இதயத்தை எரிக்கிறது.


இந்தப் பூமியின் மன்னர்கள் அனைவரும், அவர்களோடு கூடிய சிந்துக்களின் ஆட்சியாளனும் {ஜெயத்ரதனும்} பொல்லாத விதியால் {தீயூழால்} பாதிக்கப்படுவதை நான் காண்கிறேன்.(4) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுக்கு (அர்ஜுனனுக்குத்) தீங்கிழைத்துவிட்டு, அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} அர்ஜுனனின் பார்வையில் படும்போது, தன் உயிரை {அவனால்} எவ்வாறு காத்துக் கொள்ள முடியும்?(5) இந்தச் சூழ்நிலையைப் பார்க்கையில், ஓ! சஞ்சயா, சிந்துக்களின் ஆட்சியாளன் ஏற்கனவே இறந்துவிட்டதாகவே நான் ஊகிக்கிறேன். எனினும், அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக. விவரிப்பதில் நீ திறன்கொண்டவனாக இருக்கிறாய், ஓ! சஞ்சயா, தாமரைகள் நிறைந்த தடாகத்துக்குள் பாயும் ஒரு யானையைப் போலத் திடமான தீர்மானத்துடன் தனஞ்சயனுக்காகப் {அர்ஜுனனுக்காக} போராட, அந்தப் பரந்த படைக்குள் மீண்டும் மீண்டும் அதனைக் கலங்கடித்தபடி நுழைந்தவனும், விருஷ்ணி வீரனுமான சாத்யகி எவ்வாறு போரிட்டான் என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(7,8)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் முதன்மையான அந்தப் பீமன், பல வீரர்களுக்கு மத்தியில் கர்ணனின் கணைகளால் பீடிக்கப்பட்டுச் சென்று கொண்டிருப்பதைக் கண்ட அந்தச் சிநிக்களில் முதன்மையான போர்வீரன் {சாத்யகி}, தன் தேரில் அவனைப் {பீமனைப்} பின் தொடர்ந்து சென்றான்.(9) கோடையின் முடிவில் {தோன்றும்} கார்முகில்களைப் போலக் கர்ஜித்துக் கொண்டும், கூதிர்காலத்துக் கதிரவனைப் போலக் கதிரொளி வீசிக் கொண்டும் சென்ற அவன் {சாத்யகி}, தன் உறுதிமிக்க வில்லால் உமது மகனின் {துரியோதனனின்} படையைத் கொல்லத் தொடங்கி, அதை {அந்தப் படையை} மீண்டும் மீண்டும் நடுங்கச் செய்தான்.(10) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அந்த மதுகுலத்தின் முதன்மையானவன் {சாத்யகி}, வெள்ளி நிறக் குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில், முழங்கிக் கொண்டே களத்தில் இப்படிச் சென்று கொண்டிருந்தபோது, உமது போர்வீரர்களில் எவராலும் அவனது {சாத்யகியின்} முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.(11)

அப்போது மன்னர்களில் முதன்மையானவனும், போரில் எப்போதும் பின்வாங்கதவனும், வில் தரித்துத் தங்கக் கவசம் பூண்டவனுமான அலம்புசன் [1], சினத்தால் தூண்டப்பட்டு, மதுகுலத்தின் முதன்மையான போர்வீரனான அந்தச் சாத்யகியின் முன்னேற்றத்தை விரைந்து சென்று தடுத்தான்.(12) பிறகு அவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலானது, ஓ! பாரதே {திருதராஷ்டிரரே}, இது வரை எப்போதும் நடக்காததைப் போல இருந்தது. போரிடுவதை நிறுத்திய எதிரிகளும், உமது வீரர்கள் அனைவரும், போரின் ரத்தினங்களான அவ்விருவரின் மோதலைக் காணும் பார்வையாளர்கள் ஆனார்கள்.(13)

[1] துரோண பர்வம் பகுதி 108ல் கடோத்கசனால் கொல்லப்பட்ட ராட்சசன் அலம்புசன் வேறு, இவன் வேறு, இவன் கௌரவர் தரப்பில் போரிட்ட வேறொரு மன்னனாவான். இந்த இருவரையும் தவிரத் துரோண பர்வம் பகுதி 164ல் ராட்சச இளவரசனான மற்றொரு அலம்புசனும் வருகிறான். இந்த மூவரையும் தவிரத் துரோண பர்வம் பகுதி 174ல் ராட்சசன் ஜடாசுரனின் மகனான அலம்புசன் என்று மற்றொருவனும் வருகிறான். எனவே மகாபாரதத்தில் குறைந்தது நான்கு அலம்புசர்களாவது குறிப்பிடப்படுகின்றனர்.

அப்போது மன்னர்களில் முதன்மையானவனான அந்த அலம்புசன், பத்து கணைகளால் மிகப் பலமாகச் சாத்யகியைத் துளைத்தான். எனினும், அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, அந்தக் கணைகள் யாவும் தன்னை அடையும் முன்பே அவற்றைத் தன் கணைகளால் வெட்டினான்.(14) மீண்டும் அலம்புசன், அழகிய சிறகுகளைக் கொண்டவையும், நெருப்பு போலச் சுடர்விடுபவையும், காதுவரை இழுக்கப்பட்டுத் தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான மூன்று கூரிய கணைகளால் சாத்யகியைத் தாக்கினான். இவை சாத்யகியின் கவசத்தைத் துளைத்து, அவனது உடலுக்குள் ஊடுருவின.(15) நெருப்பு அல்லது காற்றின் சக்தியுடன் கூடிய அந்தச் சுடர்மிக்கக் கூரிய கணைகளால் சாத்யகியைத் துளைத்த பிறகு, அந்த அலம்புசன், வெள்ளியைப் போல வெண்மையாக இருந்த சாத்யகியின் குதிரைகளை நான்கு கணைகளால் மிகப்பலமாகத் தாக்கினான்.

அவனால் {அலம்புசனால்} இப்படித் தாக்கப்பட்டவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், சக்கரதாரியை (கேசவனை {கிருஷ்ணனைப்}) போன்றவனுமான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, பெரும் வேகம் கொண்ட நான்கு கணைகளால் அலம்புசனின் நான்கு குதிரைகளைக் கொன்றான்.(17) அலம்புசனது தேரோட்டியின் தலையை வெட்டிய பிறகு, அவன் {சாத்யகி}, யுக நெருப்பைப் போன்ற கடுமையான ஒரு பல்லத்தால், முழு நிலவைப் போல அழகானதும், சிறந்த காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அலம்புசனின் தலையைப் அவனின்  உடலில் இருந்து வெட்டினான்.(18) பல மன்னர்களின் வழித்தோன்றலான {ராஜவம்சத்தில் பிறந்தவனான} அவனை {அலம்புசனைக்} கொன்ற பிறகு, பகைவரின் படைகளைக் கலங்கடிக்கவல்ல வீரனான அந்த யதுக்களின் காளை {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரியின் துருப்புகளைத் தடுத்தபடியே அர்ஜுனனை நோக்கிச் சென்றான்.(19)

உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி அந்த விருஷ்ணி வீரன் {சாத்யகி}, அர்ஜுனனை அடுத்து எதிரியின் மத்தியில் சென்ற போது, சேர்ந்திருக்கும் மேகத் திரள்களைச் சிதறடிக்கும் சூறாவளியைப் போலத் தன் கணைகளால் குரு படையை மீண்டும் மீண்டும் அழித்தபடியே காணப்பட்டான்.(20) அந்த மனிதர்களில் காளை {சாத்யகி} எங்கெல்லாம் செல்ல விரும்பினானோ அங்கெல்லாம், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், நன்கு பயிற்சி அளிக்கப்பட்டவையும், வசப்படுத்தப்பட்டவையும், பசுவின் பால், அல்லது குருக்கத்தி மலர், அல்லது நிலவு, அல்லது பனியைப் போன்ற வெண்மையானவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகளால் அவன் {சாத்யகி} சுமந்து செல்லப்பட்டான்.(21)

அப்போது, ஓ! ஆஜமீட குலத்தைச் சேர்ந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது படையின் பிற வீரர்களோடு ஒன்று சேர்ந்த உமது மகன்கள், போர்வீரர்களில் முதன்மையான அந்தத் துச்சாசனனைத் தங்கள் தலைமையாகக் கொண்டு, சாத்யகியை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(22) படைப்பிரிவுகளின் தலைவர்களான அவர்கள், அந்தப் போரில் சிநியின் பேரனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு, அவனைத் தாக்கத் தொடங்கினர். சாத்வதர்களில் முதன்மையான அந்த வீரச் சாத்யகியும், கணை மாரிகளால் அவர்கள் யாவரையும் தடுத்தான்.(23) தன் கடுங்கணைகளால் அவர்கள் அனைவரையும் தடுத்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தச் சிநியின் பேரன், ஓ! ஆஜமீடரே {திருதராஷ்டிரரே}, தன் வில்லைப் பலமாக உயர்த்தி, துச்சாசனனின் குதிரைகளைக் கொன்றான். அப்போது அந்தப் போரில் அர்ஜுனனும், கிருஷ்ணனும், அந்த மனிதர்களில் முதன்மையானவனை {சாத்யகியைக்} கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(24)


ஆங்கிலத்தில் | In English