Sunday, September 11, 2016

தேவகியின் சுயம்வரத்தால் ஏற்பட்ட பகை! - துரோண பர்வம் பகுதி – 143

The hostility from the self choice of Devaki! | Drona-Parva-Section-143 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 59)

பதிவின் சுருக்கம் : பூரிஸ்ரவஸிடம் சாத்யகி அடைந்த தோல்வியின் காரணத்தை விசாரித்த திருதராஷ்டிரன்; தேவகியின் சுயம்வரத்தில் சிநியால் அவமதிக்கப்பட்ட சோமதத்தன்; சிநியின் வழித்தோன்றலைத் தன் வழித்தோன்றல் அவமதிக்க மகாதேவனிடம் வரம் பெற்ற சோமதத்தன்; விருஷ்ணி வீரர்களின் புகழைச் சொன்ன சஞ்சயன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “துரோணர், ராதையின் மகன் {கர்ணன்}, விகர்ணன், கிருதவர்மன் ஆகியோரால் வெல்லப்படாதவனும், போரில் எப்போதும் தடுக்கப்படாதவனும், யுதிஷ்டிரனிடம் உறுதியளித்துவிட்டுக் கௌரவத் துருப்புகளின் கடலைக் கடந்தவனுமான வீரச் சாத்யகி, குரு போர்வீரனான பூரிஸ்ரவசால் அவமதிக்கப்பட்டு, பலவந்தமாக எவ்வாறு தரையில் தூக்கி வீசி எறியப்பட்டான்?” என்று கேட்டான்.(1, 2)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் சிநியின் பேரனின் {சாத்யகியின்} தோற்றத்தையும், பூரிஸ்ரவஸ் எவ்வாறு தோன்றினான் என்பதையும் கேட்பீராக. இஃது உமது ஐயங்களை விளக்கும்.(3) அத்ரி, சோமனை மகனாகக் கொண்டார். சோமனின் மகன் புதன் என்று அழைக்கப்பட்டான். புதனுக்கு, பெரும் இந்திரனின் காந்தியைக் கொண்டவனும், புரூரவஸ் என்று அழைக்கப்பட்டவனுமான ஒரு மகன் இருந்தான்.(4) புரூரவஸுக்கு ஆயுஷ் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். ஆயுஷ், நகுஷனை மகனாகக் கொண்டான். நகுஷன், தேவர்களுக்கு இணையான அரசமுனியான யயாதியைத் தன் மகனாகக் கொண்டான்.(5) யயாதி, தேவயானியின் மூலம் யதுவைத் தன் மூத்த மகனாகக் கொண்டான். இந்த யதுவின் குலத்தில் தேவமீடன் [1] என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான்.(6) யது குலத்தின் தேவமீடனுக்கு மூவுலகங்களிலும் புகழப்பட்ட சூரன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். சூரன், மனிதர்களில் முதன்மையானவனும், கொண்டாடப்படுபவனுமான வசுதேவனைத் தன் மகனாகக் கொண்டான்.(7) விற்திறனில் முதன்மையான சூரன், போரில் கார்த்தவீரியனுக்கு இணையானவனாக இருந்தான். அந்தச் சூரனின் குலத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரனின் பலத்துக்கு இணையான சிநி பிறந்தான்.(8)

[1] வேறொரு பதிப்பில் இஃது ஆஜமீடன் என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியைப் போலவே தேவமீடன் என்றே இருக்கிறது.

அந்த நேரத்தில்தான், ஓ! மன்னா {திருதராஸ்டிரரே}, க்ஷத்திரியர்கள் அனைவரும் இருந்த, உயர் ஆன்ம தேவகனுடைய மகளின் {தேவகியின்} சுயம்வரம் நடந்தது.(9) அந்தச் சுயம்வரத்தில் மன்னர்கள் அனைவரையும் வென்ற சிநி, வசுதேவனுக்காக இளவரசி தேவகியைத் தன் தேரில் விரைவாகக் கடத்திச் சென்றான்.(10) இளவரசி தேவகியை சிநியின் தேரில் கண்டவனும், மனிதர்களில் காளையும், துணிச்சல்மிக்கவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனுமான சோமதத்தனால் அந்தக் காட்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(11) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விருவருக்கும் இடையில் அரை நாள் நீடித்ததும், பார்ப்பதற்கு அழகானதும், அற்புதமானதுமான போரொன்று நடந்தது. வலிமைமிக்க அவ்விரு மனிதர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரானது மற்போர் மோதலாக இருந்தது. மனிதர்களில் காளையான சோமதத்தன், சிநியால் பலவந்தமாகப் பூமியில் தூக்கி வீசப்பட்டான்.(12) தன் வாளை உயர்த்தி, அவனது முடியைப் பற்றிய சிநி, சுற்றிலும் பார்வையாளர்களாக நின்றுகொண்டிருந்த ஆயிரக்கணக்கான மன்னர்களுக்கு மத்தியில், தன் எதிரியை {சோமதத்தனைத்} தன் காலால் தாக்கினான் {மிதித்தான்}.(13) பிறகு இறுதியாகக் கருணையால் அவன் {சிநி}, “பிழைப்பாயாக” என்று சொல்லி அவனை {சோமதத்தனை} விட்டான்.(14)

சிநியால் அந்நிலைக்குக் குறைக்கப்பட்ட சோமதத்தன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபவசப்பட்டு, மகாதேவனின் அருளை வேண்டி, அவனுக்குத் தன் துதிகளைச் செலுத்தத் தொடங்கினான். வரமளிக்கும் தெய்வங்கள் அனைத்திலும் பெரும் தலைவனான மகாதேவன் {சிவன்}, அவனிடம் {சோமதத்தனிடம்} மனம் நிறைந்து, அவன் விரும்பிய வரத்தை வேண்டும்படி கேட்டுக் கொண்டான். அரசனான சோமதத்தன் பிறகு பின்வரும் வரத்தை வேண்டினான்,(16) அஃதாவது, “ஓ! தெய்வீகத் தலைவா {மகாதேவா}, ஆயிரக்கணக்கான மன்னர்களுக்கு மத்தியில் சிநியின் மகனைத் தாக்கி, போரில் அவனைத் தன் காலால் தாக்கும் ஒரு மகனை நான் விரும்புகிறேன்” என்றான்.(17) சோமதத்தனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தெய்வம் {சிவன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அங்கேயே அப்போதே மறைந்துவிட்டான்.(18) அவ்வரக் கொடையின் விளைவாக, அதன் தொடர்ச்சியாக, மிக உயர்ந்த தர்ம சிந்தனையுள்ள பூரிஸ்ரவஸை மகனாக அடைந்தான், இதன் காரணமாகவே, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, சிநியின் வழித்தோன்றலை {சாத்யகியைப்} போரில் தூக்கி வீசி, மொத்த படையின் கண்களுக்கு எதிராகவே அவனைத் தன் காலால் தாக்கினான் {மிதித்தான்}.(19) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் கேட்டது குறித்து நான் இப்போது உமக்குச் சொல்லிவிட்டேன்.(20)

உண்மையில், அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, மனிதர்களில் முதன்மையானோராலும் கூட வெல்லப்பட்ட முடியாதவனே. விருஷ்ணி வீரர்கள் அனைவரும், போரில் துல்லியமான குறி கொண்டவர்களாவர், மேலும் அவர்கள் போர்க்கலையின் அனைத்து வழிமுறைகளையும் அறிந்தவர்களுமாவர்.(21) அவர்கள் தேவர்களையும், தானவர்களையும், கந்தர்வர்களையும் வெல்பவர்களாவர். அவர்கள் ஒருபோதும் கலக்கமடைவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த சக்தியை நம்பியே எப்போதும் போரிடுபவர்களாவர். அவர்கள் ஒருபோதும் பிறரைச் சார்ந்திருப்பதில்லை.(22) ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் விருஷ்ணிகளுக்கு இணையாக எவரும் காணப்படவில்லை. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விருஷ்ணிகளின் வலிமைக்கு இணையானவர்களாக ஒருவரும் இருந்ததுமில்லை, இருக்கவும் இல்லை, இருக்கப் போவதும் இல்லை.(23) அவர்கள் தங்கள் சொந்தங்களை ஒரு போதும் அவமதிப்பதில்லை. வயதால் மதிப்புடையவர்களின் கட்டளைகளுக்கு அவர்கள் எப்போதும் கீழ்ப்படிபவர்களாகவே இருக்கின்றனர்.

தேவர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், உரகர்களும், ராட்சசர்களும் கூட விருஷ்ணி வீரர்களை வெல்ல முடியாது எனும்போது, போரில் மனிதர்களைக் குறித்து என்ன சொல்லப்படமுடியும்?(24) பிராமணர்கள், அல்லது தங்கள் ஆசான்கள், அல்லது தங்கள் சொந்தங்களின் உடைமைகளில் அவர்கள் ஒருபோதும் ஆசை கொண்டதில்லை.(25) துயர்மிக்க எந்தச் சந்தர்ப்பத்திலாவது அவர்களுக்கு உதவி செய்வோரின் உடைமைகளிலும் அவர்கள் ஒருபோதும் ஆசை கொண்டதில்லை. பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடனும், பேச்சில் உண்மையுடனும் உள்ள அவர்கள், செல்வந்தர்களாக இருப்பினும் ஒருபோதும் செருக்கை வெளிக்காட்டுவதில்லை.(26) 

பலவான்களையும் பலவீனர்களாகக் கருதும் விருஷ்ணிகள், அவர்களைத் துயரங்களில் இருந்து மீட்கிறார்கள். தேவர்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் விருஷ்ணிகள் சுயக்கட்டுப்பாடு மற்றும் தர்ம சிந்தனை கொண்டவர்களாகவும், செருக்கில் இருந்து விடுபட்டவர்களாகவும் இருக்கின்றனர்.(27) இதன் காரணமாகவே விருஷ்ணிகளின் ஆற்றல் ஒருபோதும் கலங்கடிக்கப்படுவதில்லை. ஒரு மனிதன் மேரு மலைகளை அகற்றிவிடலாம், அல்லது பெருங்கடலையே கூடக் கடந்து விடலாம்.(28) ஆனால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} விருஷ்ணிகளிடம் மோதி, அவர்களை மீறுதல் எவனாலும் முடியாது. ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, எதைக் குறித்து உமக்கு ஐயங்கள் இருந்தனவோ, அதைக் குறித்த அனைத்தையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன். எனினும், ஓ! குருக்களின் மன்னா, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கைகளின் விளைவாகவே இவை யாவும் நடைபெறுகின்றன” {என்றான் சஞ்சயன்}.(29)


ஆங்கிலத்தில் | In English