Wednesday, September 28, 2016

துரியோதனனை வென்ற யுதிஷ்டிரன்! - துரோண பர்வம் பகுதி – 152

Yudhishthira vanquished Duryodhana! | Drona-Parva-Section-152 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 01)

பதிவின் சுருக்கம் : பாஞ்சாலர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பயங்கரப் போர்; பாண்டவப் படைக்கு மத்தியில் ஊடுருவிச் சென்ற துரியோதனன்; துரியோதனனின் இயல்புக்கு மீறிய வீரம்; அவனால் ஏற்பட்ட பேரழிவு; துரியோதனனை மயக்கமடையச் செய்த யுதிஷ்டிரன்; துரியோதனனை மீட்கச் சென்ற துரோணர்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பலத்தில் பெருகியிருந்த உமது யானைப்படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவப்படையை மீறி எங்கும் போரிட்டுக் கொண்டிருந்தது.(1) மறு உலகம் செல்லத் தீர்மானித்த பாஞ்சாலர்களும், கௌரவர்களும், பெருகிவந்த யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் நுழைவதற்காக ஒருவரோடொருவர் போரிட்டனர்.(2) துணிவுமிக்க எதிராளிகளுடன் மோதிய துணிவுமிக்கப் போர்வீரர்கள், கணைகளாலும், வேல்களாலும், ஈட்டிகளாலும் துளைத்து யமனின் வசிப்பிடத்திற்கு ஒருவரையொருவர் அனுப்பிக் கொண்டிருந்தனர்.(3) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட தேர்வீரர்களுக்கிடையில் நடந்த போரானது குருதியின் கடும் பாய்ச்சலால் பயங்கரமாக இருந்தது.(4) மதங்கொண்ட எதிராளிகளுடன் மோதிய மதங்கொண்ட யானைகள், தங்கள் தந்தங்களால் ஒன்றையொன்று பீடித்தன.(5)

புகழ் வேண்டிய குதிரை வீரர்கள் அந்தக் கடும் மோதலில் சூலங்களாலும், ஈட்டிகளாலும், போர்க்கோடரிகளாலும் {பகைவரணியைச் சேர்ந்த} குதிரைவீரர்களைத் துளைத்து வெட்டி வீழ்த்தினர்.(6) நூற்றுக் கணக்கான காலாட்படைவீரர்களும், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, உறுதியான தீர்மானத்துடன் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்தனர்.(7) பாஞ்சாலர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் அவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன இனம், குலம் மற்றும் தனிப்பட்ட பெயர்களைக் கேட்டு மட்டுமே எங்களால் வேறுபாட்டைக் காண முடிந்தது என்ற அளவுக்கு அங்கே பெருங்குழப்பம் நிலவியது.(8) கணைகளாலும், ஈட்டிகளாலும், கோடரிகளாலும் ஒருவரையொருவர் மறு உலகத்திற்கு அனுப்பியபடியே போர்வீரர்கள் அச்சமற்றவகையில் களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.(9) எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியன் மறைந்ததன் விளைவாக, போராளிகளால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால் பத்து திசைப்புள்ளிகளும் முன்பைப் போல ஒளிரவில்லை.(10)

பாண்டவர்கள் இப்படிப் போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஓ! பாரதரே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் படைகளுக்கு மத்தியில் துரியோதனன் ஊடுருவினான்.(11) சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதில் பெரும் கோபத்தால் நிறைந்த அவன் {துரியோதனன்}, தன் உயிரையே விடத் தீர்மானித்துப் பகைவரின் படைக்குள் ஊடுருவினான்.(12) உமது மகன் {துரியோதனன்}, தன் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பூமியை நிறைத்து, அவளை {பூமியை} நடுங்கச் செய்தபடியே பாண்டவப் படையை அணுகினான்.(13) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனுக்கும் {துரியோதனனுக்கும்} அவர்களுக்கும் {பாண்டவப்படையினருக்கும்} இடையில் நடந்த பயங்கரமான போரானது, துருப்புகளுக்கு மத்தியில் பெரும் அழிவை உண்டாக்கியது.(14) நடுப்பகலில் தன் கதிர்களால் அனைத்தையும் எரிக்கும் சூரியனைப் போல உமது மகன் {துரியோதனன்}, தன் கணைமாரியால் [1] பகைவரின் படையை எரித்தான்.(15) பாண்டவர்கள் தங்கள் சகோதரனை (துரியோதனனைப்) பார்க்கவும் இயலாதவர்களானார்கள். தங்கள் எதிரியை வெல்வதில் கையறு நிலையை {விரக்தியை} அடைந்த அவர்கள், களத்தைவிட்டு ஓடுவதில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தினர்.(16)

[1] உண்மையில், "சூரியனின் கதிர்களுக்கு ஒப்பான கணைகள்" என்பது பொருள் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சுடர்மிக்க முனைகளுடனும், தங்கச் சிறகுகளுடனும் கூடிய கணைகளைக் கொண்டு, வில்தரித்த உமது சிறப்புமிக்க மகனால் {துரியோதனனால்} கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(17) அந்தக் கூரிய கணைகளால் பீடிக்கப்பட்ட பாண்டவத் துருப்புகள் கீழே தரையில் விழத் தொடங்கின. உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது அரச மகன் {துரியோதனன்} அடைந்ததைப் போன்ற இத்தகு சாதனையை அடைவதில் பாண்டவர்கள் எப்போதும் வெல்லவில்லை [2].(18) ஒரு யானையினால் நசுக்கப்பட்டுக் கலக்கப்படும் தாமரைக் கூட்டத்தைப் போல அந்தப் போரில் உமது மகனால் பாண்டவப்படை நசுக்கப்பட்டுக் கலங்கடிக்கப்பட்டது [3].(19) மேலும், உமது மகனுடைய ஆற்றலின் விளைவால், சூரியனாலும், காற்றாலும் நீர் வற்றி அழகை இழந்த தாமரைக் கூட்டத்தைப் போலவே பாண்டவப் படையும் ஆனது.(20)

[2] கங்குலியில் பாண்டவர்கள் செய்யவில்லை என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் பாண்டுவின் மகன்கள் என்றே இருக்கிறது. வேறொரு பதிப்பில் இவ்வரி, "ராஜாவான உமது குமாரன் செய்ததுபோன்ற செய்கையை யுத்தத்தில் உம்மைச் சேர்ந்தவர்களில் ஒருவரும் செய்யவில்லை" என்றிருக்கிறது. இதுவே சரியானதாக இருக்க வேண்டும்.

[3] "அல்லது, 'தாமரைகள் நிறைந்து வளர்ந்த தடாகமொன்று ஒரு யானையால் அனைத்துப் பக்கங்களிலும் கலக்கப்படுவதைப் போல' என்றும் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது மகனால் {துரியோதனனால்} பாண்டவப்படைக் கொல்லப்படுவதைக் கண்டவர்களும், பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்களுமான பாஞ்சாலர்கள் அவனை {துரியோதனனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தனர்.(21) அப்போது அவன் {துரியோதனன்}, பீமசேனனைப் பத்து கணைகளாலும், மாத்ரியின் மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்} ஒவ்வொருவரையும் மூன்றாலும், விராடன் மற்றும் துருபதன் ஆகியோர் ஒவ்வொருவரையும் ஆறாலும், சிகண்டியை நூறாலும், திருஷ்டத்யும்னனை எழுபதாலும், யுதிஷ்டிரனை ஏழாலும், கைகேயர்களையும், சேதிகளையும் எண்ணற்ற கூரிய கணைகளாலும், சாத்வதனை {சாத்யகியை} ஐந்தாலும், திரௌபதியின் மகன்கள் (ஐவரில்) ஒவ்வொருவரையும் மூன்றாலும், கடோத்கசனை சிலவற்றாலும் {சில கணைகளாலும்} துளைத்துச் சிங்க முழக்கம் செய்தான்.(22-24) அந்தப் பெரும்போரில் நூற்றுக்கணக்கான பிற போர்வீரர்களையும், யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களையும் தன் கடுங்கணைகளால் வெட்டி வீழ்த்திய அவன் {துரியோதனன்}, படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கும் அந்தகனைப் போலவே நடந்து கொண்டான் [4].

[4] "இதன் பிறகு பம்பாய் பதிப்பில் வரும் பதினாறு வரிகள், கல்கத்தா பதிப்பில் தவிர்க்கப்பட்டிருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கங்குலியும் அவற்றைத் தவிர்த்தே இருக்கிறார். வேறொரு பதிப்பில் அதிகமாக இருக்கும் வரிகள் பின்வருமாறு, "நராதிபரே, உமது புத்திரனான அந்தத் துரியோதனனால் அம்புகளால் வதைக்கப்படுகிற அந்தப் பாண்டவ சேனையானது யுத்தத்தில் ஓடியது. அரசரே, மகாயுத்தத்தில் சூரியனைப் போல ஜ்வலிக்கின்ற அந்தக் குருராஜனைப் பாண்டு புத்திரனுடைய படைவீரர்கள் பார்ப்பதற்கு சக்தியற்றவர்களானார்கள். ராஜசிரேஷ்டரே, பிறகு, கோபங்கொண்ட யுதிஷ்டிரராஜர் குருராஜனான உம்முடைய குமாரனைக் கொல்லும் எண்ணத்துடன் எதிர்த்து வந்தார். சத்துருக்களை அடக்குகிறவர்களும், குரு குலத்தில் தோன்றியவர்களும், பராக்ரமசாலிகளுமான துர்யோதனன், யுதிஷ்டிரர் இருவரும் யுத்தத்தில் தத்தம் பிரயோஜனத்தைக் கருதி எதிர்த்தார்கள். பிறகு, துரியோதனன், கோபங்கொண்டு உட்படிந்த கணுக்களுள்ள பத்தம்புகளாலே (தர்மபுத்திரரை) அடித்து ஒரு பாணத்தினால் விரைவாகக் கொடியையும் அறுத்தான். மன்னரே, மகாத்மாவும் அரசருமான பாண்டவருக்குப் பிரியமான சாரதியான இந்திசேனனை மூன்று பாணங்களால் நெற்றியில் அடித்தான். மகாரதனான துரியோதனன் வேறொரு பாணத்தால் அவருடைய வில்லையும் அறுத்து நான்கு பாணங்களால் அவருடைய நான்கு குதிரைகளையும் அடித்தான். பிறகு, யுதிஷ்டிரர் கோபங்கொண்டு ஒரு நிமிஷத்திற்குள் வேறு வில்லைக் கையிலெடுத்து வேகத்தோடு கௌரவனை எதிர்த்தார்" என்றிருக்கிறது. மேற்கண்டவை கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இல்லை.

எனினும், தன் எதிரிகளை இப்படிக் கொல்வதில் அவன் {துரியோதனன்} ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பின்புறம் கொண்ட அவனது பெரிய வில்லை, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன் இரண்டு பல்லங்களால் மூன்று துண்டுகளாக வெட்டினான். மேலும் யுதிஷ்டிரன் பத்து கணைகளைப் பெரும் பலத்துடன் ஏவி துரியோதனனையும் துளைத்தான்.(25-27) துரியோதனனின் முக்கிய அங்கங்களைத் துளைத்துக் கடந்த அவை, தொடர் கோடாகப் பூமிக்குள் நுழைந்தன. அப்போது சுற்றியிருந்த துருப்பினர் விருத்திரனைக் கொல்வதற்காகப் புரந்தரனை {இந்திரனைச்} சூழ்ந்து நின்ற தேவர்களைப் போல யுதிஷ்டிரனைச் சூழ்ந்து நின்றனர். அப்போது எளிதாக வீழ்த்தப்பட முடியாத மன்னன் யுதிஷ்டிரன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகனை நோக்கி கடுங்கணை ஒன்றை ஏவினான். அதனால் ஆழத்துளைக்கப்பட்ட துரியோதனன் தன் சிறந்த தேரில் கீழே {தேர்த்தட்டில்} அமர்ந்தான்.(28-30) அப்போது பாஞ்சாலத் துருப்புகளுக்கு மத்தியில் பேரொலி எழுந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} "மன்னன் {துரியோதனன்} கொல்லப்பட்டான்" என்பதே அந்த மிகப் பெரிய ஆரவாரமாக இருந்தது.(31) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கணைகளின் கடும் விஸ் ஒலிகளும் அங்கே கேட்கப்பட்டன.

அந்தப் போரில் துரோணர் விரைவாகத் தன்னை அங்கே வெளிப்படுத்திக் கொண்டார்.(32) அதே வேளையில் உணர்வுகள் மீண்ட துரியோதனன் வில்லை உறுதியாகப் பிடித்துக் கொண்டான். அப்போது அவன் {துரியோதனன்}, "நில், நில்" என்று சொல்லி பாண்டுவின் அரசமகனை {யுதிஷ்டிரனை} நோக்கி விரைந்து செல்பவனாகக் காணப்பட்டான்.(33) வெற்றியை வேண்டிய பாஞ்சாலர்களும் வேகமாக முன்னேறத் தொடங்கினர். குரு இளவரசனை {துரியோதனனைக்} காக்க விரும்பிய துரோணர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் {எதிர்கொண்டார்}.(34) பிரகாசமான கதிர்களைக் கொண்டவனான நாளை உண்டாக்குபவன் {சூரியன்}, சூறாவளியால் கொந்தளிக்கும் மேகங்களை அழிப்பதைப் போல, ஆசான் {துரோணர்} அவர்களை அழிக்கத் தொடங்கினார். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரிடும் விருப்பத்தால் ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட உம்மவர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் பெரும் படுகொலைகள் நிறைந்த ஒரு கடும் போர் நடந்தது" {என்றான் சஞ்சயன்}.(35)
-------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 152-ல்  வரும் மொத்த சுலோகங்கள்-35

ஆங்கிலத்தில் | In English