Monday, September 26, 2016

“விதி வலியது!” என்ற கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 151

Karna said, “Fate is all-powerful!” | Drona-Parva-Section-151 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 66)

பதிவின் சுருக்கம் : துரோணரின் நேர்மையைச் சந்தேகித்துக் கர்ணனிடம் பேசிய துரியோதனன்; துரியோதனனின் சந்தேகங்களை நீக்கிய கர்ணன்; குருக்களின் தோல்விக்கு விதியே காரணம் என்று சொன்ன கர்ணன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “இப்படித் துரோணரால் தூண்டப்பட்ட மன்னன் துரியோதனன், சினத்தால் தூண்டப்பட்டுப் போரில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(1) பிறகு உமது மகன் துரியோதனன் கர்ணனிடம், “போரில் போராடிக் கொண்டிருந்த சிறப்புமிக்கத் துரோணரும், இன்னும் பல முதன்மையான போர்வீரர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கிருஷ்ணனை மட்டுமே உதவிக்குக் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவன் {கிரீடியான அர்ஜுனன்}, தேவர்களாலும் ஊடுருவமுடியாத அளவுக்கு, ஆசானால் {துரோணரால்} அமைக்கப்பட்ட வியூகத்தைப் பிளந்து, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்றுவிட்டதைக் காண்பாயாக.(2, 3)


ஓ! ராதையின் மகனே {கர்ணா}, மூர்க்கமாக முயன்று கொண்டிருந்த சிறப்புமிக்கத் துரோணரும், நானும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சிங்கத்தால் கொல்லப்பட்ட சிறு விலங்குகளின் கூட்டத்தைப் போல, எவருடைய உதவியுமில்லாத பார்த்தனால் {அர்ஜுனனால்} போரில் கொல்லப்பட்டு, பூமியில் கிடக்கும் பல முதன்மையான மன்னர்களைப் பார்ப்பாயாக.(4, 5) சக்ரனின் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்} என் படையைச் சிறிதே எஞ்சியிருக்கும் அளவுக்குக் குறைத்துவிட்டான். உண்மையில், போரில் துரோணரால் தடுக்கப்பட்டும், சிந்துக்களின் ஆட்சியாளனைக் கொன்று பல்குனனால் {அர்ஜுனனால்} தன் சபதத்தை எப்படி நிறைவேற்ற முடிந்தது?(6)  துரோணர் விரும்பவில்லையெனில், ஓ! வீரா {கர்ணா}, போராடிக் கொண்டிருக்கும் தன் ஆசானை {துரோணரை} மீறி, ஊடுருவ முடியாத அந்த வியூகத்தைப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} எவ்வாறு பிளக்க முடியும்?

உண்மையில், பல்குனன் {அர்ஜுனன்}, சிறப்பு மிக்க ஆசானின் {துரோணரின்} பெரும் அன்புக்குரியவனாவான்.(7,8)  இதன் காரணமாகவே பின்னவர் {துரோணர்}, அவனுடன் போரிடாமலேயே அவனை நுழைய அனுமதித்திருக்கிறார். என் பேறின்மையைப் பார். எதிரிகளை எரிப்பவரான துரோணர், முதலில் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பதாக உறுதியளித்துவிட்டுக் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனை வியூகத்துக்குள் நுழைய அனுமதித்துவிட்டார். தொடக்கத்திலேயே சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} அவனது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல அனுமதி அளித்திருந்தால், இத்தகு பயங்கரப் பேரழிவு நடந்திருக்காது {ஜெயத்ரதன் அழிந்திருக்க மாட்டான்}. ஐயோ, தன் உயிரைக் காத்துக் கொள்ளும் நம்பிக்கையில் ஜெயத்ரதன் வீடு திரும்ப விரும்பினான்.(9-11) போரில் பாதுகாப்பதாகத் துரோணரிடம் வாக்குறுதி பெற்ற மூடனான நானே அவன் {ஜெயத்ரதன்} செல்வதைத் தடுத்தேன் [1]. ஐயோ, இன்று சித்திரசேனனின் தலைமையிலான என் சகோதரர்கள் அனைவரும், இழிந்தவர்களான நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அழிந்து விட்டனர்” என்றான் {துரியோதனன்}.(12)

[1] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக, “என் சைனியம் அழிவதற்காகப் பிராமணரால் சைந்தவன் தடுக்கப்பட்டான். பாக்யஹீனனும், யுத்தத்தில் முயற்சி செய்கின்றவனுமான அப்படிப்பட்ட என்னுடைய எல்லாச் சைனியங்களும் கொல்லப்பட்டன. ராஜாவான ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான். கர்ண, பார்த்தனுடைய பேரால் அடையாளமிடப்பட்ட அம்புகளாலே உத்தமர்களான யுத்தவீரர்களனைவரும் நூறு நூறாகவும், ஆயிரமாயிரமாகவும் யமன் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பதைப் பார். யுத்தகளத்தில் நாமனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரே ரதத்தை உதவியாகக் கொண்ட அர்ஜுனனாலே எவ்வாறு ராஜாவான சைந்தவன் கொல்லப்பட்டான்? ஆயிரமாயிரமாக யுத்த வீரர்களும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? இப்போது துராத்மாக்களான நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, யுத்தத்தில் பீசமசேனனையெதிர்த்துச் சித்திரசேனன் முதலான என்னுடைய பிராதாக்கள் மண்டார்கள்” என்று இருக்கிறது.

அதற்குக் கர்ணன் {துரியோதனனிடம்}, “ஆசானை {துரோணரைப்} பழிக்காதே. அந்தப் பிராமணர் தன் சக்தி, பலம் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தித் தன் உயிரையும் துச்சமாக மதித்துப் போராடிவருகிறார்.(13) வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன் ஆசானை {துரோணரை} மீறி நம் வியூகத்தைப் பிளந்ததில் அவரிடம் {துரோணரிடம்} சிறு குற்றமும் இருக்க முடியாது.(14) ஆயுதங்களை {அஸ்திரங்களை} அறிந்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனுமான பல்குனன் {அர்ஜுனன்} இளமையுடன் கூடியவன்; அவன் ஆயுதங்கள் அனைத்திலும் தேர்ச்சியுடைய வீரன்; அவன் தன் வேகமான இயக்கத்துக்காகத் தனித்தன்மையுடன் அறியப்படுபவனுமாவான். தெய்வீக ஆயுதங்களைத் தரித்தவனும், கிருஷ்ணனின் கைகளில் இருக்கும் கடிவாளங்களுடன் கூடிய குதிரைகள் பூட்டப்பட்டதும், குரங்குக் கொடி கொண்டதுமான தன் தேரில் ஏறியவனும், ஊடுவமுடியாத கவசம் பூண்டவனும், மங்கா வலிமை கொண்ட தன் தெய்வீக வில்லான காண்டீவத்தை எடுத்துக் கொண்டவனுமான வீர அர்ஜுனன், தன் கரங்களின் வலிமையில் உண்டான செருக்குடன்,  கூரிய கணைகளை இறைத்தபடியே துரோணரை மீறினான்.  இஃதில் எந்த ஆச்சரியமுமில்லை.(15-17)

மறுபுறம் ஆசானோ {துரோணரோ}, ஓ! மன்னா {துரியோதனா}, வயதால் முதிர்ந்தவரும், வேகமாகச் செல்ல முடியாதவரும் ஆவார். மேலும் அவர் {துரோணர்}, ஓ! மன்னா {துரியோதனா}, நீண்ட நேரம் கரங்களைப் பயன்படுத்த முடியாதவராவார்.(18) இதனாலேயே, வெண் குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான பல்குனன் {அர்ஜுனன்}, ஆசானை மீறிச் செல்வதில் வென்றான். இந்தக் காரணத்திற்காகவே, துரோணரிடம் நான் எந்தக் குற்றத்தையும் காணவில்லை.(19) இவை யாவையும் பார்த்தால், வெண் குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், நமது வியூகத்தைப் பிளந்து துரோணரை மீறிச் சென்றதில், பின்னவர் {துரோணர்} என்னதான் ஆயுதங்களில் திறன் பெற்றவராக இருப்பினும், போரில் பாண்டவர்களை வெல்ல இயலாதவர் என்பது தெரிகிறது.(20)

விதியால் நிர்ணயிக்கப்பட்டது எதுவும் மாறாக நடக்காது என்றே நான் நினைக்கிறேன். எனவே, ஓ! சுயோதனா {துரியோதனா}, நமது சக்தியால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் பயன்படுத்தி நாம் போரிட்டிருந்தாலும், போரில் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதால் விதியே அனைத்திலும் வலியது என்பது தெரிகிறது.(21) உன்னோடு சேர்ந்து நாம் அனைவரும் நம்மால் முடிந்த அளவு சக்தியைப் பயன்படுத்திப் போர்க்களத்தில் முயன்றோம்.(22) எனினும் நம் முயற்சிகளைக் கலங்கடித்த விதியானது நம்மிடம் புன்னகைக்கவில்லை.

வஞ்சகம், ஆற்றல் ஆகிய இரண்டையும் பயன்படுத்திப் பாண்டவர்களுக்குத் தீங்கிழைக்க நாம் எப்போதும் முயன்றிருக்கிறோம்.(23)  விதியால் பீடிக்கப்பட்ட மனிதன் எந்தக் காரியத்தைச் செய்தாலும், ஓ! மன்னா {துரியோதனா}, அம்மனிதன் எவ்வளவுதான் முயன்றாலும் விதியால் அது {அக்காரியம்} கலங்கடிக்கப்படும்.(24) உண்மையில், விடாமுயற்சியுடன் கூடிய ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அஃது அனைத்தையும் எப்போதும் அச்சமற்ற வகையில் செய்ய வேண்டும். வெற்றி விதியைச் சார்ந்தே இருக்கும்.(25)

ஓ பாரதா {துரியோதனா}, வஞ்சகதைக் கொண்டும், நஞ்சைப் பயன்படுத்தியும் பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள் பாண்டவர்கள்} வஞ்சிக்கப்பட்டார்கள். அவர்கள் அரக்கு மாளிகையில் எரிக்கப்பட்டார்கள். அவர்கள் பகடையில் வெல்லப்பட்டார்கள்.(26) ஆட்சிக்கலைகளின் ஆணைகளுக்கிணங்க {ராஜநீதிக்கிணங்க} அவர்கள் காடுகளுக்குள் நாடுகடத்தப்பட்டார்கள். இவை யாவையும் நம்மால் கவனமாகச் செய்யப்பட்டாலும், விதியால் அவை கலங்கடிக்கப்படுகின்றன.(27) ஓ! மன்னா {துரியோதனா}. விதியை ஒன்றுமில்லாததாக்கி உறுதியான தீர்மானத்துடன் போரிடுவாயாக.

சிறந்த ஆற்றலுடன் போராடும் உனக்கும் அவர்களுக்கும் இடையில், எத்தரப்பு மற்றதை விஞ்சுகிறதோ அதற்கு விதி அனுகூலமாகலாம்.(28)  மேன்மையான அறிவின் உதவியுடன் பாண்டவர்களால் எந்த விவேகமான வழிகளும் பின்பற்றப்படவில்லை. அல்லது, ஓ! வீரா {துரியோதனா}, அறிவில்லாத எந்தக் காரியத்தையும் விவேகமில்லாமல் நீயும் செய்யவில்லை. (29)
செயல்களின் விளைவுகளை விவேகமானது, அல்லது விவேகமற்றது என்று விதியே நிர்ணயிக்கிறது. தன் காரியங்களையே நோக்கமாகக் கொண்ட விதியானது, அனைத்தும் உறங்கும்போது விழித்துக் கொண்டிருக்கிறது.(30)
உன் படை பெரியது, உனது போர்வீரர்களும் பலராவர். இப்படியே போர் தொடங்கியது.(31) அவர்களது படை சிறியதாக இருந்தும், நன்கு தாக்கக்கூடிய மனிதர்களுடன் கூடிய உனது பெரிய படை மிகவும் குறைக்கப்பட்டது. நம் முயற்சிகள் அனைத்தையும் கலங்கடிப்பது விதியின் செயலே என நான் அஞ்சுகிறேன்” என்றான் {கர்ணன்}.(32)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரிடுவதற்காகப் பாண்டவப் படைப்பிரிவுகள் தென்பட்டன.(33) பிறகு, உமது வீரர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் தேர்களும், யானைகளும் ஒன்றுடனொன்று மோதிய பயங்கரமான போர் ஒன்று நடந்தது. எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவையாவும் உமது தீய கொள்கையினாலேயே நடந்தன” {என்றான் சஞ்சயன்}.(34)

*********ஜயத்ரதவத பர்வம் முற்றும்*********
--------------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 151ல்  வரும் மொத்த சுலோகங்கள் 34


ஆங்கிலத்தில் | In English