Friday, December 20, 2019

யுதிஷ்டிரனின் அரசாட்சி! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 01

The reign of Yudhishthira! | Asramavasika-Parva-Section-01 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 01)


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் அரசாட்சி; காந்தாரியிடம் குந்தி கொண்ட மதிப்பு; பீமனைத் தவிர ஏனையோர் யுதிஷ்டிரனின் கட்டளையை ஏற்றுத் திருதராஷ்டிரனை மதித்தது...


ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "என் பாட்டன்மார்களான பாண்டவர்கள், தங்கள் நாட்டை அடைந்த பிறகு, உயர் ஆன்ம மன்னனான திருதராஷ்டிரனிடம் எவ்வாறு நடந்து கொண்டனர்?(1) உண்மையில், மகன்களும், அமைச்சர்களும் கொல்லப்பட்டவனும், புகலிடமேதும் அற்றவனும், செல்வாக்கை இழந்தவனுமான அந்த மன்னன் எவ்வாறு நடந்து கொண்டான்? பெரும்புகழைக் கொண்டவளான காந்தாரி எவ்வாறு நடந்து கொண்டாள்?(2) உயர் ஆன்மாக்களான என் பாட்டன்மார்கள் எத்தனை வருடங்கள் நாட்டை ஆண்டனர்? இவையனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.(3)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தங்கள் பகைவர்கள் அனைவரையும் கொன்று, தங்கள் நாட்டைத் திரும்பப் பெற்ற அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள், திருதராஷ்டிரனைத் தலைமையாகக் கொண்டு பூமியை ஆண்டனர்.(4) விதுரன், சஞ்சயன், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், திருதராஷ்டிரனின் வைசிய மனைவிக்குப் பிறந்த மகனுமான யுயுத்சு ஆகியோர் திருதராஷ்டிரனுக்குப் பணிவிடை செய்தனர்.(5) அனைத்துக் காரியங்களிலும், பாண்டவர்கள் அந்த மன்னனின் {திருதராஷ்டிரனின்} கருத்தைக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். உண்மையில், பதினைந்து வருட காலம் அவர்கள் அந்த முதிர்ந்த மன்னனின் ஆலோசனையின் பேரிலேயே அனைத்துக் காரியங்களையும் செய்தனர்.(6) அந்த வீரர்கள், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் விருப்பங்களுக்கு ஏற்புடைய வகையில், அந்த ஏகாதிபதியிடம் {திருதராஷ்டிரனிடம்} அடிக்கடி சென்று, அவனது பாதங்களை வழிப்பட்டு, அவன் அருகில் அமர்ந்தனர்.(7) தங்கள் தலைகளை அன்புடன் முகர்ந்து பார்க்கும் திருதராஷ்டிரனின் ஆணையின் பேரிலேயே அவர்கள் அனைத்தையும் செய்தனர்.

குந்திபோஜனின் மகளும் {குந்தியும்} அனைத்துக் காரியங்களிலும் காந்தாரிக்குக் கீழ்படிந்தாள்.(8) திரௌபதி, சுபத்திரை மற்றும் பாண்டவப் பெண்கள் பிறரும், அந்த முதிர்ந்த மன்னனும், ராணியும் தங்கள் மாமனாரும், மாமியாருமாக இருப்பதைப் போல அவர்களிடம் நடந்து கொண்டனர்.(9) அரச பயன்பாட்டுக்குத் தகுந்த மேன்மையான வகையைச் சேர்ந்தவையும், விலைமதிப்புமிக்கவையும், படுக்கைகள், ஆடைகள், ஆபரணங்கள், உணவு, பானங்கள் மற்றும் அனுபவிக்கத்தகுந்த பிற பொருட்கள்(10) மன்னன் யுதிஷ்டிரனால் திருதராஷ்டிரனுக்குக் கொடுக்கப்பட்டன. அதே போலக் குந்தியும் மூத்தோரிடம் நடந்து கொள்வதைப் போலக் காந்தாரியிடம் நடந்து கொண்டாள்.(11) ஓ! குரு குலத்தோனே, மகன்கள் கொல்லப்பட்டவனான அந்த முதிர்ந்த மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} விதுரன், சஞ்சயன், யுயுத்சு ஆகியோர் பணிவிடை செய்தனர்.(12) மிக மேன்மையான பிராமணரான துரோணரின் அன்புக்குரிய மைத்துனரும், வலிமைமிக்க வில்லாளியுமான கிருபரும் மன்னனைக் கவனித்துக் கொண்டார்.(13) புனித வியாசரும் அந்த முதிர்ந்த மன்னனை {திருதராஷ்டிரனை} அடிக்கடிச் சந்தித்து, பழங்கால முனிவர்கள், தெய்வீகத் தவசிகள், பித்ருக்கள் மற்றும் ராட்சசர்களின் வரலாறுகளை அவனுக்குச் சொல்லி வந்தார்.(14)

திருதராஷ்டிரனின் ஆணையின் பேரில் விதுரன், அறத்தகுதிகளுக்குரிய செயல்கள் அனைத்தையும், நீதி நிர்வாகம் தொடர்புடைய அனைத்தையும் கண்காணித்துவந்தான்.(15) விதுரனுடைய சிறந்த கொள்கையின் மூலமாக {நல்ல நீதியினால்}, நிலப்பிரப்புகள் மற்றும் தொண்டர்களிடம் {ஸாமந்தர்களிடம் / பக்கத்து நாட்டரசர்களிடம்} இருந்து ஏற்புடைய எண்ணற்ற தொண்டுகளைச் சொற்ப செல்வத்தைச் செலவாகக் கொண்டே பாண்டவர்கள் பெற்றனர்.(16) மன்னன் திருதராஷ்டிரன், கைதிகளை விடுவித்து, மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை மன்னித்தான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இதில் ஒருபோதும் எதனையும் சொல்லாமல் இருந்தான்.(17) அம்பிகையின் மகன் {திருதராஷ்டிர்ன} இன்பச் சுற்றுலாக்களுக்குச் சென்ற சந்தர்ப்பங்களில், பெரும் சக்தி கொண்ட குரு மன்னன் யுதிஷ்டிரன் அனுபவிக்கத் தகுந்த இன்பொருட்கள் அனைத்தையும் அவனுக்குக் கொடுத்தனுப்பினான்.(18) ஆராலிகர்கள், பழச்சாறு செய்பவர்கள் {ஸூபகாரர்கள்}, ராககாண்டவர்கள் {ராகஷாடவிகர்கள்} ஆகியோர் முன்பு போலவே மன்னன் திருதராஷ்டிரனுக்குப் பணிவிடைகளைச் செய்தனர்[1].(19)

[1] "ஆராலிகர் என்பதற்கான விரிவு நீலகண்டரால்இவ்வாறு விளக்கப்படுகிறது: கீரைகள், ஆரா என்றழைக்கப்படும் ஒருவகை ஆயுதத்தால் வெட்டப்படும். அந்தக் கீரைகளைச் சமைப்பதில் நிபுணர்கள் ஆராலிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். ராககாண்டவம் என்பது திப்பிலி, சுக்கு, சர்க்கரை மற்றும் உளுந்துச் சாறு {உளுந்து ரசம்} ஆகியவற்றால் செய்யப்படுவதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஆராலிர்களும், ஸூபகாரர்களும், ராகஷாடவிகர்களும் திருதராஷ்டிரராஜனை முன்போல் உபசரித்தனர்" என்றிருக்கிறது. "ஆராலிகர்கள்" என்பதன் அடிக்குறிப்பில், "’சாக விசேஷங்களைச் சமைப்பவர்கள்’ என்பது பழைய உரை" என்றும், "ஸூபகாரர்கள்" என்பதன் அடிக்குறிப்பில், "பருப்பைச் சமைப்பவர்கள்" என்றும், "ராகஷாடவிகர்கள்" என்பதன் அடிக்குறிப்பில், "திப்பிலியும், சுக்கும், சர்க்கரையும் சேர்ந்த பருப்பு ரஸம்’ என்பது பழையவரை" என்றும் இருக்கிறது.

பாண்டுவின் மகன்கள், விலைமதிப்புமிக்க ஆடைகளையும், பல்வேறு வகை மாலைகளையும் திரட்டி அவற்றை முறையாகத் திருதராஷ்டிரனுக்கு அளித்தனர்.(20) அந்த முதிர்ந்த மன்னன் செழிப்புடன் இருந்த காலத்தைப் போலவே, மைரேய மது வகைகளையும்[2], பல்வேறு வகை மீன்களையும், நறும்பானங்கள் மற்றும் தேனையும், (பல்வேறு பொருட்களைக்) கலந்து பல்வேறு இனிய வகை உணவுகளையும் செய்து அவனுக்குக் கொடுக்கச் செய்தனர்.(21) அங்கே அடுத்தடுத்து வந்த பூமியின் மன்னர்களும், முன்பு போலவே முதிர்ந்த குரு ஏகாதிபதிக்குக் காத்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.(22)

[2] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்புகளில், மைரேயம் என்பது "மிரையென்னும் தேசத்திலுண்டானதும், கருப்பஞ்சாற்றினால் செய்ததுமான கள்" என்றும், வேறு வகை மது "இலுப்பைப் பூவினால் செய்த கள்" என்றும் இருக்கின்றன.

குந்தி, திரௌபதி, பெரும்புகழைக் கொண்ட சாத்வதக் குலத்தவள் {சுபத்திரை}, பாம்புத் தலைவனின் மகளான உலூபி, ராணி சித்ராங்கதை,(23) ஓ! மனிதர்களின் தலைவா, திருஷ்டகேதுவின் தங்கை, ஜராசந்தனின் மகள் ஆகியோரும், இன்னும் பல பெண்களும்,(24) அனைத்துப் பணிகளையும் செய்யும் பணிப் பெண்களைப் போலச் சுபலனின் மகளிடம் {காந்தாரியிடம்} காத்திருந்தனர் {பணிவிடை செய்து கொண்டிருந்தனர்}. தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்த திருதராஷ்டிரன் எக்காரியத்தினாலும் வருத்தமடையக் கூடாது,(25) என்பதையே யுதிஷ்டிரன் தன் தம்பிகளிடம் எப்போதும் கவனிக்கச் சொல்வான். அவர்களும் தங்கள் பங்குக்கு, மன்னன் யுதிஷ்டிரனிடம் இருந்து பெறும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆணைகளைக் கேட்டு, அந்த முதிர்ந்த மன்னனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருந்தனர்.(26) எனினும், ஒரேயொரு விதிவிலக்கு இருந்தது. {அந்த விதிவிலக்கு} அது பீமசேனனைத் தழுவியது. திருதராஷ்டிரனின் தீய புத்தியின் மூலம் நடந்த பகடையாட்டத்தைப் பின்தொடர்ந்து நடந்த அனைத்தும் அந்த வீரனின் இதயத்தில் இருந்து மறையவில்லை. (அவன் இன்னும் அந்த நிகழ்வுகளைத் தன் நினைவில் கொண்டிருந்தான்)" என்றார் {வைசம்பாயனர்}.(27)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 01ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English