The affection of Dhritarashtra! | Asramavasika-Parva-Section-02 | Mahabharata In Tamil
(ஆஸ்ரமவாஸ பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : அபரிமிதமாகக் கொடையளித்த திருதராஷ்டிரனும், காந்தாரியும்; தன் பிள்ளைகளிடம் போலவே பாண்டவர்களிடம் நடந்து கொண்ட காந்தாரி; துரியோதனின் தீய நடத்தையை முற்றிலும் மறந்த யுதிஷ்டிரன்; திருதராஷ்டிரனை மேம்போக்காக வணங்கிய பீமன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டவர்களால் இவ்வாறு வழிபடப்பட்ட அம்பிகையின் மகன் {திருதராஷ்டிரன்} முனிவர்களால் மதிக்கப்பட்டு முன்பு போலவே மகிழ்ச்சியாகத் தன் காலத்தைக் கழித்தான்.(1) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனான அவன் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முதன்மையான காணிக்கைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான். குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்} அப்பொருட்களை எப்போதும் திருதராஷ்டிரனின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.(2) வன்மமற்றவனான மன்னன் யுதிஷ்டிரன் எப்போதும் தன் பெரிய தந்தையிடம் அன்புடன் நடந்து கொண்டான். தன் தம்பிகள் மற்றும் அமைச்சர்களிடம் பேசிய அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, "மன்னர் திருதராஷ்டிரர் என்னாலும், உங்கள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவர். உண்மையில், எவன் திருதராஷ்டிரரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவானோ அவன் என் நலன் விரும்பியாவான்.(4) மறுபுறம், எவன் அவரிடம் வேறுவகையில் நடந்து கொள்கிறானோ அவன் என் பகைவனாவான். அத்தகைய மனிதன் நிச்சயம் என்னால் தண்டிக்கப்படுவான்" என்றான். பித்ருக்களுக்கென விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்யும் நாட்களிலும், தன் மகன்கள் மற்றும் தன் நலன்விரும்பிகள் அனைவருக்குமான சிராத்தங்களைச் செய்யும் போதிலும், உயர் ஆன்ம குரு மன்னனான திருதராஷ்டிரன், பிராமணர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குத் தகுந்த வகையிலும், தான் விரும்பியவாறும் பெருமளவு செல்வத்தைக் கொடையாக அளித்தான்.(5,6)
நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} ஆகியோர் அந்த முதிர்ந்த மன்னனுக்கு ஏற்புடையதைச் செய்யும் விருப்பத்தில் அவனுடைய ஆணைகள் அனைத்தையும் நிறைவேற்றினர்.(7) மகன்கள் மற்றும் பேரன்கள் கொல்லப்பட்டதால் பீடிக்கப்பட்டிருந்த அந்த முதிய மன்னன், பாண்டவர்களாகிய தங்களால் ஏற்பட்ட அந்தத் துயரத்தால் இறந்துவிடாத வகையில் அவர்கள் எப்போதும் அவனைக் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்.(8) உண்மையில், அந்தக் குரு வீரன், தன் மகன்கள் வாழ்ந்த போது அனுபவித்த அனைத்துப் பொருட்களையும், அந்த மகிழ்ச்சியையும் அவன் இழந்துவிடாத வகையில் பாண்டவர்கள் அவனைப் பார்த்துக் கொண்டனர்.(9) பாண்டுவின் மகன்களான அந்த ஐந்து சகோதரர்களும், திருதராஷ்டிரனின் ஆணையின் கீழ் வாழ்ந்து இவ்வாறே அவனிடம் நடந்து கொண்டனர்.(10) அவர்கள் பணிவாக இருப்பதையும், தன் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதையும், ஆசானிடம் சீடர்கள் நடந்து கொள்வதைப் போலத் தன்னிடம் நடந்து கொள்வதையும் கண்ட திருதராஷ்டிரன், ஓர் ஆசான் அன்புடன் நடந்து கொள்ளும் நடத்தையைப் பதிலுக்கு அவர்களிடம் கடைப்பிடித்தான்.(11) காந்தாரி, கொல்லப்பட்ட தன் பிள்ளைகளுக்குப் பல்வேறு சிராத்தச் சடங்குகளைச் செய்வதன் மூலமும், பிராமணர்களுக்குப் பல்வேறு இன்பொருட்களைக் கொடையளிப்பதன் மூலமும் அவர்களுக்குப் பட்ட கடனில் இருந்து விடுபட்டாள்.(12) இவ்வாறே அறவோரில் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் தன் தம்பிகளுடன் சேர்ந்து மன்னன் திருதராஷ்டிரனை வழிபட்டான்".(13)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பெருஞ்சக்தி கொண்டவனும், குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனும், முதிர்ந்த மன்னனுமான திருதராஷ்டிரனால், யுதிஷ்டிரனிடம் எந்தத் தீய எண்ணத்தையும் காண முடியவில்லை.(14) ஞானிகளாகவும், அறவொழுக்கம் ஒழுகுபவர்களாகவும் உயர் ஆன்மப் பாண்டவர்கள் இருப்பதைக் கண்டவனும், அம்பிகையின் மகனுமான மன்னன் திருதராஷ்டிரன் அவர்களிடம் நிறைவடைந்தான்.(15) சுபலனின் மகளான காந்தாரி, (கொல்லப்பட்ட) தன் பிள்ளைகளைக் குறித்த கவலையனைத்தையும் கைவிட்டு, பாண்டவர்களையே தன் பிள்ளைகளாகக் கருதி அவர்கள் மீது பேரன்பைக் காட்டத் தொடங்கினாள்.(16) பெருஞ்சக்தி கொண்ட குரு மன்னன் யுதிஷ்டிரன், விசித்ரவீரியனின் அரச மகனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஏற்பில்லாத எதையும் ஒருபோதும் செய்தானில்லை. மறுபுறம், அவன் எப்போதும் அவனுக்கு மிக ஏற்புடைய வழியிலேயே நடந்து கொண்டான்.(17) மன்னன் திருதராஷ்டிரனாலோ, ஆதரவற்றவளான காந்தாரியினாலோ சொல்லப்படும் கடினமான அல்லது கடினமற்ற செயல்கள் எதுவாக இருந்தாலும்(18) அவை அனைத்தையும், பகைவீரர்களைக் கொல்பவனான பாண்டவ மன்னன் பெரும் மதிப்புடன் நிறைவேற்றினான்.(19)
யுதிஷ்டிரனின் இத்தகைய ஒழுக்கத்தால் அந்த முதிர்ந்த மன்னன் உயர்வான நிறைவை அடைந்தான். உண்மையில், அவன் தன் தீய மகனை {துரியோதனனை} நினைத்து வருந்தினான்.(20) ஒவ்வொரு விடியலிலும் எழுந்து தன்னைத் தூய்மை செய்து கொண்டு, ஜபங்களைச் செய்து, பாண்டவர்கள் போரில் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி ஆசி கூறினான்.(21) பிராமணர்களுக்குரிய வழக்கமான கொடைகளைக் கொடுத்துவிட்டு, அவர்களை ஆசி கூறச் செய்யும் அந்த முதிய மன்னன், பாண்டவர்களின் நீண்ட வாழ்நாளை வேண்டி புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினான்.(22) உண்மையில் அந்த மன்னன், பாண்டவர்களிடம் எப்போதும் தனக்குக் கிட்டும் மகிழ்ச்சியைத் தன் மகன்களிடம் இருந்து ஒருபோதும் பெற்றதில்லை.(23) அந்தக் காலத்தில் மன்னன் யுதிஷ்டிரன், தன் நாட்டினில் வாழ்ந்த பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களும், பல்வேறு கூட்டங்களாக இருந்த வைசிய மற்றும் சூத்திரர்களுக்கும் மிக ஏற்புடையவனாக இருந்தான்.(24) திருதராஷ்டிரன் மகன்களால் அவனுக்கு செய்யப்பட்ட குற்றங்கள் அனைத்தையும் மன்னன் யுதிஷ்டிரன் மறந்து தன் பெரிய தந்தையை வணங்கினான்.(25)
எந்த மனிதனாவது அம்பிகையின் மகனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஏற்பில்லாத எதையும் செய்தால் குந்தியின் புத்திசாலி மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அவன் வெறுப்புக்கான பொருளாக ஆனான்.(26) உண்மையில் யுதிஷ்டிரனிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் துரியோதனன் அல்லது திருதராஷ்டிரனின் தீச்செயல்களை எவராலும் பேச முடியவில்லை.(27) குற்றங்களைப் பொறுத்து, மன்னன் அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்} காட்டிய பெருந்தன்மையில் காந்தாரி மற்றும் விதுரன் ஆகிய இருவரும் பெரும் நிறைவுடன் இருந்தனர். எனினும், ஓ! பகைவரைக் கொல்பவனே, அவர்கள் பீமனிடம் அவ்வளவு மகிழ்ச்சியடையவில்லை.(28) தர்மனின் மகனான யுதிஷ்டிரன் உண்மையில் தன் பெரிய தந்தைக்குக் கீழ்ப்படிந்தவனாக இருந்தான். எனினும், பீமனோ திருதராஷ்டிரனைப் பார்த்தவுடனேயே உற்சாகத்தை இழந்தான்.(29) பகைவரைக் கொல்பவனான தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} அந்த முதிய மன்னனை {திருதராஷ்டிரனை} வணங்குவதைக் கண்டு, விருப்பமில்லாத இதயத்துடன் அவன் {பீமன்} மேம்போக்காகவே அவனை {திருதராஷ்டிரனை} வணங்கினான்" {என்றார் வைசம்பாயனர்}.(30)
ஆங்கிலத்தில் | In English |