Friday, December 13, 2019

அர்ஜுனன் சாபவிமோசனம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 81

Arjuna's curse expiated! | Aswamedha-Parva-Section-81 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 66)


பதிவின் சுருக்கம் : சித்ராங்கதை போர்க்களத்திற்கு வந்ததற்கும், அர்ஜுனன் தன் மகனிடம் தோற்றதற்கும் காரணம் கூறிய உலூபி...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! குரு குலத்தின் (மரு)மகளே, உன்னை இங்கே கொண்டு வந்த காரியம் என்ன? மணிப்புரத்தின் ஆட்சியாளனுடைய {பப்ருவாகனனுடைய} அன்னை {சித்ராங்கதை} போர்க்களத்திற்கு வருவதற்கான காரணம் என்ன?(1) ஓ! பாம்பின் மகளே {உலூபியே, பன்னக கன்னிகையே}, இந்த மன்னனின் நட்பு நாடி வந்தாயா? ஓ! ஓய்வற்ற பார்வைகளைக் கொண்டவளே, எனது நன்மையை விரும்பி வந்தாயா?(2) ஓ! பருத்த இடை கொண்டவளே {உலூபியே}, ஓ! அழகிய பெண்ணே, நானோ, இங்கே இருக்கும் இந்தப் பப்ருவாஹனனோ தெரியாமல் உனக்கு எத்தீங்கையும் இழைக்கவில்லை என நம்புகிறேன்.(3) சித்திரவாஹன குலத்தின் வழித்தோன்றலும், களங்கமற்ற அங்கங்களைக் கொண்டவளுமான சித்ராங்கதை உனக்கு எத்தீங்கையும் இழைத்தாளா?" என்று கேட்டான்.(4)


பாம்புகளுடைய இளவரசனின் மகள் {உலூபி}, அவனிடம் சிரித்துக் கொண்டே, "நீரும் எனக்குக் குற்றம் ஏதும் இழைக்கவில்லை, பப்ருவாஹனனும் எனக்குத் தீங்கேதும் செய்யவில்லை.(5) பணிப்பெண் போல எப்போதும் எனக்குக் கீழ்ப்படிந்திருக்கும் இந்த இளவரசனின் தாயும் {சித்ராங்கதையும்} எத்தீங்கையும் செய்யவில்லை. இவை யாவற்றையும் எவ்வாறு செய்தேன் என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக.(6) நீர் என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது. உண்மையில், மதிப்புடன் தலைவணங்கி நான் உம்மை நிறைவடையச் செய்வதை நாடுகிறேன். ஓ! குரு குலத்தவரே, ஓ! பலமிக்கவரே, இவை அனைத்தையும் உமது நன்மைக்காகவே என்னால் செய்யப்பட்டன.(7) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தனஞ்சயரே, நான் செய்தவை அனைத்தையும் கேட்பீராக. பாரத இளவரசர்களின் பெரும்போரில் சந்தனுவின் அரச மகனை {பீஷ்மரை} நீதியற்ற வழிகளில் நீர் கொன்றீர். நான் என்ன செய்தேனோ, அஃது உமது பாவத்துக்குப் பரிகாரமாகிறது. பீஷ்மர் உம்முடன் போரிடும்போது நீர் அவரை வீழ்த்தவில்லை[1].(8-10)

[1] பீஷ்ம பர்வம் 120வது பகுதியில் பீஷ்மரை அர்ஜுனன் வீழ்த்திய நிகழ்வு சொல்லப்பட்டிருக்கிறது.

அவர் {பீஷ்மர்} சிகண்டியுடன் போரிட்டுக் கொண்டிருந்தார். உமக்கு உதவியாக இருந்த அவனைச் சார்ந்தே நீர் சந்தனுவின் மகனை {பீஷ்மரை} வீழச் செய்தீர். உமது பாவத்திற்குப் பரிகாரம் செய்யாமல் நீர் இறந்திருந்தால்,(11) நீர் செய்த அந்தப் பாவம் நிறைந்த செயலின் விளைவால் நிச்சயம் நரகத்தில் விழுந்திருப்பீர். உமது மகனிடம் இருந்து அடைந்த நிலை அந்தப் பாவத்திற்கான பரிகாரமாகும்.(12) ஓ! பூமியின் ஆட்சியாளரே, ஓ !பெரும் நுண்ணறிவுமிக்கவரே, கங்கையுடன் வசுக்கள் இருந்தபோது இதைக் கேட்டேன்.(13) சந்தனுவின் மகன் {பீஷ்மர்} வீழ்ந்த பிறகு, தேவர்களான வசுக்கள், கங்கைக் கரைக்கு வந்து, அந்த நீரில் நீராடி, அந்த ஓடையின் தேவியை அழைத்து, அந்தப் பாகீரதியின் அனுமதியுடன் கூடிய இந்தப் பயங்கரச் சொற்களைச் சொன்னார்கள்.

{வசுக்கள்}, "சந்தனுவின் மைந்தன் பீஷ்மன், தனஞ்சயனால் கொல்லப்பட்டான்.(14,15) உண்மையில் ஓ! தேவி, அப்போது பீஷ்மன் {இவனுடன்} போரிடுவதை நிறுத்தி, வேறொருடவனுடனை போரிட்டுக் கொண்டிருந்தான். இந்தக் குற்றத்தின் காரணமாக நாங்கள் இன்று தனஞ்சயனைச் சபிக்கப் போகிறோம்" என்றனர்.(16)

இதைக் கேட்ட கங்கா தேவியும், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி உடனே சம்மதித்தாள். இச்சொற்களைக் கேட்டுப் பெரிதும் துன்பமடைந்த நான், பாதாள லோகத்திற்கு ஊடுருவிச் சென்று என் தந்தையிடம் அனைத்தையும் சொன்னேன்.(17) அவர் வசுக்களிடம் சென்று உமக்காக வேண்டினார்,(18) தன் சக்திக்கு வாய்த்த அனைத்து வழிகளிலும் அவர்களை மீண்டும் மீண்டும் நிறைவடையச் செய்ய முயன்றார். அப்போது அவர்கள் அவரிடம், "உயர்ந்த அருளைக் கொண்டவனும், மணிப்புரத்தின் ஆட்சியாளனாகவும், இளமையுடன் கூடியவனாகவும் தனஞ்சயனுக்கு ஒரு மகன் இருக்கிறான்.(19) அவன் {பப்ருவாகனன்} போர்க்களத்தில் நின்று தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பூமியில் சாய்ப்பான். ஓ! பாம்புகளின் இளவரசே, இது நடக்கும்போது, அர்ஜுனன் எங்கள் சாபத்திலிருந்து விடுபடுவான்.(20) நீ செல்லலாம்" என்றனர்.

வசுக்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அவர் திரும்பி வந்து நடந்தவற்றை எனக்குச் சொன்னார். ஓ! வீரரே, இவை யாவற்றையும் அறிந்த நான், இவ்வழியில் வசுக்களின் சாபத்தில் இருந்து உம்மை விடுவித்தேன்.(21) தேவர்களின் தலைவனாலும் உம்மைப் போரில் வீழ்த்த இயலாது. மகன் என்பவன் உமது சுயமே {தானே மகனாகிறான் என்று கருதப்பட்டிருக்கிறது}. இதன் காரணமாகவே நீர் அவனால் வீழ்த்தப்பட்டீர்.(22) ஓ! பலமிக்கவரே, என் மீது எக்குற்றத்தையும் சுமத்த முடியாது. உண்மையில், என்னை நிந்திக்கத்தகுந்தவளாக எவ்வாறு நீர் கொள்வீர்?" என்று கேட்டாள்.(23)

(உலூபியால்) இவ்வாறு சொல்லப்பட்டதும், உற்சாகம் நிறைந்த இதயத்துடன் கூடிய விஜயன் {அர்ஜுனன்}, அவளிடம், "ஓ! தேவி {உலூபியே}, நீ செய்த இவை யாவும் எனக்கு மிக இனியவையாகும்" என்றான்.(24) அதன் பிறகு, மணிப்புர ஆட்சியாளனான தன் மகனிடம் பேசிய ஜயன் {அர்ஜுனன்}, குரு குடும்பத்தின் (மரு) மகளான சித்ராங்கதை கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவனிடம்,(25) "வருகின்ற சைத்ர மாதத்தின் முழு நிலவு நாளில் {சித்ராபௌர்ணமியில்} யுதிஷ்டிரரின் குதிரை வேள்வி நடக்க இருக்கிறது. ஓ! மன்னா {பப்ருவாகனா}, உன் அன்னை, உன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அங்கே வருவாயாக" என்றான்[2].(26)

[2] கும்போகோணம் பதிப்பில், "அரசனே, வருகிற சித்ராபூர்ணிமையில் யுதிஷ்டிரருடைய அஸ்வமேதம் நடக்கப் போகிறது. அதற்கு, நீ மந்திரிகளுடனும் இரண்டும் தாயார்களுடனும் வர வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "அடுத்த மாதமான சைத்ர மாதத்தில் யுதிஷ்டிரரின் குதிரை வேள்வி நடக்க இருக்கிறது. ஓ! மன்னா, உன் ஆலோசகர்கள் மற்றும் உன் தாய்மாருடன் நீ அங்கே வருவாயாக" என்றிருக்கிறது.

பார்த்தனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் பப்ருவாஹனன், கண்ணீர் நிறைந்த கண்களுடன் தன் தந்தையிடம் இச்சொற்களில்,(27) "ஓ! அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரே, உமது ஆணையின் பேரில் நிச்சயம் நான் அந்தப் பெரும் குதிரை வேள்விக்கு வந்து, மறுபிறப்பாளர்களுக்கு உணவு வழங்கும் பணியை ஏற்றுக் கொள்வேன்.(28) எனினும், என்னிடம் இரக்கம் காட்டும் வகையில் உமது மனைவியர் இருவருடனும் நீர் உமது நகருக்குள் {பப்ருவாகனனான எனது தலைநகருக்குள்} வரவேண்டும். ஓ! அனைத்துக் கடமைகளையும் முழுமையாக அறிந்தவரே, இதைப் பொறுத்தவரையில் ஐயுணர்வேதும் உமக்கு வேண்டாம்.(29) ஓ! தலைவா, ஓ! வெற்றி பெறும் போர்வீரர்களில் முதன்மையானவரே, உமது மாளிகையில் மகிழ்ச்சியுடன் ஓரிரவு வாழ்ந்துவிட்டு, அதன் பிறகு குதிரையைப் பின்தொடர்ந்து செல்வீராக" என்றான்.(30)

தன் மகனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், குரங்குக் கொடியோனுமான குந்தியின் மைந்தன், சித்திராங்கதையின் பிள்ளையிடம்,(31) "ஓ! வலிமைமிக்கக் கரத்தோனே, நான் என்ன நோன்பை நோற்கிறேன் என்பதை அறிவாயாக. ஓ! அகன்ற கண்களைக் கொண்டவனே, நான் நோற்கும் இந்த நோன்பு முடிவடையும் வரை என்னால் உன் நகருக்குள் நுழைய முடியாது.(32) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இந்த வேள்விக் குதிரை தன் விருப்பப்படி சுற்றித் திரியும். (நான் எப்போதும் அதைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும்). அருள் உனதாகட்டும். நான் செல்ல வேண்டும். சிறிது காலம் கூட ஓய்ந்திருக்கக்கூடிய இடம் எனக்கு ஒன்றுமில்லை" என்றான் {அர்ஜுனன்}.(33)

பாகனைத் தண்டிப்பவனின் மகன் {அர்ஜுனன்}, தன் மகனால் முறையாக வழிபடப்பட்டு, தன் மனைவியரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று தன் வழியில் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(34)

அஸ்வமேதபர்வம் பகுதி – 81ல் உள்ள சுலோகங்கள் : 34

ஆங்கிலத்தில் | In English