Saturday, January 04, 2020

அன்னையைக் கண்ட சகாதேவன்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 24

Sahadeva beheld his mother! | Asramavasika-Parva-Section-24 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 24)


பதிவின் சுருக்கம் : சதயூபாஸ்ரமத்தை அடைந்த பாண்டவர்கள்; அங்கே திருதராஷ்டிரனைக் காணாமை; யமுனைக்குச் சென்றிருந்த அவர்களைக் கண்ட பாண்டவர்கள்; தாயைக் கண்டு அழுத சகாதேவன்; ஆசிரமம் திரும்பிய திருதராஷ்டிரனும், பாண்டவர்களும்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தொலைவிலேயே தங்கள் தேர்களில் இருந்து இறங்கிய பாண்டவர்கள், மன்னனின் ஆசிரமத்திற்குப் பணிவுடன் கால்நடையாக நடந்து சென்றார்கள்.(1) போராளிகள் அனைவரும், நாட்டின் குடிமக்கள் மற்றும் குரு தலைவர்களின் மனைவிமார் அனைவரும், கால்நடையாகவே அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(2) பிறகு பாண்டவர்கள், மான்கூட்டங்கள் நிறைந்ததும், வாழைமரங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான திருதராஷ்டிரனின் புனித ஆசிரமத்தை அடைந்தனர்.(3) கடும் நோன்புகளைக் கொண்ட தவசிகள் பலர், ஆவலால் நிறைந்தவர்களாக, அந்த ஆசிரமத்திற்கு வந்திருக்கும் பாண்டவர்களைக் காண அங்கே வந்தனர்.(4)


மன்னன் {யுதிஷ்டிரன்}, தன் கண்களில் கண்ணீருடன், அவர்களிடம், "குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரான என் பெரிய தந்தை {திருதராஷ்டிரர்} எங்கே?" என்று கேட்டான்.(5)

ஓ! ஏகாதிபதி, அவன் தூய்மைச் சடங்குகளைச் செய்வதற்காகவும், மலர்களும், நீரும் கொணர்வதற்காகவும் யமுனைக்குச் சென்றிருப்பதாக அவர்கள் அவனிடம் சொன்னார்கள்.(6) அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பாதையின் வழியே நடந்து சென்ற பாண்டவர்கள் சற்றுத் தொலைவிலேயே அவர்கள் அனைவரையும் கண்டனர்.(7) தங்கள் தந்தையைச் சந்திக்க விரும்பிய அவர்கள் வேகமாக நடையுடன் நடந்து சென்றனர். அப்போது சகாதேவன், பிருதை {குந்தி} வந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி வேகமாகச் சென்றான்.(8) அவன், அவளது பாதத்தைத் தீண்டி உரக்க அழத் தொடங்கினான். கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீருடன் அவள் தன் அன்புக்குரிய பிள்ளையைக் கண்டாள்.(9) தன் மகனை எழச் செய்து, அவனைத் தன் கரங்களால் ஆரத்தழுவி கொண்ட அவள், காந்தாரியிடம் சகாதேவனின் வரவைச் சொன்னாள்.(10)

பிறகு, மன்னன் {யுதிஷ்டிரன்}, பீமசேனன், அர்ஜுனன் மற்றும் நகுலன் ஆகியோரையும் கண்ட பிருதை {குந்தி} அவர்களை நோக்கி வேகமாகச் செல்ல முயற்சித்தாள்.(11) பிள்ளைகளற்ற அந்த முதிர்ந்த தம்பதியருடன் நடந்து கொண்டிருந்த அவள் அவர்களைத் தன்னோடு இழுத்துச் சென்றாள். பாண்டவர்கள், அவளைக் கண்டதும் பூமியில் விழுந்தார்கள்.(12) பலமிக்கவனும், உயர் ஆன்மாவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, அவர்களுடைய குரல்கள் மற்றும் தீண்டலின் மூலம் அவர்களை அடையாளம் கண்டு, ஒருவர் பின் ஒருவராக அவர்களுக்கு ஆறுதல் கூறினான்.(13) கண்ணீர் சிந்திய அந்த உயர் ஆன்ம இளவரசர்கள், அந்த முதிர்ந்த மன்னனையும் {திருதராஷ்டிரனையும்}, காந்தாரியையும் உரிய நடைமுறையின்படி அணுகினர்.(14) உண்மையில், தங்கள் புலன் உணர்வுகளை இழந்திருந்த பாண்டவர்கள், தங்கள் தாயின் மூலம் மீண்டும் ஆறுதலை அடைந்து, மன்னனும், பெரியன்னையும், தங்கள் தாயும் சுமந்துவந்த நீர் நிறைந்த குடங்களை வாங்கிக் கொண்டு தாங்களே சுமந்து சென்றனர்.(15)

மனிதர்களில் சிங்கங்களான அவர்களது பெண்களும், அரச குடும்பத்தின் பெண்கள் அனைவரும், நகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போர் அனைவரும் அப்போது அந்த முதிர்ந்த மன்னனைக் கண்டனர்.(16) மன்னன் யுதிஷ்டிரன் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒருவர் பின் ஒருவராக மன்னனுக்கு அடையாளங்காட்டி அவர்களது பெயர்களையும், குலங்களையும் மீண்டும் மீண்டும் சொன்ன பிறகு, தன் பெரிய தந்தையை மதிப்புடன் வழிபட்டான்.(17) அவர்கள் அனைவராலும் சூழப்பட்ட அந்த முதிர்ந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, மகிழ்ச்சிக்கண்ணீரில் குளித்த கண்களுடன், மீண்டும் தான் யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரில் {ஹஸ்தினாபுரத்தில்} வசித்துக் கொண்டிருப்பதாகக் கருதினான்.(18) கிருஷ்ணையின் {திரௌபதியின்} தலைமையிலான தன் மருமகள் அனைவராலும் மதிப்புடன் வணங்கப்பட்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் திருதராஷ்டிரன், காந்தாரியுடனும், குந்தியுடனும் சேர்ந்து இன்பத்தில் நிறைந்தான்.(19) பிறகு அவன், சித்தர்களாலும், சாரணர்களாலும் மெச்சப்பட்டதும், எண்ணற்ற நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயத்தைப் போல அவனைக் காணவிரும்பிய மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்ததுமான அந்தக் காட்டு ஆசிரமத்தை அடைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(20)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 24ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English