Tuesday, January 07, 2020

மூவரின் மறைவு! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 37

Demise of the three! | Asramavasika-Parva-Section-37 | Mahabharata In Tamil

(நாரதாகமன பர்வம் - 1)


பதிவின் சுருக்கம் : காட்டில் இருந்த திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் சொர்க்கமடைந்ததை ஹஸ்தினாபுரம் வந்து சொன்ன நாரதர்; திருதராஷ்டிரன் ஆணைப்படி சஞ்சயன் இமயமலைக்குச் சென்றதையும் சொன்னது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, பாண்டவர்கள் (தங்கள் தந்தையின் {திருதராஷ்டிரனின்} ஆசிரமத்திலிருந்து) திரும்பிய நாளிலிருந்து இரண்டு வருடம் கழிந்த பிறகு, தெய்வீக முனிவரான நாரதர் யுதிஷ்டிரனிடம் வந்தார்.(1) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குரு மன்னனும், பேசுபவர்களில் முதன்மையானவனுமான யுதிஷ்டிரன், அவரை முழுமையாக வழிபட்டபிறகு, இருக்கையில் அமரச் செய்தான். முனிவர் சற்று ஓய்ந்திருந்த பிறகு, மன்னன் {யுதிஷ்டிரன்}, அவரிடம்,(2) "நீண்ட காலத்திற்குப் பிறகு புனிதரான நீர் என் சபைக்கு வருவதை நான் காண்கிறேன். ஓ! கல்விமானான பிராமணரே {நாரதரே}, நீர் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறீரா?(3) நீர் சென்று வந்த நாடுகள் என்னென்ன? நான் உமக்குச் செய்ய வேண்டியதென்ன? எனக்கு நீர் சொல்வீராக. மறுபிறப்பாளர்களில் முதன்மையானவராகவும், எங்களது உயர்ந்த புகலிடமாகவும் நீரே இருக்கிறீர்" என்றான்.(4)


நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, "நான் நீண்ட காலம் உன்னைக் காணவில்லை. எனவே, அதன் காரணமாகவே நான் என் துறவு ஆசிரமத்தில் இருந்து உன்னிடம் வந்தேன். ஓ! மன்னா, நான் புனித நீர்நிலைகள் பலவற்றையும், புனித ஓடையான கங்கையையும் கண்டு வந்தேன்" என்றார்.(5)

யுதிஷ்டிரன் {நாரதரிடம்}, "கங்கைக் கரையில் வசிக்கும் மக்கள், உயர் ஆன்ம திருதராஷ்டிரர் கடுந்தவங்களைப் பயின்று வருகிறார் என்று சொல்கின்றனர்.(6) நீர் அங்கே அவரைக் கண்டீரா? குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரான அவர் அமைதியாக இருக்கிறாரா? காந்தாரி, பிருதை {குந்தி} மற்றும் சூதனின் மகனான சஞ்சயன் ஆகியோர் அமைதியுடன் இருக்கின்றனரா?(7) உண்மையில், என்னுடைய அரசத் தந்தை எப்படி இருக்கிறார்? ஓ! புனிதமானவரே, நீர் மன்னரைக் கண்டிருந்தால் (அவரது நிலையையும் அறிந்திருந்தால்) அதைக் கேட்க நான் விரும்புகிறேன்" என்றான்.(8)

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, நான் கேட்டதையும், அந்தத் துறவாசிரமத்தில் நான் கண்டதையும் சொல்கிறேன், அமைதியாகக் கேட்பாயாக.(9) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! மன்னா, நீ குருக்ஷேத்திரத்தில் இருந்து திரும்பியதும் உன் தந்தை கங்காத்வாரத்தை நோக்கிச் சென்றார்.(10) நுண்ணறிவுமிக்க அந்த ஏகாதிபதி, தனது (புனித) நெருப்பையும், காந்தாரியையும், தன் மருமகளான குந்தியையும், சூதனான சஞ்சயனையும், யாஜகர்கள் அனைவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.(11) தவங்களையே செல்வமாகக் கொண்ட உன் தந்தை கடுந்தவப்பயிற்சியில் தன்னை நிறுவிக் கொண்டான். அவன் தன் வாயில் சரளைக் கற்களைக் கொண்டு, பேச்சை மொத்தமாகத் தவிர்த்து வாழ்வாதாரத்திற்காகக் காற்றை மட்டுமே உண்டு வந்தான்.(12)

கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்த அவன், காட்டில் உள்ள தவசிகள் அனைவராலும் வழிபடப்பட்டான். ஆறு மாத காலத்தில் அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} வெறும் எலும்புக்கூடாகத் தன்னைக் குறைத்துக் கொண்டான்.(13) காந்தாரி நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தாள், குந்தி ஒரு மாத இடைவெளியில் சிறிதளவு உணவை உண்டாள். ஓ! பாரதா, சஞ்சயன், ஒவ்வொரு ஆறாம் நாளிலும் சிறிது உண்டு வாழ்ந்து வந்தான்.(14) ஓ! ஏகாதிபதி, (குரு மன்னனுக்குரிய) புனித நெருப்பானது, அவனுடன் இருந்த வேள்வித் துணைவர்கள் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை ஊற்றி முறையாக வழிபடப்பட்டது. மன்னன் இந்தச் சடங்கைக் கண்டாலும், காணாவிட்டாலும், இதை அவர்கள் செய்து வந்தனர்.(15) மன்னனுக்கு நிலையான வசிப்பிடம் ஏதும் இருக்கவில்லை. அவன் காட்டிற்குள் திரிபவனாக இருந்தான். ராணிகள் இருவரும், சஞ்சயனும் அவனைப் பின்தொடர்ந்தனர்.(16)

சமமான மற்றும் சமமற்ற நிலத்திலும் சஞ்சயன் வழிகாட்டியாகச் செயல்பட்டான். ஓ! மன்னா, களங்கமற்ற பிருதை {குந்தி}, காந்தாரியின் கண்ணானாள்.(17) ஒரு நாள், அந்த மன்னர்களில் சிறந்தவன், கங்கையின் விளிம்பில் உள்ள ஓரிடத்திற்குச் சென்றான். அப்போது அந்தப் புனித ஓடையில் நீராடி, தன் ஆசிரமத்தை நோக்கி முகத்தைத் திருப்பித் தன் தூய்மைச் சடங்குகளை நிறைவடையச் செய்தான்.(18) காற்று உயர எழுந்தது. கடுமையான காட்டுத்தீ உண்டானது. அது சுற்றிலும் அந்தக் காடு முழுவதையும் எரிக்கத் தொடங்கியது.(19) விலங்குக் கூட்டங்கள் சுற்றிலும் எரிக்கப்பட்ட போது, அந்தப் பகுதியில் வசித்த பாம்புகளும் எரிக்கப்பட்ட போது, காட்டுப் பன்றிகள் அருகில் உள்ள புதர்களுக்கும், நீர்நிலைகளுக்குச் செல்லத் தொடங்கின.(20)

அந்தக் காடு இவ்வாறு அனைத்துப் பக்கங்களிலும் பீடிக்கப்பட்டபோது, அங்கே வசித்த உயிரினங்கள் அனைத்தும் இத்தகைய துன்பத்தை அடைந்தபோது, உணவேதும் உண்ணாத மன்னன் {திருதராஷ்டிரன்}, அசைவதற்கோ, முயற்சி செய்தற்கோ இயலாதவனாக இருந்தான்.(21) மெலிந்து போயிருந்த உன்னுடைய தாய்மார்கள் இருவரும் அசைய முடியாத நிலையில் இருந்தனர். மன்னன் {திருதராஷ்டிரன்}, அனைத்துப் புறங்களில் இருந்தும் தீ தன்னை நோக்கி வருவதைக் கண்டு,(22) திறம்மிக்கத் தேரோட்டிகளில் முதன்மையான சூதன் சஞ்சயனிடம், "ஓ! சஞ்சயா, தீ உன்னை எரிக்காத இடத்திற்குச் செல்வாயாக.(23) எங்களைப் பொறுத்தவரையில், இந்த நெருப்பால் எங்கள் உடல்கள் துன்புற்று அழிவடைந்து உயர்ந்த கதியை அடையப் போகிறோம்" என்றான்.

அவனிடம் {திருதராஷ்டிரனிடம்}, பேசுபவர்களில் முதன்மையான சஞ்சயன்,(24) "ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, புனிதமற்றதாக இருக்கும் இந்தத் தீயால் கொண்டுவரப்படும் மரணம் உமக்குத் துன்பத்தையே தரும். எனினும், இந்தத் தீயில் இருந்து தப்பிக்கும் வழிமுறை எதையும் நான் அறியவில்லை.(25) அடைத்ததாக என்ன செய்யப்பட வேண்டும் என்பதை நீர் குறிப்பிட வேண்டும். இவ்வாறு சஞ்சயனால் சொல்லப்பட்ட மன்னன் மீண்டும்,(26) "நாம் சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டைவிட்டு வெளியேறியதால் இந்த மரணம் நமக்குத் துன்பத்தைத் தராது. (மரணத்திற்கான வழிமுறையாக) நீர், நிலம், காற்று மற்றும் உணவைத் தவிர்த்தல் ஆகியவை மெச்சப்படுகின்றன. எனவே, ஓ! சஞ்சயா நீ தாமதமில்லாமல் எங்களைவிட்டுச் செல்வயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.

குவிந்த மனம் கொண்ட அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, சஞ்சயனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்.(28) அவன் காந்தாரியுடனும், குந்தியுடனும் கிழக்கு நோக்கி அமர்ந்தான். அவனது இந்த மனோநிலையைக் கண்ட சஞ்சயன், அவனை வலம் வந்தான்.(29) நுண்ணறிவைக் கொண்ட சஞ்சயன், "ஓ! பலமிக்கவரே, உமது ஆன்மாவைக் குவிப்பீராக" என்றான். ஒரு முனிவரின் {வியாசரின்} மகனும், பெரும் ஞானம் கொண்டவனுமான மன்னன் {திருதராஷ்டிரன்} தனக்குச் சொல்லப்பட்டவாறே செயல்பட்டான் {சஞ்சயன்}. உயர்ந்த அருளைக் கொண்ட காந்தாரியும், தாயான பிருதையும் கூட அதே மனநிலையில் நீடித்தனர்.(31) அப்போது உன்னுடைய அரசத் தந்தை {திருதராஷ்டிரன்} அந்தக் காட்டு நெரிப்பில் மூழ்கினான். அவனது அமைச்சனான சஞ்சயன், அந்தத் தீயில் இருந்து தப்பிப்பதில் வென்றான்.(32)

கங்கைக் கரையில், தவசிகளுக்கு மத்தியில் நான் அவனைக் கண்டேன். பெரும் சக்தியும், பெரும் நுண்ணறிவும் கொண்ட அவன் {சஞ்சயன்}, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு இமய மலைக்குச் சென்றான்.(33) ஓ! ஏகாதிபதி, இவ்வாறே உயர் ஆன்ம குரு மன்னன் மரணத்தை அடைந்தான். உன்னுடைய இரு தாய்மார்களான காந்தாரியும், குந்தியும் இவ்வாறே மரணத்தைச் சந்தித்தனர்.(34) நான் விருப்பம்போலத் திரிந்து கொண்டிருந்தபோது, ஓ! பாரதா, அந்த மன்னன் மற்றும் அந்த இரு ராணிகளின் உடல்களை நான் கண்டேன்.(35) அந்த ஆசிரமத்திற்கு மன்னன் திருதராஷ்டிரனின் கதியைக் கேட்டு பல தவசிகள் வந்தனர். அவர்கள் தங்களுடைய கதிக்காக ஒருபோதும் வருந்தவில்லை.(36) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஓ! பாண்டுவின் மகனே, மன்னனும், இரு ராணிகளும் அங்கே எவ்வாறு எரிந்தனர் என்ற விபரங்களை அனைத்தையும் நான் கேட்டேன்.(37) ஓ! மன்னர்களின் மன்னா, நீ அவர்களுக்காக வருந்தலாகாது. அந்த ஏகாதிபதியும் {திருதராஷ்டிரனும்}, காந்தாரியும், உன் தாயும் தங்கள் விருப்பத்தின் பேரிலையே நெருப்போடான தொடர்பை அடைந்தனர்" என்றார் {நாரதர்}".(38)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "திருதராஷ்டிரன் இவ்வுலகில் இருந்து சென்றுவிட்டதைக் கேட்ட உயர் ஆன்மப் பாண்டவர்கள் அனைவரும் பெருந்துயரமடைந்தனர்.(39) அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் ஓலமிடும் பேரொலி கேட்டது. குடிமக்களும், அந்த முதிய மன்னனின் கதியைக் கேட்டு உரக்க ஒப்பாரி செய்தனர்.(40) "ஓ!, ஐயோ" என்று பெருங்கவலையில் தன் கரங்களை உயரத் தூக்கி கதறி அழுதான் மன்னன் யுதிஷ்டிரன். அவன் தன் அன்னையை நினைத்து ஒரு குழந்தையைப் போல அழுதான். பீமசேனன் தலைமையிலான அவனது தம்பிகள் அனைவரும் அதையே செய்தனர்.(41) பிருதை {குந்தி} இத்தகைய விதியைச் சந்தித்தால் என்பதைக் கேள்விப்பட்ட அரசக் குடும்பத்துப் பெண்கள், துயரத்தில் உரக்க ஒப்பாரியிட்டனர்.(42) பிள்ளையற்றவனாக இருந்த அந்த முதிய மன்னனும், அவனுடைய விதியைப் பகிர்ந்து கொண்ட ஆதரவற்றவளான காந்தாரியும் எரிந்து இறந்ததைக் கேட்டு மக்கள் அனைவரும் வருந்தினர்.(43) ஓலமிடும் ஒலி சற்று நின்றபோது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் பொறுமையனைத்தையும் அழைத்து, கண்ணீரை நிறுத்திக் கொண்டு இந்தச் சொற்களைச் சொன்னான்" {என்றார் வைசம்பாயனர்}.(44)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 37ல் உள்ள சுலோகங்கள் : 44

ஆங்கிலத்தில் | In English