Tuesday, January 07, 2020

நகரந்திரும்பல்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 36

Return to city! | Asramavasika-Parva-Section-36 | Mahabharata In Tamil

(புத்ரதர்சன பர்வம் - 8)


பதிவின் சுருக்கம் : ஆசிரமம் திரும்பியது; வியாசரின் ஆணைப்படி யுதிஷ்டிரனை நகரம் திரும்ப வற்புறுத்திய திருதராஷ்டிரன்; பாண்டவர்கள் சென்றது...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருடன் கூடிய தன் மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரைக் கண்ட பிறகு மனிதர்களின் ஆட்சியாளனான திருதராஷ்டிரனும், மன்னன் யுதிஷ்டிரனும் என்ன செய்தனர்?" என்று கேட்டான்.(1)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தன் பிள்ளைகள் மீண்டும் தோன்றி மிக அற்புதமான காட்சியைக் கண்ட அந்த அரசமுனி திருதராஷ்டிரன் துன்பமற்றவனாகி, (பாகீரதியின் கரைகளில் இருந்து) தன் ஆசிரமத்திற்குத் திரும்பினான்.(2) பொதுமக்களும், பெரும் முனிவர்கள் அனைவரும், திருதராஷ்டிரனால் விடை கொடுத்து அனுப்பப்பட்டுத் தாங்கள் விரும்பிய இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(3) மனைவியருடன் கூடிய உயர் ஆன்ம பாண்டவர்கள், ஒரு சிறிய பரிவாரத்துடன், அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.(4)

அப்போது மறுபிறப்பாள முனிவர்களாலும், பிற மக்களாலும் கௌரவிக்கப்படுபவரான சத்தியவதியின் மகன் {வியாசர்} அந்த ஆசிரமத்திற்கு வந்து திருதராஷ்டிரனிடம்,(5) "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரா, ஓ! குரு குலத்தின் மகனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. பெரும் ஞானம், புனிதச் செயல்கள், தவச் செல்வம், சிறந்த குருதி, வேதங்கள் மற்றும் அதன் அங்கங்களில் அறிவு, பக்தி, வயது, பெரும் நாநயம் ஆகியவற்றைக் குறித்த பல்வேறு உரையாடல்களை நீ கேட்டிருக்கிறாய்.(6,7) மீண்டும் நீ கவலையில் உன் மனத்தை நிலைக்கச் செய்யாதே. ஞானம் கொண்ட ஒருவன் ஒருபோதும் தீயூழால் கலங்கமாட்டான். தெய்வீக வடிவைக் கொண்ட நாரதரிடமிருந்து தேவ புதிர்கள் {ரகசியங்களை} நீ கேட்டிருக்கிறாய்.(8) உன் பிள்ளைகள் அனைவரும், க்ஷத்திரிய நடைமுறைகளை நோற்றதன் மூலம் ஆயுதங்களால் புனிதப்படுத்தப்பட்ட மங்கல கதியை அடைந்தனர்.(9) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான இந்த யுதிஷ்டிரன், தன் தம்பிகள், மனைவிகள் மற்றும் உற்றார் உறவினருடன் உன் அனுமதிக்காகக் காத்திருக்கிறான்.(10) நீ இவனை அனுப்புவாயாக. அவன் தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்று அதை ஆளட்டும். இவ்வாறு காட்டில் வசித்தவாறே இவர்கள் ஒரு மாதத்தைக் கடத்திவிட்டனர்.(11) ஓ! மன்னா, அரசுரிமையெனும் நிலை எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். ஓ! குரு குலத்தோனே, ஒரு நாடு பல பகைவர்களைக் கொண்டதாகும்" என்றார் {வியாசர்}.(12)

ஒப்பற்ற சக்தி கொண்ட வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், வாக்கை நன்கு அறிந்தவனுமான குரு மன்னன் {திருதராஷ்டிரன்}, யுதிஷ்டிரனை அழைத்து, அவனிடம்,(13) "ஓ! அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ உன் தம்பிகளுடன் சேர்ந்து நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, உன் கருணையின் மூலம் என்வழியில் இனியும் எந்தத் துன்பமும் நிற்கவில்லை.(14) ஓ! மகனே, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} இருக்கையில் நான் உன்னோடு இருந்ததைப் போலவே இங்கேயும் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். ஓ! கல்விமானே, உன்னை என் பாதுகாவலனாகக் கொண்டு நான் ஏற்புடைய பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கிறேன்.(15) ஒரு தந்தை தன் மகனிடம் இருந்து பெறும் தொண்டுகளனைத்தையும் நான் உன்னிடம் இருந்து பெற்றுவிட்டேன். நான் உன்னிடம் நிறைவுடன் இருக்கிறேன். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உன்னிடம் எனக்குச் சிறு நிறைவின்மையும் இல்லை. ஓ! மகனே, இனியும் எந்தத் தாமதமும் செய்யாமல் நீ செல்வாயாக.(16)

உன்னைச் சந்தித்ததில் இருந்து நான் என் தவங்களை விட்டுவிட்டேன். உன்னைச் சந்தித்தன் விளைவால் மட்டுமே தவங்களுடன் கூடிய என்னுடைய உடலை என்னால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது[1].(17) மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகளை உண்டு, நான் நோற்கும் நோன்புகளுக்கு இணையானவற்றை நோற்று வரும் உன்னுடைய தாய்மாரான இவர்கள் இருவரும் நீண்ட காலம் உயிரோடு இருக்க மாட்டார்கள்.(18) உன்னை நான் சந்தித்தன் (பலன்) மூலமும், வியாசரின் தவப் பலத்தின் மூலமும் மறுமையில் வசித்தவர்களான என் பிள்ளைகளும், பிறரும் எங்களால் காணப்பட்டனர்.(19) ஓ! பாவமற்றவனே, என் வாழ்வின் நோக்கத்தை நான் எட்டிவிட்டேன். நான் இப்போது கடுந்தவங்களைப் பயில்வதில் என்ன நிறுவிக்கொள்ள நான் விரும்புகிறேன். எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்.(20) ஈமப்பிண்டம், புகழ், சாதனைகள் மற்றும் நமது மூதாதையரின் குலம் ஆகியவை இப்போதும் உன்னையே சார்ந்திருக்கின்றன. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இன்றோ, நாளையோ நீ புறப்படுவாயாக. ஓ! மகனே {யுதிஷ்டிரா}, தாமதிக்காதே.(21) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மன்னர்களின் கடமைகள் என்னென்ன என்பதை நீ மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறாய். இன்னும் நான் வேறு என்ன உனக்குச் சொல்ல முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஓ! பெரும்பலம் கொண்டவனே, இனியும், உன்னிடம் இருந்து எந்தத் தேவையும் எனக்கில்லை" என்றான் {திருதராஷ்டிரன்}".(22)

[1] கும்பகோணம் பதிப்பில், "இங்கு உன்னைக் கண்டபின் நான் தவத்தை விட்டுவிட்டேன். தவம் செய்து கொண்டிருந்த சரீரமும் உன்னைக் கண்டபின் மறுபடியும் போஷிக்கப்பட்டது" என்றிருக்கிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொன்ன அந்த (முதிய) ஏகாதிபதியிடம், மன்னன் யுதிஷ்டிரன், "ஓ! அறத்தின் ஒவ்வொரு விதியையும் அறிந்தவரே, இவ்வழியில் என்னை நீர் கைவிடுதல் உமக்குத் தகாது. நான் எந்தக் குற்றத்தையும் செய்த குற்றவாளியில்லை.(23) என் சகோதரர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அவர்கள் விருப்பபடி செல்லட்டும். உறுதியான நோன்புகளுடன் நான் உமக்கும், என்னிரு தாய்மாருக்கும் பணிவிடை செய்வேன்" என்று மறுமொழி கூறினான்.(24)

அப்போது காந்தாரி {யுதிஷ்டிரனிடம்} அவனிடம், "ஓ! மகனே, இவ்வாறு வேண்டாம். கேட்பாயாக, குரு குலம் இப்போது உன்னையே சார்ந்திருக்கிறது. என்னுடைய மாமனாரின் ஈமப் பிண்டமும் உன்னையே சார்ந்திருக்கிறது. ஓ! மகனே, நீ செல்வாயாக.(25) நாங்கள் உன்னால் போதுமான அளவுக்குத் தொண்டாற்றப்பட்டு, கௌரவிக்கப்பட்டிருக்கிறோம். மன்னர் {திருதராஷ்டிரர்} சொல்வதையே நீ செய்ய வேண்டும். உண்மையில், ஓ! மகனே, நீ உன் தந்தையின் {திருதராஷ்டிரரின்} ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்" என்றாள்".(26)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், "காந்தாரியால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், அன்புக்கண்ணீரால் குளித்த கண்களைத் துடைத்துக் கொண்டு, புலம்பியபடியே இந்தச் சொற்களைச் சொன்னான்,(27) "மன்னரும், பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும் என்னைக் கைவிடுகின்றனர். துயரில் நிறைந்திருக்கும் என்னால் எவ்வாறு உங்களை விட்டுச் செல்ல முடியும்?(28) எனினும், ஓ! நீதிமிக்கப் பெண்ணே, அதே வேளையில் நான் உன் தவங்களை ஒருபோதும் தடுக்கத் துணிய மாட்டேன். தவங்களைவிட உயர்ந்தன வேறேதும் இல்லை. தவங்களின் மூலமே ஒருவன் பரமனை அடைகிறான்.(29) ஓ! ராணி, என் இதயம் இனியும் முன்பைப் போல நாட்டை நோக்கித் திரும்பவில்லை. இப்போது என் மனம் முழுமையாகத் தவங்களிலேயே நிலைத்திருக்கிறது.(30) மொத்த பூமியும் இப்போது வெறுமையாக இருக்கிறது. ஓ! மங்கலப் பெண்மணியே, அவள் {பூமாதேவி} இனியும் என்னை நிறைவடையச் செய்யவில்லை. நம் உற்றார் உறவனரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. நமது பலம் முன்பைப்போல இல்லை.(31) பாஞ்சாலர்கள் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றனர். பெயரளவில் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள். ஓ! மங்கலப் பெண்மணியே, அவற்றை மறுசீரமைப்பதிலும், வளர்ச்சியிலும் துணை செய்யக்கூடிய எவரையும் நான் காணவில்லை.(32) அவர்கள் அனைவரும் போர்க்களத்தில் துரோணரால் எரிக்கப்பட்டுச் சாம்பலாகிவிட்டனர். எஞ்சியிருந்தவர்களும் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமரால்} இரவில் கொல்லப்பட்டனர்.(33) எங்கள் நண்பர்களாக இருந்த சேதிகளும், மத்ஸ்யர்களும் இப்போது {உயிருடன்} இல்லை. வாசுவதேவன் {கிருஷ்ணன்} காத்ததால் விருஷ்ணி இனக்குழு மட்டுமே எஞ்சியிருக்கிறது.(34) விருஷ்ணிகளைக் கண்டு மட்டுமே நான் வாழ விரும்புகிறேன். எனினும், அறம், செல்வம் மற்றும் இன்பத்தை ஈட்டுவதில் எனக்குரிய விருப்பத்தின் காரணமாகவே நான் உயிர்வாழ விரும்புகிறேன். நீ எங்கள் அனைவரின் மீதும் மங்கலப் பார்வையைச் செலுத்துவாயாக. உன்னைப் பார்ப்பதே எங்களுக்குக் கடினமாகும்.(35) மன்னர், மிகக் கடுமையானவையும், தாங்கிக் கொள்ள முடியாதவையுமான தவப்பயிற்சியைத் தொடங்கப் போகிறார்" என்றான் {யுதிஷ்டிரன்}.

இந்தச் சொற்களைக் கேட்டவனும், போரின் தலைவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சகாதேவன்,(36) கண்ணீரில் குளித்த கண்களுடன் யுதிஷ்டிரனிடம், "ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் என் தாயை விட்டுச் செல்லத் துணியேன்.(37) நீர் விரைவாகத் தலைநகரம் திரும்புவீராக. ஓ! பலமிக்கவரே, நான் தவங்களைப் பயில்வேன். இங்கேயே தவங்களின் மூலம் நான் என் உடலை மெலியச் செய்து,(38) மன்னர் மற்றும் என்னுடைய தாய்மார்களான இவர்களின் பாதங்களுக்குத் தொண்டாற்றுவதில் ஈடுபடுவேன்" என்றான்.

அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரனைத் {சகாதேவனைத்} தழுவிய பிறகு குந்தி, "ஓ! மகனே, செல்வாயாக. இவ்வாறு பேசாதே.(39) நான் சொல்வதைச் செய்வாயாக. நீங்கள் அனைவரும் இங்கிருந்து செல்வீராக. அமைதி உங்களுடையதாகட்டும். மகன்களே, மகிழ்ச்சி உங்களுடையதாகட்டும்.(40) நீங்கள் இங்கே தங்கினால் எங்கள் தவங்கள் தடைபடும். நான் உன்னிடம் கொண்டுள்ள பற்றின் காரணமாக உயர்வான என் தவங்களில் இருந்து நான் வீழ்ந்துவிடுவேன்.(41) எனவே, ஓ! மகனே, எங்களை விட்டுச் செல்வாயாக. ஓ! பெரும்பலம் கொண்டவனே, எங்களுக்கிருக்கும் வாழ்நாள் காலம் சிறிதே" என்றாள்.(42) இவற்றாலும், குந்தியின் இன்னும் பல்வேறு பேச்சுகளாலும், சகாதேவன் மற்றும் மன்னன் யுதிஷ்டிரனின் மனங்கள் நன்கு நிலைநிறுத்தப்பட்டன. குருகுலத்தில் முதன்மையான அவர்கள், தங்கள் தாயிடமும், (முதிய) ஏகாதிபதியிடமும் அனுமதியைப பெற்றுக் கொண்டு, பின்னவர்களை வணங்கி, விடைபெற்றுக் கொள்ளத் தொடங்கினர்.(43)

யுதிஷ்டிரன், "மங்கல ஆசிகளால் மகிழ்ச்சியடைந்த நாங்கள் தலைநகரத்திற்குத் திரும்பப் போகிறோம். உண்மையில், ஓ! மன்னா, உமது அனுமதியைப் பெற்றுக் கொண்டு எங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நாங்கள் இந்த ஆசிரமத்தை விட்டகல்வோம்" என்றான்.(44)

உயர் ஆன்மா கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்ட அரச முனி திருதராஷ்டிரன், யுதிஷ்டிரனை ஆசீர்வதித்து, அவனுக்கு அனுமதி அளித்தான்.(45) பெரும்பலம் கொண்டோர் அனைவரிலும் முதன்மையான பீமனை மன்னன் {திருதராஷ்டிரன்} தேற்றினான். பெருஞ்சக்தி கொண்டவனும், பெரும் நுண்ணறிவுமிக்கவனுமான பீமன், மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} தன் பணிவைக் காட்டினான்.(46) அர்ஜுனனைத் தழுவிக் கொண்டு, மனிதர்களில் முதன்மையானவர்களான இரட்டையர்களையும் கட்டிப் பிடித்து, மீண்டும் மீண்டும் அவர்களுக்கு ஆசிகூறிய குரு மன்னன் அவர்கள் புறப்படுவதற்கான அனுமதியையும் கொடுத்தான்.(47)

அவர்கள் காந்தாரியின் பாதத்தையும் வழிபட்டு அவளிடமும் ஆசிகளைப் பெற்றனர். அப்போது அவர்களுடைய அன்னனையான குந்தி, அவர்களுடைய தலையை முகர்ந்து பார்த்து அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினாள். பிறகு தாயிடம் பால் குடிக்கத் தடை செய்யப்பட்ட கன்றுகளைப் போல அவர்கள் மன்னனை {திருதராஷ்டிரனை} வலம்வந்தனர். உண்மையில் அவர்கள் அவனை நிலைத்த பார்வையுடன் கண்டு மீண்டும் மீண்டும் அவனை வலம் வந்தனர்.(48,49) அப்போது திரௌபதியின் தலைமையிலான அந்தக் கௌரவக் குடும்பத்துப் பெண்கள் அனைவரும், சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி மாமனாரை வழிபட்டு. அவனிடம் அனுமதி பெற்றுக் கொண்டனர்.(50) காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் ஒவ்வொருவரையும் தழுவி அவர்களுக்கு ஆசிகூறி, விடை கொடுத்து அனுப்பினர். அவர்களுடைய மாமியார் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொன்னாள். விடைபெற்றுக் கொண்ட அவர்கள் தங்கள் கணவர்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.(51)

அப்போது அங்கிருந்த தேர்வீரர்கள், "பூட்டுங்கள், பூட்டுங்கள்" என்று சொன்ன உரத்த ஒலியும், ஓட்டகங்கள் மற்றும் குதிரைகளின் ஒலிகளும் கேட்டன.(52) மன்னன் யுதிஷ்டிரன், தன் மனைவிகளோடும், துருப்புகளுடனும், உற்றார் அனைவருடனும் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(53)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 36ல் உள்ள சுலோகங்கள் : 53

*********புத்ரதர்சன உப பர்வம் முற்றும்********* 


ஆங்கிலத்தில் | In English