Tuesday, January 07, 2020

தாயாரின் சிராத்தம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 39

Sraddha of mother! | Asramavasika-Parva-Section-39 | Mahabharata In Tamil

(நாரதாகமன பர்வம் - 3)


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனை எரித்தது மந்திராக்னி என்பதை விளக்கிய நாரதர்; திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் யுயுத்சுவும், குந்திக்கு யுதிஷ்டிரனும் தர்ப்பணம் ஸ்ராத்தம் முதலியவற்றைச் செய்தது; அதன் பிறகு நகரம் திரும்பி ஆட்சிபுரிந்தது...


நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, "மன்னன் {திருதராஷ்டிரன்} புனிதமற்ற நெருப்பால் எரித்துக் கொல்லப்படவில்லை. இதை நான் அங்கேயே கேட்டேன். ஓ! பாரதா, விசித்திரவீரியனின் {விசித்திரவீரியனின் மகனான திருதராஷ்டிரனின்} விதி அவ்வாறானதாக இல்லை.(1) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தவனுமான அந்த முதிய மன்னன் {திருதராஷ்டிரன்}, (கங்காத்வாரத்தில் இருந்து திரும்பிய பிறகு) காட்டுக்குள் தனியாக நுழைந்து, முறையாக வேள்வி நெருப்புகளைத் தூண்டச் செய்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். தனது புனிதச் சடங்குகள் அனைத்தையும் செய்துவிட்டு அவைகள் அனைத்தையும் அவன் புறக்கணித்தான்.(2) பிறகு, ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, அவன் தன்னோடு வைத்திருந்த யாஜக பிராமணர்கள், அந்த நெருப்புகளைக் காட்டின் தனிமையான இடத்தில் வீசிவிட்டு, வேறு குற்றேவல்களை விரும்பி அங்கிருந்து சென்று விட்டனர்.(3)


இவ்வாறு காட்டில் வீசப்பட்ட நெருப்பு வளர்ந்தது. பிறகு அஃது ஒரு பெரிய காட்டுத்தீயானது. கங்கைக் கரையில் வசிக்கும் தவசிகளிடம் நான் கேட்டது இதுவே.(4) ஓ! பாரதர்களின் தலைவா, தன்னுடைய (புனித) நெருப்புடன் சேர்ந்தே, நான் ஏற்கனவே சொன்னது போல அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} கங்கைக் கரையில் மரணமடைந்தான்.(5) ஓ! பாவமற்றவனே, ஓ! யுதிஷ்டிரா, பாகீரதியின் புனிதக் கரைகளில் நான் கண்ட தவசிகள் சொன்னது இதுவே.(6)

ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வாறு மன்னன் திருதராஷ்டிரன், தன்னுடைய சொந்த புனித நெருப்புடன் கலந்து இவ்வுலகில் இருந்து சென்று தனதாகியிருக்கும் அந்த உயர்ந்த கதியை அடைந்தான்.(7) ஓ! மனிதர்களின் தலைவா, உன் தாயார் {குந்தி}, பெரியோருக்கு ஆற்றிய தொண்டின் மூலம் பெரும் வெற்றியை அடைந்தாள். இதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.(8) ஓ! மன்னர்களின் மன்னா, அவர்களைக் கௌரவிக்கும் வகையில் உன் தம்பிகளுடன் சேர்ந்து நீர்க்கடன்களைச் செய்வதே இப்போது உனக்குத் தகும். எனவே, இறுதியில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படட்டும்" என்றார் {நாரதர்}".(9)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அப்போது மனிதர்களில் முதன்மையானவனும், பாண்டவர்களின் சுமைகளைத் தாங்குபவனுமான அந்தப் பூமியின் தலைவன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகள் மற்றும் குடும்பத்துப் பெண்கள் அனைவரின் துணையுடன் வெளியே சென்றான்.(10) நகர மற்றும் மாகாணவாசிகளும், தங்கள் பற்றுறுதியினால் {விசுவாசத்தினால்} தூண்டப்பட்டவர்களாக வெளியே சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒன்றையாடையை மட்டுமே உடுத்திக் கொண்டு கங்கைக் கரையை நோக்கிச் சென்றனர்.(11) பிறகு யுயுத்சுவைத் தங்கள் தலைமையில் கொண்ட மனிதர்களில் முதன்மையானவர்கள் அந்த ஓடைக்குள் மூழ்கி, அந்த உயர் ஆன்ம மன்னனுக்கு நீர்க்காணிக்கைகளைக் கொடுக்கத் தொடங்கினர். மேலும் அவர்கள் அதே போன்ற காணிக்கைகளைக் காந்தாரி மற்றும் பிருதையின் {குந்தியின்} பெயர்களைத் தனித்தனியே சொல்லி அவர்களின் குடும்பங்களையும் குறிப்பிட்டுச் சொல்லி கொடுத்தனர்.(12)

வாழ்வைத் தூய்மையாக்கும் அந்தச் சடங்குகளைச் செய்த பிறகு அவர்கள் திரும்பினாலும் தங்கள் தலைநகருக்குள் திரும்பாமல், அதற்கு வெளியே தங்கள் வசிப்பிடத்தை அமைத்தனர். இறந்தோரைத் தகனம் செய்வது தொடர்பான விதிகளை நன்கறிந்தவர்களும், நம்பிக்கைக்குரியவர்களுமான எண்ணற்ற மக்களை அந்த முதிய மன்னன் {திருதராஷ்டிரன்} எரிந்து இறந்த இடமான கங்கா துவாரத்திற்கு அனுப்பினான்.(13) முன்பே அந்த மனிதர்களுக்கு  வெகுமதிகளை அளித்த மன்னன் {யுதிஷ்டிரன்}, இன்னும் எஞ்சியிருந்த திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தியின் உடல்களுக்குத் தகனச் சடங்குகளைச் செய்யுமாறு அவர்களுக்கு ஆணையிட்டான்.(14) பனிரெண்டாம் நாளில் முறையாகத் தூய்மை செய்து கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இறந்து போன தன் உறவினர்களுக்கு அபரிமிதமான கொடைகள் அடங்கிய சிராத்தங்களை முறையாகச் செய்தான்.(15)

திருதராஷ்டிரனைக் குறிப்பிட்டு பொன்னாலான, வெள்ளியாலான பல கொடைகளையும், பசுக்கள் மற்றும் விலைமதிப்புமிக்கப் படுக்கை உள்ளிட்ட கொடைகளையும் கொடுத்தான்.(16) பெரும் சக்தி கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, காந்தாரி மற்றும் பிருதையின் பெயர்களைச் சொல்லி பல சிறந்த கொடைகளை அளித்தான்.(17) ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பியதையும், விரும்பியதற்கு அதிகமானவற்றையும் பெற்றான். படுக்கைகள், உணவு, தேர்கள், வாகனங்கள், ரத்தினங்கள், செல்வம் ஆகியவனவும் அபரிமிதமாகக் கொடையளிக்கப்பட்டன.(18)

உண்மையில் மன்னன் {யுதிஷ்டிரன்}, தன்னிரு தாய்மாரையும் குறிப்பிட்டுத் தேர்களையும், வாகனங்களையும், ஆடைகளையும் மறைப்புகளையும், பல்வேறு வகை உணவுகளையும், பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பெண் பணியாட்களையும் கொடையளித்தான்.(19) இவ்வாறு பல்வேறு வகையான கொடைகளை அபரிமிதமாக அளித்த அந்தப் பூமியின் தலைவன், அதன் பிறகு, யானையின் பெயரால் அழைக்கப்படும் தன் தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான்.(20) மன்னனின் ஆணையின் பேரில் கங்கைக் கரைக்குச் சென்றிருந்த மனிதர்கள் அனைவரும், மன்னன் மற்றும் இரு ராணியரின் உடல்களில் எஞ்சியவற்றை {எலும்புகளைத்} (தகனம் மூலம்) முறையாக அப்புறப்படுத்தினர்.(21)

உடல்களில் எஞ்சியிருந்த அவற்றை {எலும்புகளை} மாலைகள் மற்றும் பல்வேறு வகை நறுமணப்பொருட்களுடன் உரிய முறையில் கௌரவித்து, அவற்றை அப்புறப்படுத்தி {தகனம் செய்து}, தங்கள் பணியை முடித்துவிட்டதை அவர்கள் யுதிஷ்டிரனுக்குத் தெரிவித்தனர்.(22) பெரும் முனிவரான நாரதர், அற ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனுக்கு ஆறுதலளித்துவிட்டு, தான் விரும்பிய இடத்திற்குச் சென்றுவிட்டார்.(23) இவ்வாறே மன்னன் திருதராஷ்டிரன் நகரத்தில் பதினைந்து வருடங்களையும், காட்டில் மூன்று வருடங்களையும் கழித்து இவ்வுலகில் இருந்து விடைபெற்றுச் சென்றான்.(24)

போரில் தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்த அவன் {யுதிஷ்டிரன்}, தன் உற்றார் உறவினர், நண்பர்கள், பங்காளிகள் மற்றும் தன் சொந்த மக்களைக் கௌரவிக்கும் வகையில் பல கொடைகளை அளித்தான்.(25) மன்னன் யுதிஷ்டிரன், தன் பெரிய தந்தையின் {திருதராஷ்டிரனின்} இறப்புக்குப் பிறகு மிகவும் உற்சாகமற்றவனானான். தன் உற்றார் உறவினரை இழந்த அவன் ஏதோவொருவாறு அரசெனும் சுமையைச் சுமந்தான்.(26) ஒருவன் ஆஸ்ரமவாஸிக பர்வத்தைக் குவிந்த கவனத்துடன் கேட்க வேண்டும், சொல்லப்படுவதைக் கேட்ட பிறகு அவன் பிராமணர்களுக்கு ஹவிஸ்யம் உண்ணக் கொடுத்து, நறுமணப் பொருட்கள் மற்றும் மலர்மாலைகளால் அவர்களைக் கௌரவிக்க வேண்டும்" {என்றார் வைசம்பாயனர்}.(27)


ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 39ல் உள்ள சுலோகங்கள் : 27


*********நாரதாகமன உபபர்வம் முற்றும்*********
***ஆஸ்ரமவாஸிக பர்வம் முற்றிற்று***
*********அடுத்து மௌஸல பர்வம்*********


ஆங்கிலத்தில் | In English