Tuesday, January 07, 2020

இரும்பு உலக்கை! - மௌஸலபர்வம் பகுதி – 1

Iron bolt! | Mausala-Parva-Section-01 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : தீய சகுனங்களைக் கண்ட யுதிஷ்டிரன்; பலராமன், கிருஷ்ணன் ஆகியோரின் முக்தியையும், யாதவர்களின் அழிவையும் கேட்டது; துவாரகைக்கு வந்த விஸ்வாமித்ரர், கண்வர் மற்றும் நாரதர்; யது குலத்தை அழிக்கும் இரும்பு உலக்கை; உலக்கையைப் பொடியாக்கிக் கடலில் கொட்டிய யாதவர்கள்...


ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(போருக்குப் பிறகு) முப்பத்தாறு ஆண்டுகள் {36} ஆனபோது, குருக்களைத் திளைக்கச் செய்பவனான யுதிஷ்டிரன் வழக்கத்திற்கு மாறான தீய சகுனங்கள் பலவற்றைக் கண்டான்.(1) காற்று, உலர்ந்ததாகவும் {வெப்பமாகவும்}, வலுவானதாகவும், பருக்கைக் கற்களைப் பொழிந்து கொண்டிருப்பதாகவும் அனைத்துப் பக்கங்களில் வீசிக் கொண்டிருந்தது. பறவைகள் இடமிருந்து வலமாக வட்ட கதியில் சுழலத் தொடங்கின.(2) பேராறுகள் எதிர் திசைகளில் ஓடின. அனைத்துப் பக்கங்களிலும் அடிவானமானது எப்போதும் மூடுபனியால் மறைக்கப்பட்டிருந்தது. (சுடர்மிக்க) கரிகளைப் பொழிந்தபடியே எரிகொள்ளிகள் வானத்தில் இருந்து பூமியில் விழுந்தன.(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, சூரிய வட்டில் எப்போதும் புழுதியால் மறைக்கப்பட்டதாகவே தெரிந்தது. அஃது உதிக்கும்போது, நாள் சமைக்கும் அந்தப் பெரும் ஒளிக்கோள் காந்தியை இழந்ததாகவும், (மனிதர்களின்) தலையற்ற உடல்களால் கடக்கப்படுவது போலவும் தெரிந்தது.(4) ஒவ்வொரு நாளும் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டை சுற்றிலும் கடுமையான ஒளி வளையங்கள் தென்பட்டன. அந்த வளைகளில் மூன்று நிறங்கள் தெரிந்தன. அவற்றின் முனைகள் கருப்பாகவும், முரடாகவும், நிறத்தில் செஞ்சாம்பல் நிறத்திலும் இருந்தன. ஓ! மன்னா, அச்சத்தையும், ஆபத்தையும் முன்குறிப்பிடுபவையான இவையும், இன்னும் பல தீச்சகுனங்களும் காணப்பட்டு, மனிதர்களின் இதயங்களைக் கவலையால் நிறைத்தன.(6)


சிறிது காலத்திற்குப் பிறகு, குரு மன்னன் யுதிஷ்டிரன், இரும்பு உலக்கையின் விளைவால் விருஷ்ணிகளுக்கு ஏற்பட்ட பேரழிவைக் குறித்துக் கேள்விப்பட்டான்.(7) பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, ராமனும் மட்டுமே உயிருடன் தப்பினர் என்பதைக் கேட்டு, தன் தம்பிகளை அழைத்து, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களோடு ஆலோசித்தான்.(8) ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அவர்கள், பிரம்மதண்டத்தின் தண்டனையால் {பிராமணச் சாபத்தால்} விருஷ்ணிகள் அழிவைச் சந்தித்தனர் என்பதைக் கேட்டுப் பெரிதும் துயரடைந்தனர்.(9) கடல் வற்றிப் போவதைப் போல வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மரணத்தை அந்த வீரர்களால் நம்ப முடியவில்லை. உண்மையில் அந்தச் சாரங்கபாணியின் அழிவு அவர்களுக்கு நம்ப முடியாததாக இருந்தது.(10) இரும்பு உலக்கை குறித்து அறிந்த பாண்டவர்கள், துன்பம் மற்றும் கவலையால் நிறைந்தனர். உண்மையில், அவர்கள் முற்றிலும் உற்சாகமற்றவர்களாக, வெறுமையான துன்பத்தில் துளைக்கப்பட்டவர்களாகக் கீழே அமர்ந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(11)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "உண்மையில், ஓ! புனிதமானவரே, அந்தகர்களும், விருஷ்ணிகளும், பெருந்தேர்வீரர்களான போஜர்களும், வாசுதேவன் {கிருஷ்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே எவ்வாறு அழிவை அடைந்தனர்?" என்று கேட்டான்.(12)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "(பெரும்போர் முடிந்து) முப்பத்தாறு ஆண்டுகளை {36} அடைந்த போது, விருஷ்ணிகளை ஒரு பேரிடர் மூழ்கடித்தது. காலத்தால் தூண்டப்பட்ட அவர்கள் அனைவரும் இரும்பு உலக்கையின் விளைவால் அழிவைச் சந்தித்தனர்".(13)

ஜனமேஜயன், "விருஷ்ணிகள், அந்தகர்கள் மற்றும் போஜர்கள் உள்ளிட்ட அந்த வீரர்கள் யாரால் சபிக்கப்பட்டு அழிவை அடைந்தனர்? ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இதை நீர் எனக்கு விரிவாகச் சொல்வீராக" என்று கேட்டான்.(14)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஒருநாள், சாம்பனையும் எண்ணிக்கையில் ஒருவனாய் தங்களுக்கு மத்தியில் வைத்திருந்த விருஷ்ணி வீரர்கள், விஷ்வாமித்ரரும், கண்வரும், நாரதரும் துவாரகைக்கு வருவதைக் கண்டனர்.(15) தேவர்களால் தரிக்கப்படும் தண்டக்கோலால் பீடிக்கப்பட்ட அந்த வீரர்கள், சாம்பனைப் பெண் போல வேடமிட வைத்து அந்தத் தவசிகளை அணுகி, அவர்களிடம்,(16) "இவள் அளவிலா சக்தி கொண்டவனும், ஒரு மகனை விரும்புபவனுமான பப்ருவின் மனைவியாவாள். முனிவர்களே, இவள் என்ன பெறுவாள் என்பதை நீங்கள் உறுதியாக அறிவீர்களா?" என்று கேட்டனர்.(17)

இவ்வாறான வஞ்சனை முயற்சிக்கு அந்தத் தவசிகள் என்ன செய்தனர் என்பதைக் கேட்பாயாக,(18) "சாம்பன் என்ற பெயரைக் கொண்டவனும், வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வாரிசுமான இவன், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவுக்கான ஓர் இரும்பு உலக்கையைப் பெறுவான்.(19) தீயவர்களே, கொடூரர்களே, செருக்கால் போதையுண்டிருக்கும் நீங்கள், உங்கள் குலத்தில் ராமனையும் {பலராமனையும்}, ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} தவிர அனைவரையும் இந்த இரும்பு உலக்கையால் அழிப்பீர்கள்.(20) கலப்பையைத் தரிக்கும் அருளப்பட்ட வீரன் {பலராமன்}, தன் உடலைக் கைவிட்டுப் பெருங்காட்டில் நுழைவான், அதே வேளையில் ஜரன் என்ற பெயரைக் கொண்ட ஒரு வேடன் தரையில் கிடக்கும் உயர் ஆன்மக் கிருஷ்ணனைத் துளைப்பான்" என்றனர்.(21)

அந்தத் தீயவர்களால் வஞ்சிக்க முயற்சி செய்யப்பட்ட அந்தத் தவசிகள், கண்கள் சிவந்த கோபத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, இந்தச் சொற்களைச் சொன்னார்கள். இவ்வாறு சொல்லிவிட்டு அவர்கள் கேசவனை {கிருஷ்ணனைக்} காணச் சென்றனர்.(22) நடந்ததை அறிந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, விருஷ்ணிகள் அனைவரையும் அழைத்து, அது குறித்து அவர்களுக்குச் சொன்னான். பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், தன் குலத்தின் முடிவை முழுமையாக அறிந்தவனுமான அவன் {கிருஷ்ணன்}, விதிக்கப்பட்டதெதுவோ அது நிச்சயம் நடக்கும் என்று சொன்னான்.(23) ரிஷிகேசன் இவ்வாறு சொல்லிவிட்டு தன் மாளிகைக்குள் நுழைந்தான். அண்டத்தின் தலைவன் வேறுவகையில் விதிக்க விரும்பவில்லை.(24)

அடுத்த நாளில் சாம்பன் உண்மையில் எதன் மூலம் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் குலத்தில் ஒவ்வொருவரும் சாம்பலாக எரிக்கப்படுவார்களோ அதுவேயான ஓர் இரும்பு உலக்கையைப் பெற்றான்.(25) உண்மையில் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவுக்கான அந்தச் சாபத்தின் மூலம் பெரும் யமதூதன் போலத் தெரிந்ததும், கடுமையானதும் ஓர் இரும்பு உலக்கையைச் சாம்பன் பெற்றான். மன்னனுக்கு இந்தச் செய்தி முறையாகத் தெரிவிக்கப்பட்டது.(26) மனத்தில் உள்ள பெரும் துயரத்துடன் மன்னர் (உக்ரசேனர்) அந்த இரும்பு உலக்கையைப் பொடியாக {மாவு போலக்} குறைக்கச் செய்தான். ஓ! மன்னா, அந்தப் பொடியை கடலுக்கள் வீசுவதில் மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.(27) ஆஹுகன், ஜனார்த்தனன், ராமன், உயர் ஆன்ம பப்ரு ஆகியோரின் ஆணையின் பேரில், அந்த நாள் முதல் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களுக்கு மத்தியில் எவரும் மதுவும், போதையூட்டும் எவ்வகைச் சாரயமும் உற்பத்தி செய்யக்கூடாது, கமுக்கமாக மதுவையும், சாராயத்தையும் உற்பத்தி செய்பவர்கள், தங்கள் உற்றார் உறவினர் அனைவருடன் சேர்த்து உயிரோடு கழுவேற்றப்படுவார்கள் என்று அந்த நகரம் முழுவதும் அறிவிக்கப்பட்டது.(28-30) மன்னனுக்கு அஞ்சியும், களங்கம் கற்பிக்க முடியாத செயல்களைச் செய்யும் ராமனின் {பலராமனின்} ஆணை என்பதை அறிந்தும், குடிமக்கள் அனைவரும் அந்த விதிக்ககுக் கட்டுப்பட்டு, மது மற்றும் சாராய உற்பத்தியைத் தவிர்த்தனர்[1]" {என்றார் வைசம்பாயனர்}.(31)

[1] கும்பகோணம் பதிப்பில், "ஆஹுகன், கிருஷ்ணர், பலராமர், மஹாத்மாவான பப்ரு இவர்களுடைய உத்தரவின் மேல், 'இது முதல் இந்நகரில் விருஷ்ணி குலத்தினரும், அந்தகக் குலத்தினரும் நகரவாசிகளுமான அனைவரும் கள்ளையும், சாராயத்தையும் (பானம்) செய்யக்கூடாது. எந்த மனிதனாவது பானம் செய்ததாக எங்களுக்குத் தெரிந்தால், அவன், தான் செய்ததற்காகத் தன்பந்துக்களுடன் உயிரோடு சூலத்தில் ஏற வேண்டும்' என்று பட்டணத்தில் பறையறையச் செய்தனர். பிறகு ஜனங்களெல்லாரும் அப்பொழுது மஹாத்மாவான அந்த மன்னருடைய உத்தரவை அறிந்து ராஜ பயத்தினால் நியமத்தைச் செய்து கொண்டனர்" என்றிருக்கிறது.

மௌஸலபர்வம் பகுதி – 1ல் உள்ள சுலோகங்கள் : 31

ஆங்கிலத்தில் | In English