Saturday, January 11, 2020

ஆரியன் யுதிஷ்டிரன்! - மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 3

The noble Yudhishthira! | Mahaprasthanika-Parva-Section-3 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : சொர்க்கம் செல்வதற்கு யுதிஷ்டிரனைத் தன் தேரில் ஏறச் சொன்ன இந்திரன்; நாயை விட மறுத்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனைப் புகழ்ந்த யமன்; சகோதரர்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல விரும்பிய யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அப்போது, ஆகாயத்தையும், பூமியையும் உரத்த ஒலியால் நிறைந்தபடி ஒரு தேரில் பிருதையின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} வந்த சக்ரன், அவனை அதில் ஏறச் சொன்னான்.(1) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் பூமியில் விழுந்ததைக் கண்டு, அந்த ஆயிரங்கண் தேவனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(2) "என் தம்பிகள் அனைவரும் கீழே விழுந்து விட்டனர். அவர்களும் என்னுடன் வர வேண்டும். ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, அவர்கள் அனைவரும் என்னுடன் இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை.(3) ஓ! புரந்தரா, அனைத்து ஆடம்பரங்களுக்கும் தகுந்தவளும், மென்மையானவளுமான இளவரசியும் (திரௌபதியும்) எங்களோடு வர வேண்டும். இதை அனுமதிப்பதே உனக்குத் தகும்" என்றான்.(4)


சக்ரன் {யுதிஷ்டிரனிடம்}, "உன் தம்பிகளை நீ சொர்க்கத்தில் காண்பாய். அவர்கள் உனக்கு முன்பே அங்கே சென்றுவிட்டனர். உண்மையில், கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்த்தே அவர்கள் அனைவரையும் அங்கே காண்பாய். ஓ! பாரதர்களின் தலைவா, நீ துயரடையாதே.(5) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அவர்கள் தங்கள் மனித உடல்களைக் களைந்துவிட்டு அங்கே சென்றிருக்கின்றனர். உன்னைப் பொறுத்தவரையில், நீ உன்னுடைய உடலுடனேயே அங்கே செல்ல விதிக்கப்பட்டிருக்கிறது" என்றான்.(6)

யுதிஷ்டிரன் {சக்ரனிடம்}, "ஓ! கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் தலைவா, இந்த நாய் என்னிடம் மிகுந்த அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} இருக்கிறது. இதுவும் என்னுடன் வர வேண்டும். இதனிடம் நான் இதயம் நிறைந்த கருணை கொண்டிருக்கிறேன்" என்றான்.(7)

சக்ரன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, இறவாமை, எனக்கு நிகரான நிலை, அனைத்துத் திசைகளிலும் பரந்திருக்கும் செழிப்பு, உயர்ந்த வெற்றி, சொர்க்கத்தின் இன்பங்கள் அனைத்தும் இன்று உன்னால் வெல்லப்பட்டன. இந்த நாயை நீ கைவிடுவாயாக. இதில் எந்தக் கொடுமையும் கிடையாது" என்றான்.(8)

யுதிஷ்டிரன் {சக்ரனிடம்}, "ஓ! ஆயிரங்கண் கொண்டவனே, ஓ! அறவொழுக்கம் கொண்டவனே, அறவொழுக்கம் கொண்ட ஒருவனால் நீதியற்ற ஒரு செயலைச் செய்வது மிகவும் கடினமாகும். என்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட ஒன்றைக் கைவிட்டுச் செழிப்பை அடைய நான் விரும்பவில்லை[1]" என்றான்.(9)

[1] "இந்த ஸ்லோகத்தின் முதல் வரியை சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால், "ஓர் ஆரியனுக்குத் தகாத செயலைச் செய்வதில் ஓர் ஆரியன் பெருஞ்சிரமத்தை உணர்வான்" என்று பொருள்படும். ஆர்யன் என்று இங்குச் சொல்லப்படுவது, மதிப்பு மிக்கப் பிறப்பு மற்றும் அறவொழுக்கம் கொண்ட ஒரு மனிதனைக் குறிக்கும் என்பதில் ஐயத்திற்கிடமில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மற்றவனால் செய்யக்கூடிய இழிவான இந்தக் காரியம் மேன்மைபெற்ற என்னால் செய்யமுடியாதது. எந்தச் செல்வத்தினிமித்தம் அன்புள்ள பிராணியை நான் விட வேண்டுமோ அந்தச் செல்வத்துடன் எனக்குச் சேர்க்கை வேண்டாம்" என்றிருக்கிறது.

இந்திரன் {யுதிஷ்டிரனிடம்}, "நாய்களுடன் இருக்கும் மனிதர்களுக்குச் சொர்க்கத்தில் எவ்விடமும் கிடையாது. தவிர, குரோதவாசர்கள் (என்றழைக்கப்படும் தேவர்கள்) அத்தகைய மனிதர்களின் புண்ணியங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்கின்றனர். ஓ! நீதிமானான மன்னன் யுதிஷ்டிரா, இதைச் சிந்தித்துச் செயல்படுவாயாக. நீ இந்த நாயைக் கைவிடுவாயாக. இதில் கொடுமையேதும் இல்லை" என்றான்.(10)

யுதிஷ்டிரன் {சக்ரனிடம்}, "அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒருவனைக் கைவிடுவது முடிவிலா பாவத்திற்கு வழிவகுக்கும் எனச் சொல்லப்படுகிறது. இஃது ஒரு பிராமணனைக் கொல்லும் பாவத்திற்கு நிகரானது. எனவே, ஓ! பெரும் இந்திரா, என் மகிழ்ச்சியை விரும்பி நான் இன்று இந்த நாயைக் கைவிட மாட்டேன்.(11) அச்சமடைந்தவனையோ, என்னிடம் அர்ப்பணிப்புள்ளவனையோ, என் பாதுகாப்பை நாடுபவனையோ, ஆதரவற்றவனையோ, துன்பத்தால் பீடிக்கப்பட்டவனையோ, என்னிடம் வந்தவனையோ, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதில் பலவீனனையோ, உயிரை வேண்டுபவனையோ ஒருபோதும் கைவிடமாட்டேன் என்பது என் உறுதியான நோன்பாகும். இத்தகைய ஒருவனை என் உயிர் போகும் வரை ஒருபோதும் நான் கைவிட மாட்டேன்" என்றான்.(12)

இந்திரன் {யுதிஷ்டிரனிடம்}, "ஒரு நாயால் பார்க்கப்படும் வகையில் கொடுக்கப்படும் எந்தக் கொடையும், பரப்பப்படும் எந்த வேள்வியும், வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள் எதுவும் குரோதவாசர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எனவே, நீ இந்த நாயைக் கைவிடுவாயாக. இந்த நாயைக் கைவிடுவதன் மூலம் நீ தேவர்களின் உலகை அடைவாய்.(13) ஓ! வீரா {யுதிஷ்டிரா}, உன் தம்பிகள், கிருஷ்ணை {திரௌபதி} ஆகியோரைக் கைவிட்ட நீ உன் சொந்த செயல்களால் இன்பலோகத்தை அடைந்திருக்கிறாய். ஏன் கலக்கமடைகிறாய்? நீ அனைத்தையும் துறந்துவிட்டாய். ஏன் இந்த நாயையைத் துறக்காமலிருக்கிறாய்?" என்று கேட்டான்.(14)

யுதிஷ்டிரன், "இறந்தோருடன் நட்போ, பகையோ கிடையாது என்பது உலகங்கள் அனைத்திலும் நன்கறியப்பட்டது. என் தம்பிகளும், கிருஷ்ணையும் இறந்த போது, என்னால் அவர்களை மீட்க முடியவில்லை. எனவே, நான் அவர்களைக் கைவிட்டேன். எனினும், அவர்கள் உயிரோடு இருந்தவரை அவர்களை நான் ஒருபோதும் கைவிடவில்லை.(15) ஓ! சக்ரா, பாதுகாப்பு நாடி வந்தவனை அச்சுறுத்துவது, பெண்ணைக் கொல்வது, பிராமணனுக்குரியதைக் களவாடுவது, நண்பனுக்குத் தீங்கிழைப்பது என்ற இந்த நான்கும் செயல்களும், அர்ப்பணிப்புடன் இருப்பவனைக் கைவிடுவதற்கு நிகரானவையென நான் நினைக்கிறேன்" என்றான்".(16)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்டு (நாயாக இருந்த) அறத் தேவன் மிகவும் நிறைவடைந்தவனாகப் புகழால் நிறைந்த இனிய குரலில் இந்தச் சொற்களைச் சொன்னான்.(17)

தர்மன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னர்களின் மன்னா, நீ நற்குடியில் பிறந்தவனாகவும், நுண்ணறிவையும், பாண்டுவின் நல்லொழுக்கத்தையும் கொண்டவனாக இருக்கிறாய். ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொள்வது இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.(18) ஓ! மகனே, முன்பு துவைத வனத்தில் பேராற்றல் கொண்டவர்களான உன் உடன்பிறந்தோர் இறந்தபோது என்னால் நீ சோதிக்கப்பட்டாய்.(19) உன்னுடன் பிறந்தவர்களான பீமனையும், அர்ஜுனனையும் அலட்சியம் செய்து உன் (மாற்றாந்) தாய்க்கு நன்மை செய்யுஃம விருப்பத்தில் நகுலனின் உயிரை மீட்க நீ விரும்பினாய்[2].(20) தற்போதைய நிகழ்வில் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக நினைத்து, இவனை {நாயைத்} துறப்பதற்குப் பதில் தேவர்களின் தேரையே நீ துறந்துவிட்டாய். எனவே, ஓ! மன்னா, சொர்க்கமேதும் உனக்கு நிகரானதல்ல.(21) எனவே, ஓ! பாரதா, வற்றாத இன்பங்களைக் கொண்ட உலகங்கள் உனதாகின. ஓ! பாரதர்களின் தலைவா, நீ அவற்றை வென்றுவிட்டாய், உன்னுடைய கதி உயர்ந்ததும், தெய்வீகமானதுமாகும்" என்றான் {யமன்}".(22)

[2] "நகுலன் மாத்ரிக்கும், அவளது மூதாதையருக்குமான தர்ப்பணங்களைச் செய்ய வேண்டும என்பதற்காக யுதிஷ்டிரன் அவனது உயிரை வேண்டினான். அர்ஜுனனோ, பீமனோ அதற்குப் பயன்பட மாட்டார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அப்போது தர்மன், சக்ரன், மருத்துகள், அஸ்வினிகள், வேறு தேவர்கள், தெய்வீக முனிவர்கள் ஆகியோர் யுதிஷ்டிரனைத் தேரில் ஏறச் செய்து சொர்க்கத்திற்குச் சென்றனர். வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், தங்கள் விருப்பத்தின் பேரில் எந்த இடத்திற்கும் செல்ல வல்லவர்களுமான அவர்கள் தங்கள் தங்களுக்குரிய தேர்களைச் செலுத்தினார்கள்.(23,24) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனான மன்னன் யுதிஷ்டிரன், தன் பிரகாசத்தால் மொத்த ஆகாயத்தையும் ஒளிபெறச் செய்து, விரைவாக ஏறி அந்தத் தேரைச் செலுத்தினான்.(25)

பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானரும், தவம் கொண்டவரும், உலகங்கள் அனைத்தையும் அறிந்தவருமான நாரதர், அப்போது தேவ கூட்டத்திற்கு மத்தியில் இந்தச் சொற்களைச் சொன்னார்:(26)"இங்கே இருக்கும் அரசமுனிகள் அனைவரும், யுதிஷ்டிரனுடைய சாதனைகளால் கடக்கப்பட்ட சாதனைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.(27) இவன் தன் புகழாலும், காந்தியாலும், ஒழுக்கமெனும் செல்வத்தாலும் உலகங்கள் அனைத்தையும் மறைத்து, தன் சொந்த (மனித) உடலுடன் சொர்க்கத்தை அடைந்தான். பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரைத்} தவிர வேறு எவரும் இதை அடைந்ததாக நாம் கேள்விப்பட்டதில்லை[3]" என்றார்.(28)

[3] கும்பகோணம் பதிப்பில், "முன்னோர்களான ராஜரிஷிகளையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கௌரவ ராஜரான யுதிஷ்டிரர் அவர்களுடைய கீர்த்தியை மறைத்துவிட்டு மேன்மை பெற்றிருக்கிறார். பாண்டவரைத் தவிர, மற்றவன் கீர்த்தியினாலும், பிரதாபத்தினாலும், நல்லொழுக்கமென்னும் செல்வத்தினாலும் உலகங்களைச் சூழ்ந்து தன் சரீரத்துடன் (இங்கு) வந்ததாக நாம் கேட்கவில்லை. பிரபுவே, நீர் பூமியிலிருக்கும்பொழுது பூமியில் தேவர்களுக்கு ஆலயங்களான எந்தத் தேஜஸுகளைப் பார்த்தீரோ அவைகளை ஆயிரக்கணக்காகப் பாரும்" என்றிருக்கிறது.

அறம் சார்ந்தவனான அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, நாரதரின் இந்தச் சொற்களைக் கேட்டு, தேவர்களையும், அங்கே இருந்த அரசமுனிகள் யாவரையும் வணங்கி,(29) "மகிழ்ச்சி நிறைந்ததோ, துன்பகரமானதோ, என் தம்பிகள் எந்த உலகத்தை இப்போது அடைந்திருக்கிறார்களோ அங்கேயே நான் செல்ல விரும்புகிறேன். நான் வேறெங்கும் செல்ல விரும்பவில்லை" என்றான்.(30)

மன்னனின் இந்தப் பேச்சைக் கேட்ட தேவர்களின் தலைவன் புரந்தரன், உன்னத அறிவால் நிறைந்த இந்தச் சொற்களைச் சொன்னான்,(31) "ஓ! மன்னர்களின் மன்னா, உன் புண்ணியச் செயல்களால் வெல்லப்பட்ட இந்த இடத்தில் நீ வாழ்வாயாக. நீ ஏன் இன்னும் மனிதப் பற்றுகளைப் பேணி வளர்க்கிறாய்?(32) எந்த மனிதனாலும் ஒருபோதும் அடைய முடியாத பெரும் வெற்றியை நீ அடைந்திருக்கிறாய். ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, உன்னுடன் பிறந்தோரும் இன்பலோகங்களையே வென்றிருக்கின்றனர்.(33) மனிதப் பற்றுகள் இன்னும் உன்னைத் தீண்டிக் கொண்டிருக்கின்றன. இது சொர்க்கம். தேவர்களின் உலகை அடைந்திருக்கும் தெய்வீக முனிவர்களையும், சித்தர்களையும் இதோ பார்" என்றான்.(34)

பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்ட யுதிஷ்டிரன் மீண்டும் தேவர்களின் தலைவனுக்குப் பதிலளிக்கும் வகையில்,(35) "ஓ! தைத்தியர்களை வென்றவனே, அவர்களிடமிருந்து பிரிந்திருக்கும் எங்கும் நான் வசிக்கத் துணியேன். என்னுடன் பிறந்தோர் எங்கே சென்றனரோ அங்கேயே நான் செல்ல விரும்புகிறேன்.(36) பெண்களில் முதன்மையானவளும், போதுமான விகிதங்களில் அங்கங்களைக் கொண்டவளும், கரிய நிறத்தவளும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவளும், அறவொழுக்கம் ஒழுகுபவளுமான திரௌபதி எங்கே சென்றாளோ, அங்கேயே நானும் செல்ல விரும்புகிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.(37)

மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 3ல் உள்ள சுலோகங்கள் : 37

*****மஹாப்ரஸ்தானிக பர்வம் முற்றும்*****
******அடுத்தது கடைசி பர்வமான... ஸ்வர்க்காரோஹணிக பர்வம்*****


ஆங்கிலத்தில் | In English