Saturday, January 11, 2020

யுதிஷ்டிரனின் பகைமை! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 1

The hostility of Yudhishthira! | Svargarohanika-Parva-Section-1 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : சொர்க்கத்தில் துரியோதனனைக் கண்ட யுதிஷ்டிரன்; அவனோடு வசிக்க விரும்பாமல் தன் தம்பிகள் இருக்குமிடத்தைக் காட்டுமாறு இந்திரனிடம் வேண்டியது; நாரதர் சொர்க்கத்தில் பகைமை பாராட்டக்கூடாதென்றது; யுதிஷ்டிரனின் மறுமொழி...


ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "சொர்க்கத்தை அடைந்த பிறகு, முற்காலத்தில் பாண்டவர்கள் மற்றும் திருதராஷ்டிரன் மகன்களான என் பாட்டன்மாரால் முறையாக அடையப்பட்ட உலகங்கள் என்னென்ன?(1) நான் இதைக் கேட்க விரும்புகிறேன். அற்புதச் செயல்களைச் செய்யும் பெரும் முனிவர் வியாசரின் மூலம் கற்பிக்கப்பட்ட நீர் அனைத்தையும் அறிந்திருப்பீர் என நான் நினைக்கிறேன்" என்றான்.(2)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "யுதிஷ்டிரன் முதலிய உன் பாட்டன்மார்கள், தேவர்களின் இடமான சொர்க்கத்தை அடைந்த பின்னர் என்ன செய்தனர் என்பதை இப்போது கேட்பாயாக.(8) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், சொர்க்கத்திற்கு வந்ததும், பெருஞ்செழிப்புடன் கூடிய துரியோதனன், ஒரு சிறந்த இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்டான்.(4) சூரியனைப் போன்ற பிரகாசமிக்க அவன், வீரர்களுக்குரிய புகழ் சின்னங்கள் அனைத்தையும் தரித்திருந்தான். அவன், சுடர்மிக்கப் பிரகாசத்துடன் கூடிய தேவர்கள் பலர் மற்றும் அறச்செயல்களைச் செய்யும் சாத்யர்கள் ஆகியோரின் துணையுடன் இருந்தான்.(5) யுதிஷ்டிரன், துரியோதனனையும், அவனது செழிப்பையும் கண்டு, திடீரெனச் சினத்தால் நிறைந்தவனாகப் பார்க்காமல் திரும்பினான்.(6)

அவன் தன் துணைவர்களை உரக்க அழைத்து, "பேராசை மற்றும் சிறுமதியால் களங்கப்பட்ட துரியோதனனுடன் இன்பலோகங்களைப் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை.(7) ஆழ்ந்த காட்டில் பெரிதும் பீடிக்கப்பட்டவர்களான எங்களால் மொத்த உலகிலும் உள்ள நண்பர்களும் உற்றார் உறவினரும்  இவனுக்காகவே கொல்லப்பட்டனர்.(8) அறம் சார்ந்தவளும், களங்கமற்ற குணங்களைக் கொண்டவளும், எங்கள் மனைவியுமான பாஞ்சால இளவரசி திரௌபதி, எங்கள் பெரியோர் அனைவரின் முன்னிலையில் இவனுக்காகவே சபைக்கு மத்தியில் இழுத்துவரப்பட்டாள்.(9) தேவர்களே, நான் சுயோதனனைக் காணவும் விரும்பவில்லை. என்னுடன் பிறந்தோர் எங்கிருக்கின்றனரோ அங்கேயே நான் செல்ல விரும்புகிறேன்" என்றான்.(10)

நாரதர், சிரித்துக் கொண்டே, "ஓ! மன்னர்களின் மன்னா, இஃது இவ்வாறே இருக்கவேண்டும். சொர்க்கத்தில் வசிக்கும்போது பகைமைகள் அனைத்தும் இல்லாமல் போகின்றன.(11) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, மன்னன் துரியோதனனைக் குறித்து இவ்வாறு சொல்லாதே. என் சொற்களைக் கேட்பாயாக.(12) மன்னன் துரியோதனன் இதோ இருக்கிறான். அறவோர், மற்றும் இப்போது சொர்க்கவாசிகளாக இருக்கும் மன்னர்களில் முதன்மையானோர் ஆகியோரால் தேவர்களுடன் சேர்த்து இவனும் வழிபடப்படுகிறான்.(13) போரெனும் தீயில் தன்னுடலையே ஆகுதியாக ஊற்றிய இவன், வீரர்கள் அடையும் கதியை அடைந்திருக்கிறான்.(13) பூமியில் உண்மையில் தேவர்களைப் போலவே இருந்த நீயும், உன்னுடன் பிறந்தோரும் இவனால் எப்போதும் துன்புறுத்தப்பட்டீர்கள்.(14) இருப்பினும் க்ஷத்திரிய நடைமுறைகளை நோற்றதன் மூலம் இவன் {துரியோதனன்} இந்த உலகத்தை அடைந்திருக்கிறான். அச்சம் நிறைந்த சூழ்நிலையில் பூமியின் தலைவனான இவன் அச்சமடையவில்லை.(15) ஓ! மகனே, பகடையாட்டத்தில் உனக்கு இழைக்கப்பட்ட துன்பங்களை நீ மனத்தில் கொள்ளாதே. திரௌபதியின் துன்பங்களை நினைவுகூர்வது உனக்குத் தகுந்ததல்ல.(16) உன் உற்றார் உறவினரால் போர் மற்றும் பிற சூழ்நிலைகளில் உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளையும் நினைவுகூர்வது உனக்குத் தகுந்ததல்ல.(17) கண்ணியமான தொடர்பு விதிகளின்படி இப்போது நீ துரியோதனனைச் சந்திக்க வேண்டும். ஓ! மனிதர்களின் தலைவா, இது சொர்க்கமாகும். இங்கே பகைமைகள் இருக்க முடியாது" என்றார் {நாரதர்}.(18)

இவ்வாறு நாரதரால் சொல்லப்பட்டாலும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், குரு மன்னனுமான யுதிஷ்டிரன், தன்னுடன் பிறந்தோரைக் குறித்து விசாரிக்கும் வகையில், "வீரர்களுக்காக ஒதுக்கப்படும் இந்த நித்திய உலகங்கள், அறமற்றவனும், பாவம் நிறைந்தவனும், இழிந்தவனும், நண்பர்களுக்கும், மொத்த உலகத்திற்கும் அழிவேற்படுத்தியவனுமான துரியோதனனுடையதென்றால்,(20) மொத்த பூமியில் இருந்தும் குதிரைகள், யானைகள் உள்ளிட்டவையும், மனிதர்களும் எவனுக்காக அழிக்கப்பட்டனரோ, எந்த இழிந்தவனுக்காக எங்கள் தவறுக்குளுக்குச் சிறந்த முறையில் தீர்வு காண நினைத்து கோபத்தால் எரிந்து கொண்டிருந்தோமோ அவனுக்குரியதென்றால்,(21) உயர்ந்த நோன்புகளைக் கொண்டவர்களும், உறுதிமொழிகளை நிலையாக நிறைவேற்றியவர்களும், பேச்சில் வாய்மை நிறைந்தவர்களும், துணிவுக்காப் புகழ்பெற்றவர்களும், என்னுடன் பிறந்தோருமான அந்த உயர் ஆன்ம வீரர்களால் அடையப்பட்ட உலகங்களை நான் காண விரும்புகிறேன். குந்தியின் மகனும், போரில் கலங்கப்பட முடியாதவருமான உயர் ஆன்மக் கர்ணர்,(22,23) ஓ! பிராமணரே {நாரதரே}, திருஷ்டத்யும்னன், சாத்யகி, திருஷ்டத்யும்னன் மகன்கள், க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றும்போது மரணமடைந்த பிற க்ஷத்திரியர்கள் ஆகியோர் எங்கே இருக்கின்றனர்? ஓ! நாரதரே, அவர்களை இங்கே நான் காணவில்லை. ஓ! நாரதரே, விராடர், துருபதர், திருஷ்டகேதுவின் தலைமையிலான பிற க்ஷத்திரியர்கள்,(24,25) பாஞ்சால இளவரசன் சிகண்டி, திரௌபதியின் மகன்கள், போரில் தடுக்கப்பட முடியாத அபிமன்யு ஆகியோரை நான் காண விரும்புகிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.(26)

ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 1ல் உள்ள சுலோகங்கள் : 26
இன்னும் 5 பகுதிகளே உள்ளன. அத்துடன் முழு மஹாபாரதம் நிறைவுபெறுகிறது.

ஆங்கிலத்தில் | In English