Sunday, July 14, 2013

மாளிகைக்கு தீயிட்டான் பீமன் - ஆதிபர்வம் பகுதி 150

Bhima set fire to the palace | Adi Parva - Section 150 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 8)

பதிவின் சுருக்கம் : மக்களுக்கு விருந்து படைத்த குந்தி; ஐந்து மகன்களுடன் அவ்வீட்டுக்கு வந்த வேடுவச்சி குடிமயக்கத்தில் உணர்விழந்து உறங்கியது; மாளிகைக்குத் தீயிட்ட பீமன்; சகோதரர்களையும், தாயையும் தூக்கிக் கொண்டு ஓடிய பீமன்...

Bhima set fire to the palace
Adi Parva - Section 150 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் மகிழ்ச்சியுடனும் ஐயத்திற்கிடமில்லாமலும், முழுமையாக ஒரு வருடம் வாழ்ந்ததைக் கண்ட புரோசனன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான்.(1) புரோசனன் மிகுந்த மகிழ்ச்சியோடிருப்பதைக் கண்ட குந்தியின் அறம்சார்ந்த மைந்தன் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன், மற்றும் இரட்டையர்களிடம் (நகுலன் மற்றும் சகாதேவனிடம்),(2) "கொடும் இதயம் கொண்ட அந்தப் பாவி நன்றாக ஏமாற்றப்பட்டிருக்கிறான். நாம் தப்பிச் செல்வதற்குத் தகுந்த காலம் வந்ததென நான் நினைக்கிறேன்.(3) ஆயுதச் சாலைக்கு நெருப்பு மூட்டிப் புரோசனனை எரித்துக் கொன்று, அவனது உடலை அங்கே விட்டு, நாம் அறுவரும் யாரும் அறியாமல் தப்பிச் சென்றுவிடலாம்" என்று சொன்னான்".(4)

Adi Parva - Section 150 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, கொடை அளிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்த போது, குந்தி, ஒரு குறிப்பிட்ட நாள் இரவில், பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு உணவு கொடுத்தாள். அங்கே பல பெண்களும் வந்து உண்டும், குடித்தும், அவர்கள் விருப்பப்பட்டவாறு மகிழ்ந்திருந்தனர். பிறகு அவர்கள் குந்தியிடம் அனுமதி பெற்றுத் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.(5,6) ஐந்து மகன்களுக்குத் தாயான ஒரு நிஷாதப் பெண்பமணி {வேடுவப் பெண்மணி}, தன் பயணத்தின்போது, உணவு பெற விரும்பியும், விதியால் உந்தப்பட்டும், தனது மகன்கள் அனைவரையும் அந்த விருந்துக்கு அழைத்து வந்தாள்.(7) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவளும் அவளது மகன்களும் அவர்கள் உண்டிருந்த மதுவினால் போதை கொண்டு நிலை தடுமாறி இருந்தனர். அந்த மாளிகையில் அந்தப் பெண் தனது மகன்களுடன் உணர்விழந்து பிணம் போல் உறங்கிக் கொண்டிருந்தாள். அந்த மாளிகையில் வசித்தவர்கள் அனைவரும் படுத்தவுடன், அங்கே அந்த இரவில் பயங்கரமான பெருங்காற்று வீசியது.(8,9)

அப்போது பீமன், அந்த வீட்டில் புரோசனன் உறங்கிக் கொண்டிருந்த பகுதியில் தீயை மூட்டினான். அதன்பிறகு அந்தப் பாண்டுவின் மைந்தன் {பீமன்}, அந்த அரக்கு வீட்டின் கதவுகளுக்குத் தீ மூட்டினான்.(10) அந்த மாளிகையைச் சுற்றிலும் பல இடங்களில் தீ மூட்டினான். அந்த வீட்டின் பல இடங்களில் தீப்பற்றியதைக் கண்டு மனநிறைவு கொண்ட பிறகு,(11) அந்த எதிரிகளைத் தண்டிக்கும் பாண்டுவின் மைந்தர்கள் {பாண்டவர்கள்} தங்கள் நேரத்தை வீணாக்காமல் சுரங்கப் பாதைக்குள் நுழைந்தனர். பிறகு அந்த நெருப்பின் வெப்பமும், உறுமலும் உக்கிரமடைந்து அந்நகர மக்களை எழுப்பியது. வீடு எரிவதைக் கண்ட அந்த நகரத்துக் குடிமக்கள் கவலை நிறைந்த முகங்களுடன்,(12,13) "அந்தத் தீய ஆன்மா கொண்ட பாவி (புரோசனன்), துரியோதனனின் கட்டளையின் பேரில், தனது முதலாளியின் உறவினர்கள் அழிவுக்காகவே இவ்வீட்டைக் கட்டியிருக்கிறான். நிச்சயமாக அவனே இதற்குத் தீ மூட்டியிருக்கிறான். ச்சீ... ச்சீ.. எவ்வளவு வஞ்சனை கொண்ட இதயத்தைப் பெற்றவனாக இருந்திருக்கிறான் இந்தத் திருதராஷ்டிரன்.(14) பாவங்களற்ற பாண்டுவின் வாரிசுகளை எதிரிகளாகக் கருதி, அவன்தான் அவர்களை எரித்துவிட்டான்!(15) ஐயமடையாதவர்களும், மனிதர்களில் சிறந்தவர்களுமான அந்த அப்பாவி இளவரசர்களை, எரித்த தீய ஆன்மா கொண்ட அந்தப் பாவியையும் (புரோசனனையும்), விதி எரித்துக் கொன்றுவிட்டது" என்றனர்.(16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "வாரணாவதத்தின் குடிமக்கள் இப்படி (பாண்டவர்களின் விதியை நினைத்து) ஒப்பாரி வைத்தழுது, அன்று இரவு முழுவதும் அவ்வீட்டைச் சூழ்ந்து கொண்டு காத்திருந்தனர்.(17) இருப்பினும், பாண்டவர்கள் தங்கள் தாயை அழைத்துக் கொண்டு அந்தச் சுரங்க வழியிலிருந்து வெளிவந்து, யாரும் அறியாத வண்ணம் விரைவாக ஓடினர்.(18) ஆனால், தூக்கக் கலக்கத்தாலும், பயத்தாலும் தங்கள் தாயுடனிருந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களால் விரைவாக முன்னேற முடியவில்லை.(19)

ஓ! ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பயங்கரமான ஆற்றலும், துரிதமான இயக்கமும் கொண்ட பீமசேனன், அந்த இருளில் தனது சகோதரர்கள் அனைவரையும், தனது தாயையும் தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.(20) அவன், தனது தாயைத் தோளிலும், இரட்டையர்களைத் தனது பக்கங்களிலும் {இடுப்பிலும்}, யுதிஷ்டிரனையும், அர்ஜுனனையும் தனது இரு கரங்களிலும் தூக்கிக் கொண்டான். பெரும் சக்தியும், பலமும், காற்றைப் போன்ற வேகமும் கொண்ட விருகோதரன், எதிர்பட்ட மரங்களைத் தனது மார்பால் ஒடித்துக் கொண்டும், பூமியைத் தனது பாதச்சுவடுகளால் ஆழமாகத் துளைத்துக் கொண்டும் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(21,22)



ஆதிபர்வம் பகுதி 150ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English