Pandavas crossed the Ganga | Adi Parva - Section 151| Mahabharata In Tamil
(ஜதுக்கிரகப் பர்வம் - 9)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்களுக்காகப் படகை அனுப்பி வைத்த விதுரன்; கங்கையைக் கடந்து சென்ற பாண்டவர்கள்...
Pandavas crossed the Ganga Adi Parva - Section 151 | Mahabharata In Tamil |
அம்மனிதன், தான் விதுரனால்தான் அனுப்பப்பட்டவன் என்பதை நிரூபிக்கப் பாண்டவர்களிடம், "ஒ யுதிஷ்டிரா, கற்றறிந்த விதுரர், நான் அவரிடம் இருந்துதான் வருகிறேன் என்பதை நிரூபிக்க ஒரு சம்பவத்தைச் சொல்லியனுப்பினார்.(6) 'வைக்கோலை உண்பவனோ {அக்னி}, பனியைக் காய வைப்பவனோ {சூரியன்} கானகத்தின் பொந்தினுள் வசிப்பவனை எரிக்க முடியாது. இதை அறிந்தவன் தன்னை மரணத்தில் இருந்து காத்துக் கொள்வான்.' என்ற வார்த்தைகளைச் சொல்லச் சொன்னார்.(7) இதன் மூலம் நான் விதுரரால் அனுப்பப்பட்டவன்தான் என்பதையும், நான் நம்பிக்கைக்குரியவன் என்பதையும் அறிந்து கொள்வீராக. அனைத்தையும் அறிந்த விதுரர், 'ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீ நிச்சயமாகக் கர்ணன், துரியோதனன், அவனது சகோதரர்கள், மற்றும் சகுனியைப் போரில் தோற்கடிப்பாய்' என்று நான் சொன்னதாகச் சொல்.' என்றார்.(8,9) இப்போது நீரில் இருக்கும் இந்தப் படகு, புறப்படுவதற்குத் தயாராக இருக்கிறது. இது நிச்சயம் உங்கள் அனைவரையும் இந்தப் பகுதிகளிலிருந்து சுமந்து செல்லும்" என்றான்.(10)
அந்த மனிதர்களில் சிறந்தவர்கள், தங்கள் தாயுடன் சோகமாக இருப்பதைக் கண்ட அம்மனிதன், அவர்களைக் கங்கையின் மீதிருந்த படகில் ஏற்றி, அவர்களுடன் தானும் ஏறிக் கொண்டான். அப்போது மறுபடியும் அவர்களிடம்,(11) "விதுரர் உங்களை (மனத்தால்) உச்சிமோந்து {தலையை முகர்ந்து} அணைத்து, 'உங்களுக்கு நன்மை தரும் இந்தப் பயணத்தைத் தனியாக மேற்கொள்ளும்போது, எக்காரணம் கொண்டும் கவனக்குறைவுடன் இருந்துவிடக்கூடாது' என்றும் சொன்னார்" என்றான்.(12) இவ்வார்த்தைகளை அந்த இளவரசர்களுக்குச் சொன்ன விதுரனால் அனுப்பப்பட்ட அந்த மனிதன், அந்த மனிதர்களில் காளைகளைத் தனது படகில் கங்கையின் அக்கரைக்கு அழைத்துச் சென்றான்.(13) அப்படி நீரின் மேல் அவர்களை அழைத்துச் சென்று, அவர்கள் பாதுகாப்பாக அக்கரையில் இறங்கியதைக் கண்ட அம்மனிதன் "ஜெயம் {வெற்றி}" என்ற சொல்லைச் சொன்னான். அதன்பிறகு அவர்களை விட்டகன்று, அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயே திரும்பிச் சென்றான்.(14)
அச்சிறப்பு வாய்ந்த பாண்டவர்கள், அவனிடம் விதுரனுக்கான செய்தியைச் சொல்லிவிட்டு, கங்கையைக் கடந்து, கமுக்கமாகவும் வேகமாகவும் முன்னேறிச் சென்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(15)
ஆதிபர்வம் பகுதி 151ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |