Passage work started | Adi Parva - Section 149 | Mahabharata In Tamil
(ஜதுக்கிரகப் பர்வம் - 7)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் வந்த விதுரனின் நண்பன் கனகன்; சுரங்கத்தைத் தோண்டி, அதன் வாயிலை வீட்டின் மத்தியில் அமைத்த கனகன்...
Passage work started Adi Parva - Section 149 | Mahabharata In Tamil |
[1] கும்பகோணம் பதிப்பில் "கனகன்" என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது. கனகன் என்றால் சுரங்கம் செய்பவன் என்பது பொருள்.
உண்மையைப் பேசுபவனான குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, அவரிடம் {கனகரிடம்}, “ஓ! இனிமையானவரே, நான் உம்மை விதுரரின் நம்பிக்கைக்குரிய நண்பராகவும், அவரின் அன்புக்குரியவருமாக அறிந்திருக்கிறேன். நீர் அவரிடம் உண்மையுடனும் ,அர்ப்பணிப்புணர்வுடனும் இருப்பவர். கல்விமானான விதுரர் அறியாத யாதொன்றும் இல்லை.(7,8) அவருக்கு நீர் எப்படி வேண்டியவரோ, அதே போலத்தான் எங்களுக்கும் வேண்டியவரே. அவரிடமும், எங்களிடமும் வேறுபாடு காணாதீர். நாங்கள் அவருக்கு எப்படியோ அப்படியே உங்களுக்கும். கல்விமானான விதுரர் எங்களைக் காப்பது போல, நீரும் எங்களைக் காப்பாற்றும்.(9) எரியத்தக்க இந்த வீட்டைத் திருதராஷ்டிரன் மகனின் உத்தரவாலேயே புரோசனன் நிறுவினான்.(10) தீய வழியில் நடக்கும் அந்த இழிந்தவன், செல்வம் மற்றும் கூட்டாளிகளின் துணைக் கொண்டு, எங்களை எப்போதும் கண்காணிக்கிறான்.(11) உமது உழைப்பைக் கொடுத்து வரவிருக்கும் பெருந்தீயிலிருந்து எங்களைக் காப்பாற்றுவீராக. நாங்கள் இங்கே எரித்துக் கொல்லப்பட்டால், துரியோதனனின் விருப்பம் ஈடேரும்.(12) இங்கேதான் அந்தப் பாவியின் ஆயுதங்கள் நிறைந்த ஆயுத சாலை இருக்கிறது. இந்தப் பெரிய மாளிகையானது, அருகில் உயர்ந்த மதில்கள் எழுப்பித் தப்பிக்க எந்த வழியும் இல்லாமல் கட்டப்பட்டிருக்கிறது. (13) ஆனால் துரியோதனனின் இந்தப் புனிதமற்ற சதித்திட்டத்தை விதுரர் தொடக்கத்திலிருந்தே அறிந்திருக்கிறார். அவரே இதுகுறித்து எங்களை முன்கூட்டியே விழிப்படையச் செய்தார்.(14) க்ஷத்திரி {விதுரர்} முன்கூட்டியே அறிந்திருந்த அந்த ஆபத்து, இப்போது நமது வாயிலருகே இருக்கிறது. இவை குறித்துப் புரோசனன் அறியாவண்ணம் எங்களைக் காப்பாற்றுவீராக" என்றான்.(15)
இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சுரங்க நிபுணன் {கனகன்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி சுரங்கம் தோண்டும் பணியைக் கவனத்துடன் தொடங்கிப் பெரிய சுரங்க வழியை உண்டாக்கினான்.(16) அச்சுரங்கத்தின் வாய் {வாயில்} நடு வீட்டில் இருந்தது. அது தரைக்குச் சமமாக மரப்பலகைகளால் மூடப்பட்டு இருந்தது.(17) அவ்வீட்டின் கதவைத் தொடர்ந்து கண்காணித்து வந்தவனும், தீயவனும், பொல்லாதவனுமான புரோசனனிடம் கொண்ட அச்சத்தால், அதன் வாயில் மூடப்பட்டிருந்தது.(18) பாண்டவர்கள் ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டு {ஆயுதம் தரித்துக் கொண்டே} தங்கள் அறையில் உறங்கினர். பகலெல்லாம் காடு காடாகச் சென்று வேட்டையாடினர்.(19) ஓ! மன்னா {ஜனமேஜயா}! இப்படிப் புரோசனனை அவர்கள் நம்பவில்லை என்றாலும், நம்புவது போலப் பாசாங்கு செய்து அங்குப் பாதுகாப்புடன் வாழ்ந்தனர்.(20) பாண்டவர்களின் திட்டம் குறித்து வாரணாவதக் குடிமக்களும் அறிந்திருக்கவில்லை. உண்மையில், சுரங்க நிபுணரான விதுரரின் நண்பரைத் தவிர வேறு யாரும் இத்திட்டத்தை அறியவில்லை" {என்றார் வைசம்பாயனர்}.(21)
ஆதிபர்வம் பகுதி 149ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |