Wednesday, September 25, 2013

வடகுரு நாட்டை அடைந்த அர்ஜுனன் - சபாபர்வம் பகுதி 27

Arjuna came to North Kuru! | Sabha Parva - Section 27 | Mahabharata In Tamil

(திக்விஜய பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் வடதிசையில் சென்று வென்று வந்த போர்ப்பயண விவரிப்பு…

Arjuna

வைசம்பாயனர் சொன்னார், "வீரனும், பெரும் சக்தி படைத்தவனுமான பாண்டவர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, வெண்மலைகளைக் கடந்து, திருமப்புத்திரனால்  ஆளப்பட்ட கிம்புருஷர்களின் {சிங்க தலையும் மனித உடலும், அல்லது மனிதத் தலையும் சிங்க உடலும் பெற்றவர்களின்} நாட்டை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். பிறகு க்ஷத்திரியர்களின் பெரும் படுகொலைகளுக்குப் பின் அந்தப் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தான்.(1,2) அந்த நாட்டை வென்ற பிறகு, அந்த இந்திரனின் மகன் (அர்ஜுனன்) மனத்தை ஒருமுகப்படுத்தி, தனது துருப்புகளுக்குத் தலைமை தாங்கி, குஹ்யர்களால் {யக்ஷர்களால்} ஆளப்படும் ஹாராடகம்  {ஹாடகம்} என்ற நாட்டை நோக்கி முன்னேறினான்.(3)

Manasarovar in Kailasha Mount

அவர்களை அடக்கி ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட அந்த குரு இளவரசன் முனிவர்களுக்குப் புனிதமான மானஸம் {மானசரோவர் ஏரி} என்ற அற்புதமான தடாகத்தையும், முனிவர்களுக்குப் புனிதமான {ரிஷிகுல்யை என்றழைக்கப்படும்} பல ஏரிகளையும் குளங்களையும் கண்டான்.(4) ஹாராடகத்தைச் சுற்றியிருக்கும் கந்தர்வர்களால் ஆளப்படும் இடங்களையும் அடக்கி கப்பம் கட்டச் செய்துவிட்டு, அந்த மேன்மையான இளவரசன் மானஸ தடாகத்திற்கு வந்தான்.(5) அங்கே அந்த வெற்றியாளன் {அர்ஜுனன்} அந்த நாட்டின் காணிக்கையாக, தித்திரி, கல்மாஷம், மண்டூகம் என்ற அற்புதமான குதிரைகளைப் பெற்றான்[1].(6) இறுதியாக அந்தப் பாகனைக் கொன்றவனின் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்}, வட ஹரிவர்ஷ நாட்டை அடைந்து, அதை வெல்ல விரும்பினான். (7)

[1] கும்பகோணம் பதிப்பில், "அப்போது அந்தக் கந்தர்வ நகரத்தில் தித்திரிப்பக்ஷிகள் போலச் சித்திரவர்ணமுள்ளவையும், மண்டூகங்களென்று பெயருள்ளவையுமான உத்தமமான குதிரைகளையெல்லாம் கப்பமாகப் பெற்றான்" என்றிருக்கிறது.

அங்கே பெரும் பலம் பொருந்தியவர்களும், குறிப்பிடும் அளவிற்குப் பெரும் உடல்படைத்தவர்களும், ஆற்றல் நிறைந்தவர்களுமான வாயில் காப்போர்கள், பெருந்தன்மை நிறைந்த இதயத்துடன் அவனிடம் {அர்ஜுனனிடம்} வந்து,(8) "ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, இந்த நாடு {வட ஹரிவர்ஷ நாடு} உன்னால் வெல்லப்பட முடியாதது. உனது நன்மையை நீ விரும்பினால், விரைவாகத் திரும்பிச் செல்வாயாக. ஓ அச்யுதா, உன் படையெடுப்புகள் ஏற்கனவே போதுமானவையாக இருக்கின்றன.(9) இந்தப் பகுதியில் நுழையும் எந்த மனிதனும் அழிந்து போவான். நாங்கள் உன்னிடம் நிறைவடைந்தோம். நீ இதுவரைச் செய்த படையெடுப்பே மிக அதிகம்.(10) இங்கே, ஓ அர்ஜுனா, வெல்லத்தக்க எதையும் நீ காணமுடியாது. வட குருக்கள் இங்கே வாழ்கிறார்கள். இங்கே போரிடலாகாது.(11) உள்ளே நுழைந்தாலும், உன்னால் எதையும் காணமுடியாது. மனித கண்களைக் கொண்டு இங்கே எதையும் காண முடியாது.(12) இருப்பினும், நீ வேறு ஏதாவது எதிர்பார்த்தால், ஓ பாரதா {அர்ஜுனா} எங்களிடம் சொல்வாயாக. ஓ மனிதர்களில் புலியே நீ சொல்வதை நாங்கள் செய்கிறோம்" என்று சொன்னார்கள்.(13) 

இவ்வாறு சொல்லப்பட்ட அர்ஜுனன் சிரித்துக் கொண்டே, "பெரும் புத்திகூர்மை கொண்டவரும், நீதிமானுமான யுதிஷ்டிரன், கண்ணியமிக்க ஏகாதிபத்ய நிலையை  அடைய {பேரரசனாக} நான் விரும்புகிறேன்.(14) உங்கள் நிலம் மனிதர்களுக்கு எதிராக அடைக்கப்பட்டிருகிறது என்றால், நிச்சயம் நான் அதற்குள் நுழைய மாட்டேன். ஆனால் யுதிஷ்டிரருக்கு கப்பத்தைக் கட்டிவிடுங்கள்" என்றான். (15)

அர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அவர்கள், தெய்வீக ஆடை ஆபரணங்கள் பலவற்றையும், தெய்வீக வடிவமைப்புகளிலான பட்டையும், தெய்வீகத் தன்மை கொண்ட தோலையும் கொடுத்தனர்.(16) இவ்வாறு அந்த மனிதர்களில் புலி {அர்ஜுனன்}, க்ஷத்திரியர்களுடனும், கள்வர்க் கூட்டங்களுடனும் எண்ணிலடங்கா போர்களைச் செய்து, வடக்கில் இருக்கும் நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(17) தலைவர்களை வீழ்த்தி, அவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அவர்களிடம் இருந்து பெரும் செல்வத்தையும், பல்வேறு ரத்தினங்களையும் பொன்னையும், கிளியின் நிறத்திலும், கிளியின் இறக்கையின், மயில் நிறத்திலும் உள்ளவையும், வேகமாகச் செல்லக்கூடியவையுமான தித்திரி, கல்மாஷ வகை குதிரை வகைகளையும் அடைந்தான். (18,19)

Map
அர்ஜுனன் வடதிசைப் போர்ப்பயணத்தைக் குறித்த ஓர் ஆய்வைப் படிக்க
http://ancientvoice.wikidot.com/travel:arjuna-s-military-campaign-for-rajasua
என்ற லிங்குக்குச் செல்லவும்.

ஓ மன்னா {ஜனமேஜயா}, நால்வகை துருப்புகளுடன் சூழ, அந்த வீரன் அற்புதமான நகரமான சக்ரப்பிரஸ்தத்திற்குத் {இந்திரப்பிரஸ்தத்திற்குத்} திரும்பி வந்தான்.(20) பார்த்தன் {அர்ஜுனன்}, நீதிமானான யுதிஷ்டிரனிடம், தான் பெற்ற விலங்குகளுடன் {கால்நடைகளுடன்} கூடிய முழு செல்வத்தையும் கொடுத்தான். பிறகு அந்த ஏகாதிபதியுடைய {யுதிஷ்டிரனுடைய} ஆணையின் பேரில் ஓய்வெடுப்பதற்காக அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(21)

ஆங்கிலத்தில் | In English