The Northern campaign of Arjuna! | Sabha Parva - Section 26 | Mahabharata In Tamil
(திக்விஜய பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : பீமன், அர்ஜுனன், நகுல சகாதேவர் ஆகியோர் யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு தனித்தனியே நாடுகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஆளுக்கொரு திசையாகச் செல்வது; பாண்டவர்களின் போர்ப்பயணங்களை வைசம்பாயனர் சுருக்கமாகச் சொல்லல்…
வைசம்பாயனர் சொன்னார், "பூமியானது பிருதையின் மகன்கள் அனைவராலும் ஒன்றன்பின் ஒன்றாகக் கைப்பற்றப்பட்டது. முதலில் தனஞ்சயனின் (அர்ஜுனனின்) படையெடுப்பை நான் உனக்குச் சொல்கிறேன்.(2)
வலிய கரங்களைக் கொண்டவனும், பெருந்துணிவுமிக்க சாதனைகளைச் செய்தவனுமான தனஞ்சயன், முதலில் குளிந்தர்களின் {குலிங்கர்களின்} மன்னனை வென்றான்.(3) குளிந்தர்கள், அனஸ்தர்கள் மற்றும் காலகுடர்கள் ஆகியோரை வென்ற பிறகு அவன் சுமண்டலனையும், அவனது துருப்புகளையும் வென்றான்.(4) ஓ மன்னா, பகைவர்களைத் தண்டிப்பவனாக சவ்யசச்சின் (அர்ஜுனன்) அவனுடன் (சுமண்டலனுடன்) சேர்த்து சாகலத் தீவையும், மன்னன் பிரதிவிந்தியனையும் வென்றான்.(5) சாகலம் பூமியின் ஏழு தீவுகளில் ஒன்றாகும், அந்தத் தீவில் பல மன்னர்கள் இருந்தனர். அவர்கள் மற்றும் அவர்களுத் துருப்புகளுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் பயங்கர போர் நடைபெற்றது.(7) ஆனால், ஓ பாரதகுலத்தில் சிறந்தவனே, அந்தப் பெரும் வில்லாளிகள் அனைவரும் அர்ஜுனனால் வீழ்த்தப்பட்டனர். அவர்கள் அனைவருடன் சேர்த்து, பிராக்ஜோதிஷ நாட்டையும் அவன் தாக்கினான்[*].(7)
[*] கும்பகோணம் பதிப்பில், "சிறந்த கைகளையுடைய அர்ஜுனன் முதலில் குலிங்க தேசத்தரசனை எளிதாகவே வசப்படுத்தினான். அவனுடன் சேர்ந்தே அர்ஜுன்ன் ஸால்வ தேச நகரத்துக்குச் சென்றான். சிறந்த மனமுள்ள அந்தத் தனஞ்சயன் ஸால்வ நகரத்தைச் சேர்ந்து தனது பரமாக்ரமத்தினால் ஸால்வதேசத்தரசனாகிய உக்ரதன்வனென்பவனை வசப்படுத்தினான். வீரனான அர்ஜுனன் த்யுமத்ஸேனனென்னும் அந்த அரசனை ஜயித்து உடனே அவனைத் தனது படைத்தலைவனாகச் செய்து கொண்டு கடதேசத்துக்குச் சென்றான். குந்திபுத்ரனான அர்ஜுனன் அந்தத் தேசத்தரசனாகிய ஸுநாபனைப் பராக்ரமத்தினால் யுத்தத்தில் வசப்படுத்தி இரண்டாவது ஸேனாதிபதியாகச் செய்தான். இராஜாவே, பகைவரைப் பீடிப்பவனாகிய ஸவ்யஸாசியானவன் அவனுடன் கூடவனே சாகலத்வீபத்தில் பிரதிவிந்தியனென்னும் அரசனை ஜயித்தான். சாகலத்வீபத்தவர்களும், ஸபதத்வீபத்தவர்களுமான அரசர்களுக்கு அர்ஜுனன் சேனைகளோடு பெரும்போர் உண்டாயிற்று. அர்ஜுனன் தர்மராஜாவுடைய இஷ்டத்தை நிறைவேற்றுவதற்காக அவர்களனைவரையும் ஜயித்து அவர்களுடன் சேர்ந்தே ப்ராக்ஜ்யோதிஷமென்னும் நகரத்துக்குச் சென்றான். இராஜாவே, அந்நகரத்தில் பகதத்தனென்னும் மஹாராஜனிருந்தான்" என்றிருக்கிறது.
ஓ மன்னா, அந்நாட்டின் மன்னன் பகதத்தனாவான். சிறப்புமிக்க பாண்டவன் {அர்ஜுனன்} அவனுடன் பெரும்போரைச் செய்தான்.(8) கிராதர்கள், சீனர்கள் ஆகியோருடன் கூடிய பிராக்ஜோதிஷ மன்னன் {பகதத்தன்} கடற்கரையில் வசிக்கும் எண்ணற்ற வேறு போர்வீரர்களாலும் ஆதரிக்கப்பட்டான்.(9) தொடர்ந்து எட்டு நாட்கள் தனஞ்சயனுட் போரிட்டும் போரில் அவன் சிறிதும் களைப்படையாததைக் கண்ட மன்னன் பகதத்தன், புன்னகைத்தவாறே,(10) "ஓ வலிய கரங்களைக் கொண்டவனே (வீரா), ஓ குருவின் வழித்தோன்றலே, பாகனைக் கொன்றவனுடைய (இந்திரனுடைய) மகனாகவும், போர்க்கள ரத்தினமாகவும் இருப்பதால் போரில் இத்தகைய சக்தி உனக்குத் தகுந்ததே.(11) ஓ குழந்தாய், நான் இந்திரனின் நண்பனாவேன். போரில் அவனுக்கு {இந்திரனுக்குச்} சற்றும் குறைவில்லாதவனான என்னால் உன் முன்பு நிற்க முடியவில்லை.(12) ஓ பாண்டுவின் மகனே, நீ விரும்புவதென்ன? நான் உனக்காகச் செய்ய வேண்டியதென்ன? ஓ வலிய கரங்களைக் கொண்ட வீரா, ஓ மகனே, நீ என்ன செய்யச் சொன்னாலும் நான் உனக்காக அதைச் செய்வேன்" என்றான் {பகதத்தன்}.(13)
அர்ஜுனன், "குருக்களில் முதன்மையானவரும், அறக்கருத்துகள் அனைத்தையும் கற்றவருமான மன்னன் தர்மராஜர் யுதிஷ்டிரர், பெரும் தக்ஷிணைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்பவராவார் (அவர் ஏகாதிபத்திய மேன்மையை அடைய விரும்புகிறார்).(14) அவர் ஏகாதிபத்திய மேன்மையை அடைவதை நான் காண விரும்புகிறேன். நீர் அவருக்குக் கப்பம் கட்ட வேண்டும். என் தந்தையின் நண்பரான நீர் என்னால் நிறைவடையச் செய்யப்பட்டீர். நான் உமக்கு ஆணையிடமுடியாது. எனவே, தன்விருப்பத்துடன் உற்சாகமாக நீர் கப்பங்கட்டுவீராக" என்றான்.(15)
பகதத்தன், "ஓ குந்தியின் மகனே, மன்னன் யுதிஷ்டிரனும் எனக்கு உன் போன்றவனே. நான் இவை யாவையும் செய்வேன்; நான் உனக்கு வேறு என்ன செய்ய வேண்டும் எனச் சொல்வாயாக" என்று கேட்டான்".(16)}[1]
[1] { } என்ற அடைப்புக்குறிக்குள் 1 முதல் 16ம் ஸ்லோகம் வரை உள்ள இந்தப் பகுதி கங்குலியின் பதிப்பில் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்தப் பகுதியே 26ம் பகுதியாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பைக் கொண்டே ஸ்லோக எண்ணிக்கை சேர்க்கப்படுவதால் இப்பகுதியை மன்மதநாததத்தரின் பதிப்பில் இருந்து மொழிபெயர்த்திருக்கிறேன். இப்பகுதி கும்பகோணம் பதிப்பிலும் இருக்கிறது. இந்தப் பகுதி முதல் கங்குலியின் பதிப்புக்கும், மன்மநாததத்தரின் பதிப்புக்கும் இடையில் எண்ணிக்கையில் ஓர் அத்தியாயம் வேறுபடுகிறது. அதாவது அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்படும் இந்தப் பகுதி மன்மதநாததத்தரின் பதிப்பில் 26ம் பகுதியாகவும், அடைப்புக்குறிக்குள் இல்லாத பகுதி 27ம் பகுதியாகவும் வருகிறது. ஆக சபாபர்வமானது கங்குலியின் பதிப்பில் 80 பகுதிகளை {அத்தியாயங்களைக்} கொண்டதாகவும், மன்மதநாததத்தரின் பதிப்பில் 81 பகுதிகளைக் கொண்டதாகவும் இருக்கிறது.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, பகதத்தனிடம், "இதற்கு உறுதி அளித்தீரெனில், நான் விரும்பியது அனைத்தையும் நீர் செய்ததாக ஆகும்" என்றான்.(1)(17)
இவ்வாறு பிராக்ஜோதிஷ மன்னனைத் தன் கட்டுக்குள் கொண்ட வந்த குந்தியின் மகனான நீண்ட கரங்களுடைய தனஞ்சயன் {அர்ஜுனன்}, கருவூலத்தலைவன் {குபேரன்} இருக்கும் திசையில் வடக்கு நோக்கி தனது படையெடுப்பை மேற்கொண்டான்.(2)(18) மனிதர்களில் காளையான அந்தக் குந்தியின் மகன், மலைத்தடங்கள் மற்றும் அதைச்சுற்றிய புறநகர் களையும், மலைப்பாங்கான பகுதிகளையும் வெற்றி கொண்டான்.(3)(19) இப்படி அனைத்து மலைகளையும், அவற்றை ஆட்சி செய்த மன்னர்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அவர்களிடம் கப்பம் பெற்றான்.(4)(20) அந்த மன்னர்களின் அன்பை வென்று, அவர்களுடன் கூட்டணி சேர்ந்த அவன் {அர்ஜுனன்}, ஓ மன்னா {ஜனமேஜயா}, அடுத்ததாகத் தன் பேரிகை முழக்கங்களாலும், தன் தேர்ச்சக்கரத்தின் பேரொலியாலும், வரிசையாக சென்ற தனது யானைகளின் பிளிறல்களாலும் உலகை நடுங்கச் செய்து, உலூக நாட்டு மன்னன் பிருஹந்தனை எதிர்த்துப் படையை நடத்தினான்.(5,6)(21,22)
இருப்பினும், பிருஹந்தன் தனது நால்வகை துருப்புகளுடன் கூடிய படையை நடத்திக் கொண்டு தனது நகரத்தைவிட்டு வெளியே வந்து, பல்குனனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றான்.(7)(23) பிருஹந்தனுக்கும், தனஞ்சயனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த போர் பயங்கரமானதாக இருந்தது. பிருஹந்தனால் பாண்டு மகனின் {அர்ஜுனனின்} ஆற்றலைத் தாங்க முடியாத நிலை ஏற்பட்டது.(8)(24) மலைப்பாங்கான பகுதிகளை ஆளும் ஒப்பற்ற மன்னன் {பிருஹந்தன்} குந்தியின் மகனை எதிர்க்க முடியாதவனாகக் கருதி, தனது முழு செல்வங்களுடனும் அவனை {அர்ஜுனனை} அணுகினான்.(9)(25) அர்ஜுனன் பிருஹந்தனிடம் இருந்து அவனது நாட்டைப் பறித்துக் கொண்டான். ஆனால், பிறகு, அவனுடன் {பிருஹந்தனுடன்} அமைதியை ஏற்படுத்திக் கொண்டு {சமாதானம் செய்து கொண்டு}, அந்த மன்னனையும் {பிருஹந்தனையும்} அழைத்துக் கொண்டு, சேனாபிந்துவை எதிர்த்து படை நடத்தி அவனை {சேனபிந்துவை} அந்த நாட்டிலிருந்து விரட்டினான்.(10)(26) அதன் பிறகு அவன் {அர்ஜுனன்}, மோதாபுரம், வாமதேவம், ஸுதாமம், ஸுஸங்குலம், வட உலூக நாடு ஆகியவற்றிலுள்ள மன்னர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(11)(27) அதன்பிறகு, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில் அர்ஜுனன் சேனாபிந்துவின் நகரத்தை விட்டு அகலாமல், தனது துருப்புகள் மட்டும் அனுப்பி அந்த ஐந்து நாடுகளையும், மக்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அர்ஜுனன் சேனாபிந்துவின் நகரமான தேவப்பிரஸ்தத்திற்கு நால்வகை துருப்புகள் கொண்ட தனது படையுடன் வந்து அங்கேயே தங்கினான்.(12)(28)
பிறகு, தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்த மன்னர்களாலும், மக்களாலும் சூழப்பட்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, பூரு குலத்தின் காளையான மன்னன் விஷ்வகச்வனை எதிர்த்து படை நடத்தினான்.(13,14)(29,30) பெரும் வீரம் கொண்ட வீர மலைநாட்டினர் பலரை வீழ்த்திய பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பூரு மன்னனால் பாதுகாக்கப்பட்ட அவனது நகரத்தைத் தன் படையின் துணையால் ஆக்கிரமித்தான்.(15)(31) போரில் பூரு மன்னனை வீழ்த்திய பிறகு, மலைக்கள்ளர்க் கூட்டங்களையும், உத்சவ சங்கேதம் என்று அழைக்கப்பட்ட ஏழு இனக்குழுக்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.(16)(32) பிறகு அந்த க்ஷத்திரியகுலக்காளை {அர்ஜுனன்}, வீர க்ஷத்திரியர்களான காஷ்மீரர்களையும், மன்னன் லோஹிதனையும், பத்து சிறு தலைவர்களையும் வீழ்த்தினான்.(17)(33) பிறகு, திரிகர்த்தர்கள், தார்வர்கள், கோகநதர்கள் மற்றும் பிற க்ஷத்திரியர்களுக்கு எதிராக பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} முன்னேறினான்.(18)(34)
காண்பதற்கினிய நகரமான அவிசாரி நகரத்தை அடைந்து, உரக நாட்டை ஆளும் ரோசமானனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.(19)(35) பிறகு, அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, தனது பலத்தை வெளிக்காட்டி, பல ஆயுதங்களால் நன்கு காக்கப்பட்டிருந்த சிங்கபுரம் எனும் காண்பதற்கினிய நகரத்தை ஒடுக்கினான்.(20)(36) பிறகு துருப்புகளுக்குத் தலைமை தாங்கிச் சென்ற பாண்டுவின் மகனான அர்ஜுனன், சுஹ்மம் {ஸும்ஹம்}, சுமலம் {சோளம்}ஆகிய பகுதிகளை கடுமையாகத் தாக்கினான்.(21)(37) இவ்வாறு கடுமையாகத் தாக்கிய பிறகு, பேராற்றல் கொண்ட இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, வெல்ல முடியாத பாஹ்லீகர்களை வென்று தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(22)(38) பிறகு பாண்டுவின் மகனான பல்குனன் {அர்ஜுனன்}, தேர்ந்தெடுக்கப்பட்ட படையை மட்டும் தன்னுடன் அழைத்துச்சென்று தரதர்களையும் காம்போஜர்களையும் வீழ்த்தினான்.(23)(39)
பிறகு இந்திரனின் மேன்மையான மகன் வடகிழக்கு பகுதியின் காடுகளில் வசித்த கள்வர்க் கூட்டத்தை {தஸ்யுக்களை} வீழ்த்தினான்.(24)(40) ஓ பெரும் மன்னா {ஜனமேஜயா}, இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, லோஹர்கள், கிழக்கு காம்போஜர்கள், வட ரிஷிகர்கள் ஆகியோரையும், அவர்களது கூட்டணிகள் அனைத்தையும் முறியடித்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(25)(41) உண்மையில் பிருதையின் {குந்தியின்} மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போர், பழங்காலத்தில் பெரும் படுகொலைகள் நேர்ந்ததும், (பிரகஸ்பதியின் மனைவி) தாரகைக்காக தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதுமான போரைப் போல இருந்தது.(26)(42) பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, ரிஷிகர்களைப் போர்க்களத்தில் வீழ்த்திய அர்ஜுனன், அவர்களிடம் இருந்து கிளியின் மார்பின் நிறத்தில் இருந்த எட்டு குதிரைகளையும், மேலும் வடக்கே பிறந்து பெரும் வேகத்தில் செல்லக்கூடிய கிளி நிறக் குதிரைகளையும் கப்பமாகப் பெற்றான்.(27,28)(43,44) இறுதியாக இமய மற்றும் நிஷ்குட மலைகள் அனைத்தையும் வென்ற அந்த மனிதர்களின் காளை {அர்ஜுனன்}, வெண்மலைகளுக்கு {சுவேத பர்வதத்திற்கு} வந்து, அதன் சாரலில் முகாமிட்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(29)(45)
ஆங்கிலத்தில் | In English |