Eastward expedition of Bhima! | Sabha Parva - Section 28 | Mahabharata In Tamil
(திக்விஜய பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்று பீமன் கிழக்கு நோக்கி படையெடுப்பது; பாஞ்சாலம் செல்வது; சேதியில் தங்குவது…
பிறகு அந்த வீரன் {பீமன்}, பாரத குலத்தவரில் காளை, குறுகிய காலத்திற்குள், கந்தகர்களையும் விதேகர்களையும் வீழ்த்தினான். அந்த மேன்மையானவன் {பீமன்}, தசர்னர்களை அடக்கினான். அந்த தசார்ணர்களின் நாட்டில், சுதர்மன் என்ற மன்னன் வெறுங்கைகளுடன் பீமனுடன் கடும்போர் புரிந்தான். அந்த ஒப்பற்ற மன்னனின் சாதனையைக் கண்ட பீமன், அந்த பெரும் பலம் வாய்ந்த சுதர்மனைத் தனது தளபதிகளில் முதன்மையானவனாக நியமித்தான்.(4-6) கடும் ஆற்றல் கொண்ட பீமன் பிறகு தனது படையின் காற்தடங்களால் பூமியை நடுங்கச் செய்து மேலும் கிழக்கு நோக்கி சென்றான்.(7)
பலத்தில் அனைவருக்கும் முதன்மையான அந்த வீரன் {பீமன்}, படைகளுக்குத் தலைமையாக நின்று அஸ்வமேத மன்னன் ரோசமனை {அச்வமேதேச்வரனை} வீழ்த்தினான்.(8) பிறகு அந்த குந்தியின் மைந்தன் அந்த ஏகாதிபதியைத் தனது கடும் சாதனையால் வீழ்த்தி கிழக்குப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(9) பிறகு பெரும் பலம் கொண்ட அந்த குரு குல இளவரசன் {பீமன்} தெற்கில் உள்ள புளிந்த நாட்டிற்கு சென்று சுகுமாரனையும், மன்னன் சுமித்திரனையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(10)
பிறகு, ஓ ஜனமேஜயா, அந்த பாரத குலத்தின் காளை {பீமன்}, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில் பெரும் சக்தி மிக்க சிசுபாலனை எதிர்த்து படை நடத்தினான்.(11) பாண்டு மகனின் {பீமனின்} நோக்கத்தை அறிந்த அந்த சேதி நாட்டு மன்னன் {சிசுபாலன்}, தனது நகரை விட்டு வெளியே வந்தான். பகைவரைத் தண்டிப்பவனான அவன் {சிசுபாலன்}, பிருதையின் {குந்தியின்} மகனை {பீமனை} மதிப்புடன் வரவேற்றான்.(12) அப்போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, சேதி நாட்டு மற்றும் குருகுலக் காளைகளான அவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் சந்தித்து, ஒருவர் நலனை மற்றவர் விசாரித்தனர்.(13) பிறகு, ஓ ஏகாதிபதி, சேதி நாட்டு மன்னன் {சிசுபாலன்}, புன்னகையுடன் தனது நாட்டை {சேதி நாட்டை} பீமனுக்கு அளித்து, "ஓ பாவமற்றவனே {பீமனே}, நீ என்ன செய்ய விரும்புகிறாய்?" என்று கேட்டான்.(14)
அதன்பேரில், பீமன் மன்னன் யுதிஷ்டிரனின் நோக்கங்களை எடுத்துரைத்தான். (அந்தப் பாண்டவனால்) விரும்பப்பட்டதைப் போலவே அம்மன்னனும் {சிசுபாலனும்} செயல்பட்டான்.(15) ஓ மன்னா {ஜனமேஜயா}, பீமன், சிசுபாலனால் நல்ல முறையில் கவனிக்கப்பட்டு, முப்பது இரவுகளுக்கு அங்கே வசித்தான். அதன்பிறகு, அவன் {பீமன்} தனது துருப்புகளுடனும் வாகனங்களுடனும் சேதியைவிட்டு புறப்பட்டான்" {என்றார் வைசம்பாயனர்}[2].(16)
[2] கும்பகோணம் பதிப்பில், "அப்போது பீமஸேனன் சேனைகளோடும் வாஹனங்களோடும் பதின்மூன்றுராத்திரி அங்கே வஸித்து, சிசுபாலனால் மரியாதை செய்யப்பெற்றுச் சென்றான்" என்றிருக்கிறது. கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இக்காலம் முப்பது இரவுகள் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |