Wednesday, April 08, 2015

ஊசி முனை அளவு நிலம்கூடத் தரமாட்டேன்! - உத்யோக பர்வம் பகுதி 58

I won’t give even a land covered by a needle point! | Udyoga Parva - Section 58 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 18) {யானசந்தி பர்வம் - 12}

பதிவின் சுருக்கம் : கௌரவர்கள் யாரும் போரை விரும்பவில்லை, போரைத் தானும் விரும்பவில்லை என்று திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொன்னது; கௌரவர்களில் யாருடைய துணையுமின்றி, தான் பாண்டவர்களைக் கொல்லப் போவதாகத் துரியோதனன் சொன்னது; அப்படிச் சொன்ன துரியோதனனை திருதராஷ்டிரன் நிந்தித்தது...

திருதராஷ்டிரன்{துரியோதனனிடம்} சொன்னான், “பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன் க்ஷத்திரிய சக்தியைக் கொண்டு, தன் இளமைக்காலத்தில் இருந்தே பிரம்மச்சரிய வாழ்வு முறையை மேற்கொள்கிறான். ஐயோ, இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கும் என்னைப் புறக்கணித்து, எனது மூட மகன்கள், அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} போரிட விரும்புகின்றனரே. ஓ! துரியோதனா, ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, பகைமையில் இருந்து விலகும்படி நான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, எந்தச் சூழ்நிலையிலும் போர் மெச்சத் தகுந்ததல்ல. உன்னையும், உனது தொண்டர்களையும் பரமாரித்துக் கொள்ளப் பாதிப் பூமியே போதுமானது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, பாண்டுவின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, அவர்களுக்குரிய பங்கைத் திருப்பிக் கொடுப்பாயாக. உயர் ஆன்ம பாண்டவர்களிடம் சமாதானம் ஏற்படுத்திக் கொள்வதே நீதியின் பாற்பட்டது எனக் கௌரவர்கள் அனைவரும் கருதுகிறார்கள். ஓ! மகனே {துரியோதனா}, இப்படி நினைத்துப் பார். இந்த உனது படை, உனது மரணத்தின் உருவமே என்பதைக் காண்பாய்.

நீ கொண்டிருக்கும் மடமையின் காரணமாக, உன்னால் இதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. நானோ, பாஹ்லீகனோ, பீஷ்மரோ, துரோணரோ, அஸ்வத்தாமனோ, சஞ்சயனோ, சோமதத்தனோ, சல்யனோ, சத்தியவிரதனோ, புருமித்ரனோ, பூரிஸ்ரவசோ போரை விரும்பவில்லை. உண்மையில், இவர்களில் யாருமே போரை விரும்பவில்லை. உண்மையில்,  எதிரிகளால் தாங்கள் பாதிக்கப்படும்போது, கௌரவர்கள் யாரைச் சார்ந்த இருப்பார்களோ, அவர்கள் அனைவரும் போரை அங்கீகரிக்கவில்லை. ஓ! குழந்தாய் {துரியோதனா}, அதுவே {அக்கருத்தே} உனக்கும் ஏற்புடையதாக இருக்கட்டும். ஐயோ, நீ உனது சொந்த விருப்பத்தின் பேரில் இதை மேற்கொள்ளவில்லை. கர்ணன், தீய மனம் கொண்ட துச்சாசனன், சுபலனின் மகனான சகுனி ஆகியோரே உன்னை அதற்கு {அம்முடிவிற்கு} வழிநடத்துகிறார்கள்.” {என்றான் திருதராஷ்டிரன்}.

அதற்குத் துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}, “உம்மையோ, துரோணரையோ, அஸ்வத்தாமரையோ, சஞ்சயரையோ, விகர்ணனையோ, காம்போஜனையோ, கிருபரையோ, பாஹ்லீகனையோ, சத்தியவிரதனையோ, புருமித்ரனையோ, பூரிஸ்ரவசையோ, உமது கட்சியைச் சேர்ந்த எவரையும் சார்ந்திராமலே போரிடும்படிக்கு நான் பாண்டவர்களுக்கு அறைகூவல் விடுகிறேன். ஆனால், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, நானும், கர்ணனும் மட்டுமே இருந்து, யுதிஷ்டிரனைப் பலியாக {வேள்வி விலங்காக} வைத்து, ஓ! தந்தையே, தேவையான அனைத்துச் சடங்குகளுடன், போரெனும் வேள்வியைத் தனியாகக் கொண்டாடத் தயாராக இருக்கிறோம்.

அவ்வேள்வியில் எனது தேரே வேள்விப்பீடம்; நீர்க்காணிக்கைகள் செலுத்த எனது வாளே சிறு கரண்டி, கதாயுதம் பெரிய கரண்டி; எனது கவசமே பார்வையாளர்கள் கூட்டம்; எனது குதிரைகள் நான்கும் அவ்வேள்வியைச் செய்யும் புரோகிதர்கள்; எனது கணைகளே குசப் புற்கள் {தர்ப்பை}; புகழே தெளிந்த நெய். [1]

[1] ரதம் வேதி, கத்தி ஸருவம், கதை ஸருக்கு; கவசம் மான்தோல், எனது குதிரைகள் நான்கு ஹோதாக்கள், பாணங்கள் தர்ப்பைகள், புகழானது ஹவிஸ் என்றும் சொல்லப்படுகிறது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யமனுக்கு மரியாதை செலுத்தி, எங்கள் பொருட்களை மட்டுமே கொண்டு இத்தகு போரெனும் வேள்வியைச் செய்யப் போகும் நாங்கள், பகைவர்களைக் கொன்ற பிறகு, புகழோடு கூடிய வெற்றியுடன் திரும்புவோம். ஓ! தந்தையே, நான், கர்ணன் மற்றும் என் தம்பி துச்சாசனன் ஆகிய மூவரும் சேர்ந்து, போர்க்களத்தில் பாண்டவர்களைக் கொல்வோம்.

ஒன்று பாண்டவர்களைக் கொல்லும் நான், இப்பூமியை ஆள்வேன், அல்லது என்னைக் கொன்ற பிறகு, பாண்டவர்கள் இந்தப் பூமியை அனுபவிக்கட்டும். ஓ! மன்னா, ஓ! மங்காப் புகழ் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, உயிர், நாடு, செல்வம், ஏன் அனைத்தையும் நான் தியாகம் செய்வேன், ஆனால் பாண்டவர்களுடன் அருகருகே வாழ்வதென்பது என்னால் இயலாது. ஓ! மதிப்பிற்குரியவரே {திருதராஷ்டிரரே}, ஊசியின் கூரிய முனை மூடும் அளவிலான நிலத்தைக்கூட  நான் பாண்டவர்களுக்குத் திருப்பித் தர மாட்டேன்” என்றான் {துரியோதனன்}.

திருதராஷ்டிரன், நான் இப்போது, துரியோதனனை என்றென்றைக்கும் கைவிடுகிறேன். மன்னர்களே, இந்த மூடனைப் {துரியோதனனைப்} பின்தொடர்ந்து யமனுலகு செல்லப் போகும் உங்கள் அனைவருக்காகவும் நான் வருந்துகிறேன். மான்கூட்டத்திற்கு மத்தியில் இருக்கும் புலிகளைப் போல, அடிப்பவர்களில் முதன்மையான அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, போர்க்களத்தில் கூடியிருக்கும் உங்கள் முக்கியத் தலைவர்களை அடித்து வீழ்த்துவார்கள்.

நீண்ட கரங்கள் கொண்ட யுயுதானனால் {சாத்யகியால்} நசுக்கி தூர வீசப்படும் போது, பாரதப் படை ஆதரவற்ற பெண்ணைப் போல இருக்கும் என நான் நினைக்கிறேன். சாத்யகி இல்லாமலேயே, ஏற்கனவே போதுமானதாக இருந்த யுதிஷ்டிரனின் படைக்கு கூடுதல் பலமாக,  அந்தச் சினியின் மகன் {சாத்யகி}, போர்க்களத்தில் தனது நிலையை உறுதி செய்து, உழுத நிலத்தில் வீசப்படும் விதைகளைப் போலத் தன் கணைகளைச் சிதறுவான்.

எதிரிகளுடைய அந்தப் படையின் முன்னணியில், தனது நிலையைப் பீமசேனன் ஏற்பான். அச்சமற்ற அவனது வீரர்கள் அனைவரும் அவனுக்குப் பின்னால் அரணாக இருப்பார்கள். ஓ! துரியோதனா, பெரும் மலைகளைப் போன்ற யானைகள், தங்கள் தந்தந்தங்கள் ஒடிந்து, தலை நசுக்கப்பட்டு, உடல்களில் ஆகோரமாகச் சாயம் ஏற்றப்பட்டு,  பிளக்கப்பட்ட மலைகளைப் போல போர்க்களத்தின் தரையில் கிடப்பதைக் கண்டு, உண்மையில், அவனுடன் {பீமனுடன்} மோதுவதற்கு எப்போது நீ அஞ்சுவாயோ, அப்போது, எனது இந்த வார்த்தைகளை நீ நினைவுகூர்வாய்.

தேர்கள், குதிரைகள், ஆகியவற்றைக் கொண்ட உனது படை, பீமசேனனால் எரிக்கப்பட்டு, வெறும் காட்டுத் தீயாக பரந்து விரிந்து இருப்பதை எப்போது நீ காண்பாயோ, அப்போது, இந்த எனது வார்த்தைகளை நீ நினைவுகூர்வாய்.

பாண்டவர்களிடம் நீ சமாதானம் கொள்ளவில்லையென்றால், பேரிடர் உனதாகும். பீமசேனனின் கதாயுதத்தால் கொல்லப்பட்ட பிறகு, நீ அமைதியாக ஓய்வாய். உண்மையில், பெரும் கானகம் ஒன்று வேரோடு சாய்க்கப்பட்டதைப் போல, முழு கௌரவப்படையையும் எப்போது அவன் {பீமன்} தரையோடு தரையாக்குவானோ, அப்போது நீ எனது இந்த வார்த்தைகளை நினைவுகூர்வாய்” என்றான் {திருதராஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பூமியின் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இதைச் சொன்ன அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, மீண்டும் சஞ்சயனிடம் பின்வருமாறு கேட்டான்.”