Thursday, April 09, 2015

கிருஷ்ணனின் பேச்சு! - உத்யோக பர்வம் பகுதி 59

The speech of Krishna! | Udyoga Parva - Section 59 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 19) {யானசந்தி பர்வம் - 13}

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன், சத்யபாமா, அர்ஜுனன் மற்றும் திரௌபதி ஆகியோர் அந்தப்புரத்தில் இருந்தபோது சஞ்சயன் சந்தித்தது; கிருஷ்ணனின் கால்கள் அர்ஜுனனின் மடியிலும், அர்ஜுனனின் கால்கள் சத்யபாமா மற்றும் திரௌபதியின் மடியிலும் கிடந்ததைச் சஞ்சயன் கண்டது; அர்ஜுனனின் பாதங்களில் மங்களக்குறிகளைச் சஞ்சயன் கண்டது; திருதராஷ்டிரனுக்குச் சொல்லுமாறு எச்சரிக்கை நிறைந்த வார்த்தைகளைக் கிருஷ்ணன் சஞ்சயனிடம் சொன்னது; கிருஷ்ணன் பேசி முடித்ததும், அர்ஜுனனும் அதே போன்ற வார்த்தைகளைச் சொன்னது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! பெரும் ஞானம் கொண்டவனே {சஞ்சயா}, உயர் ஆன்ம வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} மேலும் என்ன சொன்னார்கள் என்பதை எனக்குச் சொல். இது குறித்து அனைத்தையும் நான் உன்னிடம் கேட்க ஆவலாக இருக்கிறேன்”


அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணனையும், தனஞ்சயனையும் என்ன நிலையில் நான் கண்டேன் என்பதைச் சொல்கிறேன் கேளும். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் உமக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பணிந்த பார்வையுடனும், கூப்பிய கரங்களுடனும், நன்கு அடக்கப்பட்ட புலன்களுடனும், அந்த மனிதர்களில் தேவர்களுடன் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனுடன்} கலந்துரையாடுவதற்காக அந்தரப்புரத்திற்குள் நான் நுழைந்தேன்.

அந்த இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களும்_கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனும்}, திரௌபதியும், பிராட்டி சத்யபாமாவும் {the two Krishnas and Draupadi and lady Satyabhama } இருந்த அந்த இடத்திற்கு, அபிமன்யுவோ, இரட்டையர்களோ {நகுலன் மற்றும் சகாதேவனோ} கூடச் செல்ல முடியாது. மலர்மாலைகளால் உடல் அலங்கரிக்கப்பட்டு, இலுப்பம்பூ மதுவினால் மயங்கியிருந்த {exhilarated with Bassia wine} அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களை {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனை} அங்கே நான் கண்டேன்.

சிறந்த ஆடைகள் உடுத்தி, தெய்வீக ஆபரணங்களாலும், எண்ணிலடங்கா ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்கள், பல்வேறு இழையமைப்புகளும், நிறங்களும் கொண்ட தரைவிரிப்புகளால் மூடப்பட்டிருந்த தங்க மேடையில் அமர்ந்திருந்தார்கள்.

கேசவனின் {கிருஷ்ணனின்} பாதங்கள் அர்ஜுனன் மடியிலும், உயர் ஆன்ம அர்ஜுனனின் பாதங்கள் கிருஷ்ணை {திரௌபதி} மற்றும் சத்யபாமா ஆகியோர் மடிகளிலும் இருந்ததை நான் கண்டேன்.

அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, (நான் அமர்வதற்காக), தங்கத்தாலான ஒரு பாதபீடத்தை எனக்குச் சுட்டிக்காட்டினான். அதை என் கையால் தொட்டபடி, நான் கீழே தரையில் அமர்ந்து கொண்டேன். அவன் {அர்ஜுனன்} தனது காலை அந்தப் பாதபீடத்தில் இருந்து எடுத்தபோது, அவனது {அர்ஜுனனின்} இரு பாதங்களிலும் மங்களக்குறிகளை நான் கண்டேன். குதிகால்களில் இருந்து கட்டை விரல் வரை ஓடும் இரு நெடுக்கான கோடுகளை அவை {பாதங்கள்} கொண்டிருந்தன. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கரிய நிறமும், உயரமான தோற்றமும், ஆச்சாமரத் {சாலமரத்} தண்டுகளைப் போன்ற உறுதியும் கொண்ட இளமை நிறைந்த அந்த வீரர்கள் இருவரும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} ஒரே இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்ட போது, பெரும் அச்சம் என்னைப் பீடித்தது.

ஒன்றாக அமர்ந்திருந்த இந்திரனையும், விஷ்ணுவையும் போல அவ்விருவரும் {கிருஷ்ணனும் அர்ஜுனனும்} எனக்குத் தெரிந்தார்கள். ஆயினும், துரோணர் மற்றும் பீஷ்மரையும், வீண்வீராப்புகளை உரத்துப் பேசும் கர்ணனையும் நம்புவதன் விளைவாக, இந்த மந்த புத்தி கொண்ட துரியோதனன் இதை அறியவில்லை. அவ்விருவரையும் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} தனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கச் செய்யும், அந்த நீதிமானான யுதிஷ்டிரனின் விருப்பங்கள் நிச்சயம் நிறைவேறும் என்பதில் அந்தக் கணமே நான் உறுதியடைந்தேன்.

உணவு மற்றும் பானங்களால், விருந்தோம்பலோடு உபசரிக்கப்பட்டு, மற்ற உபசாரங்களாலும் கௌரவிக்கப்பட்ட நான், எனது கூப்பிய கரங்களைத் தலையில் வைத்துக் கொண்டு, உமது செய்தியை அவர்களுக்குத் தெரிவித்தேன்.

பிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, நாண்கயிற்றால் தழும்பேறிய தனது கரங்களைக் கொண்டு தன் மடியில் இருந்த கேசவனின் {கிருஷ்ணனின்} மங்களகரமான பாதங்களை அகற்றி அவனைப் {கிருஷ்ணனைப்} பேசத் தூண்டினான். அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சக்தியில் இந்திரனைப் பிரதிபலித்த கிருஷ்ணன், இந்திரனின் கொடி போல உறுதியாக அமர்ந்த பிறகு என்னிடம் பேசினான். பேச்சாளர்களில் சிறந்த அவன் {கிருஷ்ணன்} சொன்ன வார்த்தைகள், திருதராஷ்டிரன் மகன்களுக்குத் துயர் நிறைந்தவையாகவும் அச்சம் தருவனவையாக இருந்தாலும், இனிமையாகவும், அழகாகவும், மென்மையாகவும் இருந்தன. எவன் ஒருவன் மட்டுமே பேசத் தகுந்தவனோ, அந்தக் கிருஷ்ணன், உச்சரித்த வார்த்தைகள், முடிவில் இதயத்தை உருக்குவதாக இருந்தாலும், உண்மையில் அவை, சரியான முக்கியத்துவம் கொண்டவையாகவும், பொருள் பொதிந்தவையாகவும் இருந்தன.

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! சஞ்சயரே, ஓ! சூதரே {சஞ்சயரே}, எங்கள் வேண்டுகோளுக்கிணங்க, முதலில் முதியோர் அனைவரையும் வணங்கி, இளையோரின் நலன்களையும் விசாரித்த பிறகு, குருக்களின் முதன்மையானவரான பீஷ்மரும், துரோணரும் கேட்டுக் கொண்டிருக்கையில், ஞானியான திருதராஷ்டிரரிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லும். “பெரிய ஆபத்து ஒன்று உம்மை அச்சுறுத்தும் போது, அந்தணர்களுக்குப் பரிசுகளை அளித்து, பல்வேறு வேள்விகளைச் செய்து, உமது மகன்கள் மற்றும் மனைவியருடன் மகிழ்ந்திருப்பீரோ? மன்னன் யுதிஷ்டிரர் வெற்றிக்கு ஆவலாய் இருக்கையில், தகுந்தவர்களுக்குச் செல்வத்தைத் தானமளித்து, விரும்பத்தக்க மகன்களைப் பெற்று, உமது அன்புக்குரியோருக்கு ஏற்புடைய அலுவல்களைச் செய்வீரோ?” என்று அவன் {கிருஷ்ணன், உம்மிடம்} சொல்லச் சொன்னான்.

நான் தொலைவில் இருந்த போது, கண்ணீருடன் கூடிய அந்தக் கிருஷ்ணன் என்னிடம், “காலத்தோடு திரட்டப்பட்ட கடன், என்னால் இன்னும் திருப்பிச் செலுத்தப்படவில்லை. எரிக்கும் சக்தி கொண்ட காண்டீவத்தைத் தனது வில்லாகவும், உதவும் துணைவனாக என்னையும் கொண்ட சவ்யசச்சினுடன் {அர்ஜுனனுடன்} நீர் பகை கொண்டிருக்கிறீர். புரந்தரனாகவும் {இந்திரனாகவும்}, ஆயுள் நிரம்பியவனாகவும் இருந்தாலும் கூட, என்னைத் துணைவனாகக் கொண்ட பார்த்தனுக்கு அறைகூவல் விடுக்கத்தகுந்தவன் எவன்? போரில் அர்ஜுனனை {அர்ஜுனனுக்கு} வீழ்த்தவல்ல ஒருவனால், உண்மையில், தன் இரு கரங்களைக் கொண்டு பூமியைத் தாங்கிக் கொள்ள முடியும்; படைக்கப்பட்ட அத்தனை பொருட்களையும் கோபத்தில் எரித்துவிட முடியும்; சொர்க்கத்தில் இருந்து தேவர்களை அவனால் வீசி எறிந்துவிட முடியும்.

தேவர்கள், அசுரர்கள், மனிதர்களுக்கு மத்தியிலும்; யக்ஷர்கள், கந்தர்வர்கள் மற்றும் நாகர்களுக்கு மத்தியிலும், அர்ஜுனனுடன் போரில் மோதவல்ல ஒரு நபரை என்னால் காண முடியவில்லை.

ஒரு புறத்தில் ஒரு தனி மனிதனையும் {அர்ஜுனனையும்ம்}, மறுபுறத்தில் எண்ணிலடங்கா வீரர்களையும் {கௌரவர்களையும்} கொண்டு, விராட நகரத்தில் நடந்த மோதல் குறித்து, என்னால் கேட்கப்பட்ட அற்புதக் கதையே இதற்குப் போதுமான சான்றாக இருக்கும். அதாவது, ஒருவனாக இருந்த பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்}, விராட நகரத்தில் இருந்து நீங்கள் முற்றாக விரட்டப்பட்டீர்கள் என்பதே இதற்குப் போதுமான சான்றல்லவா?

வலிமை, ஆற்றல், சக்தி, வேகம், கரங்களின் இலகு, அயராத்தன்மை, பொறுமை ஆகிய பண்புகள் அனைத்தும் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} தவிர வேறு எவனிடமும் காணப்படாது” என்றான் {கிருஷ்ணன்}.

இப்படிப் பேசிய ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, தன் வார்த்தைகளால் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} உற்சாகமூட்டியபடி, ஆகாயத்தில் இருக்கும் மழை நிறைந்த மேகங்களைப் போலக் கர்ஜனை செய்தான். கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பிறகு, வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனனும் அதே தாக்கத்துடன் பேசினான்.