Friday, April 10, 2015

சமாதானமே விருப்பம்; போரல்ல! - உத்யோக பர்வம் பகுதி 60

I wish for peace; not war! | Udyoga Parva - Section 60 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 20) {யானசந்தி பர்வம் - 14}

பதிவின் சுருக்கம் : இரு தரப்பு படைகளின் பலம் மற்றும் பலமின்மைகளையும் திருதராஷ்டிரன் நினைத்துப் பார்ப்பது; பாண்டவர்களுக்குத் தேவர்கள் உதவி செய்வார்கள் என்றும், சமாதானமே தனக்கு விருப்பமானது என்றும் திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தனது கண்ணையே அறிவாகக் {ஞானமாகக்} கொண்ட அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, சஞ்சயனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, நன்மை {எது?} என்றும், தீமை {எது?} என்றும், தான் கருதுவதைக் குறித்துப் பேசினான். தன்னால் இயன்றவரை, நன்மைகள் மற்றும் தீமைகளை விவரமாகக் கணக்கில் எடுத்துக் கொண்டவனும், இரு தரப்பின் பலம் மற்றும் பலவீனங்களைச் சரியாக உறுதி செய்து கொண்டவனும், தனது மகன்களின் வெற்றியை எப்போதும் விரும்புபவனும், கல்விமானுமான அந்தப் புத்திசாலி மன்னன் {திருதராஷ்டிரன்}, இரு தரப்புகளின் பலங்களைக் குறித்தும் ஒப்பீடு செய்ய ஆரம்பித்தான்.

கடைசியாக, மனித வகையிலும், தெய்வீக வகையிலும் பாண்டவர்களே பலத்தோடு இருப்பதாகவும், குருக்கள் {கௌரவர்கள்} பலவீனமாக இருப்பதாகவும் உறுதி செய்து கொண்ட திருதராஷ்டிரன், துரியோதனனிடம், "இந்தப் பதட்டம், ஓ! துரியோதனா, எப்போதும் என்னில் நிறைந்திருக்கிறது. உண்மையில் அஃது என்னை விட்டு அகல மறுக்கிறது. அதை நான், எனது கண்களால் காண்பதாக எனக்கு நிச்சயமாகத் தோன்றுகிறது. அனுமானத்தால் விளைந்த ஒரு காரியம் அல்ல இந்நம்பிக்கை. படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும், தங்கள் வாரிசுகளின் மேல் பெரும் பாசத்தைக் காட்டுகின்றன. மேலும், வாரிசுகளுக்கு எது ஏற்புடையதோ? எது நன்மையானதோ? அதைத் தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்திச் செய்கின்றனர். நன்மை செய்ய விரும்புகிறவர்களின் வழக்கில் எல்லாம் இதுவும் பொதுவாகக் காணப்படுகிறது.

காண்டவ வனத்தில் அக்னி உதவியஅர்ஜுனனும் கிருஷ்ணனும்
நல்லவர்கள், தங்களுக்குச் செய்யப்பட்ட நன்மையைத் திரும்பச் செய்யவும் மற்றும் தங்கள் நலன் விரும்பிகளுக்கு மிகவும் ஏற்புடையவற்றைச் செய்யவுமே எப்போதும் விரும்புகின்றனர். காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} தனக்குச் செய்யப்பட்டதை {செய்யப்பட்ட நன்மையைக்} கருதும் அக்னி, குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்}, பாண்டவர்களுக்கும் இடையில் நடக்கப்போகும் இந்தப் பயங்கர மோதலில், அர்ஜுனனுக்குத் தனது உதவியைத் தருவான் என்பதில் ஐயமில்லை. தந்தை பாசத்தால் தர்மனும் {யமனும்}, முறையாக எழுப்பப்பட்ட பிற தேவர்களும் சேர்ந்து பாண்டவர்களின் உதவிக்கு வருவார்கள்.

இடியைப் போன்ற விளைவுகளைக் கொடுக்கும் தேவர்கள், பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோரிடம் இருந்து அவர்களைக் {பாண்டவர்களைக்} காப்பதற்காகவே {நம் மேல்} கோபத்தில் நிறைந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.

சக்தி கொண்டவர்களும், ஆயுதங்களின் பயன்பாடுகளை நன்கு அறிந்தவர்களும், மனிதர்களில் புலிகளுமான அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, தேவர்களுடன் சேரும்போது, {நமது படையின்} மானுட வீரர்கள், அவர்களைக் காணவும் சக்தியற்றவர்களாக இருப்பார்கள்.

தடுக்கப்பட முடியாததும் அற்புதமானதும் தெய்வீகமானதுமான காண்டீவத்தை எவன் தனது வில்லாகக் கொண்டிருக்கிறானோ; பெரியதும், கணைகள் நிறைந்ததும், வற்றாததும், தெய்வீகமானதுமான இரு அம்பறாத்தூணிகளை எவன் கொண்டிருக்கிறானோ; புகை போன்ற செயல்பாடுடையதும், குரங்கு {அனுமன்} படத்தை தெய்வீக வடிவில் கொண்டதுமான கொடி எவனுக்கு உடையதோ; நான்கு கடல்கள் சூழ்ந்த பூமியில், ஈடு இணையற்றதும், மேகங்களின் கர்ஜனை போன்ற சடசடப்போசையை மனிதர்களைக் கேட்கச் செய்வதும், உருளும் இடியைப் போல எதிரிகளைப் அச்சங்கொள்ளச் செய்வதுமான தேரை எவன் கொண்டிருக்கிறானோ; மனித சக்திக்கு அப்பாற்பட்டவன் என மக்களால் எவன் கருதப்படுகிறானோ; போர்க்களத்தில் தேவர்களையே கூட வீழ்த்தவல்லவன் எனப் பூமியில் உள்ள மன்னர்கள் எவனை அறிகிறார்களோ; ஐநூறு {500} கணைகளை ஒரே நேரத்தில் எடுத்து, ஒருமுறை கண்மூடித் திறப்பதற்குள், அவற்றைப் பிறர் காணாமல் பெருந்தூரத்திற்கு எவன் அடிப்பானோ; மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்களான பூமியின் மன்னர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவனென்றும், போரிடத் தயாராக இருந்தால் ஒரே முறையில் ஐநூறு கணைகளை அடிக்க வல்லவன் என்றும், கரங்களின் பலத்தில் கார்த்தவீரியனுக்கு நிகரானவன் என்றும், பீஷ்மர், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ர மன்னனான சல்யன் மற்றும் பாகுபாடற்ற மனிதர்கள் அனைவரும் உண்மையில் எவனைக் கருதுகிறார்களோ, அவன், தேர்வீரர்கள் மத்தியில் புலியானவனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், பிருதையின் {குந்தியின்} மகனும், பெரும் வில்லாளியுமான அந்த அர்ஜுனன், ஆற்றலில், இந்திரனுக்கோ உபேந்திரனுக்கோ நிகரானவனே. இந்தக் கொடூரமான போரில் அந்தப் பெரும் வீரன் {அர்ஜுனன்} பெரும் அழிவை உண்டாக்குவதை நான் காண்கிறேன்.

ஓ! பாரதா {துரியோதனா}, குருக்களின் {கௌரவர்களின்} நலத்தில் உள்ள பதட்டத்தின் காரணமாக, பகலும் இரவும் இதையே நினைத்து, மகிழ்ச்சியற்றவனாகவும், உறக்கமற்றவனாகவும் நான் இருக்கிறேன். இந்தப் பூசலைத் தீர்க்க சமாதானத்தைத் தவிர வேறெதுவுமில்லை. குருக்களை {கௌரவர்களை} ஒரு பயங்கர அழிவு பீடிக்கப்போகிறது. பார்த்தர்களுடன் {பாண்டவர்களுடன்} சமாதானமே எனக்கு விருப்பமானது; போரல்ல! ஓ குழந்தாய் {துரியோதனா}, குருக்களை {கௌரவர்களை} விட எப்போதும் பாண்டவர்கள் வலிமைமிக்கவர்கள் என்றே நான் நினைக்கிறேன்" என்றான் {திருதராஷ்டிரன்}.