Sunday, April 12, 2015

தேவர்களைவிட என் சக்தி பெரிது! - உத்யோக பர்வம் பகுதி 61

My energy is greater than the gods!| Udyoga Parva - Section 61 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 21) {யானசந்தி பர்வம் - 15}

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களுக்குத் தேவர்கள் உதவ மாட்டார்கள் என்று துரியோதனன் திருதராஷ்டிரனிடம் சொல்வது; அப்படி உதவியிருந்தால் பதிமூன்று வருடங்களாகத் துன்பத்தை  ஏன் பாண்டவர்கள் அனுபவிக்க வேண்டும் என்றும், தேவர்கள் உலகியல் காரியங்களில் இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டு செயல்படுவார்கள் என்றும் சொன்னது; அப்படியே தேவர்கள் இன்ப துன்பங்களுக்கு ஆட்பட்டாலும், தன்னால் அவர்களை வசீகரித்துவிட முடியும் என்றும் சொன்னது; தேவர்கள் கொண்டிருக்கும் சக்தியைவிட, தான் கொண்டிருக்கும் சக்தி பெரிது எனச் சொன்னது; தான் பெற்றிருக்கும் மந்திர வித்தைகளைக் குறித்துச் சொன்னது;  புத்தி, சக்தி, அறிவு, வளம் ஆகிய அனைத்திலும்,  தானே பாண்டவர்களை விட மேன்மையானவனாக இருப்பதாகத் திருதராஷ்டிரனிடம் துரியோதனன் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தன் தந்தையின் வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரனின் பாசமிகு மகன் {துரியோதனன்}, பெரும் கோபத்தில் பற்றி எரிந்தபடி, பொறாமையால், மீண்டும் இந்த வார்த்தைகளைச் சொன்னான், "தேவர்களைத் தங்கள் கூட்டாளிகளாகப் பார்த்தர்கள் {பாண்டவர்கள்} கொண்டிருக்கின்றனர் என்றும், அவர்கள் வீழ்த்தப்பட முடியாதவர்கள் என்றும் நீர் நினைக்கிறீர். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இந்த உமது அச்சம் விலகட்டும். இச்சை, பேராசை மற்றும் பகை ஆகியவற்றைக் கைவிட்டும், உலகளாவிய காரியங்களில் பாகுபாடற்று நடந்துமே தேவர்கள் தங்கள் தெய்வீகத் தன்மையை அடைந்தார்கள். துவைபாயன வியாசர், பெரும் தவத்துறவுகள் கொண்ட நாரதர், ஜமதக்னியின் மகன் ராமர் {பரசுராமர்} ஆகியோர் முன்பே இதை நமக்குச் சொல்லியிருக்கின்றனர்.


ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இச்சை, கோபம், பேராசை, பொறாமை ஆகியவற்றைக் கொண்டு, ஒரு போதும் மனிதர்களைப் போலத் தேவர்கள் வேலையில் ஈடுபடுவதில்லை. உண்மையில், அக்னியோ, வாயுவோ, தர்மனோ {யமனோ}, இந்திரனோ, அசுவினிகளோ உலகளாவிய ஆசைகளின் காரணமாக எப்போதாவது தங்களை வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தால், பிருதையின் {குந்தியின்} மகன்கள் துயரத்தில் விழுந்திருக்க மாட்டார்கள். எனவே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்களுக்குத் தகுந்த காரியங்களிலேயே தேவர்கள் தங்கள் கண்களை எப்போதும் நிலைத்து வைத்திருப்பர் என்பதால், இத்தகு கவலைகளில் நீர் ஈடபடலாகாது.

எனினும், {தாங்கள் கொண்ட} ஆசையின் விளைவால், தேவர்கள் பொறாமையையோ காமத்தையோ கவனிக்கிறார்கள் என்றானால், பிறகு, அந்தத் தேவர்களாலேயே விதிக்கப்பட்ட பொறாமையோ, நீதியோ மேலோங்க முடியாது. அக்னி, அனைத்து உயிர்களையும் எரித்துவிடும்படி சுற்றிலும் சுடர் விட்டெரிந்தாலும், என்னால் வசீகரிக்கப்படும் அவன் {அக்னி}, உடனடியாக அணைக்கப்படுவான். தேவர்கள் பெற்றிருக்கும் சக்தி பெரிதே. ஆனால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தத் தேவர்களை விட எனது சக்தி பெரியது என்பதை அறிவீராக.

கல் மழை
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமி இரண்டாகப் பிளந்தாலும், மலைமுகடுகள் பிளந்தாலும், அனைவரின் கண்களுக்கும் முன்பாக, என் மந்திரங்களின் மூலம், மீண்டும் அவற்றை என்னால் ஒன்றிணைக்க முடியும். இயக்கமுடையன, இயக்கமற்றன, அசைவன, அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இந்த அண்டத்தின் அழிவுக்காக ஒரு பயங்கரப் புயலோ, பெரும் கர்ஜனை கொண்ட கல் மழையோ ஏற்படுமானால், படைக்கப்பட்ட உயிரினங்கள் மேல் நான் கொண்ட இரக்கத்தின் காரணமாக, அனைவர் கண் முன்பாகவும் எப்போதும் என்னால் அதைத் தடுக்க முடியும்.
நீர் திடமாதல்
(பனிக்கட்டியாதல்)
என்னால் நீர்நிலைகள் திடமாக்கப்படும்போது, அவற்றில் தேர்களும், காலாட்படையும் நடக்கலாம்.

தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருதரப்பினரின் விவகாரங்கள் அனைத்தையும் நானே அமைக்கிறேன். என்ன காரியத்திற்காகவும், என் அக்ஷௌஹிணிகளுடன் நான் எந்த நாடுகளுக்குச் சென்றாலும், நான் விரும்பும் இடங்களுக்கெல்லாம் எனது குதிரைகள் நகர்கின்றன. என் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் அச்சமூட்டும் பாம்புகள் எதுவும் கிடையாது. என் பகுதிக்குள் இருக்கும் உயிரனங்கள் {மனிதர்களும் சேர்த்து}, என் மந்திரங்களால் பாதுகாக்கப்பட்டு, பயங்கரமானவற்றால் எப்போதும் காயப்படுத்தப்படுவதில்லை.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, என் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போரைப் பொறுத்தவரை, மேகங்களே கூட [1], {என் மக்கள்} விரும்பும் அளவுக்கும், விரும்பும் நேரத்திலும் {மழையைப்} பொழிகின்றன. மேலும், எனது குடிமக்கள் அனைவரும் அறத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள் {தர்மத்தை அனுசரிக்கிறார்கள்}. எனவே காலத்தால் ஏற்படும் துயரங்களுக்கு [2] அவர்கள் {என் மக்கள்} ஆட்படுவதில்லை. அசுவினிகள், வாயு, அக்னி, மருதர்களுடன் கூடிய இந்திரன், தர்மன் {யமன்} ஆகியோர் என் எதிரிகளைப் பாதுகாக்கத் துணியவில்லையே. இவர்களால் {மேற்சொன்ன தேவர்களால்} என் பகைவர்களைப் பாதுகாக்க முடிந்திருந்தால், பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, இத்தகு துன்பத்தில் பதிமூன்று வருடங்கள் வீழ்ந்திருக்கமாட்டார்கள்.

[1] மேகங்கள் = பர்ஜனயன் = இந்திரனின் ஓர் உருவம்
[2] அதிக மழை, மழையின்மை, வெட்டுக்கிளிகள், எலிகள், கிளிகள் போன்றவை

எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியவனை {என்னால் பகைக்கப்பட்டவனை} தேவர்களாலோ, கந்தர்வர்களாலோ, அசுரர்களாலோ, ராட்சசர்களாலோ காக்க இயலாது என்பதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். என் நண்பனுக்கோ பகைவனுக்கோ, நான் அளிக்கவோ, தண்டிக்கவோ நினைத்த வெகுமதியில் இருந்து தண்டனை வரை எதுவும் இதற்கு முன்பு பொய்த்ததில்லை. ஓ! பகைவரை ஒடுக்குபவரே {திருதராஷ்டிரரே}, “இது நடக்கும்” என்று நான் சொன்னால், அஃது எப்போதும் நடந்தே இருக்கிறது. எனவே, மக்கள் என்னை எப்போதும் உண்மை பேசுபவனாகவே அறிந்திருக்கிறார்கள். அனைத்துப் புறங்களிலும் பரவிய புகழைக் கொண்ட எனது பெருமையை மக்கள் அனைவரும் சாட்சியாகக் காண்கிறார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவை யாவற்றையும் உமது தகவலுக்காகவே சொல்கிறேன்; செருக்காலல்ல. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது இழிவானது. ஆகையால், இதற்கு முன்னர் ஒருபோதும் என்னை நானே புகழ்ந்து கொண்டதில்லை. பாண்டவர்கள், மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், கேகயர்கள், சாத்யகி, வாசுதவேன் {கிருஷ்ணன்} ஆகியோர் என் கைகளில் தோற்றனர் என்பதை நீர் கேள்விப்படுவீர்.

உண்மையில், கடலுக்குள் நுழையும் ஆறுகள் எப்படி முழுதும் தொலைந்து போகுமோ, அப்படி, என்னை அணுகும்போது, தங்கள் தொண்டர்களுடன் கூடிய பாண்டவர்கள் அனைவரும் அழிவார்கள். எனது புத்தி மேன்மையானது, எனது சக்தி மேன்மையானது, எனது ஆற்றல் மேன்மையானது, எனது அறிவு மேன்மையானது, எனது வளங்களோ, பாண்டவர்களை விட மிக மேன்மையானது. பாட்டனிடமும் {பிதாமகரான பீஷ்மரிடமும்}, துரோணரிடமும், கிருபரிடமும், சல்லியனிடம், சலனிடமும் என்னவெல்லாம் ஆயுத ஞானம் இருக்குமோ, அவை அனைத்தும் என்னிடமும் உள்ளன” என்றான் {துரியோதனன்}.

இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, ஓ! பாரதா {ஜமனேஜயா}, எதிரிகளை ஒடுக்குபவனான துரியோதனன், போரிடும் விருப்பமுள்ள யுதிஷ்டிரனின் நடவடிக்கைகளை உறுதி செய்து கொள்வதற்காக, மீண்டும் சஞ்சயனிடம் வினவலானான்.