Tuesday, May 26, 2015

"மரணமே கடவுள்!" என்ற கருடன்! - உத்யோக பர்வம் பகுதி 112

"Death is God himself!" said Garuda! | Udyoga Parva - Section 112 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –41)

பதிவின் சுருக்கம் : கிழக்கு திசையை நோக்கிச் செல்லுமாறு கருடனிடம் காலவர் கேட்டுக் கொண்டது; கருடன் தனது முதுகில் காலவரை ஏற்றிக் கொண்டது; கருடனின் வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத காலவர் அதைக் கருடனிடம் சொன்னது; ரிஷப மலையில் ஓய்ந்து போகலாம் என்று கருடன் சொன்னது...

காலவர் {கருடனிடம்} சொன்னார், "ஓ கருடா, பாம்புகளில் முதன்மையானோரைக் கொல்பவனே, ஓ! அழகிய சிறகுகள் கொண்டவனே, ஓ! வினதையின் மகனே {கருடனே}, ஓ! தார்க்கியா {தார்க்ஷயா}, தர்மத்தின் கண்கள் இரண்டும் எங்கு விழித்தனவோ, அந்தக் கிழக்குத் திசைக்கு என்னைச் சுமந்து செல்வாயாக. எங்கே தேவர்கள் எப்போதும் இருப்பார்கள் என்று நீ முதலில் சொன்னாயோ, அந்தக் கிழக்குத் திசைக்கு என்னை அழைத்துச் செல். உண்மையும், அறமும் அங்கே வசிக்கின்ற என்று நீ சொல்லியிருக்கிறாய். தேவர்கள் அனைவரையும் நான் சந்திக்க விரும்புகிறேன். எனவே, அருணனின் தம்பியே {கருடா}, நான் தேவர்களைக் காணும் வகையில் என்னை அங்கே {கிழக்குத் திசைக்கு} அழைத்துச் செல்" என்றார் {காலவர்}.


நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்ட வினதையின் மகன் {கருடன்}, அந்த அந்தணரிடம் {காலவரிடம்}, "என் முதுகில் ஏறுவாயாக" என்றான். பிறகு, காலவ முனிவர் கருடனின் முதுகில் ஏறினார்.

காலவர் {கருடனிடம்}, "ஓ! பாம்புகளை உண்பவனே {கருடா}, நீ பறந்து செல்கையில், ஆயிரம் கதிர்களைக் கொண்டவனும், நாள் படைப்பனுமான சூரியன் காலை வேளையில் இருப்பதைப் போன்ற அழகுடன் இருக்கிறாய். ஓ! விண்ணதிகாரியே {கருடா}, உனது சிறகடிப்பால் உண்டான புயல் காற்றில் மரங்களே உடைந்து உனது பாதையில் தொடரும் அளவுக்கு உனது வேகம் பெரியதாக இருக்கிறது.

ஓ! வானவாசியே {கருடா}, உனது சிறகுகளால் உண்டான புயலைக் கொண்டு கடல்களில் இருக்கும் நீர், மலைகள், காடுகளுடன் கூடிய பூமியையே இழுத்துவிடுவாய்ப் போலிருக்கிறது. உண்மையில், உனது சிறகுகளின் அசைவால் உண்டான பெருங்காற்று, மீன்கள், பாம்புகள் மற்றும் முதலைகள் நிரம்பிய கடல் நீரை ஆகாயத்தின் மத்தியப்பகுதி வரை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஒரே முகம் கொண்ட மீன்களும், மனித முகங்களைக் கொண்ட திமிகள், திமிங்கலங்கள் மற்றும் பாம்புகளும் உனது சிறகுகள் எழுப்பும் பெருங்காற்றால் நசுக்கப்படுகின்றன. அந்த ஆழ்ந்த கர்ஜனையால் எனது காதுகள் செவிடாகின்றன. எதையும் கேட்கவோ, பார்க்கவோ முடியாதபடி நான் மலைத்துப் போயிருக்கிறேன். உண்மையில், எனது சொந்த நோக்கத்தைக்கூட நான் மறந்து விட்டேன்.

ஓ! விண்ணதிகாரியே {கருடா}, ஓர் அந்தணனின் உயிர் ஆபத்தில் இருப்பதை நினைவுகூர்ந்து உனது வேகத்தைத் தளர்த்துவாயாக. ஓ! ஐயா, சூரியனையோ, திசைப்புள்ளிகளையோ, வானத்தையோ கூட என்னால் பார்க்க முடியவில்லை. என்னைச் சுற்றிலும் ஓர் அடர்த்தியான இருளையே நான் காண்கிறேன். உடலை என்னால் காண முடியவில்லை. ஓ! முட்டையிடும் இனத்தவனே {கருடா}, ஒளிமிக்க இரண்டு ரத்தினங்களைப் போல ஒளிரும் உனது கண்கள் இரண்டை மட்டுமே நான் காண்கிறேன். என்னால் உனது உடலையோ, எனது உடலையோ காண முடியவில்லை.

ஒவ்வொரு அடியிலும் உனது உடலில் இருந்து தீப்பொறி பறப்பதை நான் காண்கிறேன். இந்தத் தீப்பொறிகளை விரைவில் நிறுத்து, மேலும் உனது கண்களின் ஒளிர்வையும் நிறுத்து. ஓ! வினதையின் மகனே {கருடா}, உனது வழியில் நீ செல்லும் இந்த அபரிமித வேகத்தைத் தளர்த்துவாயாக. சந்திரப் பிரகாசத்துடனும், ஒரு காதில் கருப்பு நிறத்துடனும் கூடிய எண்ணூறு {800} குதிரைகளை எனது ஆசானுக்கு {விசுவாமித்திரருக்கு} கொடுப்பதாக நான் வாக்களித்திருக்கிறேன். ஓ! முட்டையிடும் இனத்தோனே {கருடா}, எனது வாக்குறுதியை நிறைவேற்றும் எந்த வழியையும் நான் காணவில்லை. ஆனால் ஒரு வழியை என்னால் காண முடிகிறது. அஃது எனது உயிரை விடுவதுதான். எனக்குச் சுயமாக எந்தச் செல்வமும் இல்லை, செல்வமிக்க எந்த நண்பரும் எனக்குக் கிடையாது, மேலும் அபரிமிதமான செல்வத்தாலும் எனது நோக்கத்தை அடைய துணை நிற்க முடியாது" என்றார் {காலவர்}.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "இதையும் இன்னும் பிற சோகமான வார்த்தைகளையும் சொன்ன காலவரிடம், வினதையின் மகன் {கருடன்}, தனது வேகத்தைக் குறைக்காமல் சிரித்துக் கொண்டே, "ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவா {காலவா}, உனது வாழ்வுக்கு ஒரு முடிவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் உனக்குச் சிறுமதியே இருக்கிறது. ஒருவனது முயற்சியால் அவனுக்கு மரணம் ஏற்படாது. உண்மையில் மரணமே கடவுள். உனது நோக்கத்தை இதற்கு முன் நீ எனக்கு ஏன் சொல்லவில்லை? இவை அனைத்தையும் சாதிக்கப் பல அற்புத வழிகள் இருக்கின்றன. இங்கே கடலின் அருகே ரிஷபம் என்றழைக்கப்படும் ஒரு மலை இருக்கிறது. அங்கே சிறிது நேரம் நாம் ஓய்வெடுப்போம். உணவால் புத்துணர்ச்சி பெற்ற பிறகு, ஓ! காலவா மீண்டும் நான் திரும்புவேன்" என்றான் {கருடன்}.