Wednesday, May 27, 2015

சாண்டிலி என்ற பெண்! - உத்யோக பர்வம் பகுதி 113

A lady called Sandili! | Udyoga Parva - Section 113 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –42)

பதிவின் சுருக்கம் : கருடனும் காலவரும் ஓய்வெடுக்க ரிஷப மலையில் இறங்குவது; அங்கே தவம் செய்யும் சாண்டிலியைக் கண்டது; சாண்டிலியின் விருந்தோம்பல்; கருடனின் சிறகுகள் பறிபோனது; தூய நடத்தையின் பெருமையைச் சாண்டிலி சொல்வது; கருடன் மீண்டும் சிறகுகளைப் பெற்றது; ரிஷப மலையில் இருந்து அவர்கள் புறப்பட்டதும், வழியில் காலவரை விஸ்வாமித்ரர் சந்தித்தது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "பிறகு ரிஷப மலையின் சிகரத்தில் இறங்கிய அந்த அந்தணரும் {காலவரும்}, அந்தப் பறவையும் {கருடனும்}, அங்கே தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சாண்டிலி என்ற அந்தணப் பெண்ணைக் கண்டனர். காலவரும், கருடனும் தங்கள் சிரம் தாழ்த்தி அவளை {சாண்டிலியை} வணங்கி வழிபட்டனர். அதன்பேரில், அந்த மங்கை அவர்களது நலன் விசாரித்து அவர்களுக்கு {அமர} இருக்கை கொடுத்தாள். உணவைச் சமைத்த அந்த மங்கை முதலில் மந்திரங்களால் அதைத் தேவர்களுக்குக் காணிக்கையாக்கினாள். இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இருவரும் {காலவரும், கருடனும்}, அந்த மங்கையால் {சாண்டிலியால்} தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அந்த உணவை உண்டனர். உணவை உண்ட பிறகு தங்களைத் தரையில் கிடத்திக் கொண்ட அவர்கள் {காலவரும், கருடனும்} இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தனர்.


விழித்ததும் அந்த இடத்தைவிட்டு செல்ல முயன்ற கருடன், தனது சிறகுகள் விழுந்துவிட்டதைக் கண்டான். உண்மையில், அவன் தலையும் கால்களும் மட்டும் உள்ள ஒரு சதைப் பிண்டம் {சதைகளால் ஆன உருண்டை} போல இருந்தான். அவனுக்கு நேர்ந்த இந்த அவலநிலையைக் கண்ட காலவர் மிகுந்த வருத்தத்துடன், "பயணம் மேற்கொண்டு இங்கே வந்ததன் விளைவாகத்தான் இந்த அவல நிலை உனக்கு வந்ததா? ஐயோ, இன்னும் எவ்வளவு காலம் நாம் இங்கே வசிக்க வேண்டியதிருக்கும்? உனது மனதில் தீமையான பாவ சிந்தனையை ஏதும் கொண்டாயா? நீ குற்றமுள்ள மனமுடன் இருப்பதால், அந்தப் பாவம் அற்பமானதாக இராது என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்" என்றார் {காலவர்}.

இப்படிச் சொல்லப்பட்ட கருடன், அந்த அந்தணரிடம் {காலவரிடம்}, "உண்மையில், ஓ! மறுபிறப்பாளனே {பிராமணனே-காலவா}, தவ வெற்றியால் மகுடம் சூட்டபட்டிருக்கும் இந்தப் பெண்மணியை இந்த இடத்தில் இருந்து, எங்கே படைப்பாளன் இருக்கிறானோ, எங்கே தெய்வீகமான மகாதேவன் {சிவன்} இருக்கிறானோ, எங்கே நித்தியமான விஷ்ணு இருக்கிறானோ, எங்கே அறமும் வேள்வியும் சேர்ந்து இருக்கிறதோ அங்கே தூக்கிச் சென்றுவிட வேண்டும் எனக்கருதினேன். ஏனெனில், இந்தப் பெண்மணி அங்கேயே வாழ வேண்டும் என நான் நினைத்தேன். இப்போது நான், எனக்கு நன்மை வேண்டி, இந்தப் புனிதமான பெண்மணியின் முன்பு நெடுஞ்சாண் கிடையாக விழுவேன், என்று சொல்லி பரிதாபம் நிறைந்த இதயத்துடன் அந்தப் பெண்மணியிடம் {சாண்டிலியிடம்}, "உண்மையில் நான் என் மனதில் இப்படியே நினைத்தேன். நான் சரியாகச் செயல்பட்டிருந்தாலும், தவறிழைத்திருந்தாலும், இதுவே எனது விருப்பமாக இருந்தது. அஃது உனது விருப்பத்திற்கு எதிரானது என்பது தெளிவு என்றாலும், உன் மீது கொண்ட மரியாதையின் நிமித்தமாகவே நான் அவ்வாறு நினைத்தேன். எனவே, உனது இதயத்தின் உன்னதத் தன்மையால் எனக்கு மன்னிப்பை அளிப்பதே உனக்குத் தகும்" என்றான் {கருடன்}.

அந்தப் பறவைகளின் இளவரசனிடமும், அந்த அந்தணர்களில் காளையிடமும் அந்தப் பெண்மணி மனநிறைவு கொண்டாள். அவள் {சாண்டிலி}, கருடனிடம், "ஓ! அழகிய இறகுகள் கொண்டவனே {கருடா}, அஞ்சாதே. உனது சிறகுகள் திரும்பும், உனது அச்சங்களை விலக்கு. உன்னால் நான் அவமதிக்கப்பட்டேன் {இகழ்வாகக் கருதப்பட்டேன்}. ஆனால், நான் இகழ்ச்சியை மன்னிப்பதில்லை என்பதை அறிந்து கொள்வாயாக. எந்தப் பாவி என்னை அவமதிப்பானோ, அவன் அருள் உலகங்கள் அனைத்தில் இருந்தும் வேகமாக விழுவான். என் மேல் எந்த ஓர் அமங்கலக் குறியும் இன்றி, முற்றிலும் பழியற்று இருக்கும் நான், எனது நடத்தையில் கொண்ட தூய்மையின் விளைவாக உயர்ந்த தவ வெற்றியை அடைந்திருக்கிறேன்.

தூய நடத்தையானது {ஆசாரமானது}, தனது கனியாக அறத்தைத் தாங்கி வருகிறது. தூய நடத்தையானது, தனது கனியாகச் செல்வத்தைத் தாங்கி வருகிறது. அந்தத் தூய நடத்தையே, செழிப்பையும் கொண்டு வருகிறது. அந்தத் தூய நடத்தையே {ஆசாரமே}, மங்கலமற்ற அனைத்து அறிகுறிகளையும் விரட்டி விடுகிறது. ஓ! பறவைகளின் அருளப்பட்ட இளவரசனே {கருடா}, இந்த இடத்தில் இருந்து நீ எங்கு விரும்புகிறாயோ அங்கே செல். என்னை இகழும் நினைப்பை ஊக்குவிக்காதே. உண்மையில் பழிக்கத்தக்க பெண்களும் இருக்கலாம். அவர்களைக் கூட நீ அவமதிக்காமல் கவனமாக இருப்பாயாக. முன்பைப் போலவே, நீ மீண்டும் பலத்தையும் சக்தியையும் பெறுவாய்" என்றாள் {சாண்டிலி}.

அந்தப் பெண்மணியின் வார்த்தைகளின் பேரில் கருடன் மீண்டும் சிறகுகளை அடைந்து, முன்பை விட அதிகப் பலவான் ஆனான். பிறகு சாண்டிலியிடம் விடைபெற்ற கருடன், காலவரை முதுகில் சுமந்த படி அங்கிருந்து {ரிஷப மலையிலிருந்து} சென்றான். ஆனால் தாங்கள் தேடி வந்த வகைக் குதிரைகளைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் தோல்வியுற்றனர். அப்போது வழியில் காலவரை விஸ்வாமித்ரர் சந்திக்க நேர்ந்தது.

வினதையின் மகன் {கருடன்} முன்னிலையிலேயே அந்தப் பேச்சாளர்களில் முதன்மையானவர் {விஸ்வாமித்ரர்}, காலவரிடம், "ஓ! மறுபிறப்பாளனே {காலவா}, நீ உன் சுயவிருப்பத்தின் படியே வாக்குறுதியளித்திருந்த செல்வத்தைக் கொடுக்க வேண்டிய நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நீ என்ன செய்வாய் என்பதை நான் அறியவில்லை. நான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். நான் இன்னும் சில காலம் காத்திருப்பேன். (வாக்குறுதி கொடுத்த காரியத்தில்) நீ வெற்றியடைத்தக்க வழியைத் தேடுவாயாக" என்றார் {விஸ்வாமித்ரர்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட கருடன், துயரத்தில் மூழ்கி உற்சாகமற்று இருந்த காலவரிடம், "உன்னிடம் விஸ்வாமித்ரர் முன்பே சொன்னதை, இப்போது என் முன்னிலையிலும் சொல்லக் கேட்டேன். எனவே, ஓ காலவா, அந்தணர்களில் சிறந்தவனே, வா, இக்காரியம் குறித்துத் தீர்மானிப்போம். (உன்னால் வாக்குறுதி அளிக்கப்பட்ட படி) உனது ஆசானுக்கு முழுச் செல்வத்தையும் அளிக்காமல், நீ அமரவும் கூடாது" என்றான் {கருடன்}.