Thursday, May 07, 2015

"போரே விருப்பம்!" என்ற சகாதேவன்! - உத்யோக பர்வம் பகுதி 81

"I desire war!" said Sahadeva! | Udyoga Parva - Section 81 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –10)

பதிவின் சுருக்கம் : கௌரவர்களே பாண்டவர்களிடம் சமாதானம் கோரினால் அதற்கு உடன்படக்கூடது என்றும்; திரௌபதியை அவமதித்த துரியோதனன் நிச்சயம் கொல்லப்பட வேண்டும் என்றும் பாண்டவர்கள் அனைவரும் அறம் சார்ந்திருந்தாலும், இக்காரியத்திற்காக அந்த அறத்தைத் துறந்து தான் துரியோதனனுடன் போரிட விரும்புவதாகவும் கிருஷ்ணனிடம் சொல்வது; சாத்யகி சகாதேவன் சொன்னதை ஆமோதித்துக் கிருஷ்ணனிடம் பேசியது; இதைக் கேட்ட போர்வீரர்கள் அனைவரும் ஆர்ப்பரித்துப் போருக்கான தங்கள் ஆவலை வெளிப்படுத்தத் தொடங்கியது...

சகாதேவன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், " உண்மையில், மன்னன் {யுதிஷ்டிரர்} சொன்னது நிலைத்த அறமாகும். ஆனால், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {கிருஷ்ணரே}, போர் நிச்சயம் நடக்கும்வண்ணம் நீர் செயல்பட வேண்டும். கௌரவர்களே பாண்டவர்களிடம் சமாதானம் கொள்ள விரும்பினாலும், ஓ! தாசார்ஹ குலத்தவரே {கிருஷ்ணரே}, அவர்களுடன் போர் ஏற்படும்படி அவர்களைத் தூண்டுவீராக.


ஓ! கிருஷ்ணரே, சபைக்கு மத்தியில் பாஞ்சால இளவரசி {திரௌபதி} அந்த அவல நிலையில் கொண்டுவரப்பட்டதைக் கண்ட பிறகும், சுயோதனன் {துரியோதனன்} கொல்லப்பட்டாமல் எனது கோபம் எப்படித் தணியும்? ஒ கிருஷ்ணா, பீமர், அர்ஜுனர், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரர் ஆகியோர் அறம் சார்ந்த மன நிலையைக் கொள்வதாக இருந்தாலும், அறத்தைத் துறக்கும் நான், போர்க்களத்தில் துரியோதனனுடன் மோத விரும்புகிறேன்" என்றான் {சகாதேவன்}.

அப்போது சாத்யகி {கிருஷ்ணனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {கிருஷ்ணரே}, உயர் ஆன்மா கொண்ட சகாதேவர் உண்மையையே பேசியிருக்கிறார். நான் துரியோதனனிடம் கொண்டுள்ள கோபம், அவனது மரணத்தால் மட்டுமே தணியும். கந்தலுடையும், மான் தோலும் உடுத்தி, பாண்டவர்கள் துயர்நிறைந்த நிலையில் காட்டில் இருப்பதைக் கண்டபோது நீரும் சினம் கொண்டீர், என்பது உமக்கு நினைவில்லையா? எனவே, ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {கிருஷ்ணரே}, போரில் கடுமையானவரான மாத்ரியின் வீர மகன் {சகாதேவர்} சொன்னதே இங்குக் கூடியிருக்கும் வீரர்கள் அனைவரின் ஒருமனதான கொள்கையாக இருக்கிறது" என்றான் {சாத்யகி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்ம யுயுதனனின் {Yuyudhana} இவ்வார்த்தைகளால், அங்கே கூடியிருக்கும் வீரர்கள் அனைவரும் சிங்கம் போலக் கர்ஜித்தனர். மேலும் அந்த வீரர்கள் அனைவரும் சாத்யகியின் வார்த்தைகளை உயர்வாக மெச்சி, அவனை {சாத்யகியை} புகழ்ந்து "அருமை! அருமை!" என்றனர். போரிடும் ஆவலால் அவர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தொடங்கினர்.