Sunday, May 10, 2015

வரவேற்பு அரங்குகள் அமைத்த துரியோதனன்! - உத்யோக பர்வம் பகுதி 85

Duryodhana erected pavilions for reception! | Udyoga Parva - Section 85 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –14)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் உபப்லாவ்யத்தில் இருந்து புறப்பட்டதை ஒற்றர்கள் மூலம் அறிந்த திருதராஷ்டிரன்; கிருஷ்ணனை வரவேற்பதற்காக வழிநெடுக்கிலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரங்குகளை அமைக்குமாறு துரியோதனனிடம் திருதராஷ்டிரன் சொன்னது; சபையின் பெரியோர்கள் அதை மெச்சியது; துரியோதனன் அரங்குகளை அமைத்தது; அத்தகு அரங்கொன்றிலும் தனது பார்வையைச் செலுத்தாத கிருஷ்ணன் ஹஸ்தினாபுரத்தை அடைந்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அதேவேளையில், மதுசூதனன் {கிருஷ்ணன்} புறப்பட்டதைத் தனது ஒற்றர்கள் மூலம் அறிந்த திருதராஷ்டிரன், தன் மயிர் சிலிர்க்க, வலிய கரங்கள் கொண்ட பீஷ்மர், துரோணர், சஞ்சயன், ஒப்பற்ற விதுரன் ஆகியோரிடம் {இதுகுறித்து} புகழ்ந்து பேசியபிறகு, துரியோதனனிடமும் அவனது ஆலோசகர்களிடமும், "ஓ! குருகுலத்தின் கொழுந்தே {துரியோதனா}, நாம் கேள்விப்படும் செய்தி விசித்திரமானதாகவும், அற்புதமானதாகவும் இருக்கிறது. பிறர் அது குறித்துப் புகழ்ந்து பேசுகின்றனர், இன்னும் பிறர் தங்கள் இல்லங்களிலும், திறந்த வெளிகளிலும் கூடி இது குறித்து விவாதிக்கின்றனர்.


பெரும் ஆற்றல்படைத்த அந்தத் தாசார்ஹன் {கிருஷ்ணன்},, பாண்டவர்கள் சார்பாக இங்கு வருவதாக அனைவரும் சொல்கிறார்கள். அந்த மதுசூதனன் {கிருஷ்ணன்} எல்லாவகையிலும் நம் கையாலான மரியாதைக்கும் வழிபாட்டுக்கும் தகுந்தவனாவான். அனைத்து உயிரினங்களுக்கும் தலைவன் அவன் {கிருஷ்ணன்}. இந்த அண்டத்தில் உள்ள அனைத்தின் வழிகளும் அவனிலேயே நிலைத்திருக்கின்றன. உண்மையில், புத்திக்கூர்மை, ஆற்றல், அறிவு, சக்தி ஆகிய அனைத்தும் மாதவனிலேயே {கிருஷ்ணனிலேயே} வசிக்கின்றன. நீதிமான்கள் அனைவராலும் வழிபடத்தக்க அவன் {கிருஷ்ணன} மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான். உண்மையில் அவனே நிலைத்த அறமுமாவான்.

வழிபடும்போது மகிழ்ச்சியை நிச்சயம் அளிப்பவன் அவன்; அவனை வழிபடவில்லை என்றாலோ, இழிவும் துயரமும் ஏற்படுவது நிச்சயம். நமது காணிக்கைகளால், அந்த எதிரிகளை அடிப்பவனான தாசார்ஹன் {கிருஷ்ணன்} மனநிறைவு கொள்ளச் செய்யப்பட்டால், அவனது {கிருஷ்ணனது} அருளால் மன்னர்களுக்கு மத்தியில் நாம் நமது அனைத்து விருப்பங்களையும் அடையலாம். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, தாமதிக்காமல் அவனை {கிருஷ்ணனை} வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வாயாக. இன்பத்திற்குகந்த அனைத்து பொருட்களும் நிறைந்த அரங்குகள் சாலையில் அமைக்கப்படட்டும். ஓ! வலிய கரங்களைக் கொண்ட காந்தாரியின் மகனே {துரியோதனா}, அவன் உன்னிடம் மனநிறைவு கொள்ளும்படியான ஏற்பாடுகளைச் செய்வாயாக. இக்காரியத்தில் பீஷ்மர் என்ன நினைக்கிறார்?" என்றான் {திருதராஷ்டிரன்}.

பீஷ்மரும் மற்றும் பிறரும் என அனைவரும் மன்னன் திருதராஷ்டிரனின் அவ்வார்த்தைகளை மெச்சி, "சாலச் சிறந்தது" என்றனர். அவர்களது விருப்பங்களைப் புரிந்து கொண்ட துரியோதனன், அரங்குகளை அமைப்பதற்கான இனிமையான இடங்களைத் தேர்ந்தெடுக்கக் கட்டளையிட்டான். இதன் காரணமாக, சரியான இடைவெளிகளுடன் கூடிய இனிமையான இடங்களில், அனைத்து வகை ரத்தினங்களும் நிறைந்த பல அரங்குகள் கட்டப்பட்டன. சிறந்த தரம் கொண்ட அருமையான இருக்கைகள், அழகிய பெண்கள், நறுமணப் பொருட்கள், ஆபரணங்கள், அருமையான ஆடைகள், பல்வேறு வகைகளிலான சிறந்த உணவு மற்றும் பானங்கள் மற்றும் பலவகைகளிலான நறுமணமிக்க மாலைகளையும் அங்கே மன்னன் {துரியோதனன்} அனுப்பி வைத்தான்.

மன்னன் {துரியோதனன்}, கிருஷ்ணனை வரவேற்பதற்காக, விலைமதிப்பற்ற ரத்தினங்கள் நிறைந்த உயர்ந்த அழகுடைய அரங்கொன்றை, சிறப்புக் கவனத்துடன் விருகஸ்தலத்தில் நிறுவினான். தேவர்கள் அனுபவிப்பதைப் போன்றதும், மனித தகுதிக்கு மேலானதுமான இந்த ஏற்பாடுகளைச் செய்த மன்னன் துரியோதனன், இது குறித்துத் திருதராஷ்டிரனிடம் தெரிவித்தான். எனினும், தாசார்ஹ குலத்தைச் சேர்ந்த கேசவன் {கிருஷ்ணன்}, பல்வேறு வகைகளிலான ரத்தினங்களுடன் கூடிய அந்த அரங்குகள் அனைத்திலும் ஒரு பார்வையைக்கூடச் செலுத்தாமல், குருக்களின் தலைநகரை {ஹஸ்தினாபுரத்தை} அடைந்தான்.